search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AIIMS Hospital"

    • ரூ.1,977 கோடியில் 10 தளங்களுடன் 870 படுக்கை வசதிகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுகிறது.
    • மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முதல்கட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன.

    மதுரை:

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2015-ம் ஆண்டு மத்திய அரசு அனுமதி வழங்கியது. ரூ.1,977 கோடியில் 10 தளங்களுடன் 870 படுக்கை வசதிகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுகிறது. இதனால் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.

    தற்போது வரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் விசாலமான சாலை மற்றும் சுற்றுச்சுவரை தவிர வேறு கட்டுமானப் பணிகள் எதுவும் தொடங்கவில்லை. இதனால் எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் பேசுபொருளாக மாறியது.

    இதற்கிடையே, மதுரை தோப்பூரில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு மத்திய அரசு டெண்டர் கோரியது. இந்த டெண்டரை எல் அண்ட் டி நிறுவனம் கைப்பற்றியது. அடிக்கல் நாட்டி 5 ஆண்டுக்கு பிறகு சமீபத்தில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கான வாஸ்து பூஜை மற்றும் சமன்படுத்தும் வேலை நடைபெற்றது.

    இந்நிலையில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முதல்கட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன. முதல் கட்டமாக ரூ.10 கோடி மதிப்பீட்டில் 5 கி.மீ. சுற்றளவுக்கு 12 அடி உயர சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

    எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள பகுதியில் ரூ.21 கோடியில், 6 கிலோமீட்டருக்கு சாலை பணிகள் நிறைவடைந்துள்ளது. மருத்துவமனை கட்டுமானப் பணிகளை எல் அண்ட் டி நிறுவனம் தொடங்கியுள்ளதாக எய்ம்ஸ் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

    • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்னும் கட்டடம் இல்லாததால், மருத்துவக் கல்லூரியை நடத்த மீண்டும் வாடகைக்கு இடம் தேடப்பட்டு வருகிறது.
    • மதுரையை சுற்றியுள்ள பகுதியில் வாடகை கட்டிடத்தில் மாணவர்களை அழைத்து வந்து பயிற்சி பெறுவதற்கான நடவடிக்கைகளை எய்ம்ஸ் நிர்வாகம் எடுத்திருந்தது.

    2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் மதுரை தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. சுமார் 220 ஏக்கர் பரப்பளவில் அதிநவீனமான அமைக்கப்படும் என தெரிவிக்கபட்டது.

    அந்த அடிப்படையில், சுமார் ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் ஜப்பானில் இருக்கக்கூடிய ஜெய்கா நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தம் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 2019-ம் ஆண்டுக்கு பின்னர் இதுவரை சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டு முழுமையாக அந்த இடம் எந்த வித பணியும் தொடங்கப்படாமல் உள்ளது.

    3 ஆண்டுகளுக்கு முன்னதாக தொடர்ந்து கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக எய்ம்ஸ் மருத்தமனைக்கான மாணவர்கள், ராமநாதபுரத்தில் உள்ள மருத்துவக்கல்லூரியில் படிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனாலும் அங்கு, பயிற்சி உபகரணங்கள் போதுமானதாக இல்லாத நிலை தான் நீடித்தது.

    இதனை தொடர்ந்து 3 ஆண்டுகள் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை அங்கு நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் மதுரையை சுற்றியுள்ள பகுதியில் வாடகை கட்டிடத்தில் மாணவர்களை அழைத்து வந்து பயிற்சி பெறுவதற்கான நடவடிக்கைகளை எய்ம்ஸ் நிர்வாகம் எடுத்திருந்தது.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2019ல் அடிக்கல் நாட்டியும் இன்னும் கட்டடம் இல்லாததால், மருத்துவக் கல்லூரியை நடத்த மீண்டும் வாடகைக்கு இடம் தேடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் இதற்காக டெண்டர் வெளியிடபட்டு, திருமங்கலத்தில் உள்ள செயல்படாத ஒரு நர்சிங் கல்லூரியை வாடகைக்கு எடுத்து வகுப்புகள் நடத்த எய்ம்ஸ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

    • அடுத்த ஆறு நாட்களில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறந்து வைக்கிறார் பிரதமர்.
    • குஜராத், ஆந்திரா, பஞ்சாப், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளை திறந்து வைக்க உள்ளார்.

    சென்னை:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று மற்றும் 25-ந்தேதி கட்டி முடிக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளை திறந்து வைக்கிறார். அதாவது இன்று ஜம்முவில் நடைபெறும் விழாவில் சம்பா மாவட்டத்தில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.

