என் மலர்
இந்தியா

இடஒதுக்கீடு ரெயில் பெட்டி போல.. உள்ளே இருப்பவர்கள் மற்றவர்கள் உள்ளே வருவதை விரும்பவில்லை - உச்சநீதிமன்றம்
- அவ்வளவுதான் முழு விளையாட்டு. மனுதாரரும் அதே விளையாட்டை விளையாடுகிறார்
- ஏன் ஒரு குறிப்பிட்ட குடும்பம் அல்லது குழுவிற்கு மட்டும் இருக்க வேண்டும்?
ரெயில் பெட்டியில் இடம்பிடித்தவர்கள் மற்றவர்கள் உள்ளே வருவதை விரும்பாததைப் போல் நாட்டில் இடஒதுக்கீடு மாறிவிட்டதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தல்களில் இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் மனுவை இன்று நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தக் கருத்தைத் தெரிவித்தது.
மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், மகாராஷ்டிரா அரசு அமைத்த ஆணையம், அரசியல் ரீதியாக பின்தங்கியவர்களா இல்லையா என்பதைக் கண்டறியாமல் உள்ளாட்சித் தேர்தல்களில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதாக வாதிட்டார்.
அப்போது பேசிய நீதிபதி சூர்ய காந்த், இந்த நாட்டில் இடஒதுக்கீடு ரெயில்வே வணிகத்தை போலவே மாறிவிட்டது. ரெயில் பெட்டியில் ஏறியவர்கள் வேறு யாரும் உள்ளே வருவதை விரும்ப மாட்டார்கள். அவ்வளவுதான் முழு விளையாட்டு. மனுதாரரும் அதே விளையாட்டை விளையாடுகிறார் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய வழக்கறிஞர் சங்கரநாராயணன், அரசியல் ரீதியாக பின்தங்கிய நிலை என்பது சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய நிலையிலிருந்து வேறுபட்டது. ஓபிசிக்களை அரசியல் ரீதியாக பின்தங்கியவர்களாகக் கருத முடியாது. இடஒதுக்கீட்டின் நோக்கத்திற்காக, ஓபிசிகளுக்குள், அரசியல் ரீதியாக பின்தங்கிய மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய வகுப்புகள் அடையாளம் காணப்பட வேண்டும் என்று கூறினார்.
இதற்கு பதிலளித்த நீதிபதி, அனைவரையும் உள்ளடக்கிய கொள்கையைப் பின்பற்றும்போது மாநிலங்கள் பல்வேறு வகுப்புகளை அங்கீகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
அதில் சமூக ரீதியாக பின்தங்கிய வகுப்புகள், அரசியல் ரீதியாக பின்தங்கிய வகுப்புகள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்புகள் இருக்கும். அவர்களுக்கு ஏன் சலுகைகள் மறுக்கப்பட வேண்டும்? அது ஏன் ஒரு குறிப்பிட்ட குடும்பம் அல்லது குழுவிற்கு மட்டும் இருக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து இந்த மனு மீது மகாராஷ்டிர அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.






