search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalakkadu"

    • முத்து உள்பட 9 பேர் கும்பல் ரமேஷ், அவரது சகோதரர், தாயார் ஆகிய 3 பேரையும் தாக்கினர்.
    • தாக்குதலின்போது ரமேஷின் செல்போன், ரூ.5 ஆயிரத்தையும் பறித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் சேதுராயபுரம் காலனியை சேர்ந்தவர் காளியப்பன் மகன் ரமேஷ் (வயது 25). சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்த போது, ஜெ.ஜெ.நகரை சேர்ந்த இசக்கியப்பன், அக்பர், தமிழன், முத்து உள்பட 9 பேர் கும்பல் திடீர் என வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து, ரமேஷ் அவரது 17 வயது சகோதரர், அவரது தாயார் தங்கம்மாள் (44) ஆகிய 3 பேரையும் தாக்கினர். மேலும் ரமேஷின் செல்போன், ரூ.5 ஆயிரத்தையும் பறித்து விட்டு தப்பி சென்று விட்டனர். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது.

    சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இசக்கியப்பன் உள்பட 9 பேர் கும்பலையும் தேடி வருகிறார்.

    • அந்த இடத்தில் 5 ஏக்கர் 12 செண்ட் நிலத்தை விசுவாசம் கிரையம் பெற்றதாக கூறி வந்துள்ளார்.
    • விசுவாசம் உள்ளிட்ட 4 பேர் 20-க்கும் மேற்பட்ட அடக்க தலங்களை அழித்ததாக தெரிகிறது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம், வேதநாயகபுரத்தை சேர்ந்த கிராம மக்களுக்கான இடுகாடு பெருமாள்குளம் கழுத்தறுத்தான் பொத்தை அருகே உள்ளது.

    இதில் இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தெற்கு பெருமாள்குளத்தை சேர்ந்த விசுவாசம் (வயது 70) அந்த இடத்தில் 5 ஏக்கர் 12 செண்ட் நிலத்தை கிரையம் பெற்றதாக கூறி வந்துள்ளார். இதனால் அங்கு இறந்தவர்கள் உடல்களை அடக்கம் செய்யும் போது அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இதனிடையே விசுவாசம், அவரது மகன் யோவான் (40), அதே ஊரை சேர்ந்த ராஜாமணி மகன்கள் சதிஷ் (26), ஆல்பர்ட் (29) ஆகியோர் சேர்ந்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட 20-க்கும் மேற்பட்ட அடக்க தலங்களை அழித்ததாக தெரிகிறது. இதுபற்றி வேதநாயகபுரம் ஊர் நாட்டாமை நாராயணன் (31) களக்காடு போலீசில் புகார் செய்தார்.

    இதுதொடர்பாக விசுவாசம், அவரது மகன் யோவான், சதிஷ், ஆல்பர்ட் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி யோவானை கைது செய்தனர்.

    • பச்சையாறு அணையில் இருந்து 2 குளங்களுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • பல இடங்களில் கால்வாய் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கீழவடகரையில் பூலாங்குளமும், மேலவடகரையில் பம்பன்குளமும் உள்ளன. இந்த குளங்களின் மூலம் அப்பகுதியில் உள்ள 200 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்த குளங்களுக்கு மஞ்சுவிளை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருந்து வரும் கால்வாய் மூலம் தண்ணீர் சென்றது. ஆனால் பச்சையாறு அணை கட்டப்பட்ட போது கால்வாய் அணைக்குள் சென்று விட்டது. அதன் பின்பு பச்சையாறு அணையில் இருந்து மடத்துக் கால்வாய் மூலம் 2 குளங்களுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் குளங்களுக்கு தண்ணீர் வரும் மடத்துக் கால்வாய் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி கிடப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் பல இடங்களில் கால்வாய் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளதாகவும் கூறுகின்றனர்.

