என் மலர்
நீங்கள் தேடியது "National Commission for Women"
- தரவரிசையில் பீகாரின் பாட்னா, ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரங்கள் கடைசி இடங்களில் உள்ளன.
- கல்வி நிறுவனங்கள் பகலில் பாதுகாப்பாக இருப்பதாக 86 சதவீதம் பெண்கள் தெரிவித்து உள்ளனர்.
புதுடெல்லி:
'பெண்களுக்கான பாதுகாப்பான நகரங்கள்-2025'ன் பட்டியலை நேற்று தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டது. நாடு முழுவதும் உள்ள 31 நகரங்களில் 12 ஆயிரத்து 770 பெண்களிடம் கருத்துக் கேட்டு விவரங்கள் பதிவு செய்யப்பட்டு நகரங்களின் தரவரிசை பட்டியலிடப்பட்டது. பல்கலைக்கழக மற்றும் சட்டக்கல்லூரி நிபுணர்கள், கல்வியாளர்கள் கொண்ட குழு இந்த கருத்துக்கணிப்பில் ஈடுபட்டது. அந்த கருத்துக்கணிப்பில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:-
நாகாலாந்தின் தலைநகரமான கோஹிமா, பெண்களுக்கு அதிக பாதுகாப்பு உள்ள நகரமாக பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது. அங்கு பெண்களுக்கு நல்ல மரியாதையும், நிகழ்வுகளில் சரிசமமான பங்களிப்பும் கிடைப்பதாக பெண்கள் கூறி உள்ளனர். பெண்களுக்கான கட்டமைப்பு வசதிகளும் சிறப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த தரவரிசையில் பீகாரின் பாட்னா, ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரங்கள் கடைசி இடங்களில் உள்ளன, அங்கு பெண்களுக்கு நிறுவன ரீதியான மதிப்புகள், கட்டமைப்பு வசதிகள் மோசமான நிலையில் இருப்பதாகவும், ஆணாதிக்க முறைகள் அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர்.
கோஹிமா, விசாகப்பட்டினம், புவனேஸ்வரம், ஐஸாவல், காங்டாக், இடாநகர், மும்பை ஆகியவை சிறந்த பாதுகாப்பான நகரங்களாக வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன. ராஞ்சி, ஸ்ரீநகர், கொல்கத்தா, டெல்லி, பரிதாபாத், பாட்னா, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்கள் அந்த வரிசையில் பின்தங்கிய நிலையில் உள்ளன.
ஒட்டுமொத்தமாக கணக்கெடுக்கப்பட்டதில் 60 சதவீதம் பெண்கள், தங்கள் நகரத்தில் பாதுகாப்பாக இருப்பதாகவும், 40 சதவீத பெண்கள் பாதுகாப்பை உணரவில்லை என்றும் அல்லது பாதுகாப்பு இல்லை என்றும் தெரிவித்து உள்ளனர்.
கல்வி நிறுவனங்கள் பகலில் பாதுகாப்பாக இருப்பதாக 86 சதவீதம் பெண்கள் தெரிவித்து உள்ளனர். ஆனால் இரவிலும், கல்வி வளாகத்திற்கு வெளியிலும் பாதுகாப்பு அப்படி உணர்வதில்லை என்று கூறி உள்ளனர்.
இரவில் பொது போக்குவரத்து மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் அதிகம் இருப்பதாக பலரும் தெரிவித்து உள்ளனர்.
பணியிடங்களில் பாதுகாப்பாக இருப்பதாக 91 சதவீதம் பெண்கள் தெரிவித்து உள்ளனர். 50 சதவீதம் பேர் பணியிடங்களில் பாலியல் தொல்லைக்கு எதிரான விதிகள் இருக்கிறதா என தெரியவில்லை என்று கூறி உள்ளனர்.
