என் மலர்
பெண்கள் உலகம்

காதலா? ஈர்ப்பா? வித்தியாசத்தை உணருங்கள்!
- 18 வயது ஆனாலும் கூட பெண்கள், பாலியல் ரீதியான உறவுகளில் புரிதல் இல்லாமல்தான் இருக்கின்றனர்.
- பெற்றோர்கள் பெண்குழந்தைகளிடம் பாலியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இரண்டு நாட்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவரின் பெரியப்பா செய்தியாளர்களின் முன்பு அழுது, புலம்பும் வீடியோ ஒன்று வைரலானது. அதில் தங்கள் வீட்டுப் பிள்ளையை, அதாவது அவரது தம்பிப் பெண்ணை, இளைஞர் ஒருவர் காதலிப்பாதாக சொல்லி, ஆசைவார்த்தைக் கூறி 18 வயது நிரம்பிய மறுநாளே அழைத்துச்சென்று திருமணம் செய்துகொண்டதாகவும், தற்போதுவரை தங்களிடம் தங்களது மகளை காண்பிக்கவில்லை எனவும், மேலும் அந்த இளைஞர் இதுபோன்று பல பெண்களை ஏமாற்றி உள்ளதாகவும் கதறி புலம்பியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் அப்பெண்ணை திருமணம் செய்துகொண்ட இளைஞரின் உறவினர் ஒருவர், பணவசதி இல்லாததால் பெண்ணின் வீட்டார்தான் மிரட்டியதாக தெரிவித்தார். இச்செய்தி கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
ஒரு பக்கத்தினர் பெண்வீட்டார் பணவசதி இல்லாததால் அப்பையனை ஏற்கவில்லை என கருத்து தெரிவித்து வருகின்றனர். மறுபக்கத்தினர் பெண்பிள்ளைகளை ஏமாற்றி, பெற்றோரின் சொத்தை பறிப்பதே பல இளைஞர்களின் வேலையாக இருக்கிறது என கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதுபோன்ற நிகழ்வுகளின் உண்மை நிலவரம் என்ன? இதுபோன்று இளைஞர்கள், இளம்பெண்கள் செய்வது முறையா? அவர்களின் பெற்றோர் மனநிலை என்ன? அவர்கள் என்ன செய்யவேண்டும்? என்பது குறித்து ஒரு சிறுதொகுப்பை காண்போம்.
இளம்பெண்ணின் எதிர்காலம் என்னவாகும்?
மேற்கூறிய நிகழ்ச்சியையே உதாரணமாக எடுத்துக்கொள்வோம். 18 வயதாகி ஒரு வாரம் கூட அப்பெண்ணுக்கு ஆகவில்லை. அவள் இன்னும் கல்லூரி படிப்பை முடிக்கவில்லை. ஒரு திருமண உறவிற்குள் செல்லும்போது அவளின் படிப்பு கவனம் சிதறி, எண்ண ஓட்டம் மாறும். மேலும் குழந்தை எண்ணத்தை இருவரும் கையிலெடுத்தால், அதனை கையாளும் மனப்பக்குவம் அந்தப் பெண்ணுக்கு இருக்கிறதா? என்பதும் இங்கு கேள்விக்குறிதான். இந்திய திருமணச் சட்டத்தில் பெண்களின் திருமண வயது 18ஆக இருந்தாலும், பல பெண்கள் உடலளவிலும், மனதளவிலும் இன்னும் பாலியல்ரீதியான உறவுகளில் புரிதல் இல்லாமல்தான் இருக்கின்றனர். மேலும் உடலளவிலும் அவர்கள் ஒரு பிரசவத்தை தாங்கும் திடத்துடனும் இருக்கிறார்களா? என்பதும் கேள்விக்குறியே. இதற்காகத்தான் இப்போது பெண்ணின் திருமண வயதை 21ஆக மாற்றவேண்டும் என்ற விவாதம் சென்றுக்கொண்டிருக்கிறது. இதற்கு பலரும் அந்தக்காலத்தில் 14 வயதிலேயே பெண்கள் திருமணம் செய்துக்கொண்டார்கள், குழந்தைப் பெற்றுக்கொண்டார்கள் என அறிவாளித்தனமாக பேசுவார்கள். அப்போது இருந்த நடைமுறையும், அவர்கள் உணவுமுறையும் வேறுப்பட்டது என்பதை நினைவில் வைத்துக்கொண்டு ஆகச்சிறந்த கருத்துக்களை முன்வைக்க வேண்டும்.
