search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "High Court Madurai branch"

    • கடை நடத்துவது தொடர்பான முடிவுகளை கண்காணிப்புக்குழு ஆய்வு செய்து முடிவு எடுக்கும்.
    • பழனி கிரிவல பாதையில் உள்ள மடங்கள் தொடர்ந்து செயல்படலாம்.

    பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு கோரி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

    இதில், பழனி கிரிவலப்பாதையில் வணிக நோக்கத்தில் எந்த நடவடிக்கைகளும் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

    மேலும், பட்டா உள்ளவர்களை அனுமதிப்பது மற்றும் கடை நடத்துவது தொடர்பான முடிவுகளை கண்காணிப்புக்குழு ஆய்வு செய்து முடிவு எடுக்கும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    பழனி கிரிவல பாதையில் உள்ள மடங்கள் தொடர்ந்து செயல்படலாம் எனவும் நீதிபதிகள் கூறினர்.

    ஆக்கிரமிப்பு அகற்றம் மற்றும் சோதனைச்சாவடி பணிகளுக்கு தேவஸ்தானம் கோரும் போலீஸ் பாதுகாப்பை வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    பழனிக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • சித்தா டாக்டர்களுக்கான திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.
    • அரசு சித்தா டாக்டர்களும், அனைத்து பலன்களையும் பெற தகுதியானவர்கள்.

    ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, கரூர், திருச்சி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த அரசு சித்தா டாக்டர்கள் பலர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருந்ததாவது:- தமிழக சுகாதார துறையின் கீழ் மாவட்ட தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், கிராமப்புற சுகாதார நிலையங்கள், சித்தா மற்றும் ஓமியோபதி போன்ற இந்திய பாரம்பரிய மருத்துவ சிகிச்சை மையங்கள் அனைத்திலும் சித்தா டாக்டர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.

    அலோபதி டாக்டர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறையை பின்பற்றித்தான் சித்தா டாக்டர்களையும் அரசு தேர்ந்தெடுத்து பணியமர்த்துகிறது. ஆனால் பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பலன்களை சித்தா டாக்டர்களுக்கு வழங்குவதில்லை. எனவே அரசாணையின்படி அலோபதி மற்றும் பல் டாக்டர்களை போல சித்தா டாக்டர்களுக்கும் பதவி உயர்வு மற்றும் பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர், அதிக எண்ணிக்கையில் உள்ள அலோபதி டாக்டர்களை போல், குறைந்த எண்ணிக்கையில் உள்ள சித்தா டாக்டர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் நடைமுறைகளை செயல்படுத்த இயலாது என்று தெரிவித்தார்.

    இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: மனுதாரர்கள் சித்த மருத்துவப்பிரிவு அரசு டாக்டர்கள்தான், அவர்களும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சையை அளிக்கின்றனர். அதனால் அவர்களும் அனைத்து பலன்களையும் பெற தகுதியானவர்கள் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.

    அந்த வகையில் மனுதாரர்கள் தங்களது கோரிக்கை குறித்து ஏற்கனவே மனு அளித்துள்ளனர், அலோபதி டாக்டர்கள் பதவி உயர்வு அரசாணை நேரடியாக மனுதாரர்களுக்கு பொருந்தாது என்றாலும், இவர்களும் பலன் அடையும் வகையில் உரிய செயல்திட்டங்களை நிறைவேற்றும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.

    அதனால் இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ஒரு கூட்டத்தை கூட்டி அதில் பங்கேற்குமாறு மனுதாரர்களையும் அழைக்கலாம். உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சித்தா டாக்டர்கள் பயன் பெறும் வகையில் உரிய செயல் திட்டத்தை 4 மாதத்தில் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

    • மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது.
    • இந்த தடை உத்தரவு பின்னடைவை ஏற்படுத்தி விட்டது.

    தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பொதுமக்களிடையே கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் நியமிக்கும் வரை கட்டண உயர்வு தொடர்பாக முடிவெடுக்கவும், கருத்து கேட்பு கூட்டம் நடத்தவும் தடை விதிக்க கோரி, நூற்பாலைகள் சங்கம் மற்றும் சில நிறுவனங்கள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மின் கட்டண உயர்வு தொடர்பான மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக மின்வாரியம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிர், மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது என்றும், மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டம் சார்ந்த உறுப்பினரை நியமிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த நிலையில் மின்கட்டண அறிவிப்பு வெளியிடும் நேரத்தில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பது பின்னடைவை ஏற்படுத்தி விட்டது என்றும் தெரிவித்தார். எனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும், என்று அவர் குறிப்பிட்டார்.

    இதையடுத்து மின்கட்டணத்தை உயர்த்துவது சம்பந்தமாக இறுதி முடிவு எடுக்க தடை விதித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த மேல்முறையீட்டு மனு குறித்து எதிர்தரப்பினர் அனைவரும் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

    இந்த உத்தரவு மூலம் மின் கட்டண உயர்வு தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு எடுப்பதற்கான தடை தற்காலிகமாக நீங்கி இருக்கிறது.

    • மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் நியமிக்கப்படவில்லை.
    • மனுதாரர்கள் தங்களது கோரிக்கையை தெரிவிக்க ஒருவாரம் அவகாசம்.

    தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சமீபத்தில் அறிவித்தார். மின் கட்டண உயர்வு தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டங்கள் சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டன. இந்த கூட்டங்களில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க தலைமை ஆலோசகர் கே.வெங்கடாசலம் உள்ளிட்ட சிலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் மற்றும் 2 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். தற்போது தலைவர் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் மட்டும் உள்ளனர். சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழகத்தின் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி மின்வாரியம் சார்பில் ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை ஒழுங்குமுறை ஆணையம் விசாரணைக்கு ஏற்று, பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது. தலைவர் மற்றும் ஒரு உறுப்பினர் மட்டும் இருக்கும்போது, ஒழுங்குமுறை ஆணையம் கூடியது சட்டவிரோதம். எனவே, மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறை சார்ந்த உறுப்பினரை நியமிக்கும் வரை கட்டண உயர்வு தொடர்பாக முடிவு எடுக்கவும், கருத்து கேட்பு கூட்டம் நடத்தவும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:- தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் சட்ட உறுப்பினராக வெங்கிடசாமி, கடந்த 17.2.2019 அன்று நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் கடந்த 5.5.2022 அன்று ஓய்வு பெற்றுவிட்டார். தொழில்நுட்ப உறுப்பினராக இருந்தவர் கடந்த மார்ச் 17-ந் தேதி ராஜினாமா செய்துள்ளார்.

    இந்த உறுப்பினர் பதவிக்கு மட்டும் தகுதியான நபரை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, 2 பேரை பரிந்துரைத்திருக்கிறது. இதில் வெங்கடேசனை தொழில்நுட்ப உறுப்பினராக மாநில அரசு தேர்வு செய்தது. அவர் கடந்த மாதம் 18-ந் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

    இதையடுத்து ஆணையத்தின் தலைவர் சந்திரசேகர், உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர், மின்வாரியத்தின் மின் கட்டண உயர்வு தொடர்பான மனுக்களை ஏற்றுக்கொண்டனர். அதன்படி கருத்து கேட்பு கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இதை எதிர்த்து இந்த வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.

    மனுதாரர்கள் சார்பில் இந்த வழக்கில் ஆஜரான வக்கீல்கள், சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர் இல்லாமல் மின் கட்டண உயர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வது அரசியலமைப்பு சட்டத்திற்கும், உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கும் எதிரானது என தெரிவித்தனர்.

    மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையத்தின் தொழில்நுட்ப உறுப்பினரை தேர்வு செய்து நியமித்த அதே நேரத்தில் சட்டத்துறை சார்ந்த உறுப்பினரையும் அந்த பதவியில் நியமித்து இருக்கலாம் என்று வாதிட்டுள்ளனர்.