பாதுகாப்பு புகார்களில் அதிகாரிகள் திறம்பட செயல்படுவார்கள் என்று நான்கில் ஒரு பங்கு பெண்கள் மட்டுமே நம்புவதாக தெரிவித்து உள்ளனர். தற்போதைய பாதுகாப்பு முயற்சிகள் ஓரளவு போதுமானவை என்று 69 சதவீதம் பேர் கூறி உள்ளனர். 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பு முயற்சிகளில் குறைபாடு இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.
பொது இடங்களில் துன்புறுத்தலை அனுபவித்து உள்ளதாக 7 சதவீதம் பெண்கள் கூறி உள்ளனர். அதே வேளையில் 24 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 14 சதவீதம் பேர் பாலியல் தொல்லையை அனுபவித்து உள்ளதாக கூறி உள்ளனர். அதாவது இளம்பெண்கள் 2 மடங்கு துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்களாம்.
துன்புறுத்தலுக்கு வாய்ப்புள்ள இடமாக சுற்றுப்புறங்கள் இருப்பதாக 39 சதவீதம் பேரும், போக்குவரத்து இடங்கள் துன்புறுத்தலுக்கு வாய்ப்புள்ள இடமாக 29 சதவீதம் பேரும் தெரிவித்து உள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பெண் மட்டுமே புகார் அளிப்பதாகவும், 2 பங்கு துன்புறுத்தல்கள் பலவித காரணங்களால் கண்டுகொள்ளாமல் விடப்படுவதாகவும் அறிக்கை கூறுகிறது.
- ஹிமான்ஷி குறித்த சில கருத்துக்கள் மிகவும் கொச்சையானதாகவும் அமைந்துள்ளன.
- ஒரு பெண்ணின் சித்தாந்த வெளிப்பாட்டை கேலி செய்ய கூடாது.
பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி நர்வால், வெறுப்புப் பிரச்சாரத்திற்கு எதிராக மத ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தார்.
"யாரிடமும் வெறுப்பு இருக்கக்கூடாது. முஸ்லிம்கள் அல்லது காஷ்மீரிகள் மீது மக்கள் வெறுப்பைக் கக்குவதை நான் காண்கிறேன். நாங்கள் இதை விரும்பவில்லை. நாங்கள் அமைதியை மட்டுமே விரும்புகிறோம். அதேநேரம் நீதியையும் விரும்புகிறோம்" என்று ஹிமான்ஷி தெரிவித்திருந்தார்.
இஸ்லாமியர்களுக்கு எதிராக செல்லாதீர்கள் என்ற அவரின் கருத்து சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. நாட்டின் அமைதி மற்றும் நல்லிணக்கம் நிலவுவதை பொறுத்துக்கொள்ள முடியாத இந்த மதவெறி கும்பல்களால் ஹிமான்ஷி மீது சமூக வலைத்தளங்களில் திட்டமிட்டு அவதூறு கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. ஹிமான்ஷி குறித்த சில கருத்துக்கள் மிகவும் கொச்சையானதாகவும் அமைந்துள்ளன.
இந்நிலையில் இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
அதில், "ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் நாட்டின் பல குடிமக்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில், லெப்டினன்ட் வினய் நர்வாலும் கொல்லப்பட்டார். இந்த பயங்கரவாத தாக்குதலால் முழு நாடும் வேதனையும் கோபமும் அடைந்துள்ளது.
லெப்டினன்ட் வினய் நர்வாலின் மரணத்திற்குப் பிறகு, அவரது மனைவி திருமதி ஹிமான்ஷி நர்வாலின் ஒரு அறிக்கை தொடர்பாக சமூக ஊடகங்களில் அவர் குறிவைக்கப்படும் விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் துரதிர்ஷ்டவசமானது. ஒரு பெண்ணின் சித்தாந்த வெளிப்பாடு அல்லது தனிப்பட்ட வாழ்க்கையின் அடிப்படையில் அவரை கேலி செய்வது எந்த வடிவத்திலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல.
