என் மலர்
இந்தியா

கர்நாடக மாநில முதல்வர் மாற்றமா?- கார்கே அளித்த பதில்..!
- சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு முதல்வர் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது.
- டி.கே. சிவக்குமார் முதல்வராக வாய்ப்புள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடக மாநில முதல்வராக இருக்கும் சித்தராமையாவின் இரண்டரை ஆண்டு பதவிக்காலம் நவம்பர் 20-ந்தேதியுடன் முடிவடைந்துள்ளது. இதனால் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு டி.கே. சிவக்குமார் முதல்வராக பதவி ஏற்பார் என காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. டி.கே. சிவக்குமார், சித்தராமையா ஆகியோர் கார்கேவை ஏற்கனவே சந்தித்து பேசினர்.
இந்த நிலையில் சித்தராமையா உடன் கார்கே நேற்று ஒரு மணி நேரத்திற்கு மேல் சந்தித்து பேசியுள்ளார். கடந்த ஒரு வாரத்திற்குள் இது 2ஆவது சந்திப்பாகும். இதனால் முதலமைச்சர் பதவியில் மாற்றம் ஏற்படுமா? என செய்தியாளர்கள் கார்கேயிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு கார்கே பதில் அளிக்கையில் "பேச்சுவார்த்தை குறித்து நான் எதுவும் சொல்லப்போவதில்லை. நீங்கள் இங்கே நிற்பதால் உங்களுடைய நேரம்தான் செலவாகும். நான் மிகவும் கவலை அடைகிறேன். எதுவாக இருந்தாலும் காங்கிரஸ் மேலிடம அதைச் செய்யும். நீங்கள் இதைப் பற்றி மேலும் கவலைப்படத் தேவையில்லை" என்றார்.
டி.கே. சிவக்குமாரின் ஆதரவு எம்.எல்.ஏ.-க்கள் சிலர் டெல்லி சென்று கார்கேவை சந்தித்ததாக கூறப்படுகிறது. எனினும், டெல்லிக்கு எம்.எல்.ஏ. சென்றது தனக்கு தெரியாது என டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.






