என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vanniyar Sangam"

    • ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்களிடையே பரபரப்பு நிலவி வருகிறது.
    • வன்னியர் சங்க அலுவலகத்துக்கு டாக்டர் ராமதாஸ் ஆதரவாளர்கள் பூட்டு போட்டனர்.

    திண்டிவனத்தில் ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. பா.ம.க. செயல் தலைவர் பதவியில் இருந்தும், அடிப்படை உறுப்பினரில் இருந்தும் டாக்டர் அன்புமணியை நீக்கி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டார்.

    ஆனால், அன்புமணியை நீக்க ராமதாசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என அன்புமணி தரப்பை சேர்ந்த வக்கீல் பாலு கூறியுள்ளார். இதனால் ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்களிடையே பரபரப்பு நிலவி வருகிறது.

    விழுப்புரம்- திண்டிவனம் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே வன்னியர் சங்க அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் வருகிற 17-ந் தேதி வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் டாக்டர் அன்புமணி கலந்து கொள்வதாகவும் இருந்தது.

    இதைத்தொடர்ந்து வன்னியர் சங்க அலுவலகத்துக்கு டாக்டர் ராமதாஸ் ஆதரவாளர்கள் பூட்டு போட்டனர்.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் அன்புமணி ஆதரவாளர்கள் அங்கு திரண்டனர். அவர்கள், வன்னியர் சங்க அலுவலகத்தை திறக்க கூறினர்.

    இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது.

    இது பற்றிய தகவல் கிடைத்ததும் திண்டிவனம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் இருதரப்பை சேர்ந்தவர்களையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அங்கு மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க வன்னியர் சங்க அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் தனிப்பெரும் சமுதாயம் வன்னியர் சமுதாயம்.
    • இந்தியாவிலேயே நம் சமுதாயத்திற்கு மட்டும் தான் ஒரு புராணம் இருக்கிறது.

    பா.ம.க. சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் நடைபெற்றது.

    இந்த மாநாட்டில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "நம் இளைஞர்களுக்கு நம்முடைய வரலாறு தெரியவில்லை. நாம் நெருப்பில் இருந்து பிறந்தவர்கள். இந்தியாவிலேயே நம் சமுதாயத்திற்கு மட்டும் தான் ஒரு புராணம் இருக்கிறது. வேறு எந்த சமுதாயத்திற்கும் கிடையாது. நாம் வன்னிய குல சத்திரியர்கள்.

    நாகப்பன் படையாட்சி என்பவர் காந்தி தொடங்கிய சத்தியாகிரக போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி. இது எத்தனை பேருக்கு தெரியும். படையாட்சி என்பதால் அவரது வரலாறு மறைக்கப்பட்டது.

    இந்தியாவில் ஓபிசி இடஒதுக்கீடு பெற்றுக்கொடுத்தது 2 சத்திரியர்கள். ஒன்று ஐயா ஆனைமுத்து, மற்றொன்று சமூகநீதி போராளி மருத்துவர் அய்யா அவர்கள்.

    நம் சமுதாயத்தை வாக்குவங்கிகளாக பயன்படுத்துகிறார்கள். யார் யாரோ பின்னால் நீங்கள் செல்கிறீர்கள். அவர்கள் பின்னால் செல்லாதீர்கள். உங்களது அண்ணன் நான் இருக்கிறேன். என் பின்னால் வாருங்கள். உங்களுக்காக நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். மாவீரன் குரு போல நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

    உங்களுக்கு நல்ல படிப்பையும், வேலைவாய்ப்பினை நான் வாங்கித் தருகின்றேன். நாம் ஆள வேண்டும். நாம் ஆள வேண்டிய காலம் வந்து விட்டது. இந்த மண்ணை ஆண்டவர்கள் நாம். இந்த மண்ணின் பூர்வ குடிகள் நாம். வீராணம் ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெலிங்டன் ஏரி மதுராந்தகம் ஏரி வரை வெட்டியது நம்முடைய முன்னோர்கள்" என்று பேசினார்.

