search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூர்"

    • 20 குழந்தைகளின் உயிரை காப்பாற்றி உள்ளார்.
    • மு.க.ஸ்டாலின் சேமலையப்பன் மறைவுக்கு இரங்கல்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் சத்யா நகரை சேர்ந்தவர் சேமலையப்பன் (வயது 49). இவர் வெள்ளகோவில் அய்யனூர் அருகில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் இவர் பள்ளி முடிந்து குழந்தைகளை வீட்டில் கொண்டு விடுவதற்காக வேனில் அழைத்துக்கொண்டு சென்றார். வெள்ளகோவில் போலீஸ் நிலையம் அருகே கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்து கொண்டிருந்த போது திடீரென்று சேமலையப்பனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

    இருப்பினும் அசம்பாவிதம் நிகழ்வதற்கு முன் வேனில் இருந்த குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தன் உயிரை கையில் பிடித்தபடி மிகவும் சிரமப்பட்டு வேனை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு இருக்கையில் இருந்தபடியே ஸ்டிரியங்கில் மயங்கி சரிந்து உயிரிழந்தார்.

    இதனால் வேனில் இருந்த 20 குழந்தைகள் உயிர் தப்பினர். நெஞ்சு வலியால் துடித்த போதும் தனது உயிரை கொடுத்து பள்ளி குழந்தைகளை காப்பாற்றிய சேமலையப்பனின் செயல் பொது மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தை அறிந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேமலையப்பன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், ரூ.5 லட்சம் நிதி வழங்க உத்தரவிட்டார்.

    இதையடுத்து இன்று காலை தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், காங்கயம் சத்யாநகரில் உள்ள சேமலையப்பன் வீட்டிற்கு சென்றார்.அங்கு அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், ரூ. 5 லட்சம் நிதிக்கான காசோலையை சேமலையப்பன் பெற்றோரிடம் வழங்கினார் .

    அப்போது திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    மேலும் உயிரிழந்த சேமலையப்பனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தனியார் பள்ளியில் நடை பெற்றது. இதில் ஆசிரி யர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

    சேமலையப்பன் குடும்ப த்தினர் கூறுகையில், 20 குழந்தைகளின் உயிரை காப்பாற்றி எங்களது குடும்பத்திற்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்துள்ளார் என்றனர்.

    இறந்துபோன சேமலையப்பனுக்கு லலிதா என்ற மனைவியும், ஹரிஹரன் (17), ஹரிணி (15) என்ற 2 குழந்தைகளும் உள்ளனர். லலிதா சேமலையப்பன் வேலை பார்த்த தனியார் பள்ளியிலேயே வேலை பார்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.
    • அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் பிரம்மா, விஷ்ணு ,சிவன் ஆகியோர் ஒருங்கே பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் உடுமலை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். மேலும் திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வருகின்றனர்.

    இந்தநிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் திருமூர்த்திமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

    கடந்த வாரம் பெய்த மழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒரு வாரம் வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் நீர்வரத்து குறைந்ததும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    அமராவதி அணையில் நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை நெருங்கியதால் ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று உடுமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் பாலாற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக திருமூர்த்திமலை அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    இதையடுத்து அங்கு பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பஞ்சலிங்க அருவிக்கு செல்லவும் தடை விதித்துள்ளனர். கோவில் நிர்வாகத்தினர் மற்றும் வனத்துறையினர் வெள்ள நிலவரத்தை கண்காணித்து வருகின்றனர். 

    • மாநகராட்சி அதிகாரிகள் 3 பொக்லைன் எந்திரங்கள் மூலம் அதிரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
    • அதிகாரிகளுக்கும் கடைக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் மங்கலம் சாலையில் அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் இருந்ததால் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாக மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

    இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் கிரியப்பனவர் உத்தரவின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என 2 முறை நோட்டீஸ் வழங்கினர். இருந்தபோதிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்தது.


    இந்தநிலையில் இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் 3 பொக்லைன் எந்திரங்கள் மூலம் அதிரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதற்கு ஒரு சில கடைக்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் அதிகாரிகளுக்கும் கடைக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர்.

    • ஓட்டுநர் வாகனத்தை சரி செய்ய முயன்றார்.
    • போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் போக்குவரத்தை சரிசெய்யும் பணியிலும் ஈடுபட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட சிறையில் இருந்து பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கைதிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மாநகர போலீசார் வாகனத்தில் இன்று அழைத்து சென்றனர். திருப்பூர் - பல்லடம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வாகனம் பழுதடைந்து நின்றது.

