search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை"

    • டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சுஹானி பட்நாகர், சிகிக்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
    • சுஹானிக்கு டங்கல் படத்திற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் சுஹானி படிப்பில் கவனம் செலுத்த விரும்பியதால், சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார்.

    டங்கல் படத்தில் அமீர்கானின் இளைய மகளாக நடித்த சுஹானி பட்நாகர், தனது 19 வயதில் அகால மரணமடைந்துள்ளார்.டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சுஹானி பட்நாகர், சிகிக்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

    சுஹானி பட்நாகர் பாலிவுட்டின் பிரபலமான குழந்தை நட்சத்திரம். அமீர் கானின் பிளாக்பஸ்டர் படமான 'டங்கல்' படத்தில் அறிமுகமான அவர் ஜூனியர் பபிதா போகத் வேடத்தில் நடித்தார். படத்தில் அவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. மேலும் பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும் அவர் நடித்துள்ளார்.


    சுஹானிக்கு டங்கல் படத்திற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் சுஹானி படிப்பில் கவனம் செலுத்த விரும்பியதால், சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார்.

    இந்நிலையில் சில காலத்திற்கு முன்பு சுஹானிக்கு விபத்து ஏற்பட்டுள்ளது, அதன் காரணமாக அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சுஹானி சிகிச்சைக்காக எடுத்துக்கொண்ட மருந்துகளில் பக்கவிளைவுகள் இருந்ததால், அவரது உடலில் படிப்படியாக தண்ணீர் தேங்கியது.

    இதனால் அவர் நீண்ட நாட்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்துள்ளார். அவரது மரணத்திற்கு பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். 

    • மருத்துவமனையின் எண்டோஸ்கோபி அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
    • விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்த நோயாளிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

    டெல்லி:

    டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையின் எண்டோஸ்கோபி அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்த நோயாளிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

    தீ விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 8 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த தீ விபத்தால் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

    • கருவில் உள்ள குழந்தைக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
    • கருவிலேயே குழந்தைக்கு இதய சிகிச்சை அளிக்க டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் முடிவு செய்தனர்.

    புதுடெல்லி:

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 28 வயதான கர்ப்பிணி ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவருக்கு ஏற்கனவே மூன்று முறை கரு கலைந்திருந்தது.

    4-வது முறையாக கர்ப்பம் அடைந்த அப்பெண்ணுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கருவில் உள்ள குழந்தைக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதுபற்றி பெற்றோரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். அவர்கள் இந்த குழந்தையை பெற்றெடுக்க விரும்பினர்.

    இதையடுத்து கருவிலேயே குழந்தைக்கு இதய சிகிச்சை அளிக்க டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.

    மிகவும் சவாலான இந்த அறுவை சிகிச்சையை மகப்பேறு மருத்துவதுறையுடன் இணைந்து இதயவியல் மற்றும் இதய மயக்க மருந்துத்துறை டாக்டர்கள் குழுவினர் செய்தனர்.

    அல்ட்ராசவுண்ட் வழிகாட்டுதலின் கீழ் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தாயின் அடி வயிற்றில் துளையிட்டு மெல்லிய குழாய் செலுத்தப்பட்டது.

    அது கருவில் உள்ள குழந்தையின் இதயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதிலிருந்து சிறிய பலூன் வடிகுழாயை பயன்படுத்தி, திராட்சை அளவு கொண்ட இதயத்தில் இருந்து அடைப்பு வெற்றிகரமாக நீக்கப்பட்டது.

    இந்த சிகிச்சையை 90 வினாடிகளில் செய்து முடித்தனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு தாயும், குழந்தையும் நன்றாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக அறுவை சிகிச்சை செய்த மூத்த டாக்டர் ஒருவர் கூறும்போது, தாயின் அடி வயிற்றின் வழியாக கருவில் உள்ள குழந்தையின் இதயத்தில் ஒரு ஊசியை செலுத்தி அடைப்பை சரி செய்தோம். குழந்தையின் இதயம் நன்றாக வளரும் என்று எதிர்பார்க்கிறோம்.

    மேலும் குழந்தை பிறக்கும் போது இதய நோய் தீவிரம் குறைவாக இருக்கும். இது போன்ற ஒரு செயல் முறை மிகவும் சவாலானது. ஏனென்றால் அது கருவின் உயிருக்கு கூட ஆபத்தாகலாம்.

    இந்த சிகிச்சை மிக விரைவாக செய்யப்பட வேண்டும். ஏனென்றால் இதயத்தின் பெரிய அறையை துளைக்க வேண்டி இருந்தது ஏதாவது தவறு நடந்தால் குழந்தைக்கு ஆபத்தாக முடியும். இந்த சிகிச்சையை நாங்கள் விரைவாக செய்து முடித்தோம் என்றார்.

    • கடந்த 7 மாதங்களாக பெண் சுய நினைவு இல்லாமலேயே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்தார்.
    • வயிற்றில் இருந்த குழந்தையும் நன்கு வளர்ச்சி அடைந்திருந்தது. அந்த குழந்தையை பெண் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த டிரைவர் ஒருவர் கடந்த மார்ச் மாதம் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களது வாகனம் மீது லாரி ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.

    இதில் கணவர் காயமின்றி உயிர் தப்பிய நிலையில் அவரது மனைவிக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதனால் அவர் சுயநினைவு இழந்தார்.

    உடனடியாக அந்த பெண்ணை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பரிசோதனையில் அந்த பெண் 40 நாள் கர்ப்பிணியாக இருப்பது தெரிந்தது. ஹெல்மெட் அணியாததால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஆழ்ந்த கோமா நிலைக்கு அவர் சென்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    அவருக்கு நினைவு திரும்புமா என்பதை உறுதியாக செல்ல இயலாது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். அதே சமயத்தில் அந்த பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் தகவலையும் தெரிவித்தனர்.

    சுய நினைவு இல்லாமல் இருக்கும் அந்த பெண்ணின் வயிற்றில் இருக்கும் சிசுவை கலைக்க வேண்டுமானால் கோர்ட்டில் அனுமதி பெற வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அந்த குழந்தையை வளர்க்க கணவர் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து சுய நினைவு இழந்த பெண் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தனி அறையில் பராமரிக்கப்பட்டு வந்தார்.

    கடந்த 7 மாதங்களாக அவர் சுய நினைவு இல்லாமலேயே டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்தார். அதே சமயத்தில் வயிற்றில் இருந்த குழந்தையும் நன்கு வளர்ச்சி அடைந்திருந்தது. அந்த குழந்தையை பெண் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. பெண் குழந்தையை பெற்ற அந்த பெண் சுய நினைவு இல்லாமலேயே அறுவை சிகிச்சை இன்றி இயல்பான முறையில் குழந்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.

    23 வயதாகும் அந்த பெண் சுய நினைவு இல்லாமல் இருக்கிறார். குழந்தை பெற்ற சமயத்தில் அவரது கண்கள் திறந்தன. ஆனால் அந்த பெண் பேசவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    ×