    ஆனால் அரசு தரப்பில், பல ஆண்டுகளாக மின் கட்டண உயர்வுக்கான நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது எடுத்துள்ள நடவடிக்கையை தாமதப்படுத்துவது ஆபத்தில் முடியும். எனவே இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள், உத்தரவுகளை பின்பற்றுவது உயர்நீதிமன்றங்களின் கடமையாகும். அந்த வகையில் ஒரு ஆணையத்தில் சட்ட உறுப்பினர் இருப்பது கட்டாயம் என உச்சநீதிமன்றம் தெரிவிக்கிறது. அப்படி இருக்கும்போது, அந்த பதவிக்குரிய நபரை நியமிக்காதது நியாயம் இல்லை. மேற்கண்ட 2 பதவிகளுக்கான நபர்களை ஒரே நேரத்தில் நியமிப்பதற்கு மாநில அரசுக்கு எந்த தடையும் இல்லை. ஆனால் அதை செய்யவில்லை.

    இந்த காரணத்திற்காகவே, தமிழக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் நியமிக்கப்படும் வரை, மேற்கூறிய கட்டண உயர்வு அனுமதி கோரும் மனுக்கள் மீதான இறுதி உத்தரவை பிறப்பிக்க தடை விதிக்கிறேன். மின் கட்டண உயர்வு தொடர்பான தற்போதைய நடவடிக்கைகளை தொடரலாம்.

    ஆனால் சட்ட உறுப்பினரை நியமித்த உடனேயே, இந்த தடை உத்தரவு காலாவதியாகி விடும். மனுதாரர்கள் தங்களது கோரிக்கையை உரிய ஆணையத்தில் தெரிவிக்க ஒருவாரம் அவகாசம் அளிக்கப்படுகிறது. இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.

    இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

    நடிகர் கமல்ஹாசன் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீது திங்களன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்குகிறது.
    சென்னை:

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கமல் ஹாசன் பேசிய விவகாரத்தில் பல்வேறு தரப்பினர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர். வழக்கு விசாரணையின்போது கமல் ஹாசன் மீது 76 புகார்கள் அளிக்கப்படிருப்பதாக அரசு தெரிவித்திருந்தது. 

    இந்த வழக்கில் நடிகர் கமல்ஹாசன் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீது உயர்நீதிமன்ற மதுரை கிளை வரும் திங்களன்று தீர்ப்பு வழங்குகிறது.

    மதுரை கோதண்டராம சுவாமி கோவில் நிலத்தைச் சுற்றி வேலி அமைத்து பாதுகாப்பு வழங்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #TempleLandSecurity #HighCourtMaduraiBench
    மதுரை:

    உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராதாகிருஷ்ணன் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், மதுரை ஒத்தக்கடை கோதண்டசுவாமி கோவில் நிலத்தை சுற்றி வேலி அமைத்து பாதுகாப்பு வழங்க உத்தரவிடும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    அவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், கோவில் நிலத்திற்கு பாதுகாப்பு வழங்கும்படி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

    ‘மதுரை ஒத்தக்கடை கோதண்டராம சுவாமி கோவிலுக்கு சொந்தமான 9.49 ஏக்கர் நிலத்தைச் சுற்றி கம்பி வேலி அமைத்து பாதுகாப்பு வழங்கவேண்டும். கோவில் நிலத்தை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல்துறை பதிலளிக்க வேண்டும்’ என நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தது. #TempleLandSecurity #HighCourtMaduraiBench

    மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைதான பேராசிரியை நிர்மலா தேவி ஜாமீன் மனுவை வருகிற 4-ந்தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை. #NirmalaDevi
    மதுரை:

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அவரிடம் போலீசார் நடத்திய தொடர் விசாரணையின் அடிப்படையில் காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டனர்.

    நிர்மலாதேவி ஜாமீன் வழங்கக்கோரி சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டுகளில் மனுத்தாக்கல் செய்தார். இதுவரை 6 முறை தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

    இந்த நிலையில் பேராசிரியை நிர்மலாதேவி தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு வந்தது.

    அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கால அவகாசம் கோரியதை தொடர்ந்து மனு மீதான விசாரணை செப்டம்பர் 4-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    நேற்று இதே வழக்கில் தொடர்புடைய உதவி பேராசிரியர் முருகனின் ஜாமீன் மனு மீதான விசாரணையும் செப்டம்பர் 4-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. #NirmalaDevi
    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சி மற்றும் டி பிரிவில் பணியாளர் சேர்க்கைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது.
    மதுரை:

    நெல்லை மாவட்டம் ராதபுரம் தொகுதி முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. அப்பாவு மதுரை ஐகோர்ட்டில் பொது நல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    “நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம் அனல்மின் நிலையம் அமைந்துள்ளது.

    கூடங்குளம் அனல்மின் நிலையம் அமைவதற்கு அப்பகுதி மக்கள் தங்களது நிலங்களை வழங்கினர்.

    கூடங்குளம் அனல்மின் நிலையம் அமைய நிலம் அளித்த பொதுமக்களுக்கு அனல்மின் நிலையத்தில் கல்வி தகுதியின் அடிப்படையில் சி மற்றும் டி பிரிவில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என 12.2.1999 அன்று மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்த அமைதி கூட்டத்தில் ஒப்பந்தம் போடப்பட்டது.

    இந்நிலையில் கூடங்குளம் அனல்மின் நிலையத்தில் சி மற்றும் டி பிரிவில் பணிபுரிய ஆட்கள் தேவை என இந்தாண்டு ஏப்ரல் 18-ல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பாணையில் நிலம் அளித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்று எதுவும் குறிப்பிடவில்லை.

    கூடங்குளம் அனல்மின் நிலையத்திற்கு நிலம் அளித்தவர்களுக்கு சி மற்றும் டி பிரிவில் வேலை அளிக்கப்படும் என்ற 1999-ம் ஆண்டு ஒப்பந்தப்படி வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்காமல் சி, டி பிரிவில் வேலையாட்கள் தேவை என ஏப்ரல் 18 ல் வெளியிட்ட அறிவிப்பாணைக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட வேண்டும்.

    மேலும் கூடங்குளம் அனல்மின் நிலையத்திற்கு 1999-ம் ஆண்டு ஒப்பந்தபடி நிலம் அளித்தவர்களுக்கு சி மற்றும் டி பிரிவில் வேலையில் பணியமர்த்த உத்தரவிட வேண்டும்.

    மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு இன்று நீதிபதிகள் சி.டி.செல்வம் ஏ.எம்.பஷீர் முகமது முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு நிலம் அளித்தவர்கள் தவிர மற்றவர்களுக்கு 1999-ம் ஆண்டு ஒப்பந்தபடி சி மற்றும் டி பிரிவில் வேலையில் பணியமர்த்த இடைக்கால தடை விதித்தும் இது குறித்து நெல்லை மாவட்ட கலெக்டர், கூடங்குளம் அணுமின் நிலைய திட்ட இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் வழக்கு விசாரணையை இரண்டு வார காலத்திற்கு ஒத்திவைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    ராக்கெட் ராஜா மீதான குண்டர் தடுப்புச் சட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #RocketRaja
    மதுரை:

    நெல்லையை சேர்ந்த ராக்கெட் ராஜா கடந்த மே மாதம் சென்னையில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதற்கிடையில் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நெல்லை போலீஸ் கமி‌ஷனர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என ராஜா என்ற ராக்கெட் ராஜா மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    அதில், சென்னை தேனாம்பேட்டை போலீசார் கடந்த மே 9-ந்தேதி என்னை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். என்னை சிறையில் அடைத்ததை எனது நெருங்கிய உறவினர்களிடம் தெரிவிக்கவில்லை.

    அதன் பிறகு கோவை மத்திய சிறைக்கு மாற்றம் செய்தனர். இந்த நிலையில் ஜூன் 9-ந்தேதி என் மீது குண்டாஸ் வழக்கு பதிந்தனர். முறையான ஆவணங்கள் இன்றி விதிமுறைகளை பின்பற்றாமல் என் மீது குண்டாஸ் வழக்கு பதிந்து நெல்லை காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

