என் மலர்
நீங்கள் தேடியது "Minister Ponmudi"
- பொறியியல் கலந்தாய்வு வரும் 25-ம் தேதி முதல் அக்டோபர் 21-ம் தேதி வரை நடைபெறும்.
- நீட் தேர்வு முடிவுகளால் கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
சென்னை:
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 20-ம் தேதி தொடங்கியது.
விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஜூலை 19-ம் தேதிவரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமானதால் ஜூலை 27-ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வந்தது. நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு பொறியியல் கலந்தாய்வை தொடங்கலாம் என்று கூறப்பட்டது. இதனால் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு வரும் 25-ம் தேதி முதல் அக்டோபர் 21-ம் தேதி வரை நடைபெறும். நீட் தேர்வு முடிவுகளால் கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு மட்டும் இல்லை, மாணவர்களின் நன்மையை கருதியும் பொறியியல் கலந்தாய்வு நீட்டித்திருக்கிறோம்.
பொறியியல் கல்லூரியாக இருந்தாலும், கலை அறிவியல் கல்லூரியாக இருந்தாலும் சரி, கலந்தாய்வு சமூக நீதியின் அடிப்படையில் நடைபெறும். மாணவர்களும், பெற்றோர்களும் அச்சத்திற்கு உள்ளாக வேண்டாம். சரியான முறையில் கலந்தாய்வு கட்டாயம் நடைபெறும் என தெரிவித்தார் .
- மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கல்வி கொள்கையே உள்ளது.
- சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுவது மாணவர்களின் நலனை பாதிக்கும்.
சென்னை:
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை செயலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கல்வி கொள்கையே உள்ளது. ஆங்கிலம் மற்றும் மாநில மொழியுடன் இந்தி மொழியையும் படிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அண்ணா காலத்தில் இருந்தே இருமொழி கொள்கையே பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழக அரசு உருவாக்கி உள்ள புதிய கல்வி கொள்கையிலும் இதுவே தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே கவர்னர், தமிழக அரசின் புதிய கல்வி கொள்கையை ஆதரிக்க வேண்டும். அவரது கருத்துக்கள் ஏதும் இருந்தாலும் சொல்ல வேண்டும்.
சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுவது மாணவர்களின் நலனை பாதிக்கும். இருப்பினும் தமிழகத்தில் சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வெளியான பிறகே கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும்.
அரசியல் அமைப்பு பற்றி தெரியாமல் பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, கவர்னர் பற்றி கருத்து தெரிவித்து உள்ளார்.
இவ்வாறு பொன்முடி கூறியுள்ளார்.
- பட்டமளிப்பு விழாவில் வழக்கத்திற்கு மாறாக கவுரவ விருந்தினர் என்ற பெயரில் ஒருவரை அழைப்பது ஏற்கதக்கதல்ல.
- பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் அரசியலை புகுத்துகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என். ரவி இதில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி உரை நிகழ்த்த உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கவுரவ விருந்தினராக மத்திய இணை மந்திரி முருகன் பங்கற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த பட்டமளிப்பு விழாவை தமிழக அரசு புறக்கணிப்பதாக மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் வழக்கத்திற்கு மாறாக கவுரவ விருந்தினர் என்ற பெயரில் ஒருவரை அழைப்பது ஏற்கதக்கதல்ல என்றார். பட்டமளிப்பு விழாவில் அரசியலை புகுத்துகிற நடவடிக்கையில் ஆளுநர் ஈடுபடுகிறாரோ என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக இது குறித்து அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா ஏற்பாட்டிற்கு பல்கலைக் கழக நிர்வாகமே முழுப் பொறுப்பு. பட்டம் பெற்றுச் செல்லும் மாணவர்கள் எதிர்காலக் கடமைகளை உணர்த்தி நல்ல செய்திகளை சொல்லும் நிகழ்வாக பட்டமளிப்பு விழா உரைகள் இருக்க வேண்டும்.
அத்தகைய பட்டமளிப்பு விழா மேடைகளை அரசியல் களமாக, மாநில அரசின் நிலைப்பாட்டிற்கு நேர் எதிரான நிலைப்பாட்டை பேசும் அரங்கமாக தற்போதைய தமிழ்நாடு ஆளுநர் அலுவலகம் மாற்றி வருவது பட்டமளிப்பு விழா பேச்சு மரபை மீறும் செயலாக அமைந்துள்ளது.
துணை வேந்தர் தேடுதலில் மாநில அரசை எவ்வகையிலும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்படும் ஆளுநர் அலுவலகம். தற்பொழுது பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களின் அழைப்பிதழ் தயாரிப்பதிலும் தலையிட்டு மரபுகள் மீறப்பட்டுள்ளது.