எந்தவொரு உடன்பாடு அல்லது கருத்து வேறுபாடும் எப்போதும் கண்ணியத்துடனும் அரசியலமைப்பு வரம்புகளுக்குள்ளும் வெளிப்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு பெண்ணின் கண்ணியத்தையும் கௌரவத்தையும் பாதுகாக்க தேசிய மகளிர் ஆணையம் உறுதி பூண்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
- 2022-ம் ஆண்டில் தேசிய மகளிர் ஆணையத்தில் 31,000 புகார்கள் வந்துள்ளன.
- 8 ஆண்டில் இல்லாத வகையில் 2022-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகளவாக வந்துள்ளன.
புதுடெல்லி:
தேசிய மகளிர் ஆணையத்திற்கு கடந்த 2022-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி 30, 957 புகார்கள் வந்துள்ளன. இந்த 30,957 புகார்களில் 9,710 புகார்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமை என்ற அடிப்படையிலான பெண்களுக்கு எதிரான உணர்வுப்பூர்வ புகார்களுடன் தொடர்புடையவை.
மேலும் 6,970 குடும்ப வன்முறை புகார்கள், 4,600 வரதட்சணை கொடுமை புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்களில் அதிக அளவாக 54.5 சதவீதம் அளவுக்கு (16,872) உத்தர பிரதேசத்தில் இருந்து வந்துள்ளன. அடுத்து டெல்லி (3,004), மகாராஷ்டிரா (1,381), பீகார் (1,368) மற்றும் அரியானா (1,362) ஆகியவை உள்ளன.
தேசிய மகளிர் ஆணையத்திற்கு கடந்த 2014-ம் ஆண்டில் 33,906 புகார்கள் வந்துள்ளன. 8 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகளவாக 2022-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய புகார்கள் இங்கு வந்துள்ளன.
பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் 2,523 புகார்களும், பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் வன்கொடுமை முயற்சி தொடர்புடைய 1,701 புகார்களும், பெண்கள் புகார் அளிக்க வரும்போது அதனை போலீசார் அலட்சியம் செய்வது தொடர்புடைய 1,623 புகார்களும், சைபர் குற்றங்கள் தொடர்புடைய 924 புகார்களும் வந்துள்ளன என தகவல் தெரிவிக்கின்றது.
கடந்த 2021-ம் ஆண்டில் தேசிய மகளிர் ஆணையத்திற்கு 30, 864 புகார்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.
- புதுமணத்தம்பதிகள் தலையை சேர்த்து வைத்து முட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- வீடியோவை பார்த்த பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.
திருவனந்தபுரம் :
திருமணத்தின் போதும் திருமணம் முடிந்த பிறகும் வித, விதமான நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது. மணமகனின் வீட்டில் கால் வைப்பதற்கு முன் மணமகளுக்கு ஆரத்தி எடுப்பது, அரிசி நிரப்பப்பட்ட நாழியை காலால் தட்டி விடுவது உள்பட பல்வேறு சடங்குகள், சம்பிரதாயங்கள் நடைபெறுவது வழக்கம். இதுபோன்ற சடங்குகள் தவிர மணமக்களை மனதளவிலும், உடல் ரீதியாகவும் வேதனைப்படுத்தும் சில சம்பவங்களும் பல இடங்களில் நடந்து வருகிறது.
இந்தநிலையில் கேரள மாநிலம் பாலக்காட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் முடிந்து மணமகனின் வீட்டுக்குள் செல்வதற்கு முன் புதுமணத்தம்பதிகள் தலையை சேர்த்து வைத்து முட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
பாலக்காடு அருகே உள்ள கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த சச்சினுக்கும், கோழிக்கோடு முக்கம் பகுதியைச் சேர்ந்த சஜ்லாவுக்கும் திருமணம் நடந்தது. மணமகனின் வீட்டின் முன்பு வைத்து புதுமண தம்பதிக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது. அதன் பிறகு சஜ்லா வீட்டுக்குள் நுழைய முயன்றார். அப்போது திடீரென மணமக்களின் பின்னால் இருந்த ஒரு நபர் 2 பேரின் தலையையும் பிடித்து பலமாக முட்ட வைத்தார். இதில் 2 பேருக்கும் கடும் வேதனை ஏற்பட்டது. சஜ்லாவின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. அதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் சஜ்லாவுக்கு ஆறுதல் கூறி மணமகனின் தாய் உள்பட உறவினர்கள் அவரை வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. வீடியோவை பார்த்த பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.