    இதனைத்தொடர்ந்து ஓட்டுநர் வாகனத்தை சரி செய்ய முயன்றார். இருப்பினும் வாகனம் சரியாகாத காரணத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கைதிகள் வாகனத்தில் இருந்ததால் போலீசார் வேனை சுற்றிலும் பாதுகாப்புக்கு நின்றனர்.

    மேலும் அவ்வழியாக போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் போக்குவரத்தை சரிசெய்யும் பணியிலும் ஈடுபட்டனர்.

    • பெண்கள் உள்ளிட்ட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • திருப்பூர் - காங்கயம் மெயின் ரோட்டில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் ஒன்றியம், நாச்சிபாளையம் ஊராட்சி ரங்கபாளையம் பிரிவில் ஜி.என். கார்டன் பகுதி உள்ளது.

    இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தெருவிளக்கு, தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஊராட்சி நிர்வாகம் இதுவரை நிறைவேற்றி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திடீரென ஒன்று திரண்டு நாச்சிப்பாளையம் திருப்பூர்- காங்கயம் மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவிநாசி பாளையம் போலீசார் பொதுமக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊராட்சி நிர்வாகத்துடன் பேசி அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    இதனால் திருப்பூர் - காங்கயம் மெயின் ரோட்டில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மழை வேண்டி ஒப்பாரி வைக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
    • மழைச்சோறு மற்றும் நவதானிய உணவுகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை அடுத்த பெருந்தொழுவு ஊராட்சி கவுண்டம்பாளையத்தில் மழைச்சோறு எடுத்து வழிபாடு நடத்தும் நிகழ்வு நடைபெற்றது.

    இதையொட்டி கவுண்டம்பாளையத்தில் உள்ள தேவேந்திர சுவாமி திடலில் இருந்து பெண்கள் கோபித்துக் கொண்டு மழை இல்லாததால் நாங்கள் ஊரை விட்டு செல்கிறோம் என வெங்கமேடு பகுதிக்கு சென்றனர்.

    அவர்களை அந்த ஊரை சேர்ந்த கன்னிப்பெண்கள் கலசம், நவதானியங்களை எடுத்துக்கொண்டு சென்று அவர்களுக்கு படையிலிட்டு இனிமேல் பஞ்சம் வராது, ஊருக்கு திரும்பி வாருங்கள் என அழைத்து வந்தனர்.

    அதன்பின்னர் ஒவ்வொரு வீடாக மழைச்சோறு பிச்சை எடுக்கும் நிகழ்வும், மழை வேண்டி ஒப்பாரி வைக்கும் நிகழ்வும் நடைபெற்றது. பின்னர் அந்த மழைச்சோறு மற்றும் நவதானிய உணவுகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அந்த ஊரை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு மழைச்சோறு எடுத்து வழிபாடு நடத்தினர். பின்னர் ஊருக்கு வெளியே உருவ பொம்மை கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்பட்டது.

    • அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்து வருகிறது.
    • பொதுப் பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. அணைக்கு கேரளா மற்றும் தமிழக வனப் பகுதியில் உற்பத்தியாகின்ற பாம்பாறு, தேனாறு, சின்னாறு உள்ளிட்ட ஆறுகள் மற்றும் சிறு,சிறு ஓடைகள் மூலமாக நீர்வரத்து ஏற்படுகிறது.

    அதை ஆதாரமாக கொண்டு பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன திட்டத்தின் கீழ் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    இந்த நிலையில் அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பிரதான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்து வருகிறது.

    இன்று காலை 10 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 84.20 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 344 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் அணை இன்று இரவுக்குள் முழு கொள்ளளவை எட்டுவதற்கு வாய்ப்புள்ளது.

    அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை பொதுப் பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் உபரிநீர் திறந்து விடப்பட உள்ளது. இதனால் அமராவதி ஆற்றங்கரை யோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அமராவதி அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.

