என் மலர்
உள்ளூர் செய்திகள்

டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து பல ஆயிரம் மது பாட்டில்கள் கொள்ளை
- காவலாளி கொடுத்த தகவலின் பேரில் கடை விற்பனையாளர்கள், சூப்பர்வைசர் விரைந்து வந்தனர்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை திருச்சி சாலையில் அரசு மதுபான கடை உள்ளது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மது பிரியர்கள் அதிகளவில் வந்து மது அருந்துவார்கள்.
இதனால் இக்கடையில் கூட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். மேலும் திருச்சி சாலையில் அமைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் லாரி டிரைவர்கள் இக்கடை அருகில் தங்கள் வாகனங்களை நிறுத்தி மது பாட்டில்களை வாங்கி செல்வார்கள்.
இங்கு 2 விற்பனையாளர்களும், ஒரு சூப்பர்வைசர்களும் பணியில் உள்ளனர். இவர்கள் இரவு 10 மணிக்கு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றனர்.
கடைக்கு காவலர் பணியில் அப்பதியை சேர்ந்தவர் ஈடுபட்டிருந்தார்.
இந்தநிலையில் நேற்று மிலாடி நபியை முன்னிட்டு கடை திறக்காமல் இருந்தது. நள்ளிரவில் மர்ம நபர்கள் கடைக்கு வந்துள்ளனர். அவர்களை காவலாளி கேள்வி கேட்டுள்ளார். அதற்கு மர்ம நபர்கள் சத்தம் போட்டால் கொன்றுவிடுவோம் எனமிரட்டி கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பல ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை அள்ளிச் சென்றனர்.
இது குறித்து காவலாளி கொடுத்த தகவலின் பேரில் கடை விற்பனையாளர்கள், சூப்பர்வைசர் விரைந்து வந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் புதுக்கோட்டையில் இருந்து மோப்ப நாய் தீரன் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை போன மதுபான கடையில் இருந்து திருச்சி சாலை வரை ஓடிச் சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்க வில்லை. இது குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு மதுபான கடையில் கொள்ளை அடித்த மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.






