என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மதுபாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூலிப்பதற்கு முற்றுப்புள்ளி: அரசின் புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வருகிறது
- ஒன்று பழுதடைந்தாலோ அல்லது சிக்னல் கிடைக்கவில்லை என்றாலோ மற்றொறு மிஷினை பயன்படுத்தி பணம் பெறலாம்.
- டாஸ்க்மாக் கடைகளில் இனி மது பாட்டிகளை ஸ்கேன் செய்தால் அந்த பாட்டிலின் நிர்ணயிக்கப்பட்ட விலை மட்டும் தான் வரும்.
சென்னை:
தமிழகத்தில் அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் 4,778 சில்லறை விற்பனை கடைகள் மூலம் மது விற்பனை செய்யப்படுகிறது. இங்கு மது வகைகளுக்கு ஏற்ப, ஒரு பாட்டில்களுக்கு கூடுதலாக குறைந்தது ரூ.10 முதல் ரூ.50 வரை வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
கூடுதல் பணம் வசூலிப்பது தொடர்பாக கேட்கும்போது மதுப்பிரியர்களுக்கும், டாஸ்மாக் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. அப்போது அவர்கள் பேசுவதை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிடப்படுகின்றன. இதனால் அரசுக்கு மிகப்பெரும் நெருக்கடி ஏற்படுகிறது.
எனவே தமிழக அரசின் உத்தரவின் பேரில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் விசாகன், அனைத்து கடைகளிலும் மது பாட்டில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு தான் விற்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
தொடர்ச்சியாக வந்த புகார்களின் அடிப்படையில் ஏராளமான ஊழியர்களையும் அவர், இடைநீக்கம் செய்தார். ஆனாலும் இந்த பிரச்சினை தீரவில்லை. தொடர்ந்து மது பாட்டிலுக்கு கூடுதல் தொகை தான் வசூலிக்கபட்டது.
எனவே அதற்கு முற்றுப்புள்ளி வைக்க டாஸ்மாக் நிர்வாகம், டிஜிட்டல் பண பறிமாற்ற முறையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமல்படுத்தியது. ஒவ்வொரு கடையாக கொண்டு வரப்பட்ட இந்த முறை தற்போது அனைத்து கடைகளிலும் நடைமுறைக்கு வந்துவிட்டது. ஒவ்வொரு கடைகளிலும் 2 'ஸ்வைப்பிங்' மிஷின்கள் வைக்கப்பட்டுள்ளன.
ஒன்று பழுதடைந்தாலோ அல்லது சிக்னல் கிடைக்கவில்லை என்றாலோ மற்றொறு மிஷினை பயன்படுத்தி பணம் பெறலாம்.
இதனால் ஏ.டி.எம். கார்டு, யு.பி.ஐ. பறிமாற்றம் மூலம் 2 சதவீதம் அளவுக்கு பணம் வசூலிக்கப்பட்டது. இப்போது 20 சதவீதத்தை தாண்டி டிஜிட்டல் பறிமாற்றம் நடக்கிறது.
இருந்தாலும்....? ஒரு பாட்டிலுக்கு கூடுதல் தொகை வாங்குவது மட்டும் நிற்கவில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு முடிவு செய்தது.
இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம் புதிய நடைமுறையை அமல்படுத்த உள்ளது. அதாவது சூப்பர் மாக்கெட்டுகளில் வாங்கிய பொருளை ஸ்கேன் செய்தால் அந்த பொருளின் விலை மட்டும் தான் 'ஸ்வைப்பிங்' மிஷினில் வரும். அந்த தொகையை மட்டும் தான் டிஜிட்டல் முறையில் செலுத்த முடியும்.
அதேபோல டாஸ்க்மாக் கடைகளில் இனி மது பாட்டிகளை ஸ்கேன் செய்தால் அந்த பாட்டிலின் நிர்ணயிக்கப்பட்ட விலை மட்டும் தான் வரும். அந்த தொகையை மட்டும் தான் நாம் கார்டு மூலமாகவோ, யு.பி.ஐ. மூலமாகவோ செலுத்த முடியும். கூடுதல் தொகையை செலுத்த முடியாது.
இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம், 'ஸ்வைப்பிங்' பணம் செலுத்தும் எந்திரத்தை வழங்கியுள்ள வங்கிகளிடம் ஆலோசனை நடத்தியது. சென்னையில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குனர் அலுவலகத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட வங்கி பிரதிநிதிகள், இன்னும் 10 தினங்களுக்குள், அதற்கான ஏற்பாட்டை செய்து தருவதாக உறுதியளித்துள்ளனர்.
இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டால் மதுபாட்டிலுக்கு கூடுதல் தொகை வசூலிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.






