search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தலைவராக நியமிக்கப்பட்ட டாக்டர் நாகராஜன் திடீர் மரணம்- முதலமைச்சர் இரங்கல்
    X

    மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தலைவராக நியமிக்கப்பட்ட டாக்டர் நாகராஜன் திடீர் மரணம்- முதலமைச்சர் இரங்கல்

    • சென்னை திருவான்மியூரில் வசித்து வந்த டாக்டர் நாகராஜனுக்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது
    • டாக்டர் நாகராஜன் ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதா கிருஷ்ணனின் மாமனார் ஆவார்.

    சென்னை:

    மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி தலைவராக நியமிக்கப்பட்டிருந்த டாக்டர் நாகராஜன் மாரடைப்பால் திடீரென மரணம் அடைந்தார்.

    சென்னை திருவான்மியூரில் வசித்து வந்த டாக்டர் நாகராஜனுக்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து போரூரில் உள்ள ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 12 மணி அளவில் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டில் நாகராஜனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எய்ம்ஸ் தலைவராக நியமிக்கப்பட்ட நாகராஜன், தேசிய நரம்பியல் அறிவியல் ஆராய்ச்சி குழு தலைவர், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக கவுரவ பேராசிரியர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை நெறிமுறை குழு தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதா கிருஷ்ணனின் மாமனார் ஆவார்.

    மூத்த நரம்பியல் மருத்துவர் நாகராஜன் வெங்கட்ராமனின் மறைவையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதா வது:-

    மூத்த நரம்பியல் மருத்துவர் நாகராஜன் வெங்கட்ராமன் மறைந்தார் என்ற செய்திகேட்டு மிகவும் வருத்தமடைந்தேன்.

    தேசிய நரம்பியல் அறிவியல் ஆராய்ச்சிக் குழுத்தலைவர், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மதிப்புறு பேராசிரியர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் நெறிமுறைக் குழுத் தலைவர் உள்ளிட்ட பல உயர் பொறுப்புகளை வகித்து வந்த நாகராஜன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நாகராஜன் சில மாதங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டிருந்தார்.

    அவரை இழந்து வாடும் மருமகன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட குடும்பத்தாருக்கும் மருத்துவத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×