    • 10 அடி உயரம் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்காக ஓடுகிறது.
    • நல்லம்மன் கோவில் முழுவதும் நொய்யல் ஆற்று நீரால் சூழப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    தமிழ்நாட்டின், கோவை மாவட்டத்தின், மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் உருவாகும் நொய்யல் ஆறு கிழக்கு நோக்கி பேரூர், குனியமுத்தூர், வெள்ளலூர், இருகூர், சூலூர், மங்கலம் கடந்து திருப்பூர், ஒரத்துப்பாளையம் என சுமார் 180 கிலோ மீட்டர் வந்து கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் கலக்கிறது.

    இந்தநிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் ஆற்றில் வழக்கத்திற்கு மாறாக 10 அடி உயரம் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்காக ஓடுகிறது.

    இதனால் திருப்பூர் நல்லம்மன் தடுப்பணை நிரம்பி தண்ணீர் கொட்டுகிறது. அணைப்பாளையம் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் மேம்பாலம் வழியாக வாகனங்கள் செல்கிறது.

    ஆனாலும் தரைப்பாலத்தையும் போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகிறார்கள். தண்ணீர் அதிகம் செல்வதால் தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்புகள் வைத்து போலீசார் வாகன போக்குவரத்தை நிறுத்தி உள்ளனர்.

    நொய்யல் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் ஈஸ்வரன் கோவில் வீதியில் பாலத்துக்காக அமைக்கப்பட்ட கான்கிரீட் தூண்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    நொய்யல் ஆற்றில் தண்ணீர் அதிகம் பாய்வதால் நொய்யல் ஆற்றின் கரையோரம் உள்ள மக்களிடம் பாதுகாப்பாக இருக்குமாறு, வருவாய்த்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பூர் மங்கலம் அருகே நொய்யல் ஆற்றில் நல்ல ம்மன் கோவில் உள்ளது. நல்லம்மண் தடுப்பணை கட்டும்போது ஏற்பட்ட இடையூறு காரணமாக தன் உயிரை தியாகம் செய்ததால் நல்லம்மன் என்ற சிறுமிக்கு அங்கு கோவில் கட்டப்பட்டுள்ளது.

    இந்த கோவில் பலருக்கும் குலதெய்வ கோவிலாக இருந்து வருகிறது. இந்தநிலையில் வெள்ளப்பெருக்கு காரணமாக நல்லம்மன் கோவில் முழுவதும் நொய்யல் ஆற்று நீரால் சூழப்பட்டுள்ளது.

    இதனால் கோவிலுக்கு செல்லும் பாதை தடைபட்டதால் கோவிலுக்கு பக்தர்கள் செல்வது தடைபட்டுள்ளது. மேலும் திருப்பூரில் பெய்து வரும் சாரல் மழையால் குளு, குளு சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 13 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது.
    • அதிரடியாக விளையாடிய பூபதி அரைசதம் கடந்தார்.

    கோவை:

    8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20கிரிக்கெட் போட்டி சேலத்தில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் 9 லீக் ஆட்டங்கள் கடந்த 11ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து தற்போது 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

    நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் திருப்பூர் - திண்டுக்கல் அணிகள் மோதின. போட்டி துவங்குவதற்கு முன்பு மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் 13 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ராதாகிருஷ்ணன் 36 ரன்கள் அடித்தார். திண்டுக்கல் அணி தரப்பில் சுபோத் பதி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

    109 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் களமிறங்கியது. ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கிய சிவம் சிங் 4 ரன்களிலும் விமல் குமார் 17 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த பாபா இந்திரஜித் - பூபதி வைஷ்ணவ குமார் திருப்பூர் அணியின் பந்துவீச்சை நாலா பக்கமும் சிதறடித்தனர். அதிரடியாக விளையாடிய பூபதி அரைசதம் கடந்தார்.

    இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் 11.5 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்து திண்டுக்கல் அணி வெற்றி பெற்றது. 

    • திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் சத்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.
    • சத்யாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் புதிய தகவல் கிடைத்துள்ளது.

    தாராபுரம்:

    ஈரோடு மாவட்டம் கொடிமுடி அருகே உள்ள ஒத்தக்கடையை சேர்ந்தவர் சத்யா (வயது 35). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ள நிலையில், கணவர் பிரிந்து சென்று விட்டார். இதையடுத்து பணம் சம்பாதிக்கவும், உல்லாச வாழ்க்கை வாழவும் ஆண்கள் பலரை திருமணம் செய்து ஏமாற்றி நகை-பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக அரசு அதிகாரிகள், வசதி படைத்த திருமணமாகாத வாலிபர்கள் ஆகியோரை குறி வைத்து இந்த செயலில் ஈடுபட்டார். இதற்காக திருமண வரன் பார்க்கும் மேட்ரிமோனியில் தனது தகவல்களை பதிவிட்டு இருந்தார்.

