என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Henna Benefits"

    • எல்லாருக்கும் மருதாணி ஒரே அளவாக சிவக்காது. சிலருக்கு நன்றாக சிவக்கும்; சிலருக்கு குறைவாக சிவக்கும்!
    • அதிகம் சிவக்கும் தன்மைகொண்ட மருதாணி இலைகளை பயன்படுத்துங்கள்!

    பண்டிகைகளாக இருந்தாலும் சரி, வீட்டு விசேஷங்களாக இருந்தாலும் சரி மேக்கப் இல்லாமல் அந்த நிகழ்ச்சி இப்போதெல்லாம் முழுமையடைவதில்லை. அதுவும் மெஹந்தி இல்லாமல் சொல்லவே தேவையில்லை. முன்பெல்லாம் பண்டிகை தினத்திற்கு முன்தினம் இரவு கையில் மருதாணி வைக்காமல் பெண்கள் தூங்கமாட்டார்கள். ஏன் ஆண்களும் வைத்துக்கொள்வர். மற்ற பண்டிகைகளைவிட தீபாவளி அப்படித்தான் போகும். தீபாவளிக்கு முந்தைய இரவு கை நிறைய மருதாணி வைத்துக்கொண்டு நல்ல தூக்கத்தில் இருக்க அதிகாலையில் எண்ணெய்க்குளியல் போட சொல்வார் அம்மா. எழுந்தவுடன் முகம் கூட கழுவாமல் கையை கழுவி, சகோதரர், சகோதரிகளிடத்தில் சென்று யார் கை அதிகமாக சிவந்திருக்கு என்று பார்த்தபின்தான் முகம் கழுவுவோம். அப்படி ஒரு ஆர்வம் மருதாணி போடுவதில். இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது.

    பலரும் மருதாணி போட காத்துக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கான பதிவுதான் இது. வீட்டில் நாம் அனைவரும் ஒரேநேரத்தில் மருதாணி போட்டாலும், எல்லோருக்கும் ஒரே அளவு சிவந்திருக்காது. சிலருக்கு அதிகமாக சிவந்திருக்கும், சிலருக்கு மிதமான அளவில் சிவந்திருக்கும், சிலருக்கு மிகவும் குறைவாக சிவந்திருக்கும். அதற்கு காரணம் அவரவரது உடல்நிலை. இருப்பினும் ஈரம் எளிதில் காய்வதாலும் பலருக்கு சிவந்திருக்காது. சிலர் மருதாணி வைத்துவிட்டு அப்படியே தூங்கும்போது கையில் இருந்து விழுந்துவிடும். இந்நிலையில் மருதாணி எளிதில் சிவக்க சில டிப்ஸ்களை இங்கு பார்ப்போம். 


    மருதாணியை அரைத்த உடனேயே போடவேண்டும்

    * இலைகளிலேயே அதிகம் சிவக்கும் தன்மைகொண்ட மருதாணி இலைகள் இருக்கும். அதனை அரைத்து அதனுடன் எலுமிச்சை சாறு, கொஞ்சம் சர்க்கரை கலந்துவிட்டு பின்னர் மருதாணி போடலாம். இது நல்ல சிவப்பு நிறத்தை அளிக்கும். மேலும் எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை கலந்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக, மருதாணி காய காய அதன்மீது விட்டுவருவதும் நல்ல நிறத்தை கொடுக்கும். 
    * அதுபோல யூக்கலிப்டஸ் தைலத்தை மருதாணி வைத்துள்ள இடத்தில் தடவினால் நல்லநிறம் கொடுக்கும். 
    * மருதாணியை கழுவ சோப்புத் தண்ணீரை பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அது நிறத்தை நீக்கும். அதுபோல மருதாணி போட்டு சிறிது நேரத்திலேயே எடுத்துவிடக்கூடாது. அதனால்தான் பலரும் தூங்குவதற்கு முன் கையில் மருதாணி வைத்து தூங்குவார்கள். பகலில் வேலைகள் நிறைய இருக்கும். அதனால் மருதாணியை உடனே எடுக்கவேண்டிய சூழல்வரும். முடிந்தவரை இரவு நேரத்தில் போட்டுவிட்டு, காலையில் கையை கழுவுங்கள்.
    * கிராம்பை நன்றாக தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை மருதாணி அரைக்கும்போது பயன்படுத்தினால் நல்ல சிவப்பாக நிறம் இருக்கும்.
    * அதுபோல முதலில் கைக்கழுவ தண்ணீரை பயன்படுத்தாமல், கடுகு எண்ணெயை பயன்படுத்தி மருதாணியை நீக்க வேண்டும். கடுகு எண்ணெய்க்கு பதில் யூக்கலிப்டஸ் எண்ணெய் பயன்படுத்தலாம். 