    வன்னியர்கள் நெருப்பில் இருந்து பிறந்தவர்கள் என்று அவரது சமுதாய மக்களிடம் சாதி உணர்வை ஊட்டும் வகையில் அன்புமணி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ஒருபக்கம் பெரியாரை உயர்த்தி பேசும் அன்புமணி ராமதாஸ் மற்றொரு பக்கம் வர்ணாசிரமக் கொள்கையை உயர்த்திப் பிடித்து, நாங்கள் மார்பிலே பிறந்தவர்கள் என்று இல்லாத ஒன்றை மிடுக்காகப் பேசித் திரிவது சரியா?

    படையாட்சி என்பதால் நாகப்பன் படையாட்சியின் வரலாறு மறைக்கப்பட்டதாக பேசும் அன்புமணிக்கு அவரது வன்னியர் சாதியிலேயே உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதம் இருப்பது தெரியுமா? படையாட்சி இன்னொரு படையாட்சியை விட்டுவிட்டு, வன்னியர் வீட்டில் பெண் கொடுக்கவோ எடுக்கவோ மாட்டார்கள் என்பது குறித்து பேச முடியுமா?

    மாற்றம் முன்னேற்றம் என்று அரசியல் பேசி வந்த அன்புமணி தற்போது நாம் நெருப்பில் இருந்து வந்தவர்கள் என்று சாதி உணர்வை கூர் தீட்டும் அரசியல் பேச வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது?

    தன சமுதாய மக்களிடம் பா.ம.க. கட்சியின் செல்வாக்கு மெல்ல மெல்ல சரிந்து வரும் நிலையில், அதை மறுபடியும் மீட்டெடுக்க தான் சாதிய உணர்வை கூர் தீட்டும் அரசியலுக்கு பா.ம.க. இறங்குகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

    • காடுவெட்டி குரு இருந்திருந்தால் நானும் மற்றவர்களைப் போல் மேடைக்கு கீயே தம்பிகளோடு அமர்ந்திருப்பேன்.
    • தமிழ்நாடு மட்டுமல்ல வெளிநாடு, வெளிமாநிலங்களைச் சேர்ந்த சொந்தங்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் சித்திரை முழுநிலவு மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    12 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் இந்த மாநாட்டில் என் சகோதரன் காடுவெட்டியார் இல்லையே என்பது வருத்தம்.

    காடுவெட்டி குரு இருந்திருந்தால் நானும் மற்றவர்களைப் போல் மேடைக்கு கீயே தம்பிகளோடு அமர்ந்திருப்பேன்.

    தமிழ்நாடு மட்டுமல்ல வெளிநாடு, வெளிமாநிலங்களைச் சேர்ந்த சொந்தங்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

    இனி நாம் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்துதான் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. நமது வன்னிய சமூகத்தினர் 140 நாடுகளிலே வாழ்கின்றனர்.

    வன்னியர்களின் வரலாறு இன்றைய இளைஞர்களுக்கு தெரியவில்லை. நாகசாமி படையாட்சி, அஞ்சலை அம்மாள், ஐயா ஆனைமுத்து பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    இடஒதுக்கீடு என்றாலே பாமக மற்றும் ராமதாஸ் பங்களிப்பபை மறக்க முடியாது.

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இருந்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு மனமில்லை. தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க காதிவாரி கணக்கெடுப்பு அவசியம்.

    பலமுறை ஆட்சிக்கு வருவதற்கு உதவிய வன்னியர் சமுதாயத்திற்கு திமுக திரோகம் செய்கிறது. கருணாநிதி இருந்திருந்தால் நிச்சயம் சமூக நீதி அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி இருப்பார்.

    நல்ல கல்வியை கொடுத்தால் இளைஞர்கள் நல்ல வேலைக்கு போவார்கள். மதுவுக்கு ஏன் அடிமையாக போகிறார்கள்?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பாமக சார்பில் இன்று சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற்று வருகிறது.
    • மாநாட்டில், 1.80 லட்சம் இருக்கைகளுடன் பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பா.ம.க. சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் இன்று மாலை தொடங்கியுள்ளது. இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் மிக பிரமாண்டமாக தயார் செய்யப்பட்டது.