    இதன் மூலம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் சத்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

    தனக்கு திருமணமானதை மறைத்து அந்த வாலிபரை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். பின்னர் சத்யா மீது சந்தேகமடைந்த அந்த வாலிபரின் உறவினர்கள் கொடிமுடி சென்று விசாரித்த போது அவர் ஏற்கனவே பல ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றி நகை-பணம் பறித்து வந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் மனமடைந்த வாலிபரின் தாத்தா தற்கொலை செய்து கொண்டார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இது குறித்து தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் சத்யாவை அழைத்து விசாரணை நடத்திய போது அவர், திருப்பூர், கோவை, ஈரோடு, சென்னை உள்பட பல்வேறு இடங்களில் அரசு அதிகாரிகள், சர்வேயர், டி.எஸ்.பி., சப்-இன்ஸ்பெக்டர், சாப்ட்வேர் என்ஜினீயர், திருமணமாகாத வாலிபர்கள், தொழிலதிபர்கள் உள்பட 53 பேரை ஏமாற்றி திருமணம் செய்து லட்சக்கணக்கில் நகை-பணம் பறித்தது தெரியவந்தது.


    தனது மோசடி செயல் போலீசாருக்கு தெரியவரவே, சத்யா போலீஸ் நிலையத்தில் இருந்து நைசாக தப்பி சென்று விட்டார். 53 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணியின் செயல் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. மீம்ஸ்களும் வெளியாகின.

    இதையடுத்து தலைமறைவான சத்யாவை பிடிக்க தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கீதா (பொறுப்பு) தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் சத்யாவின் செல்போன் சிக்னலை வைத்து கண்காணித்த போது அவர் புதுச்சேரியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் புதுச்சேரி சென்று சத்யாவை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை தாராபுரம் அழைத்து வந்தனர். தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பல்லடம் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர். நீதிபதி காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து போலீசார் சத்யாவை கோவை மகளிர் சிறையில் அடைத்தனர்.

    அவர் மீது கொலை முயற்சி, ஏமாற்றி பணம் பறித்தல், தனக்கு திருமணம் ஆனதை மறைத்து பல திருமணங்களை செய்தல், ஆபாசமான வார்த்தைகளால் திட்டுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் சத்யாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் புதிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி மேட்ரிமோனியில் பதிவு செய்துள்ள செல்போன் எண் மூலம் தன்னை தொடர்பு கொள்ளும் ஆண்களை சத்யா தனிமையில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது தன் அழகில் அவர்களை மயக்கும் அவர் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். ஓட்டலில் அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருக்கும் போது சத்யா ரகசிய கேமரா மூலம் வீடியோ எடுத்துள்ளார்.

    பின்னர் அந்த ஆபாச வீடியோ காட்சிகளை காண்பித்து தன்னிடம் உல்லாசமாக இருந்த ஆண்களிடம் நகை-பணம் பறித்துள்ளார். அவ்வப்போது செலவுக்கு ரூ.10ஆயிரம், 20ஆயிரம் என கேட்டுள்ளார். ஆபாச வீடியோ காட்சியை வைத்து மிரட்டியதால் பலர் பயந்து சத்யா கேட்கும் பணத்தை கொடுத்துள்ளனர். இவரிடம் திருமணம் ஆன ஆண்களின் குடும்பத்தினர், மானம் போய் விடும் என்று பயந்து கேட்டபோதெல்லாம் பணத்தை வாரி வழங்கியுள்ளனர். சொத்துக்களையும் எழுதி கொடுத்துள்ளனர். இதனால் சத்யாவால் பாதிக்கப்பட்ட பல குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

    தற்போது சத்யா போலீஸ் பிடியில் சிக்கியுள்ள நிலையில் அவரால் பாதிக்கப்பட்ட ஆண்கள் பலர் ஆன்லைன் மூலம் தாராபுரம் போலீசில் புகார் கொடுத்து வருகின்றனர். இதுவரை 20க்கும் மேற்பட்டோர் புகார் கொடுத்துள்ளனர். அதில் சத்யா மீது நடவடிக்கை எடுப்பதுடன், தாங்கள் கொடுத்த நகை-பணத்தை மீட்டு தருமாறு கூறியுள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்திய சத்யாவிடம் இருந்து நகை-பணத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர் பயன்படுத்திய செல்போன்களில் ஆபாச படங்கள் இருக்கிறதா என்று ஆய்வு செய்து அதனை பறிமுதல் செய்யவும் உள்ளனர்.