    இதையடுத்து 2 குளங்களுக்கும் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே சமீபத்தில் பெய்து வரும் கனமழையினால் இப்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பியுள்ளன. ஆனால் பம்பன்குளமும், பூலாங்குளமும் இன்னும் நிரம்பவில்லை. பராமரிப்பு இல்லாததால், மடத்து கால்வாயில் வரும் தண்ணீர் தடைபட்டு குளங்களுக்கு வந்து சேரவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    குளங்கள் நிரம்பாததால் குளங்கள் மூலம் பாசனம் பெறும் விளைநிலங்களில் விவசாய பணிகளை தொடங்க முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே மடத்து கால்வாயை பராமரித்து, 2 குளங்களுக்கும் போதிய அளவு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புதூர் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் சோதனையிட்டனர்.
    • முகைதீன்,வசந்தகுமார் ஆகியோர் முருகனிடம் கஞ்சா வாங்கியது விசாரணையில் தெரியவந்தது.

    களக்காடு:

    களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் மற்றும் போலீசார் புதூர் பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனையிட்டனர். அதில் அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் களக்காடு நடுத்தெருவை சேர்ந்த முகைதீன் (25), கடம்போடுவாழ்வை சேர்ந்த வசந்தகுமார் (20) என்பதும், இவர்கள் களக்காடு ஆற்றாங்கரை தெருவை சேர்ந்த முருகன் (60) என்பவரிடமிருந்து கஞ்சா வாங்கியதும் தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து 4,650 கிராம் எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.

    • செல்வி தண்ணீர் பிடிக்க வீட்டில் இருந்த மின் மோட்டார் சுவிட்சை போட்டுள்ளார்.
    • மின்சாரம் பாய்ந்ததில் செல்வி தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக இறந்தார்.

    நெல்லை:

    களக்காடு கள்ளிக்குளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி செல்வி (வயது22). இவர்களுக்கு 3 வருடங்களுக்கு முன் திருமணமாகி 1 1/2 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

    இந்நிலையில் நேற்று மாலை செல்வி தண்ணீர் பிடிப்பதற்காக அவர்களது வீட்டில் இருந்த மின் மோட்டார் சுவிட்சை போட்டுள்ளார். பின்னர் அதனை நகர்த்தி வைப்பதற்காக ஆப் செய்யாமல் கையில் தூக்கி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் செல்வி தூக்கி வீசப்பட்டார்.

    இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் களக்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செல்விக்கு திருமணமாகி 3 வருடங்களே ஆவதால் சப் -கலெக்டர் விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

    • உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பயணிகளும் தலை யணைக்கு வந்து செல்கின்றனர்.
    • கடந்த சில நாட்களாக களக்காட்டில் வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது.

    களக்காடு:

    களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணையில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பயணிகளும் தலை யணைக்கு வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக களக்காட்டில் வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையிலும் மழை தீவிரமடைந்துள்ளது. நேற்று இரவிலும் கனமழை கொட்டியது. களக்காட்டில் 62.20 மில்லிமீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக தலையணை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது, தடுப்பணையை மூழ்கடித்தப்படி தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.

    இதனைதொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க களக்காடு வனத்துறையினர் இன்று தடை விதித்தனர். தலையணையை சுற்றி பார்க்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    • கார்த்திகை மாதத்தை முன்னிட்டு களக்காடு அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.

    களக்காடு:

    களக்காடு ஆற்றாங்கரை தெருவில் அய்யப்பன் கோவில் உள்ளது. சபரிமலையில் உள்ளதை போலவே இங்கும் பூஜை முறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கார்த்திகை மாதத்தை முன்னிட்டு களக்காடு அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. கார்த்திகை மாதத்தின் முதல் தேதியான இன்று கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, மாலை அணிந்து விரதம் தொடங்கினர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.