மணமகள் சஜ்லா கூறும்போது, 'திடீரென நடந்த இந்த சம்பவத்தால் தலையில் கடும் வலி ஏற்பட்டது. சிறிது நேரம் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை' என்று கூறினார்.
மணமகன் சச்சின் கூறும்போது, 'இப்படி ஒரு சம்பிரதாயம் குறித்து கேள்விப்பட்டதே இல்லை' என்றார். இதுபோன்ற சம்பிரதாயம் பாலக்காட்டில் இருக்கிறது என்று வேறு சிலரும் கூறினர்.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக கேரள மகளிர் ஆணையம் தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி கேரளாவில் உள்ள கொல்லங்கோடு போலீசுக்கு மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
- பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புகார் அளிக்கும்படி சீருடை அணியாமல், சாதாரண உடையுடன் வந்த போலீசார் 3 பெண்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.
- இந்த விவகாரம் பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் புதிய திருப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி.யாக இருந்து வருபவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள், பென் டிரைவ் வெளியானது. இந்த விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கலாம் என்றும், அவர்கள் பெயர் பாதுகாக்கப்படும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 9 பெண்கள் புகார் அளித்துள்ளனர். அவர்களில் 2 பெண் அரசு அதிகாரிகள் உள்பட 6 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர். மற்ற பெண்கள் புகார் அளிக்க தயங்குவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புகார் அளிக்கும்படி கட்டாயப்படுத்தி போலீஸ் பெயரில் 3 பெண்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பதாக தேசிய மகளிர் ஆணையம் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளது.
இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புகார் அளிக்கும்படி சீருடை அணியாமல், சாதாரண உடையுடன் வந்த போலீசார் 3 பெண்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக பொய் புகார் அளிக்கும்படி கூறியுள்ளனர். செல்போனில் போலீசார் எனக்கூறி புகார் அளிக்கும்படி தொல்லை கொடுத்துள்ளனர்.
இதுபற்றி 3 பெண்களும் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்து, தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுள்ளனர், என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் புதிய திருப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் குமாரசாமி கூறியதாவது:-
பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கே சென்று விசாரணை அதிகாரிகள் மிரட்டுகிறார்கள். அவர்களை பொய் புகார் செய்ய கட்டாயப்ப டுத்துகிறார்கள். கடத்தி செல்லப்பட்டு மீட்கப்பட்ட பெண்ணை நீங்கள் எங்கே வைத்திருந்தீர்கள். ஏன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. எல்லோரும் சட்டத்தை மதிக்க வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அதை விட்டுவிட்டு புகார் செய்ய மறுக்கும் பெண்கள் மீது விபச்சார வழக்குகள் போடுவதாக மிரட்டப்படுகின்றனர். இதனால் அச்சுறுத்தலுக்கு பயந்து பெண்கள் போலீசில் பொய் புகார் அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேசிய மகளிர் ஆணையம் இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரித்து உடனடியான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று டெல்லி காவல்துறையை வலியுறுத்தியிருந்தது.