ஈர்ப்பா? காதலா?
எது நடந்தாலும் 2கே கிட்ஸா இருப்பா என்று 2000த்திற்கு பின் பிறந்தவர்களை பெரும்பாலானோர் ஒரு கேலியுடன் பேசுவார்கள். காரணம் அவர்களின் காதல் விவகாரங்கள், அவர்களின் செயல்முறைகள், நடைமுறைகள் மற்றும் அணுகுமுறைகள். இது எல்லோருக்கும் பொருந்தாது. இருப்பினும் இப்போதைய தலைமுறையினர் பலரும் காதல் என்றால் என்னவென்றே தெரியாமல், எதிர்பாலினத்தவரிடம் வரும் ஈர்ப்பை வேறுபடுத்தி அறியமுடியாமல் ஒரு உறவுக்குள் செல்கின்றனர். இருவருக்கும் இடையே எந்த புரிதலும் இல்லாமல், ஒரு உறவுக்குள் செல்லும்போது அதில் பிரச்சனைகள், வாக்குவாதங்கள், மோதல் என வன்முறை வெடிக்கிறது. பல விவகாரங்கள் கொலைகளில் முடிகிறது. ஆனால் இவை எல்லாம் 2கே கிட்ஸ்க்கு மட்டும் பொருந்தாது. பலருக்கும் பொருந்தும். எதிர்பாலினத்தவரிடம் வரும் ஈர்ப்புக்கும், காதலுக்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.
புரிதல் ஒருபக்கம் இல்லையென்றாலும், இதுபோன்ற தவறுகள் நடக்க எளிதாக துணைநிற்கின்றன சமூக வலைதளங்கள். யாரென்றே தெரியாதவர்களிடம் எளிதில் பழகி, அவர்கள் உண்மையை பேசுகிறார்களா? உண்மையில் தங்களை விரும்புகிறார்களா? என்று தெரியாமல் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்கின்றனர் பல இளைஞர்களும், இளம்பெண்களும். அவர்களின் உண்மைமுகம் தெரியவரும்போது வாழ்க்கையை தொலைத்துவிடுகிறார்கள். அப்படி உண்மையில் நீங்கள் காதல்தான் செய்கின்றீர்கள் என்றால் இருவரும் இணைந்து ஒன்றாக முன்னேற பாருங்கள். உங்கள் படிப்பை முதலில் முடித்துவிட்டு, ஒரு நல்ல வேலைக்கு சென்று பின்னர் வீட்டில் கூறுங்கள். அப்போது அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் காத்திருங்கள். காத்திருப்பதில்தான் உண்மையான காதல் உள்ளது. உங்களை ஒருவர் உண்மையில் காதலித்தால் உங்களுக்காக எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் காத்திருப்பார்கள்.
சிலவீட்டில் என்ன செய்தாலும் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். அந்தச் சூழலில் நீங்கள் திருமணம் செய்துகொள்ளலாம். ஒருவேளை பெண்ணின் வீட்டில் உங்கள் காதல் தெரிந்து, அவர்களை கட்டாயப்படுத்தினால், அந்தப் பெண் திருமணம் செய்து கொள்வதற்கு தயார் என்றால் நீங்கள் திருமணம் செய்துகொள்ளலாம். ஆனால் எந்த காரணத்தாலும் உங்களின் படிப்பு, அதனால் பாதிப்படையாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். உண்மையில் காதலிப்பவர்கள் உங்களின் முன்னேற்றை கருத்தில்கொண்டே ஒவ்வொரும் நடைமுறையையும் மேற்கொள்வர். அப்படி படிக்கும்போதே திருமணம் செய்துகொண்டாலும் படிப்பைத்தொடருங்கள். அதைவிடுத்து படிப்பை நிறுத்தி ஒரு திருமணம் என்பது உங்களின் வாழ்க்கையை கேள்விகுறியாக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
பெற்றோர் மனநிலை...