    குண்டாஸ் வழக்கு பதிவு தொடர்பாக சிறை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படவில்லை. முறையாக விதிமுறைகளை பின்பற்றாமல் என் மீது பதிவு செய்யப்பட்ட குண்டாஸ் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு இன்று நீதிபதிகள் செல்வம், பசீர் அகமது அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ராக்கெட் ராஜா மீது பதிந்த குண்டாஸ் உத்தரவில் ஏற்பட்ட காலதாமதத்தை கருத்தில் கொண்டு குண்டாஸ் உத்தரவை ரத்து செய்து நெல்லை காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட்டனர். #RocketRaja
    நீட் தேர்வை நடத்துவதில் சி.பி.எஸ்.இ. சர்வாதிகார போக்குடன் நடந்து வருகிறது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #NEET #NEETExam
    மதுரை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன் எம்.பி. மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இதில் தமிழ் மொழி மாற்றம் செய்த வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்தன. எனவே அந்த வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண் வீதம் மொத்தம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டி ருந்தார்.

    இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது தமிழகத்தில் தரவரிசை பட்டியலை தற்போதைக்கு அரசு வெளியிடாது என ஐகோர்ட்டில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சி.டி.செல்வம், பசீர் அகமது முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.


    அப்போது சி.பி.எஸ்.இ. நடத்தும் நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. தேர்வை நடத்துவதில் சி.பி.எஸ்.இ. சர்வாதிகார போக்குடன் நடந்து வருகிறது.

    நீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் தவறான விடை என தெரிந்தும் பெரும்பாலான வகையில் முடிவெடுத்தது எந்தவகையில் நியாயம்?

    வழக்கு விசாரணையில் இருந்தும் முன்பே தேர்வு முடிவை வெளியிட்டது ஏன்? பீகார் மாணவர்கள் மட்டும் அதிக அளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றது எப்படி? போன்ற கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். அதைத்தொடர்ந்து வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. #NEET #NEETExam
    தூத்துக்குடி கலவரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க கேட்ட மனு மீதான விசாரணையை ஐகோர்ட்டு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
    மதுரை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் நோக்கி நடைபெற்ற பேரணியில் வன்முறை வெடித்தது. போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர்.

    துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். தடியடியில் ஏராளமானோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட 15 பேர் சி.பி.ஐ. விசாரணை கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    அதில், துப்பாக்கி சூடு, வன்முறை குறித்து, மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தால் உண்மை நிலை வெளிவராது. சி.பி.ஐ. விசாரித்தால் தான் வழக்கின் உண்மை நிலை தெரியவரும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும்.

    எனவே சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர்.

    இந்த மனு நீதிபதிகள் செல்வம், பஷீர் அகமது முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக பல்வேறு வழக்குகள் விசாரணைக்கு உள்ளதாகவும் அந்த வழக்குடன் இதுவும் சேர்த்து விசாரிக்கப்படும் என்றும் கூறிய நீதிபதிகள் விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர். #ThoothukudiFiring #MaduraiHighCourt
    பழனி தண்டாயுதபாணி கோவில் சிலை முறைகேடு வழக்கில் அறநிலையத்துறை முன்னாள் கமிஷனர் தனபாலுக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
    மதுரை:

    இந்து அறநிலையத்துறை முன்னாள் கமி‌ஷனர் தனபால். இவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    அதில் பழனி தண்டாயுதபாணி கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு சிலை செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் என்னை தேடி வருகின்றனர். எனவே இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டுகிறேன் என்று கூறியிருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனு மீது விசாரணை மேற்கொண்ட அவர், தனபாலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    அந்த உத்தரவில் இந்த வழக்கில் குறற்றம் சாட்டப்பட்ட முதல் 2 பேருக்கு உரிய நிபந்தனையே இவருக்கும் பொருந்தும். மனுதாரர் தனது பாஸ்போர்ட்டை போலீசில் ஒப்படைக்க வேண்டும். கோர்ட்டின் அனுமதி இல்லாமல் போலீசார் அவரிடம் பாஸ்போர்ட்டை ஒப்படைக்கக்கூடாது.

    மனுதாரர் கும்பகோணத்தில் 60 நாட்கள் போலீஸ் கண்காணிப்பில் தங்கியிருக்க வேண்டும். மனுதாரர் செல்போன், இணையதள சேவையை பயன்படுத்தக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. #Tamilnews
    ×