என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திண்டிவனத்தில் ராமதாஸ்- அன்புமணி ஆதரவாளர்கள் மோதல்: வன்னியர் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டதால் ஆத்திரம்
- ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்களிடையே பரபரப்பு நிலவி வருகிறது.
- வன்னியர் சங்க அலுவலகத்துக்கு டாக்டர் ராமதாஸ் ஆதரவாளர்கள் பூட்டு போட்டனர்.
திண்டிவனத்தில் ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது. பா.ம.க. செயல் தலைவர் பதவியில் இருந்தும், அடிப்படை உறுப்பினரில் இருந்தும் டாக்டர் அன்புமணியை நீக்கி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டார்.
ஆனால், அன்புமணியை நீக்க ராமதாசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என அன்புமணி தரப்பை சேர்ந்த வக்கீல் பாலு கூறியுள்ளார். இதனால் ராமதாஸ், அன்புமணி ஆதரவாளர்களிடையே பரபரப்பு நிலவி வருகிறது.
விழுப்புரம்- திண்டிவனம் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே வன்னியர் சங்க அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் வருகிற 17-ந் தேதி வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் டாக்டர் அன்புமணி கலந்து கொள்வதாகவும் இருந்தது.
இதைத்தொடர்ந்து வன்னியர் சங்க அலுவலகத்துக்கு டாக்டர் ராமதாஸ் ஆதரவாளர்கள் பூட்டு போட்டனர்.
இது பற்றிய தகவல் அறிந்ததும் அன்புமணி ஆதரவாளர்கள் அங்கு திரண்டனர். அவர்கள், வன்னியர் சங்க அலுவலகத்தை திறக்க கூறினர்.
இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் திண்டிவனம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் இருதரப்பை சேர்ந்தவர்களையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அங்கு மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க வன்னியர் சங்க அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.