    களக்காடு ஆனந்த நடராஜர் திருவாசக குழுவினர் திருவாசக முற்றோதுதல் நடத்தினர். தொடர்ந்து மாலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனம் இடம்பெற்றது. இரவு 7 மணிக்கு அய்யப்பனுக்கு அபிஷேகமும், 8 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜைகளும் நடத்தப்பட்டது. அதன் பின் இரவு 9 மணிக்கு அத்தழ பூஜை நடந்தது. வருகிற 1-ந்தேதி கும்பாபிஷேக விழாவும், டிசம்பர் 27-ந்தேதி மண்டல பூஜை விழாவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை களந்தை சபரிமலை அய்யப்பன் கோவில் அறக்கட்டளையினரும், அய்யப்ப பக்தர்களும் செய்து வருகின்றனர்.

    • திருமணத்திற்கு பின் ஆறுமுகமும், ஜெயந்தியும் மும்பையில் வசித்து வந்தனர்.
    • ஜெயந்தியும், ஆறுமுகமும் பிரிவதற்கு பெருமாள் தான் காரணம் என வேல்கணேசன் கருதினார்.

    களக்காடு:

    களக்காடு வியாசராஜபுரம் சேனையர் தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 56). தொழிலாளி. இவரது சகோதரி நம்பியம்மாள் மகன் ஆறுமுகத்திற்கும், அதே தெருவை சேர்ந்த முருகன் மகன் வேல்கணேசனின் (39) தங்கை ஜெயந்திக்கும் திருமணம் நடந்தது.

    முன்விரோதம்

    திருமணத்திற்கு பின் ஆறுமுகமும், ஜெயந்தியும் மும்பையில் வசித்து வந்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுடக்கிடையே கருத்து வேறுபாடு எழுந்தது. இதையடுத்து கணவன், மனைவி இருவரும் பிரிந்தனர். ஜெயந்தி களக்காடு வந்து தனது தாயார் வீட்டின் அருகே தனியாக வசித்து வருகிறார்.

    ஜெயந்தியும், ஆறுமுகமும் பிரிவதற்கு பெருமாள் தான் காரணம் என வேல்கணேசன் கருதினார். இதுசம்பந்தமாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலை யில் நேற்று பெருமாள் தனது வீட்டு முன் நின்று கொண்டிருந்தார்.

    அரிவாள் வெட்டு

    அப்போது அங்கு வந்த வேல் கணேசனுக்கும், பெருமாளுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வேல் கணேசன், பெருமாளை அரிவாளால் வெட்டினார். இதனால் காயமடைந்த பெருமாள் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனை யில் அனுமதிக்கப்ப ட்டார்.

    இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பச்சமால், சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இது தொடர்பாக வேல் கணேசனை கைது செய்தனர்.

    • பெருமாள்குளத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
    • குண்டும்- குழியுமான சாலையில் மழைநீர் தேங்கி நீச்சல் குளம் போல் காட்சி அளிக்கிறது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள பெருமாள்குளத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பெருமாள்குளம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள சாலை அமைக்கப்பட்டு 15 ஆண்டு களை கடந்து விட்டதாக கூறப்படுகிறது.

    தொடர்ந்து பராமரிப்பும் இல்லாததால் சாலை பழுதடைந்து காணப்படுகிறது. சாலையில் குண்டும், குழிகள் ஏற்பட்டுள்ளன. கற்கள் சிதறி கிடக்கிறது. இதனால் சாலையில் செல்ல முடியாமல் பொதுமக்கள் பாதிப்படை ந்துள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர்.

    இருசக்கர வாகனங்களில் செல்லும் போது குண்டும், குழியுமான சாலையில் வாகனங்கள் சிக்கி கொள்வதால் விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும், பெயர்ந்து கிடக்கும் கற்கள் வாகனங்களை பதம் பார்ப்பதால் அடிக்கடி பழுது ஏற்படுகிறது.