    அழகிற்காக மட்டுமின்றி உடல் சூட்டை தணிப்பதற்காகவும், உடலில் உள்ள பித்தத்தை குறைப்பதற்காகவும் என மருதாணி வைப்பதற்கு மருத்துவ ரீதியாகவும் பல காரணங்கள் உள்ளன. 

    • பெண்களில் அழகு சாதன பொருட்களில் ஒன்று மருதாணி.
    • இந்திய பெண்கள் இதனை அதிகம் பயன்படுத்துவார்கள்.

    மருதாணி என்றால் அனைவருக்கும் முதலில் ஞாபகத்திற்கு வருவது பெண்களில் அழகு சாதன பொருட்களில் ஒன்று மருதாணி. மருதாணியில் அளப்பரிய மருத்துவ குணங்கள் உள்ளதால்தான் நம் முன்னோர்கள் அவற்றை அழகுசாதனப் பொருளாக பயன்படுத்தி வந்துள்ளனர். சிலர் வீடுகளில் கொல்லைப் புறத்திலும் தோட்டங்களிலும் வளர்த்து வருகின்றனர்.

     மணமகளை அழகுபடுத்தவும் திருவிழா காலங்களிலும் இந்திய பெண்கள் இதனை அதிகம் பயன்படுத்துவார்கள். வட இந்திய திருமணங்களில் திருமண நாளுக்கு முன்பு மருதாணியிடும் நிகழ்ச்சியை 'மெஹந்தி ராத்திரி' என்று வெகு சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

    இந்தியா முழுவதும் காணப்படும் பெருஞ்செடி மற்றும் சிறு செடி வகையைச் சேர்ந்தது. இதன் இலை, விதை, பட்டை, வேர் அனைத்து மருத்துவ குணம் கொண்டவை. இதனை அலவணம், ஐவணம், மருதோன்றி, சரணம், மருதாணி என பல பெயர்களில் அழைக்கின்றனர்.

     நாம் சிறுவர்களாக இருந்தபோது நகங்களின் மீது மருதாணி இலையை அரைத்து பற்று போட்டு விடுவார்கள். இதனால் நகங்கள் அழகாகின. உள்ளங்கைகளிலும் அழகாக ஏதாவது ஒரு டிசைனை போட்டு விடுவார்கள். பருப்பு போன்ற வகைகளை விரல் அடுக்கின் கீழ் வைத்து அதன் மீது மருதாணியை வைத்து டிசைன் செய்து போடுவார்கள். இது பல்வேறு விதமான கற்பனையை தூண்டும் விதமாக அமையும்.

    தற்காலத்தில் நக பாலிஷ் மற்றும் கோன் மருதாணி என்ற பெயரில் பல வந்துள்ளன. இவை ரசாயனம் கலந்தவை. இவற்றால் மருத்துவ பயன்கள் எதுவும் கிடையாது. என்றாலும் மருதாணி போட்டு விடுபவர்கள் அழகு படுத்துகிறார்கள்.

