என் மலர்tooltip icon

    2025 - ஒரு பார்வை

    2025 REWIND: கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா - சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பு
    X

    2025 REWIND: கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா - சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பு

    • ஆண்டுக்கு இருமுறை தேர்வாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
    • பொதுத் தேர்வில் மேற்கொள்ளப்படும் இம்மாற்றம் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

    புதுடெல்லி:

    அது ஒரு தனியார் பள்ளிக்கூடம். மதிய உணவு இடைவேளையில் நண்பர்களுடன் உட்கார்ந்து விஷ்ணுவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

    விஷ்ணுவும் அவனது நண்பர்களும் சாப்பிடும் போதுதான் பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசித் தெரிந்து கொள்வார்கள்.

    விஷ்ணுவின் நெருங்கிய நண்பனான பத்ரி ஓரளவு நாட்டு நடப்புகளைத் தெரிந்து வைத்திருந்தான். எனவே எந்த சந்தேகம் என்றாலும் விஷ்ணு உள்ளிட்ட நண்பர்கள் பத்ரியிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். பத்ரியும், தனக்கு தெரியவில்லை என்றாலும் அது பற்றி விசாரித்து சொல்லி விடுவான்.

    அன்றும் அப்படிதான் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது விஷ்ணு, என்னடா பத்ரி புதிய தேசிய கல்விக் கொள்கைனு ஒண்ணு கொண்டு வராங்களாமே, என்னடா அது? என கேட்டான்.

    அதுவா, ஏற்கனவே உள்ளதுதாண்டா, அத இன்னும் கொஞ்சம் விளக்கமா இருக்கும். அதாவது, நாம் படிக்கிற படிப்பு வெரும் தியரியா இல்லாம, பிராக்டிக்கலாவும் நடைமுறைப்படுத்த உதவியாக இருக்கும். நம்ம படிப்பு சார்ந்த வேலையும் உடனே கிடைக்கும் அல்லது நாமே பிசினசும் தொடங்க முடியும். இதுக்குதான் மத்திய அரசு தற்போதைய பாடத்திட்டங்கள்ல மாற்றம் கொண்டு வந்துருக்கு என்றான் பத்ரி.

    ஆமா, நான் கூட கேள்விப்பட்டேன். அடுத்த ஆண்டு முதல் பொதுத்தேர்வுகளில் எல்லாம் மாற்றம் செய்யப் போறாங்களாமே அப்படியா என ஆச்சரியத்துடன் கேள்வி கேட்டான் விஷ்ணு.

    அது கரெக்ட் தான். சிபிஎஸ்இ பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் பொதுத்தேர்வுகளை இரு முறை எழுதலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றான் பத்ரி.

    அப்படியா, அதுபத்தி சொல்லு கேட்போம் என்றான் விஷ்ணு.

    பொதுத் தேர்வை இரு முறை எழுதுவது தொடர்பாக பத்ரி கூறியதன் சாராம்சம் இதுதான்:


    மத்திய கல்வி மந்திரி தலைமையில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த உயர்நிலைக் குழு கூட்டத்தில் கல்வித்துறை செயலாளர், சி.பி.எஸ்.இ, கேந்திர வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளின் உயர் அதிகாரிகள் மற்றும் உலகளாவிய பாடத்திட்டத்தை கொண்ட பள்ளிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    இந்தக் கூட்டத்தில் உலகளாவிய பாடத்திட்டத்தை நிறுவுதல் மற்றும் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, 2026-2027-ம் ஆண்டு முதல் வெளிநாட்டுப் பள்ளிகளுக்கான உலகளாவிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவும், அதற்கேற்ப விரிவான செயல் திட்டத்தை தயாரிக்கவும் சி.பி.எஸ்.இ.க்கு உத்தரவிடப்பட்டது.

    உலகளாவிய பாடத்திட்டத்தை நிறுவும் பணிகளில் தேர்வு முறையும் மாற்றப்படுகிறது. தற்போது சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடக்கிறது.

    இந்நிலையில், பொதுத் தேர்வை ஆண்டுக்கு இருமுறை மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு சி.பி.எஸ்.இ. ஒப்புதல் அளித்துள்ளது.

    அனைத்து மாணவர்களும் எந்த ஒரு கல்வி ஆண்டிலும் இரண்டு முறை பொதுத்தேர்வை எழுத அனுமதிக்கப் படுவார்கள். ஒரு முறை மெயின் தேர்வையும், தேவைப்பட்டால் மதிப்பெண்ணை அதிகரிக்க மற்றொரு முறை இம்ப்ரூவ்மென்ட் தேர்வையும் எழுதிக் கொள்ளலாம் என சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.

    இதன்படி, பத்தாம் வகுப்புக்கு ஒவ்வொரு ஆண்டும் முதல்கட்டமாக பிப்ரவரியிலும், இரண்டாம் கட்டமாக மே மாதத்திலும் பொதுத்தேர்வை நடத்த சி.பி.எஸ்.இ. திட்டமிட்டுள்ளது.


    பொதுத் தேர்வில் மேற்கொள்ளப்படும் இந்த மாற்றம், மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைத்து, அவர்களின் மதிப்பெண்களை மேம்படுத்த வாய்ப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டது என மத்திய கல்வித்துறை மந்திரி தெரிவித்தார்.

    அடுத்த ஆண்டு வரவிருக்கும் 10-ம் வகுப்பு வாரியத் தேர்வில் பங்கேற்க பதிவுசெய்த மாணவர்கள், தேர்வுகளுக்குத் தகுதி பெறுவதற்கு 9,10-ம் வகுப்புகளின் அனைத்துப் பாடங்களையும் இரு ஆண்டுகள் முழுமையாக படித்திருக்க வேண்டும். வழக்கமான பள்ளியில் குறைந்தது 75 சதவீத வருகைப் பதிவை அவர்கள் பராமரித்திருக்க வேண்டும் எனவும் சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது என்றான் பத்ரி.

    பரவாயில்லையே, இப்படி இரு தடவை வாய்ப்பு கிடைச்சா நாம் முதல் கட்ட தேர்வில் மார்க் குறைஞ்சாலும் இம்ப்ரூவ்மெண்ட் எழுதிக்கலாம் இல்லையா என்ற விஷ்ணு, ஆனா மறுபடியும் முதல்ல இருந்தே படிக்கணும் இல்ல, அதான் யோசனையா இருக்கு என்றான் விஷணு.

    யாருக்கு தேவையோ அவர்கள் 2வது முறை பொதுத் தேர்வு எழுதிக் கொள்ளலாம் என்பது நல்ல ஐடியாதான் எனக்கூறிய படியே மாணவர்கள் வகுப்புக்குச் சென்றனர்.

    Next Story
    ×