என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 55 பவுன் நகை- ரூ.5 லட்சம் பணம் கொள்ளை
    X

    கொள்ளை நடந்த வீட்டில் போலீசார் விசாரணை மேற்கொண்ட காட்சி


    அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 55 பவுன் நகை- ரூ.5 லட்சம் பணம் கொள்ளை

    • வீட்டில் யாரும் இல்லாததை மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளனர்.
    • கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி அருகே உள்ள பாளேகுளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் வேலம்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தெய்வானை. இவர் பாளேகுளி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஆசிரியராக பணி செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இருவரும் ஓசூரில் உள்ள தனியார் கல்லூரியில் மருத்துவம் படித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கணவன்-மனைவி இருவரும் காலை பள்ளிக்கு சென்று மாலையில் தான் வீட்டிற்கு வருவார்கள். இவரது வீட்டில் யாரும் இல்லாததை மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளனர்.

    இந்நிலையில் காலை பள்ளிக்கு சென்ற தெய்வானை மீண்டும் மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்பொழுது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் இருந்த நாய் மயங்கிய நிலையில் கிடந்துள்ளது.

    பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 55 பவுன் தங்க நகைகள், ரூ.5 லட்சம் பணம் திருடுபோயி இருந்தது தெரியவந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி கணவனுக்கு போன் செய்து தெய்வானை கத்தி கதறி உள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் நாகரசம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் நாகரசம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த ஆசிரியர் வீட்டில் விசாரணை மேற்கொண்டனர். மோப்பநாய் உதவியுடன் கொள்ளையர்களை தேடினர். ஆனால் நாய் சிறிது தூரம் சென்று நின்று விட்டது. கைரேகை நிபுணர்கள் வீட்டில் கொள்ளையர்களின் கைரேகை எதுவும் பதிவாகியுள்ளதா என ஆய்வு செய்தனர்.

    வீட்டில் பகல் நேரங்களில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு கொள்ளையர்கள் நேற்று வீட்டில் பின்புற கேட்டின் வழியாக புகுந்துள்ளனர். அங்கு கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்துள்ளனர். அதில் இருந்த நகை, பணம் ஆகியவையை கொள்ளை அடித்து சென்றனர்.

    ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் வீடுகளில் முன்னெச்சரிக்கை பாதுகாப்புகள் வேண்டுமென போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் சிசிடிவி கேமரா பொருத்தவும் அறிவுறுத்தி வருகின்றனர்.

    இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    மேலும் பகலில் ஆளில்லாதது நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பணம் நகை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×