    இதனை தொடர்ந்து வருகி 25-ந்தேதி குஜராத், ஆந்திரா, பஞ்சாப், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளை திறந்து வைக்க உள்ளார்.

    இந்நிலையில் மதுரை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    அடுத்த ஆறு நாட்களில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறந்து வைக்கிறார் பிரதமர் .

    ஒரே அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட அனைத்து எய்ம்ஸ்களும் திறக்கப்பட்டு விட்டன மதுரையைத் தவிர .

    தமிழ்நாட்டிற்கு நீங்கள் தருவது தப்புத் தப்பாய் உச்சரிக்கும் திருக்குறள் மட்டும் தானா? என சில புகைப்படங்களையும் வெளியிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.

    • பிரதமர் மோடி இன்று காஷ்மீர் செல்கிறார்.
    • வருகிற 25-ந்தேதி மேலும் 5 எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி இன்று காஷ்மீர் செல்கிறார். ஜம்முவில் நடைபெறும் விழாவில், சம்பா மாவட்டத்தில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியை திறந்து வைக்கிறார்.

    அந்த ஆஸ்பத்திரிக்கு கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் அடிக்கல் நாட்டினார். 227 ஏக்கர் பரப்பளவில், ரூ.1,660 கோடி செலவில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து, வருகிற 25-ந்தேதி மேலும் 5 எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இவ்விழா நடக்கிறது.

    ராஜ்கோட், மங்களகிரி (ஆந்திரா), பதிண்டா (பஞ்சாப்), ரேபரேலி (உத்தரபிரதேசம்), கல்யாணி (மேற்கு வங்காளம்) ஆகிய இடங்களில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகளை அவர் திறந்து வைக்கிறார்.

    • திராவிட மாடல் ஆட்சி பிரிவினையை ஏற்படுத்துவதாக கூறும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாரமனுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
    • 2019-ல் எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு என்று முடிவு எடுக்கப்பட்ட 224 ஏக்கர் நிலப்பரப்புக்கு உரிய ஆவணங்கள் 2020-ம் ஆண்டு நவம்பர் 3-ந் தேதி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் சிங்காரவேலர் சிலைக்கு மாலை அணிவித்த தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறிய தாவது-

    பஞ்சு மிட்டாயில் கலக்கப்பட்ட வண்ண கலவை புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கண்டறிந்து புதுவை அரசு தடை விதித்தது. அந்த செய்தியை பார்த்த பிறகு, தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் விற்பனை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்கள் ஆய்வுக்கு உட்படுத்தினோம்.

    அப்போது, அதில் புற்று நோய் பாதிப்பை உண்டாக்கும் வேதி கலவை இருப்பது கண்டறியப்பட்டது. உடனே தமிழக முதல்- அமைச்சர் அறிவுறுத்தலோடு வண்ண கலவை இருக்கிற பஞ்சு மிட்டாய்க்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெண்மை நிறுத்தில் உள்ள பஞ்சு மிட்டாய்க்கு தடையில்லை.

    திராவிட மாடல் ஆட்சி பிரிவினையை ஏற்படுத்துவதாக கூறும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாரமனுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. அதே அமைச்சர்தான் பாராளு மன்றத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வர காலதாமதம் ஏன் என்ற கேள்விக்கு தமிழக அரசு நில ஆர்ஜிதம் செய்து தர வில்லை என தெரிவித்தார்.

    2019-ல் பிரதர் மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது, அடிக்கல் நாட்ட பிரதமரை அழைத்து வந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. நிலஆர்ஜிதம் செய்யப்படாத யாருக்கோ சொந்தமான இடத்தில் பிரதமர் எப்படி வந்து அடிக்கல் நாட்டுவார்?. அல்லது வேறு யாருக்கோ சொந்தமான இடத்தில் அடிக்கல் நாட்ட பிரதமர் ஒரு மாநில முதல்வர் எப்படி அழைத்து வருவார் என அன்றே நான் கேள்வி எழுப்பினேன்.

    நில ஆர்ஜிதம் செய்யாமல் அடிக்கல் நாட்டி இருந்தால் முதல் குற்றவாளி எடப்படி பழனிச்சாமி. அது தெரியாமல் பிரதமர் வந்து அடிக்கல் நாட்டி இருந்தால் அவரும் தவறுக்கு உரியவர். நிதி பெற்று தருவதில் காலதாமதம் ஏற்பட்டது என்ற உண்மையான காரணத்தை கூறி இருக்கலாம். உண்மையான காரணத்தை கூறாமல், நில ஆர்ஜிதம் செய்யப்பட வில்லை என்றார். இதற்கான ஆதாரங்களை நான் சமர்ப்பித்துள்ளேன்.

