என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பாலியல் புகாருக்குள்ளான புதுச்சேரி பல்கலைக்கழக 3 பேராசிரியர்கள் சஸ்பெண்டு
    X

    பாலியல் புகாருக்குள்ளான புதுச்சேரி பல்கலைக்கழக 3 பேராசிரியர்கள் சஸ்பெண்டு

    • காரைக்கால் கிளை பல்கலைக்கழக பேராசிரியர் அந்தமானுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
    • காரைக்காலில் ஒரு பேராசிரியர் மீது சம்பந்தப்பட்ட மாணவியிடம் இருந்து புகார் வரவில்லை.

    புதுச்சேரி:

    காரைக்காலில் உள்ள புதுச்சேரி பல்கலைக்கழக கிளையில் பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

    மேலும் புதுச்சேரி பல்கலைக்கழகத்திலும் மாணவிகளிடம் பேராசிரியர்கள் பாலியல் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதில் தொடர்புடைய பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புதுச்சேரியில் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கைது செய்தனர்.

    மேலும் மாணவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதனை கண்டித்து புதுச்சேரி அரசியல் கட்சியினர் சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.

    இதனையடுத்து புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் மாணவர்களுடன் அமைச்சர் நமச்சிவாயம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பல்கலைக்கழக உள் புகார் குழு விசாரித்து பேராசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் புதுச்சேரி இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் புகாருக்கு உள்ளான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், மாணவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெறவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 3 பேராசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் காரைக்கால் கிளை பல்கலைக்கழக பேராசிரியர் அந்தமானுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை புதுச்சேரி பல்கலைக்கழக துணை பதிவாளர் மகேஷ் தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடந்த வாரம் 3 பேராசிரியர்கள் மீது வந்த புகாரை, பெண் பேராசிரியர் தலைமையிலான உள் புகார் குழு விசாரித்து அளித்த அறிக்கையின் அடிப்படையில் 3 பேராசிரியர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் இந்த 3 புகார்கள்தான் எங்களுக்கு நேரடியாக வந்தது.

    காரைக்காலில் ஒரு பேராசிரியர் மீது சம்பந்தப்பட்ட மாணவியிடம் இருந்து புகார் வரவில்லை. இருப்பினும் குற்றச்சாட்டின் பேரில், காரைக்காலில் உள்ள மாவட்ட அளவிலான புகார் குழு விசாரித்து வருகிறது. அந்த குழுவிற்கு எந்த இடையூறும் இல்லாமல் இருக்க சம்மந்தப்பட்ட பேராசிரியர் அந்தமான் நிக்கோபார் தீவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

    குற்றம் உறுதி செய்யப்பட்டால் உடனடியாக அவரை சஸ்பெண்டு செய்து, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரியில் புகார் முறையாக வந்ததால், உள்புகார் குழுவால் விசாரித்து நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆனால் காரைக்காலில் அப்படி இல்லை. கலெக்டர் விசாரணையை தொடங்கி உள்ளார்.

    அவரது விசாரணைக்கு பல்கலைக்கழக நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கும். யாரையும் பாதுகாக்கவும் இல்லை. மறைக்கவும் இல்லை. புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகம், பாலியல் சம்மந்தமான குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான நிலைபாட்டில் உள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×