பெற்றோர்கள் பலரும் தங்கள் பிள்ளைகள் ஏதேனும் பிரச்சனையில் சிக்கும்போதே அவர்கள் ஒரு உறவில் இருந்துள்ளனர் என்பதை அறிகின்றனர். சமூக வலைதளங்களில் தங்கள் பிள்ளைகள் என்ன செய்கின்றனர் என்பதை கண்காணிக்க தவறுகின்றனர். மற்றொரு முக்கிய காரணம் பெற்றோர்கள் பாலியல்ரீதியான சில கருத்துகளை பிள்ளைகளிடம் பேசுவது தவறு இல்லை. இந்தியாவில் உள்ள பெற்றோர்கள்தான் இன்னும் பாலியல் கல்வி குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர். பெற்ற பிள்ளைகளிடம் காதல்ரீதியான வார்த்தைகளை பேசினால் கூட அது அபச்சாரம். பின் எப்படி உங்கள் பிள்ளைகளுக்கு காதலுக்கும், ஈர்ப்புக்கும் வித்தியாசம் தெரியும். ஒருபுறம் நம் பெற்றோர்களுக்கு இதுபோன்ற விஷயங்களில் அந்தளவு புரிதல் இல்லை என்று கூறினாலும், அவர்கள் வளர்ந்த விதமும், சூழலும் எப்படி இருந்தது என்பது நமக்கும் தெரியும். அதனால் அவர்களை சொல்லியும் பலன் இல்லை.
ஈரப்பால் வரும் உணர்ச்சிகளுக்கு காதல் என பெயர் சூட்டாதீர்
மற்றொன்று இதில் பிள்ளைகளைவிட, பெற்றோர்களே அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர். தன் மகள் ஒரு நல்லப்பையனை திருமணம் செய்துகொண்டால் பிரச்சனை இல்லை. ஆனால் அவன் ஏமாற்றுபவனாக இருந்தால்? அதன்பின் நடைபெறும் விளைவுகள்? அதற்கு யார் பொறுப்பேற்பது? தங்கள் பெண் தேர்ந்தெடுத்த ஒரு ஆண்மகன் சரியானவாக இல்லாவிட்டால், அந்தப் பெண்ணை தாண்டி ஒரு குடும்பமே அதில் வீழ்கிறது. இது எல்லாக் குடும்பத்தினருக்கும் பொருந்துமா எனத் தெரியாது. ஆனால் உண்மையில் தனது பெண்பிள்ளைகளை அன்பாக வளர்க்கும் ஒவ்வொரு குடும்பத்தினரையும் அது வலுவாக பாதிக்கும். பாதை எப்படி இருந்தாலும் பிடிப்புதான் முக்கியம்.
அவள் எப்படி திருமணம் செய்துகொண்டால் என்பதை தாண்டி, அவள் யாரை திருமணம் செய்துகொண்டால் என்பது மிக முக்கியமான ஒன்று. ஏனெனில் பல பெண்கள் தாங்கள் தவறான முடிவு எடுத்துவிட்டால் தற்கொலை செய்துகொள்கின்றனர். பலரின் வாழ்க்கை மோசமாக பாதிக்கப்படுகிறது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது யார்? அந்தப் பெண் இறந்துவிட்டால், அவளை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டவன், வேறொரு பெண்ணைத்தேடி சென்றுவிடுவான். ஆனால் பிள்ளையை இழந்த பெற்றோரின் கதி? இறுதியில் பெண்களோ, ஆண்களோ ஒரு காதல் உறவுக்குள் செல்கிறீர்கள் என்றால் உங்களின் துணை, உங்களது கல்வி, வேலை, உங்களது துன்பம், இன்பம் என அனைத்திலும் துணை நிற்பார்களா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஈரப்பால் வரும் உணர்ச்சிக்குள் விழுந்து காதல் என பெயர்வைத்துக்கொண்டு வாழ்க்கையை வீணாக்காதீர்கள்.