    2019-ல் எய்ம்ஸ் மருத்துவ மனைக்கு என்று முடிவு எடுக்கப்பட்ட 224 ஏக்கர் நிலப்பரப்புக்கு உரிய ஆவணங்கள் 2020-ம் ஆண்டு நவம்பர் 3-ந் தேதி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த தகவல் எல்லாம் தெரிந்த பிறகு கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் உயர்ந்த பொறுப்பில் உள்ள நிதி அமைச்சர் நில ஆர்ஜிதம் செய்து தராததால் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து அவரிடம் புதுவை எம்.பி. தொகுதியில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் யார் போட்டியிடுவார்கள் என்று நிருபர்கள் கேட்டதற்கு தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் முடிவு செய்வார் என்று அவர் தெரிவித்தார்.

    • மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டப்பட்டு இன்றோடு ஐந்தாண்டுகள் நிறைவு பெறுகிறது.
    • இரண்டாவது செங்கல்லை எடுத்துவைக்க இன்று எந்த அமைச்சரையும் அனுப்பிவைக்காத மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

    சென்னை:

    மதுரை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    மதுரை எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டப்பட்டு இன்றோடு ஐந்தாண்டுகள் நிறைவு பெறுகிறது.

    இரண்டாவது செங்கல்லை எடுத்துவைக்க இன்று எந்த அமைச்சரையும் அனுப்பிவைக்காத மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

    எங்கள் எய்ம்ஸ் எங்கே? என கேள்வி எழுப்பியுள்ளார்.

    இப்பதிவுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடிக்கு அடிக்கல் நாட்டிய செய்தி வெளியான நாளிதழ் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

    • எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணிகளை தொடங்க வலியுறுத்தி திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சி சார்பில் செங்கல் அனுப்பும் போராட்டம் நடந்தது.
    • போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் செங்கலை கையில் ஏந்தி பஸ் நிலையத்தில் ஊர்வலமாக சென்றனர்.

    திண்டுக்கல்:

    மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. பல வருடங்கள் கடந்த நிலையில் இதுவரை கட்டுமான பணிகள் நடைபெறவில்லை. இதனை அடுத்து மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணிகளை தொடங்க வலியுறுத்தி திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சி சார்பில் செங்கல் அனுப்பும் போராட்டம் நடந்தது.

    மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் நடந்த இந்த நூதன போராட்டத்தில் கட்சியினர் செங்கலை கையில் ஏந்தி பஸ் நிலையத்தில் இருந்து மத்திய அரசை கண்டித்து ஊர்வலமாக சென்றனர்.

    காமராஜர் சிலை அருகே சென்றபோது ஊர்வலத்தை போலீசார் தடுத்து நிறுத்தி னர். ஊர்வலம் செல்ல அனுமதியில்லை, கலைந்து செல்ல வலியுறுத்தியதை அடுத்து செங்கல் அனுப்பும் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • நீட் தேர்வை ஒழித்து கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்.
    • நீட் தேர்வுக்கு இதுவரை 21 பேர் பலியாகி உள்ளனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் மேலூரில் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சரும், மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

    திராவிட மாடல் தி.மு.க. அரசானது மக்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. கடந்த மாதம் 20-ந்தேதி மதுரையில் ஒரு மாநாடு நடைபெற்றது. அது என்ன மாநாடு? என்று உங்களுக்கே தெரியும். இந்த மாநாட்டில் புளியோதரை நன்றாக இருந்ததா? பொங்கல் நன்றாக இருந்ததா? என்று மட்டும் தான் பேசப்பட்டது.

    ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுடன் 32 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. ஆனால் நீட் தேர்வு ரத்து குறித்து தீர்மானம் எதுவும் ஏன் நிறைவேற்றவில்லை? ஆனால் அதே நாளில் தி.மு.க. சார்பில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களின் எதிர்காலம் நலன் கருதி நீட் தேர்வுக்கு எதிராக மாநில அளவில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    ஒரு மாநாடு எப்படி இருக்கக்கூடாது? என்பதற்கு எடுத்துக்காட்டாக மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாடு. ஒரு மாநாடு எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கு எடுத்துக்காட்டாக சேலத்தில் வருகிற டிசம்பர் மாதம் 17-ந்தேதி நடைபெறும் தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு அமையும். இந்த மாநாட்டில் இளைஞரணியினர் உள்பட மூத்த முன்னோடிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு இளைஞரணி மாநாட்டை வாழ்த்த வேண்டும். அதற்கு அழைப்பு விடுக்கவும் நான் இங்கு வந்துள்ளேன்.

