என் மலர்
பெண்கள் உலகம்

மாதவிடாய் முன்கூட்டியே வருவதற்கான காரணம் என்ன?
- ஒரு மாதவிடாய் சுழற்சி என்பது 21 நாளில் இருந்து 35 நாட்களுக்கு இடையில் நடக்கிறது.
- கர்ப்பமாக இருப்பதில் சிரமம் ஏற்படும் வரை பலருக்கு தங்களுக்கு PCOS இருப்பது தெரியாது.
ஒவ்வொருவரிடையேயும் மாதவிடாய் சுழற்சி வேறுபடும். குறிப்பிட்ட தேதியைவிட சிலருக்கு முன்னதாகவே மாதவிடாய் வந்துவிடும். சிலருக்கு நாட்கள் தள்ளிச்சென்று மாதவிடாய் வரும். சிலருக்கு ஆறு மாதம் என நீண்ட நாட்கள் மாதவிடாய் வராமலும் இருக்கும். பொதுவாக ஒரு மாதவிடாய் சுழற்சி என்பது 21 நாளில் இருந்து 35 நாட்களுக்கு இடையில் நடக்கிறது. எனவே மாதவிடாய் நாள் என்பது நபருக்கு நபர் மாறுபடுகிறது. உங்கள் மாதவிடாய் சுழற்சி 21 நாட்களுக்கு குறைவாக இருந்தாலோ அல்லது அடிக்கடி நீங்கள் மாதவிடாய்க்கு உள்ளானால் உங்கள் உடலில் எதாவது பிரச்சனை இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்படியான சில சாத்திய காரணங்கள் குறித்து பார்ப்போம்.
ப்ரீமெனோபாஸ்
இது மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுவதற்கு முந்தைய காலமாகும். பொதுவாக நாற்பது வயது அல்லது அதற்கு பிறகு இது தொடங்குகிறது. இந்த நேரத்தில் ஹார்மோன்களின் அளவுகளில் கடுமையான ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றன. இதனால் ஒவ்வொரு மாதமும் அண்ட விடுப்பு அதாவது மாதவிடாய் சரியாக நிகழாது. சிலருக்கு அடிக்கடி மாதவிடாய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. மாதவிடாய் சுழற்சிகள் கணிக்க முடியாததாக இருக்கும்.
தீவிர உடற்பயிற்சி
தீவிர உடற்பயிற்சி ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை ஏற்படுத்தும் அல்லது உங்கள் மாதவிடாய் சுழற்சியை முற்றிலுமாக நிறுத்தலாம். பெரும்பாலும், பெண் விளையாட்டு வீரர்கள் பலருக்கு இந்த பிரச்சனை பொதுவாக காணப்படுகிறது. ஏனெனில் தீவிர உடற்பயிற்சி செய்யும்போது நாம் உண்ணும் உணவைவிட அதிகளவு ஆற்றம் தேவைப்படுகிறது. உடற்பயிற்சி செய்யும் போது, உங்கள் உடலின் கலோரி எரிப்பு அளவு அதிகரித்து, அது அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. இதனால் போதுமான ஆற்றல் இல்லாமல், உங்கள் உடல் அண்டவிடுப்பிற்கு தேவையான இனப்பெருக்க ஹார்மோன்களை உற்பத்தி செய்யாது.
எடை ஏற்ற, இறக்கங்கள்
குறைந்த காலத்தில் அதிக எடை இழப்பு அல்லது எடை அதிகரிப்பு இவை இரண்டில் எது நடந்தாலும் அது உங்கள் ஹார்மோனில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால் மாதவிடாயில் பாதிப்பு ஏற்படுகிறது. மாதவிடாய் சுழற்சி எடை மாற்றங்களுடனும் தொடர்புடையது.
மாதவிடாய் சுழற்சியில் மன அழுத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது
மன அழுத்தம்
மன அழுத்தம் பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். அதில் ஒன்று மாதவிடாய் பாதிப்பு. கடுமையான மன அழுத்தம் உங்கள் ஹார்மோன் அளவை சீர்குலைத்து, ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு வழிவகுக்கும். இவை உங்கள் வாழ்வில் நிகழும் அதிர்ச்சிகரமான சம்பவம் அல்லது வேறு சமபவங்களால் கூட நிகழலாம். காரணம் எதுவாக இருந்தாலும் மன அழுத்தத்தை குறைப்பதன் மூலம் மட்டுமே மீண்டும் ஹார்மோனை சகஜ நிலைக்கு கொண்டு வர முடியும்.
பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS)
பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) என்பது ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படும் ஒரு பொதுவான நிலை. இது குழந்தை பிறக்கும் வயதின் அடிப்படையில் 10 பெண்களில் ஒருவரை பாதிக்கிறது. கர்ப்பமாக இருப்பதில் சிரமம் ஏற்படும் வரை பலருக்கு தங்களுக்கு PCOS இருப்பது தெரியாது. இது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிக்கு வழிவகுக்கும். மேலும் முகப்பரு, அதிகப்படியான முடி வளர்ச்சி மற்றும் கருவுறுதல் பிரச்சினைகள் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
இது பொதுவாக மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும் காரணிகளாகும். சத்தான உணவுமுறை அல்லது உடலில் ரத்தம் இல்லையென்றாலும் மாதவிடாய் வருவது தள்ளிப்போகும். இதனால் மாதவிடாய் குறைவாக இருந்தாலோ அல்லது வராமல் இருந்தாலோ தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது.