    இதனிடையே சத்யாவின் இந்த செயலுக்கு உறுதுணையாக கரூர் மாவட்டம் தான்தோன்றிமலையை சேர்ந்த தமிழ்செல்வி இருந்துள்ளார். அவர்தான் புரோக்கராக செயல்பட்டு சத்யாவுக்கு ஆண்கள் பலரை திருமணம் செய்து வைத்து ஏமாற்றி பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ளார். மேலும் சிலர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே தலைமறைவான தமிழ்செல்வியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அவர் பிடிபட்டால் இந்த சம்பவம் குறித்து மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என போலீசார் தெரிவித்தனர்.

    • பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர்.
    • பொக்லைன் எந்திரங்கள் மூலம் எரிந்து சேதமடைந்த பனியன் துணிகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் அடுத்துள்ள பல்லடத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவர் மங்கலம் பூமலூரில் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து பழைய பனியன் துணிகள் சேகரிக்கும் குடோன் வைத்துள்ளார். இவரது குடோனுக்கு அருகில் இப்ராஹிம் என்பவர் பழைய பஞ்சுக்கழிவுகளை மறுசுழற்சி செய்து நூல் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார்.

    இந்தநிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் நூல் தயாரிக்கும் ஆலையில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. மேலும் ஜன்னல் வழியாக அருகில் இருந்த பனியன் துணி குடோனுக்கும் பரவி பற்றி எரிந்தது.

    இதையடுத்து அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. பின்னர் இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் 5 மணி நேரமாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த தீ விபத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பனியன் துணி கழிவுகள் மற்றும் பனியன் ரோல்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது.

    இதனிடையே பனியன் வேஸ்ட் குடோனில் தீயை அணைத்து கொண்டிருக்கும் போது மேற்கூரை முழுவதுமாக இடிந்து விழுந்ததால் தீயினை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு துறை வீரர்கள் மிகவும் போராடினர். கூடுதல் தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டு தீயை அணைத்தனர்.

    பொக்லைன் எந்திரங்கள் மூலம் எரிந்து சேதமடைந்த பனியன் துணிகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் தீ விபத்தில் தப்பிய பனியன் ரோல்களை அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து மங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆலையை புனரமைக்க அரசு நிதி ஒதுக்கவில்லை.
    • விவசாயிகள் பலர் கரும்புகளுடன் வந்து கலந்து கொண்டனர்.

    திருப்பூர்,ஜூலை.11-

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக இந்த ஆலையை புனரமைக்க அரசு நிதி ஒதுக்கவில்லை.

    எனவே கடந்த சில ஆண்டுகளாக சிறிது சிறிதாக பிழித்திறன் இழந்து கடந்த ஆண்டு முற்றிலும் ஆலை இயங்காமல் நிறுத்தப்பட்டு விட்டது. இந்த ஆலையைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் கரும்பு விளைவதற்கு ஏற்ற நீர் வளம் மற்றும் நிலவளம் கொண்ட பகுதியாகும்.

    சிறப்பம்சம் கொண்ட இந்த ஆலை பராமரிப்பு இன்றி தற்போது இயங்கப்படாமல் இருப்பதால் கரும்பு விவசாயிகள், ஆலை தொழிலாளர்கள், கரும்பு வெட்டும் தொழிலாளர்கள், விவசாயக் கூலித்தொழிலாளர்கள் மற்றும் அதனை சார்ந்துள்ளவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ள னர் .

    எனவே மக்கள் மற்றும் விவசாயிகள் நலன் கருதி தமிழ்நாடு அரசு முழுமையாக ஆலையை புனரமைக்க போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலு வலகம் முன்பாக அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    சங்கத்தின் மாவட்ட தலைவர் பால தண்டபாணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் மாநில செயலாளர் ரவீந்திரன் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியு றுத்தி பேசினார். விவசாயிகள் பலர் கரும்புகளுடன் வந்து கலந்து கொண்டனர்.

    ×