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, மதுரைக்கு நாளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிறார். அவரிடம் நீங்கள் நீட் தேர்வை ஒழிப்பது தொடர்பான ரகசியம் என்ன? என்று கேளுங்கள் என கூறியுள்ளார். அவருக்கு நான் ஒரு சவால் விடுக்கிறேன். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கோரி ஒரு செங்கலை மட்டும் வைத்து சென்றீர்கள். அந்த செங்கலையும் நான் எடுத்துக்கொண்டு வந்து விட்டேன். நீங்கள் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் ரகசியத்தை சொல்லுங்கள்.

    நீட் தேர்வை ஒழித்து கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம். அதன் ஒரு பகுதியாக மாபெரும் கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்த இருக்கிறோம். இதில் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து வாங்கவும் திட்டமிட்டு இருக்கிறோம். நீட் தேர்வுக்கு இதுவரை 21 பேர் பலியாகி உள்ளனர்.

    அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி மக்களை ஏமாற்றும் கூட்டணி. சனாதனம் குறித்த எனது பேச்சை பா.ஜ.க.வினர் திரித்து பரப்பினர். சனாதனம் குறித்து அண்ணா கூறிய கருத்துக்களை அ.தி.மு.க.வினர் தைரியமாக மக்களிடம் சொல்வார்களா? அண்மையில் புதிய பாராளுமன்றம் திறப்பு விழா நடந்தது. இதில் தமிழகத்தில் இருந்து சாமியார்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். சாமியார்களுக்கும், பாராளுமன்றத்திற்கும் என்ன சம்பந்தம்? மக்கள் பிரதிநிதிகள் கொண்ட பாராளுமன்ற திறப்பு விழாவில் நாட்டின் முதல் குடிமகளாக உள்ள ஜனாதிபதி திரவுபதி முர்முவை கூட பா.ஜனதா அரசு அழைக்கவில்லை. காரணம் அவர் மலைவாழ் சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலும், கணவரை இழந்தவர் என்பதாலும் அழைக்கவில்லை. இதுதான் பா.ஜனதாவின் சனாதன அரசு. நேற்று கூட புதிய பாராளுமன்ற விழாவில் குடியரசு தலைவரை அழைக்கவில்லை. ஆனால் அதற்கு சம்பந்தமில்லாமல் இந்தி நடிகைகளை அழைத்துள்ளார்கள்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும். முதலமைச்சர் செயல்படுத்தியுள்ள மகளிர் உரிமைத்தொகை திட்டம், மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், புதுமைப் பெண் திட்டம் போன்றவற்றை பொதுமக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஜி.எஸ்.டி.-ல் ஒவ்வொரு மாநிலமும் மத்திய அரசுக்கு நிதி கொடுத்துக் கொண்டு இருக்கிறது.
    • தமிழ்நாட்டுக்கு தான் மத்திய அரசு நிதி கொடுப்பதில்லை.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் சென்னைக்கு புதிதாக கிடைத்த மெட்ரோ ரெயில், தமிழுக்கு செம்மொழி தகுதி, சேதுசமுத்திர திட்டம், ஒரகடத்தில் தேசிய மோட்டார் வாகன சோதனை ஆராய்ச்சி மையம், தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம், சேலத்தில் புதிய ரெயில்வே கோட்டம், சென்னை துறைமுகம், மதுரவாயல் பறக்கும் சாலை, நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், சென்னை அருகில் கடற்சார் தேசிய பல்கலைக்கழகம், திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம், கரூர், ஈரோடு, சேலம் ஆகிய 3 இடங்களில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர் தொழில் நுட்ப ஜவுளி பூங்கா இதெல்லாம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் வந்தது.

    இதுபோல் பா.ஜனதா தமிழ்நாட்டுக்கு என்ன சிறப்புகள் கொண்டு வந்து இருக்கிறீர்கள்? என்பது தான் என்னுடைய கேள்வி. ஆகவே எந்த திட்டத்திற்கும் தொடர்ச்சியாக நிதி ஒதுக்கீடு செய்வதை நான் கேட்கவில்லை. அனைத்து மாநிலத்திற்கும் செய்யப்படும் பொதுவான இடத்தில் தமிழ்நாடு இணைக்கப்பட்டு இருப்பதை பற்றியும் நான் கேட்கவில்லை.