- இந்த விவகாரத்தில் ஸ்வாதி மலிவாலின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகள் இல்லத்துக்கு விரைந்துள்ளனர்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் வைத்து அவரது தனிச் செயலாளர் பிபவ் குமார் தன்னைத் தாக்கியதாக ஆம் ஆத்மி காட்சியைச் சேர்ந்த மாநிலங்களைவை பெண் எம்.பி ஸ்வாதி மலிவால் கடந்த மே 13 ஆம் தேதி காலை டெல்லி போலீசிடம் போன் மூலம் முறையிட்டார். இதனையடுத்து டெல்லி காவல்துறையினர் இந்த குற்றச்சாட்டு குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து தொடக்கத்தில் மௌனம் காத்துவந்த ஆம் ஆத்மி கட்சி பின்னர் ஸ்வாதி தாக்கப்பட்டது உணமைதான் எனவும், இந்த விவகாரத்தில் குறித்து கெஜ்ரிவால் கடுமையான நடவடிக்கை எடுப்பார் எனவும் விளக்கமளித்திருந்தது. .மேலும் பிபவ் குமார் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே டெல்லி பாஜகவினர் இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி அரசியல் ரீதியாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
தேசிய மகளிர் ஆணையம் இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரித்து உடனடியான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று டெல்லி காவல்துறையை வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட பிபவ் குமார் நாளை (மே 17) வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் மகளிர் ஆணையத்தின் முன் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் பிபவ் குமார் ஆஜராக தவறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஸ்வாதி மலிவாலின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகள் அவரது இல்லத்துக்கு விரைந்துள்ளனர்.
- ஸ்வாதி மலிவாலின் இல்லத்துக்கு சென்ற காவல்துறை உயர் அதிகாரிகள் குழு அவரிடம் இந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் பெற்றனர்.
- நாளை (ஏப்ரல் 17) காலை 11 மணிக்கு பிபவ் குமார் தேசிய மகளிர் ஆணையம் முன் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளது
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமார் தன் மீது தாக்குதல் நடத்தியதாக கெஜ்ரிவாலின் இல்லத்தில் இருந்து ஆம் ஆத்மி மாநிலங்களவை பெண் எம்.பி ஸ்வாதி மலிவால் போன் மூலம் டெல்லி போலீசிடம் கடந்த மே 13 அன்று காலை முறையிட்டார். ஆனால் கெஜ்ரிவாலின் இல்லத்துக்கு போலீஸ் விரைந்த போது அங்கு ஸ்வாதி மலிவால் காணப்படவில்லை. அவரின் குற்றச்சாட்டு குறித்து போலீஸ் தீவிரமாக விசாரித்து வருகிறது.
ஸ்வாதி தாக்கப்பட்டது உண்மைதான் என ஆம் ஆத்மி கட்சி எம்.பி சஞ்சய் ராவத் ஊடகங்களுக்கு விளக்கமளித்தார். மேலும் பிபவ் குமார் மீது கெஜ்ரிவால் கடும் நடவடிக்கை எடுப்பார் எனவும் உறுதியளித்தார். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் இந்திய மகளிர் ஆணையம், உடனே விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க டெல்லி காவல் துறையை வலியுறுத்தியிருந்தது.
ஆனால் இதுவரை டெல்லி காவத்துறைக்கு இந்த சம்பவம் குறித்த எழுத்துபூர்வமான புகார் அளிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் இன்று (மே 16) ஸ்வாதி மலிவாலின் இல்லத்துக்கு சென்ற காவல்துறை உயர் அதிகாரிகள் குழு அவரிடம் இந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் பெற்றனர். சுமார் 4 மணி நேரம் அவரிடம் வாக்குமூலம் பெற்ற பின் பேசிய அதிகாரிகள், இந்த குற்றச்சாட்டின் மீது விரைவில் எப்ஐஆர் பதியப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இதனிடையே நாளை (ஏப்ரல் 17) காலை 11 மணிக்கு பிபவ் குமார் தேசிய மகளிர் ஆணையம் முன் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
- ஸ்வாதி மலிவால் குற்றம் சாட்டியுள்ள விவகாரம் டெல்லி அரசியல் களத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
- நேற்று முன்தினம் (மே 16) ஸ்வாதி மலிவால் போலீசாரிடம் எழுத்துபூர்வமாக புகார் அளித்தார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் பிபவ் குமார் தன்னை தாக்கியதாக ஆம் ஆத்மி மாநிலங்களவை பெண் எம்.பி ஸ்வாதி மலிவால் குற்றம் சாட்டியுள்ள விவகாரம் டெல்லி அரசியல் களத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.நேற்று முன்தினம் (மே 16) ஸ்வாதி மலிவால் போலீசாரிடம் எழுத்துபூர்வமாக புகார் அளித்தார். அவரிடம் டெல்லி போலீஸ் உயர் அதிகாரிகள் குழு 4 மணி நேர வாக்குமூலம் பெற்றது.