    தமிழ்நாடு முழுவதும் இருந்து பா.ம.க. தொண்டர்கள் மாநாட்டில் திரளாக பங்கேற்றுள்ளனர். இதற்காக 1 லட்சத்து 80 ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    தலைவர்கள் அமரும் மேடைக்கு எதிரே அனைத்து பகுதிகளிலும் நிகழ்ச்சியை காண 3 இடங்களில் ராட்சத எல்.இ.டி. திரை வைக்கப்பட்டுள்ளது.

    அதேபோல, 40-க்கு 20 உயரத்தில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

    மாநாட்டு திடலில் வன்னியர் சங்கம் உருவானது முதல் தற்போது வரையிலான வரலாற்று தொகுப்பு புகைப்பட காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.

    இன்று மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கிய நிலையில், புஷ்பவனம் குப்புசாமியின் இசை நிகழ்ச்சி, நாட்டுப்புற கலைநிகழ்ச்சி உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகிறது.

    அதைத்தொடர்ந்து, வன்னிய வள்ளல்கள் தியாகிகள் என்ற குறும்படமும் ஒளிபரப்பப்பட்டது.

    இதற்கிடையே, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மேடைக்கு வந்த நிலையில், பாராகிளைடரில் வன்னியர் சங்கக் கொடி பறக்கவிடப்பட்டது. கொடி பறந்ததை கண்டு, ஏராளமான தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். மேலும், மாநாட்டுக் கொடியை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஏற்றி வைத்தார். 

    • முந்தைய அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் நிறை வேற்றப்பட்டது.
    • நாம் ஏன் பலரிடமும் சமூகநீதிக்காக கையேந்திக் கொண்டிருக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வன்னியர்களுக்கு மட்டும் வழங்கப்பட வேண்டிய 20 சதவீதம் இட ஒதுக்கீடு 108 சாதிகளுக்கு இணைத்து வழங்கப்பட்டதால் நமக்கு கிடைக்க வேண்டிய உரிமை கள் கிடைக்கவில்லை. அதை சுட்டிக்காட்டியதன் பயனாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான முந்தைய அதிமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் நிறை வேற்றப்பட்டது. சமூகநீதிக்கு எதிரான சக்திகள் தொடர்ந்த வழக்குகளால் அந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யபட்டாலும், தரவு களைத் திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று 31.03.2022-ஆம் நாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பு வெளியாகி ஓராண்டும், 108 நாட்களாகியும் கூட இன்னும் புதிய இட ஒதுக்கீட்டு சட்டம் நிறை வேற்றப்படவில்லை.

    தமிழக அரசுக்கு இதுதொடர்பாக பலமுறை அழுத்தம் கொடுத்தோம். அதன்பயனாக கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களின் நிலை குறித்த புள்ளி விவரங்களை மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு வாங்கி பகுப்பாய்வு செய்து வருகிறது. இந்தப் பணிகள் இன்னும் சில வாரங்களில் நிறைவடைந்தால், அடுத்த சில வாரங்களில் வன்னியர்கள் இட ஒதுக்கீட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டு விடும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

    வன்னியர்களின் இட ஒதுக்கீட்டிற்காக ஆட்சியாளர்களிடம் கோரிக்கை வைக்கும் போதெல்லாம் எனது மனதில் எழும் கேள்வி ஒன்று தான்.

    தமிழ்நாட்டில் எல்லா சாதிகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அதிகாரத்தை நம்மால் வென்றெடுக்க முடியும் எனும் போது, நாம் ஏன் பலரிடமும் சமூகநீதிக்காக கையேந்திக் கொண்டிருக்க வேண்டும் என்பதே அந்த வினா.

