என் மலர்tooltip icon

    இந்தியா

    பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்- முதலிடம் பிடித்த நகரம் எது தெரியுமா?
    X

    பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்- முதலிடம் பிடித்த நகரம் எது தெரியுமா?

    • தரவரிசையில் பீகாரின் பாட்னா, ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரங்கள் கடைசி இடங்களில் உள்ளன.
    • கல்வி நிறுவனங்கள் பகலில் பாதுகாப்பாக இருப்பதாக 86 சதவீதம் பெண்கள் தெரிவித்து உள்ளனர்.

    புதுடெல்லி:

    'பெண்களுக்கான பாதுகாப்பான நகரங்கள்-2025'ன் பட்டியலை நேற்று தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டது. நாடு முழுவதும் உள்ள 31 நகரங்களில் 12 ஆயிரத்து 770 பெண்களிடம் கருத்துக் கேட்டு விவரங்கள் பதிவு செய்யப்பட்டு நகரங்களின் தரவரிசை பட்டியலிடப்பட்டது. பல்கலைக்கழக மற்றும் சட்டக்கல்லூரி நிபுணர்கள், கல்வியாளர்கள் கொண்ட குழு இந்த கருத்துக்கணிப்பில் ஈடுபட்டது. அந்த கருத்துக்கணிப்பில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    நாகாலாந்தின் தலைநகரமான கோஹிமா, பெண்களுக்கு அதிக பாதுகாப்பு உள்ள நகரமாக பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது. அங்கு பெண்களுக்கு நல்ல மரியாதையும், நிகழ்வுகளில் சரிசமமான பங்களிப்பும் கிடைப்பதாக பெண்கள் கூறி உள்ளனர். பெண்களுக்கான கட்டமைப்பு வசதிகளும் சிறப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    இந்த தரவரிசையில் பீகாரின் பாட்னா, ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரங்கள் கடைசி இடங்களில் உள்ளன, அங்கு பெண்களுக்கு நிறுவன ரீதியான மதிப்புகள், கட்டமைப்பு வசதிகள் மோசமான நிலையில் இருப்பதாகவும், ஆணாதிக்க முறைகள் அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர்.

    கோஹிமா, விசாகப்பட்டினம், புவனேஸ்வரம், ஐஸாவல், காங்டாக், இடாநகர், மும்பை ஆகியவை சிறந்த பாதுகாப்பான நகரங்களாக வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன. ராஞ்சி, ஸ்ரீநகர், கொல்கத்தா, டெல்லி, பரிதாபாத், பாட்னா, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்கள் அந்த வரிசையில் பின்தங்கிய நிலையில் உள்ளன.

    ஒட்டுமொத்தமாக கணக்கெடுக்கப்பட்டதில் 60 சதவீதம் பெண்கள், தங்கள் நகரத்தில் பாதுகாப்பாக இருப்பதாகவும், 40 சதவீத பெண்கள் பாதுகாப்பை உணரவில்லை என்றும் அல்லது பாதுகாப்பு இல்லை என்றும் தெரிவித்து உள்ளனர்.

    கல்வி நிறுவனங்கள் பகலில் பாதுகாப்பாக இருப்பதாக 86 சதவீதம் பெண்கள் தெரிவித்து உள்ளனர். ஆனால் இரவிலும், கல்வி வளாகத்திற்கு வெளியிலும் பாதுகாப்பு அப்படி உணர்வதில்லை என்று கூறி உள்ளனர்.

    இரவில் பொது போக்குவரத்து மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் அதிகம் இருப்பதாக பலரும் தெரிவித்து உள்ளனர்.

    பணியிடங்களில் பாதுகாப்பாக இருப்பதாக 91 சதவீதம் பெண்கள் தெரிவித்து உள்ளனர். 50 சதவீதம் பேர் பணியிடங்களில் பாலியல் தொல்லைக்கு எதிரான விதிகள் இருக்கிறதா என தெரியவில்லை என்று கூறி உள்ளனர்.

    பாதுகாப்பு புகார்களில் அதிகாரிகள் திறம்பட செயல்படுவார்கள் என்று நான்கில் ஒரு பங்கு பெண்கள் மட்டுமே நம்புவதாக தெரிவித்து உள்ளனர். தற்போதைய பாதுகாப்பு முயற்சிகள் ஓரளவு போதுமானவை என்று 69 சதவீதம் பேர் கூறி உள்ளனர். 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பு முயற்சிகளில் குறைபாடு இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

    பொது இடங்களில் துன்புறுத்தலை அனுபவித்து உள்ளதாக 7 சதவீதம் பெண்கள் கூறி உள்ளனர். அதே வேளையில் 24 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 14 சதவீதம் பேர் பாலியல் தொல்லையை அனுபவித்து உள்ளதாக கூறி உள்ளனர். அதாவது இளம்பெண்கள் 2 மடங்கு துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்களாம்.

    துன்புறுத்தலுக்கு வாய்ப்புள்ள இடமாக சுற்றுப்புறங்கள் இருப்பதாக 39 சதவீதம் பேரும், போக்குவரத்து இடங்கள் துன்புறுத்தலுக்கு வாய்ப்புள்ள இடமாக 29 சதவீதம் பேரும் தெரிவித்து உள்ளனர்.

    பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பெண் மட்டுமே புகார் அளிப்பதாகவும், 2 பங்கு துன்புறுத்தல்கள் பலவித காரணங்களால் கண்டுகொள்ளாமல் விடப்படுவதாகவும் அறிக்கை கூறுகிறது.

    Next Story
    ×