இதனைத் தொடர்ந்து பிபவ் குமார் தனது வயிற்றில் காலால் எட்டி உதைத்து கடுமையாக தாக்கினார் என்று சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார். கெஜ்ரிவாலின் இல்லத்தில் ஸ்வாதி மலிவால் அனுமதியின்றி நுழைந்து அதிகாரிகளை மிரட்டும் வீடியோவை வெளியிட்டு, இது தேர்தல் சமயத்தில் கெஜ்ரிவாலின் பெயருக்கு களங்கம் விளைவிக்க பாஜக செய்த சதியே இது என்று ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் அன்றைய தினம் கெஜ்ரிவாலின் இல்லத்தில் இருந்து ஸ்வாதியை பாதுகாப்பு அதிகாரிகள் வெளியில் அழைத்துச் செல்லும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இந்த மொத்த விவகாரத்திலும் அவிழ்க்க முடியாத பல முடுச்சுகள் உள்ள நிலையில் டெல்லி காவல்துறை அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதும், இந்த விவகாரம் டெல்லி தேர்தல் களத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதுமே தற்போது அனைவரின் கேள்வியாகவும் உள்ளது.
- ஹத்ராஸ் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க தேசிய மகளிர் ஆணையத் தளிர் ரேகா சர்மா சென்றார்
- ரேகா சர்மாவுக்கு பணியாள் ஒருவர் குடைபிடித்தபடி சென்றது சர்ச்சையானது
தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மாவை அவமத்து பேசியதாக புதிய கிரிமினல் சட்டத்தின்கீழ் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸில் போலே பாபா சாமியாரின் இந்து மத ஆன்மீக சொற்பொழிவின்போது நடந்த கூட்டநெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர்.
இந்த விபத்து நாட்டையே உலுக்கிய நிலையில்,பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தை அரசியல் தலைவர்கள் சென்று சந்தித்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா அவர்களை சென்று சந்திக்கும்போது அவருக்கு பணியாள் ஒருவர் குடைபிடித்தபடி செல்லும் வீடியோ இணையத்தில் பேசுபொருளானது.
அவருக்கு [ரேகா சர்மாவுக்கு] ஏன் மற்றொருவர் குடைபிடிக்கிறார் என்று நெட்டிசன் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தனது எக்ஸ் தளத்தில் மஹுவா மொய்த்ரா, அவர் [ரேகா சர்மா] தனது முதலாளியின் பைஜாமாவை தூக்கிப் பிடிப்பதில் பிசியாக உள்ளார் என்று பதிலளித்திருந்தார். பின் அந்த பதிவை நீக்கினார். இந்த பதிவுக்கு ரேகா சர்மா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் மஹுவா மீது மகளிர் ஆணையம் சார்பில் டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டது, எனவே தற்போது மஹுவா மொய்த்ரா மீது எப்.ஐ.ஆர் பதியப்பட்டுள்ளது.
- காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு கடந்த 2020-ம் ஆண்டில் பா.ஜ.க.வில் இணைந்தார்.
- பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி குஷ்புவுக்கு வழங்கப்பட்டது.