    உண்மை தான்... வன்னியர்களும் சமூகநீதி தேவைப்படும் பிற சமுதாயங்களும் இணைந்து நின்று தேர்தலை சந்தித்தால் மிகவும் எளிதாக அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க முடியும். இந்த உண்மையை நாம் உணரும் போது தான் நமக்கு உண்மையான விடுதலை கிடைக்கும். அந்த வகையில், அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் முயற்சிக்கு நாம் அனைவரும் படிக்கட்டுகளாக இருந்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, வன்னியர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் 44-ம் ஆண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறேன்.

    வன்னியர் சங்கத்தின் 44-ஆம் ஆண்டு விழாவையொட்டி ஒவ்வொரு குடியிருப்பு பகுதிகளிலும் வன்னியர் சங்கக் கொடியேற்ற வேண்டும்; போராடிப் பெற்ற இட ஒதுக்கீட்டின் சிறப்புகள், அதற்காக நாம் செய்த தியாகங்கள் பற்றி இளைஞர்களி டம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்காக இந்த மடலை துண்டறிக்கை யாக தயாரித்து வீடு வீடாகச் சென்று வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உத்தரவை எதிர்த்து வன்னியர் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
    • வழக்கு நீதுபதி பி.எஸ் நரசிம்மா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

    சென்னை:

    சென்னை அருகே பரங்கி மலையில் உள்ள 41,952 சதுர அடி நிலத்தை தற்காலிகமாக பயன்படுத்திக் கொள்ள காசி விஸ்வநாதர் தேவஸ்தானத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.

    இந்த இடத்தில் வன்னியர் சங்கக் கட்டிடம் கட்டப்பட்டு அலுவலகமாக செயல்பட்டு வந்த, நிலையில் இந்த நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறி பல்லாவரம் தாசில்தார், அந்த நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

    இதையடுத்து, வன்னியர் சங்க கட்டிடத்துக்கு அரசு 'சீல்' வைத்தது. அந்த உத்தரவை எதிர்த்து வன்னியர் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, வன்னியர் சங்க கட்டடத்துக்கு 'சீல்' வைத்த அரசின் உத்தரவை ரத்து செய்தது. அதனை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அந்த வழக்கு நீதுபதி பி.எஸ் நரசிம்மா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், இந்த நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளதாக அரசு கூறியுள்ளது. யாருடைய இடம் என்பதை கண்டறிய வேண்டி உள்ளது. எனவே இந்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக வன்னியர் சங்கம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் பிறப்பித்தனர்.

    இந்த வழக்கில் புற எதிர் மனுதாரர்களான காசி விஸ்வநாதர் கோவில் நிர்வாகம், கன்டோன்மென்ட் அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

    'ஜெய் பீம்' பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா உள்பட மூவருக்கு வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
    ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘ஜெய் பீம்’. பழங்குடியின மக்களின் வாழ்வியலை மையமாக எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பிரபலங்கள் பலரும் இப்படத்தை பார்த்து வெகுவாக பாராட்டினர்.

    இதனிடையே, ஜெய் பீம் படத்தில் பழங்குடியினர்களை சித்திரவதை செய்யும் குருமூர்த்தி என்கிற போலீஸ் கதாபாத்திரம் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் போல் காட்டப்பட்டு இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. படத்தில் ஒரு காட்சியில் அவர் தொலைபேசியில் பேசும்போது பின்னணியில் வன்னியர் சங்க காலண்டர் இடம்பெற்றிருக்கும், இதுவே எதிர்ப்புக்கும் காரணமானது.

    இதற்கு பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்ததோடு, நடிகர் சூர்யாவுக்கு அடுக்கடுக்கான கேள்விகளையும் எழுப்பி இருந்தார். இதற்கு சூர்யாவும் அறிக்கை வாயிலாக பதிலளித்தார்.

    சூர்யா

    இந்நிலையில், 'ஜெய் பீம்' பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும் இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. 

    அந்த நோட்டீஸில், ரூ.5 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும், வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததற்காக நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கோர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோராவிட்டால் அனைவர் மீதும் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    ×