என் மலர்
இந்தியா

கார்கே, ராகுல் காந்திக்கு 3-வது வரிசையில் இருக்கை: அவமானப்படுத்தியதாக காங்கிரஸ் விமர்சனம்
- குடியரசு தின விழா நிகழ்ச்சியில் கார்கே, ராகுல் 3-வது வரிசையில அமர வைக்கப்பட்டனர்.
- ராகுல் காந்தியை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் இது பாஜக-வால் வேண்டுமென்றே செய்யப்பட்டது- காங்கிரஸ்
இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக்கொடி ஏற்றினார். அதனைத் தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு நடைபெற்றது. மாநில ஊர்திகளின் அணிவகுப்புகளும் நடைபெற்றன.
இந்த விழாவில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தேசியத் தலைவர் கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி போன்றோரும் கலந்து கொண்டனர்.
இதில் கார்கே, ராகுல் காந்தி ஆகியோருக்கு 3-வது வரிசையில் இருக்கை அமைக்கப்பட்டிருந்தது. அங்கு அவர்கள் அமர்ந்திருந்தனர். இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. மக்களவை எதிர்க்கட்சி தலைவரை அவமானப்படுத்தியதாக விமர்சனம் செய்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில் "நாட்டில் எதிர்க்கட்சித் தலைவரை இத்தகைய முறையில் நடத்துவது?, இது எந்தவொரு கண்ணியம், மரபு மற்றும் நெறிமுறைகளின் தரங்களுக்கும் பொருந்துமா?. இது தாழ்வு மனப்பான்மையால் பாதிக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் விரக்தியை மட்டுமே வெளிப்படுத்துகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
மாணிக்கம் தாகூர் எம்.பி. "ராகுல் காந்தியை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் இது பாஜக-வால் வேண்டுமென்றே செய்யப்பட்டது. 2014-ஆம் ஆண்டு எல்.கே. அத்வானி எங்கு அமர வைக்கப்பட்டிருந்தார் என்று பாருங்கள். இப்போது ஏன் இந்த நெறிமுறை மீறல்? மோடியும், அமித் ஷாவும் கார்கே மற்றும் ராகுல் காந்தியை அவமானப்படுத்த விரும்புவதால்தான் இது நடந்ததா?" என்று கேள்வி எழுப்பினார்.