வேந்தர், இணை வேந்தர், துணை வேந்தர் என்ற நிர்வாக ஏற்பாட்டில், விழாவிற்கு அழைக்கப்படும் வேந்தர், இணை வேந்தர் ஆகியோரே வரிசைப் படி இறுதியில் பேசுவது மரபு முறையாகும். சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுபவர், வாழ்த்துரை வழங்க அழைக்கப்படுபவர் முதலில் பேசுவதே மரபு ஆகும்.
ஆனால் தற்போது அந்த மரபு மீறப்பட்டு மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப் பட்டுள்ளது. இணை வேந்தருக்கு பிறகு கௌரவ விருந்தினர் அதன் பிறகு இறுதியாக வேந்தர் என்று அமைந்துள்ளது.
இது முற்றிலும் மரபு மற்றும் விதிகளுக்கு முரணாக உள்ளது. கௌரவ அழைப்பாளர் ஒன்றிய அமைச்சராக இருந்தாலும் அவர் மரபு படி முதலில்தான் பேச வேண்டும். பல்கலைக்கழக விதிகளின்படி Chancellor அடுத்து Pro-Chancellor ஆவார்.
அதன் அடிப்படையிலேயே நிமிடத்திற்கு நிமிட நிகழ்வு (Minutes tominutes ) தயாரிக்கப்பட வேண்டும். இது மரபு மீறும் செயல் மட்டும் அல்லாமல் ஆளுநர் அலுவலகம் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நிரல் தயாரிப்பில் கூட தலையிடத் தொடங்கி உள்ளதை வெளிப்படுத்துகிறது.
பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நிரலை தயாரிக்கும் பொறுப்பு பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திற்கு உள்ளதால் மரபை பின்பற்றி இறுதியாக இணை வேந்தர் அதன் பின்னர் வேந்தர் என்று நிகழ்ச்சி நிரலை முறைப்படுத்த வேண்டும்.
பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள இயலாத நிலையில் இணைவேந்தரான உயர்கல்வித்துறை அமைச்சரே பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி சிறப்பிக்கிறார்.
பட்டமளிப்பு விழா நிமிடத்திற்கு நிமிட நிகழ்வில் உள்ள குறைகளை உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் துணை வேந்தர் வழியாக ஆளுநர் அலுவலகத்திற்கு சுட்டிக் காட்டியும் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப் படாததால் இப்பட்டமளிப்பு விழாவினை புறக்கணிக்கின்றோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- உதயநிதி ஸ்டாலினுக்கு சிண்டிகேட் உறுப்பினர் பதவி எதுவும் வழங்கப்படவில்லை.
- அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்துவது குறித்து கவர்னர் தான் முடிவு செய்ய வேண்டும்.
சென்னை:
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னை தலைமை செயலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்புத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு கால அவகாசம் தேதி குறிப்பிடாமல் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 163 கலை அறிவியல் கல்லூரியில் சேருவதற்கு நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தேர்வு முடிவு வெளியான பிறகு 5 நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம். இதேபோல பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க 17-ந்தேதி கடைசி நாளாக இருக்கும் நிலையில் அதற்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்புக்கு செல்போன் வழியாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட உதவி மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் ஆர்ட்டி பிஷியல் இன்டலிஜென்ட் டேட்டா சயின்ஸ் என்ற பாடப்பிரிவு புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்துவது குறித்து கவர்னர் தான் முடிவு செய்ய வேண்டும்.
அரசு பள்ளியில் படித்து உயர் கல்வியை தொடர்கிற மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தில் இதுவரை 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். முதல் ஆண்டு மட்டுமின்றி 1, 2, 3-ம் ஆண்டு மாணவிகளுக்கும் வழங்க ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. கல்லூரி தொடங்கிய பிறகு உதவித்தொகை வழங்கப்படும்.
உதயநிதி ஸ்டாலினுக்கு சிண்டிகேட் உறுப்பினர் பதவி எதுவும் வழங்கப்படவில்லை. சிண்டிகேட் உறுப்பினராக இருந்தால் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மாணவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று சொல்லவில்லை.
மாணவர்கள் சேற்றில் வீசிய பந்தாக இருக்கக்கூடாது. சுவற்றில் வீசிய பந்தாக இருக்க வேண்டும். இன்றைய மாணவர்கள் இளைஞர்கள் அரசியலை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
டான்செட் முதுநிலை தேர்வு விரைவில் நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உடன் இருந்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-
தொழில்நுட்ப கல்விக்கான விரிவுரையாளர் தேர்வு டிசம்பர் 8-ந்தேதி தொடங்குகிறது. 1,600 பதவிகளுக்கு 1 லட்சத்து 38 ஆயிரத்து 140 பேர் எழுதுகிறார்கள்.