    இந்நிலையில் தற்போது களக்காடு பகுதியில் பெய்து வரும் மழையினால் சாலையில் ஏற்பட்டுள்ள குண்டும்- குழியுமான சாலையில் மழைநீர் தேங்கி நீச்சல் குளம் போல் காட்சி அளிக்கிறது.

    இதன் வழியாகவே பஸ்கள் மற்றும் வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து காணப்படும் இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பெருமாள்குளம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதனை வலியுறுத்தி பெருமாள்குளத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் காட்வின் டைட்டஸ் அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பி உள்ளார்.

    • மேகலா நாங்குநேரி பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக உள்ளார்.
    • செல்வராஜ் தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் லெட்சுமணன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார்.

    களக்காடு:

    களக்காடு, ஆற்றாங்கரைதெருவை சேர்ந்தவர் லெட்சுமணன் (வயது 30). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மேகலா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மேகலா நாங்குநேரி பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக உள்ளார். லெட்சுமணனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்து வந்துள்ளார்.

    கடந்த 11-ந் தேதி லெட்சுமணன் போதையில் வீட்டிற்கு வந்து மனைவி மேகலாவுடன் தகராறு செய்துள்ளார். இதனால் மேகலா தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். லெட்சுமணனும் வீட்டை விட்டு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று லெட்சுமணன் களக்காடு தலையணைக்கு செல்லும் வழியில் உள்ள அவரது உறவினர் செல்வராஜ் தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் களக்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    இன்ஸ்பெக்டர் பச்சமால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லெட்சுமணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இதில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் லெட்சுமணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    • ஒரு மாதத்திற்கு முன்பு முகேஷ் என்பவருக்கும், மதன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
    • சிவா உள்பட 4 பேரும் சேர்ந்து ராமனை இரும்பு கம்பியால் தாக்கினர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் மலையடியை சேர்ந்தவர் ராமன் (வயது 45). விவசாயி. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அதே ஊரை சேர்ந்த முகேஷ் என்பவருக்கும், மதன் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதற்கு ராமன் தான் காரணம் என முகேஷ் குடும்பத்தினர் கருதினர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று ராமன் தனது வீட்டு முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முகேஷ் (26), அவரது சகோதரர் அஜித் (23), நம்பிராஜன் மகன் பவின் (24), காரியாண்டியை சேர்ந்த சிவா ஆகிய 4 பேரும் சேர்ந்து ராமனை இரும்பு கம்பியால் தாக்கினர்.

    அதனை தடுக்க வந்த ராமனின் மாமனார் சுப்பிரமணியனையும் அவர்கள் தாக்கினர். இதில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கிருந்து ராமன் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது.

    அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முகேஷ், அஜித் உள்பட 4 பேரையும் தேடி வருகின்றனர்.

    • களக்காடு பஸ் நிலையம் கீழத்தெருவில் வாறுகால் பணிக்காக குழி தோண்டப்பட்டது.
    • பொன்ராஜ் உள்ளிட்டோர் வாறுகால் அமைக்கும் பணியை தடுக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

    களக்காடு:

    களக்காடு பஸ் நிலையம் கீழத்தெருவில் கழிவுநீர் செல்ல வாறுகால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து வாறுகால் அமைக்கும் பணிக்காக குழி தோண்டப்பட்டது. இதற்கு அதே பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் பன்னீர்தாஸ் (வயது53), மேலப்பத்தையை சேர்ந்த ஜெயக்குமார் (40), சத்திரம் கள்ளிகுளத்தை சேர்ந்த பொன்ராஜ் (40) ஆகியோர் வாறுகால் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தை கற்களை போட்டு அடைத்து, வாறுகால் அமைக்கும் பணியை தடுக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

    இதையறிந்த களக்காடு நகராட்சி 20-வது வார்டு கவுன்சிலரான அந்தோணிசாமி மனைவி சித்ரா (38) தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் சித்ராவுக்கு, பன்னீர்தாஸ் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பன்னீர்தாஸ் உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகின்றனர்.

    ×