என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அஜித் குமார் கொலை வழக்கு: போலீஸ் டிரைவர்- சாட்சிகளிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 2-வது முறையாக விசாரணை
- கடந்த வாரம் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது விசாரணையை தொடங்கினர்.
- சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரை மற்றும் திருப்புவனத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 27) என்பவர் திருட்டு புகார் தொடர்பாக போலீசாரால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு தனிப்படை பிரிவை சேர்ந்த கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் வழக்கின் தீவிரத் தன்மையை கருத்தில் கொண்டு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்படுவதாக முதலமைச்சர் அறிவித்தார்.
அதன்படி கடந்த வாரம் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக திருப்புவனம் போலீஸ் நிலையத்திலிருந்து அவர்கள் வழக்கு ஆவணங்களை பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரை மற்றும் திருப்புவனத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில், அஜித்குமாரை அடைத்து வைத்து தாக்கிய இடங்களில் ஆய்வு செய்து நேரடி விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த 19-ந்தேதி அஜித்குமார் தாக்கப்பட்டது குறித்து அவரது சகோதரரிடம் செய்து காண்பிக்குமாறு கூறி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சம்பவத்தில் தொடர்புடைய திருப்புவனம் பகுதியில் உள்ள பேக்கரியில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
இந்த நிலையில் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் திருப்புவனத்தில் சாட்சிகளிடம் 2-வது முறையாக விசாரணை நடத்தினர். அதன்படி தனிப்படை போலீசாருடன் அஜித்குமாரை வேனில் அழைத்து சென்ற போலீஸ்காரர் ராமச்சந்திரன், அஜித்குமார் சகோதரர் நவீன்குமார், கோவில் ஊழியர்கள் பிரவீன் மற்றும் வினோத், ஆட்டோ டிரைவர் அருண் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






