என் மலர்
இந்தியா

விசாரணையின்றி 5 ஆண்டுகள் சிறை.. உமர் காலித்-இன் 'வாழும் உரிமை' மறுக்கப்படுவதாக சந்திரசூட் கருத்து
- தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் ஜாமீனைத் தானாகவே மறுக்க முடியாது.
- திருப்திப்படுத்துவது நீதிமன்றத்தின் வேலை அல்ல.
ராஜஸ்தானில் நடந்து வரும் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கலந்துகொண்டு கலந்துரையாடலில் பங்கேற்றார்.
டெல்லியில் சிஏஏ சட்டத்திற்கு எதிரான போராட்டம் கலவரமாக மாறிய வழக்கில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணையின்றிச் சிறையில் இருக்கும் உமர் காலித் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த சந்திரசூட், அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள 'வாழும் உரிமை' என்பது விரைவான விசாரணையைப் பெறுவதையும் உள்ளடக்கியது.
நீண்ட கால விசாரணையின்றி ஒருவரைச் சிறையில் வைப்பது என்பது தண்டனைக்குச் சமமானது.
ஒரு வழக்கில் விசாரணை விரைவாக நடைபெற வாய்ப்பில்லை என்றால், ஜாமீன் வழங்குவதுதான் விதியாக இருக்க வேண்டும், ஜாமீனை மறுப்பது விதிவிலக்காக மட்டுமே இருக்க வேண்டும்.
தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் ஜாமீனைத் தானாகவே மறுக்க முடியாது. அந்த வழக்கில் உண்மையில் தேசிய பாதுகாப்பு அடங்கியுள்ளதா என்பதையும், நீண்ட காலத் தடுப்புக்காவல் அவசியம்தானா என்பதையும் நீதிமன்றங்கள் ஆய்வு செய்ய வேண்டும்.
குற்றம் சாட்டப்பட்டவர் மீண்டும் அதே குற்றத்தைச் செய்ய வாய்ப்பிருப்பது, நாட்டை விட்டுத் தப்பிச் செல்வது அல்லது ஆதாரங்களைச் சிதைப்பது ஆகிய மூன்று காரணங்கள் இருந்தால் மட்டுமே ஜாமீனை மறுக்கலாம். இவை இல்லை என்றால், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட வேண்டும்.
திருப்திப்படுத்துவது நீதிமன்றத்தின் வேலை அல்ல, அரசியலமைப்புச் சட்டத்தின் சமநிலையைப் பாதுகாப்பதே நீதிமன்றத்தின் கடமை.
UAPA போன்ற கடுமையான சட்டங்கள் ஜாமீன் பெறுவதைக் கட்டுப்படுத்தினாலும், அவை அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மீற முடியாது" என்று தெரிவித்தார்.
உமர் காலித்
2020 பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) எதிர்ப்பு போராட்டங்கள் வன்முறையாக மாறிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கலவரத்தில் குறைந்தது 53 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த கலவர வழக்கில் JNU பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் ஷர்ஜீல் இமாம் மற்றும் உமர் காலித் உட்பட 15 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இமாம் மற்றும் உமர் காலித்தின் ஜாமின் மனுக்கள் 2022 முதல் நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்ற அமர்வு அவர்களுக்கு ஜாமின் வழங்க பலமுறை மறுப்பு தெரிவித்தது.
இந்த மாத தொடக்கத்தில் அவர்களுக்கு மீண்டும் ஜாமீன் மறுத்த உயர்நீதிமன்றம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவருக்கு வழங்கப்படும் விசாரணைக்கு முந்தைய சிறை காலத்தை தண்டனையாக கருத முடியாது என தெரிவித்தது.
அதாவது, விசாரணையே இல்லாமல், குற்றம் நிரூபிக்கப்டாமல் கடந்த 5 ஆண்டுகளாக உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் சிறையில் வைக்கப்பட்டிருப்பதற்கு எந்த அர்த்தமும் இல்லை என்பதே அதற்கு அர்த்தம்.