சென்னை:
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு, கடந்த 2020-ம் ஆண்டில் பா.ஜ.க.வில் இணைந்தார். 2021-ல் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். அதன்பின், பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி குஷ்புவுக்கு வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பதவியை குஷ்பு இன்று திடீரென ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதத்தை குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறை ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கிருஷ்ணகிரி சிறுமி வன்கொடுமை சம்பவத்திற்கு தமிழக அரசுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
- மூன்று வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக இருந்த சிவராமன், பர்கூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு என்.சி.சி. முகாம் பயிற்சி அளித்து வந்துள்ளார். அப்போது சிவராமன் மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து சிவராமன் உள்பட 7 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம், தாமாக முன்வந்து வழக்கு விசாரணையை தொடங்கியுள்ளது.
மேலும் மூன்று வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
- ஒரு நாளைக்கு 2 தொடர்களை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும்.
- தவறான வார்த்தைகளை தடை செய்யவேண்டும்.
திருவனந்தபுரம்:
கேரள மகளிர் ஆணையம் திருவனந்தபுரம், மலப்புரம், கோட்டயம் ஆகிய மாவட் டங்களில் 13 முதல் 19 வயது டைய இளைஞர்களிடம் தொலைக்காட்சி சீரியல்கள் தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வில் 43 சதவீதத்தினர் சீரியல்கள் தவறான செய்திகளை தெரிவிப்பதாக கூறியிருக்கின்றனர்.
மேலும் 57 சதவீதத்தினர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் கருப்பொருள் மற்றும் உள்ளடக்கத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றனர்.
இந்த ஆய்வின் மூலம் குழந்தைகள் ஒழுக்கக் கேடான அல்லது எதிர்மறை கதாபாத்திரங்களை பின்பற்றுவதும் தெரிய வந்திருக்கிறது.
ஆகவே மலையாள தொலைக்காட்சி தொடர்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேரள மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மேலும் தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பாகும் மெகா சீரியல்களை தடை செய்யவேண்டும் என்றும் கூறியிருக்கிறது.
இது தொடர்பாக கேரள மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ள விஷயங்கள் தொடர்பாக விவரங்கள் வருமாறு:-
தொலைக்காட்சிகளில் தினசரி ஒளிபரப்பாகும் நீண்ட கால மெகா சீரியல்களை நிறுத்த வேண்டும். ஒரு தொடரின் எபிசோட்களின் எண்ணிக்கை 20 முதல் 30 வரை இருக்குமாறு குறைக்க வேண்டும்.
ஒரு தொலைக்காட்சி ஒரு நாளைக்கு 2 தொடர்களை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.
சீரியல்களை மறு ஒளிபரப்பு செய்ய தடை விதிக்க வேண்டும். சீரியல்கள் ஒளிபரப்பப்படுவதற்கு முன்பு அவற்றை முறையான தணிக்கை செய்யப்பட வேண்டும்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஆய்வு செய்வதற்கு தற்போதுள்ள திரைப்பட தணிக்கை வாரியம் அல்லது புதிய சிறப்பு வாரியம் பொறுப் பேற்க வேண்டும்.
இளைய பார்வை யாளர்கள் பார்க்க பொருத்த மானதாக இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். பல சீரியல்களின் உள்ளடக்கம் குடும்பங்கள் மற்றம் குழந்தைகளை எதிர்மறையாக பாதிக்கும்.
கருப்பொருள் பெரும்பாலும் உண்மைத்தன்மையை கொண்டிருக்கவில்லை. இது இளம் பார்வையாளர்களிடையே தீங்கு விளைவிக்கும் சாயல்களுக்கு வழி வகுக்கும்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தவறான வார்த்தைகளை தடை செய்யவேண்டும். பெண்கள் இழிவாக சித்தரிப்பதற்கு எதிரான சட்டங்களை வலுப்படுத்த வேண்டும். ஆபாசமான உள்ளடக்கம் பரவுவதை தடுக்க கடுமையான விதி முறைகளை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு கேரள மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.