    இப்பொழுது எல்லாம் மணப்பெண்ணுக்கு மிகவும் அழகாக நேர்த்தியாக முழங்கை வரை மருதாணி போட்டு விடும் பழக்கம் வழக்கத்திற்கு வந்துவிட்டது. அதை கலை கண்களோடு பார்ப்பவர்களுக்கு மிகவும் ரசனையாக இருக்கும். மேலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளின் போதும் மருதாணி போடுபவர்களை வரவேற்பில் அமர்த்திவிடுகிறார்கள. அவர்களிடம் போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. இது ஒரு கலையாக பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறிவிட்டது. காலத்திற்கு தகுந்தார் போல் அனைவரையும் மாற்றி உள்ளது மருதாணி என்று தான் கூற வேண்டும்.

    ஆனால் மருதாணி அதிக மருத்து பயன்களை கொண்டது. நகக் கண்ணில் ஏற்படும் நகச்சுற்று, புண், சொத்தை இவற்றைப் போக்கும் குணமுடையது. மேலும் நகங்களை பாதுகாக்கும் அரணாக மருதாணி விளங்குகின்றது, நகக்கண்ணில் புண் அல்லது நகச்சுற்று ஏற்பட்டவர்கள் மருதாணி இலையை அரைத்து நகத்தின் மீது பற்று போட்டால் நகக் கண்ணில் ஏற்பட்ட புண்கள் குணமாகும்.

    மருதாணி பூக்களை தலையணையின் கீழ் வைத்த தூங்கச் சென்றால் நல்ல தூக்கம் வரும். மேலும் மூளையில் ஏற்பட்ட சூட்டை தணித்து உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்வு ஏற்படுத்தும்.

    மருதாணியின் வேர் பட்டையை அரைத்து பாலில் கலந்து காலையில் அருந்தி வந்தால் மாதவிடாய் காலங்களில் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவது குணமாகும். பித்தத்தை தனித்து உடல்நிலையை சீராக்க உதவும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹீமோதெரபி சிகிச்சை அளிக்கும் போது நோயாளிகளின் தலையில் உள்ள முடிகள் உதிர்ந்து விடும். அப்பொழுது முடியில்லாத குறை தெரியாமல் இருக்க தலையில் பல டிசைன்களில் மருதாணி இட்டுக்கொள்கின்றனர்.

    மருதாணி இட்டுக் கொண்டால் மன அழுத்தம் குறைவதாக மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். மருதாணி விதையில் உள்ள எண்ணெயை உடம்பின் மீது தடவி வந்தால் உடலில் எரிச்சல் தணிந்து குளிர்ச்சியாகும். வாதம் பித்தம் சம்பந்தப்பட்ட நோயை போக்கும் குணம் மருதாணிக்கு உண்டு.

    கை காலில் எரிச்சல் உண்டாவதைத் தடுக்க மருதாணி இலையை நன்கு நீர் விட்டு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து கை, கால்களிலும் உள்ளங்கால்களிலும் தேய்த்து வந்தால் கை, கால் எரிச்சல் உடனே நீங்கும். மருதாணி இலையுடன் மஞ்சளை சேர்த்து அரைத்து சேற்றுப் புண்களில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    கால் வெடிப்புகளில் தேய்த்து வந்தாலும் வெடிப்புகள் மாறும். கால்களை பார்ப்பதற்கு சிவந்து அழகாகவும் தோற்றமளிக்கும். மேலும் நரை முடியை மறைப்பதற்கு மருதாணிபேக், குளியல் நடத்துகிறார்கள். இதனால் முடியின் வெள்ளை நிறம் சற்று செம்பட்டையாக மாறி அது ஒரு அழகாக மிளிர்கிறது. இளமை தக்க வைக்கப்படுகிறது. இப்படி அழகுக்கு அழகு சேர்ப்பதாகவும் பல்வேறு நோய்களை தீர்க்கும் மருந்தாகவும் மருதாணி சிறப்பாக செயலாற்றி வருகிறது.

    ×