    இன்றைக்கு ஜி.எஸ்.டி.-ல் ஒவ்வொரு மாநிலமும் மத்திய அரசுக்கு நிதி கொடுத்துக் கொண்டு இருக்கிறது. அந்த ஜி.எஸ்.டி. நிதியில் தமிழ்நாட்டில் இருந்து தான் அதிகமாக கொடுத்து இருக்கிறோம். ஆனால் தமிழ்நாட்டுக்கு தான் மத்திய அரசு நிதி கொடுப்பதில்லை. ரொம்ப குறைவாக கொடுத்துக் கொண்டு இருக்கிறது. மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் அதிகமாக கொடுக்கிறது. அதைத்தான் அடிப்படையாக வைத்து கேட்டேன்.

    அதுபோல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு ரூ.1200 கோடி மதிப்பில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன் அன்றைக்கு நிதி மந்திரியாக இருந்த அருண்ஜெட்லி இதை பாராளுமன்றத்தில் அறிவித்தார். இதையடுத்து பிரதமர் வந்து அடிக்கல் நாட்டினார்.

    அதன் பிறகு அமித் ஷா பலமுறை தமிழ்நாட்டிற்கு வந்து இருக்கிறார். அப்போது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணி 50 சதவீதம் முடிந்து விட்டது என சொன்னார்கள் தவிர இதுவரைக்கும் எந்த பணியும் நடக்கவில்லை என்பது தான் எனது குற்றச்சாட்டு. அதை எல்லாம் மூடி மறைத்து பேசிவிட்டு அமித் ஷா சென்றுள்ளாரே தவிர நாங்கள் கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் தரவில்லை.

    தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது எய்ம்ஸ் மருத்துவமனை அன்றைக்கு தேவையேபடவில்லை. ஏனென்றால் நம்முடைய மருத்துவ கட்டமைப்புகள் அதிகளவில் சிறப்பாக இருந்தது. இருந்தாலும் எய்ம்ஸ் திட்டத்தை அறிவித்தது மத்திய அரசு. அவர்கள் தான் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஆகவே இது பற்றி கேள்விகள் கேட்பது பொறுப்புள்ள மத்திய மந்திரி அமித் ஷாவுக்கு அழகல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனைத்து மருத்துவ ஊழியர்களுக்கும் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
    • கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஊழியர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    இதை தொடர்ந்து எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனைத்து மருத்துவ ஊழியர்களுக்கும் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஊழியர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    • உத்தரபிரதேசத்தின் சரோஜினி நாயுடு மருத்துவக்கல்லூரி பேராசிரியரான பிரசாந்த் லவானியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • நாகராஜனை கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நியமித்தது குறிப்பிடத்தக்கது.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக இருந்த நாகராஜன் வெங்கடராமன் சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 13ம் தேதி மாரடைப்பால் காலமானார்.

    இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய தலைவராக டாக்டர் பிரசாந்த் லவானியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேசத்தின் சரோஜினி நாயுடு மருத்துவக்கல்லூரி பேராசிரியரான பிரசாந்த் லவானியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    மதுரையில் புதிதாக அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நாகராஜனை கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நியமித்தது குறிப்பிடத்தக்கது.

    • மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி லோகோவில் தமிழிலும் பெயர் இருக்க வேண்டும்.
    • மத்திய அமைச்சருக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கடிதம் எழுதினார்.

    மதுரை

    விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் மத்திய அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் அடையாள சின்னத்தில் (லோகோ) தமிழ் மொழியில் பெயர் சேர்க்கப்பட வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான முக்கிய கட்டத்தை எட்டியிருப்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.

    இதுவரையில் பல்வேறு மட்டங்களில் நடைபெற்ற மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழு, நிறுவனக் குழு கூட்டங்களில் இந்த மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளை விரைவுபடுத்த வலியுறுத்தியுள்ளனர்.

    மேலும் சமீபத்தில் ஆலோசனைக் கூட்டத்தில், மதுரை எய்ம்ஸ் நிறுவனத்துக்கான அடையாளச் சின்னத்தை (லோகோ) இறுதி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் லோகோவில் தமிழ் மொழி கட்டாயம் இடம் பெற வேண்டும் என்பதை அக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து, தமிழ் மொழியிலும் அடையாள சின்னம் உருவாக்கப்படுவதை தாங்கள் உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×