என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

'வன்னியர்கள் நெருப்பில் இருந்து பிறந்தவர்கள்' - வர்ணாசிரமத்தை உயர்த்தி பிடிக்கும் அன்புமணி
- தமிழ்நாட்டில் தனிப்பெரும் சமுதாயம் வன்னியர் சமுதாயம்.
- இந்தியாவிலேயே நம் சமுதாயத்திற்கு மட்டும் தான் ஒரு புராணம் இருக்கிறது.
பா.ம.க. சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "நம் இளைஞர்களுக்கு நம்முடைய வரலாறு தெரியவில்லை. நாம் நெருப்பில் இருந்து பிறந்தவர்கள். இந்தியாவிலேயே நம் சமுதாயத்திற்கு மட்டும் தான் ஒரு புராணம் இருக்கிறது. வேறு எந்த சமுதாயத்திற்கும் கிடையாது. நாம் வன்னிய குல சத்திரியர்கள்.
நாகப்பன் படையாட்சி என்பவர் காந்தி தொடங்கிய சத்தியாகிரக போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி. இது எத்தனை பேருக்கு தெரியும். படையாட்சி என்பதால் அவரது வரலாறு மறைக்கப்பட்டது.
இந்தியாவில் ஓபிசி இடஒதுக்கீடு பெற்றுக்கொடுத்தது 2 சத்திரியர்கள். ஒன்று ஐயா ஆனைமுத்து, மற்றொன்று சமூகநீதி போராளி மருத்துவர் அய்யா அவர்கள்.
நம் சமுதாயத்தை வாக்குவங்கிகளாக பயன்படுத்துகிறார்கள். யார் யாரோ பின்னால் நீங்கள் செல்கிறீர்கள். அவர்கள் பின்னால் செல்லாதீர்கள். உங்களது அண்ணன் நான் இருக்கிறேன். என் பின்னால் வாருங்கள். உங்களுக்காக நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். மாவீரன் குரு போல நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
உங்களுக்கு நல்ல படிப்பையும், வேலைவாய்ப்பினை நான் வாங்கித் தருகின்றேன். நாம் ஆள வேண்டும். நாம் ஆள வேண்டிய காலம் வந்து விட்டது. இந்த மண்ணை ஆண்டவர்கள் நாம். இந்த மண்ணின் பூர்வ குடிகள் நாம். வீராணம் ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெலிங்டன் ஏரி மதுராந்தகம் ஏரி வரை வெட்டியது நம்முடைய முன்னோர்கள்" என்று பேசினார்.
வன்னியர்கள் நெருப்பில் இருந்து பிறந்தவர்கள் என்று அவரது சமுதாய மக்களிடம் சாதி உணர்வை ஊட்டும் வகையில் அன்புமணி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒருபக்கம் பெரியாரை உயர்த்தி பேசும் அன்புமணி ராமதாஸ் மற்றொரு பக்கம் வர்ணாசிரமக் கொள்கையை உயர்த்திப் பிடித்து, நாங்கள் மார்பிலே பிறந்தவர்கள் என்று இல்லாத ஒன்றை மிடுக்காகப் பேசித் திரிவது சரியா?
படையாட்சி என்பதால் நாகப்பன் படையாட்சியின் வரலாறு மறைக்கப்பட்டதாக பேசும் அன்புமணிக்கு அவரது வன்னியர் சாதியிலேயே உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதம் இருப்பது தெரியுமா? படையாட்சி இன்னொரு படையாட்சியை விட்டுவிட்டு, வன்னியர் வீட்டில் பெண் கொடுக்கவோ எடுக்கவோ மாட்டார்கள் என்பது குறித்து பேச முடியுமா?
மாற்றம் முன்னேற்றம் என்று அரசியல் பேசி வந்த அன்புமணி தற்போது நாம் நெருப்பில் இருந்து வந்தவர்கள் என்று சாதி உணர்வை கூர் தீட்டும் அரசியல் பேச வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது?
தன சமுதாய மக்களிடம் பா.ம.க. கட்சியின் செல்வாக்கு மெல்ல மெல்ல சரிந்து வரும் நிலையில், அதை மறுபடியும் மீட்டெடுக்க தான் சாதிய உணர்வை கூர் தீட்டும் அரசியலுக்கு பா.ம.க. இறங்குகியுள்ளதாக சொல்லப்படுகிறது.






