search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவுக்கு தடை-  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
    X

     உயர்நீதிமன்ற மதுரை கிளை

    மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவுக்கு தடை- உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

    • மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் நியமிக்கப்படவில்லை.
    • மனுதாரர்கள் தங்களது கோரிக்கையை தெரிவிக்க ஒருவாரம் அவகாசம்.

    தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சமீபத்தில் அறிவித்தார். மின் கட்டண உயர்வு தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டங்கள் சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டன. இந்த கூட்டங்களில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் தமிழ்நாடு நூற்பாலைகள் சங்க தலைமை ஆலோசகர் கே.வெங்கடாசலம் உள்ளிட்ட சிலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர் மற்றும் 2 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். தற்போது தலைவர் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர் மட்டும் உள்ளனர். சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் நியமிக்கப்படவில்லை. இந்த நிலையில் தமிழகத்தின் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி மின்வாரியம் சார்பில் ஒழுங்குமுறை ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை ஒழுங்குமுறை ஆணையம் விசாரணைக்கு ஏற்று, பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது. தலைவர் மற்றும் ஒரு உறுப்பினர் மட்டும் இருக்கும்போது, ஒழுங்குமுறை ஆணையம் கூடியது சட்டவிரோதம். எனவே, மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறை சார்ந்த உறுப்பினரை நியமிக்கும் வரை கட்டண உயர்வு தொடர்பாக முடிவு எடுக்கவும், கருத்து கேட்பு கூட்டம் நடத்தவும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:- தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் சட்ட உறுப்பினராக வெங்கிடசாமி, கடந்த 17.2.2019 அன்று நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் கடந்த 5.5.2022 அன்று ஓய்வு பெற்றுவிட்டார். தொழில்நுட்ப உறுப்பினராக இருந்தவர் கடந்த மார்ச் 17-ந் தேதி ராஜினாமா செய்துள்ளார்.

    இந்த உறுப்பினர் பதவிக்கு மட்டும் தகுதியான நபரை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, 2 பேரை பரிந்துரைத்திருக்கிறது. இதில் வெங்கடேசனை தொழில்நுட்ப உறுப்பினராக மாநில அரசு தேர்வு செய்தது. அவர் கடந்த மாதம் 18-ந் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

    இதையடுத்து ஆணையத்தின் தலைவர் சந்திரசேகர், உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர், மின்வாரியத்தின் மின் கட்டண உயர்வு தொடர்பான மனுக்களை ஏற்றுக்கொண்டனர். அதன்படி கருத்து கேட்பு கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இதை எதிர்த்து இந்த வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.

    மனுதாரர்கள் சார்பில் இந்த வழக்கில் ஆஜரான வக்கீல்கள், சட்டத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர் இல்லாமல் மின் கட்டண உயர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வது அரசியலமைப்பு சட்டத்திற்கும், உச்சநீதிமன்ற உத்தரவுகளுக்கும் எதிரானது என தெரிவித்தனர்.

    மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையத்தின் தொழில்நுட்ப உறுப்பினரை தேர்வு செய்து நியமித்த அதே நேரத்தில் சட்டத்துறை சார்ந்த உறுப்பினரையும் அந்த பதவியில் நியமித்து இருக்கலாம் என்று வாதிட்டுள்ளனர்.

    ஆனால் அரசு தரப்பில், பல ஆண்டுகளாக மின் கட்டண உயர்வுக்கான நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது எடுத்துள்ள நடவடிக்கையை தாமதப்படுத்துவது ஆபத்தில் முடியும். எனவே இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள், உத்தரவுகளை பின்பற்றுவது உயர்நீதிமன்றங்களின் கடமையாகும். அந்த வகையில் ஒரு ஆணையத்தில் சட்ட உறுப்பினர் இருப்பது கட்டாயம் என உச்சநீதிமன்றம் தெரிவிக்கிறது. அப்படி இருக்கும்போது, அந்த பதவிக்குரிய நபரை நியமிக்காதது நியாயம் இல்லை. மேற்கண்ட 2 பதவிகளுக்கான நபர்களை ஒரே நேரத்தில் நியமிப்பதற்கு மாநில அரசுக்கு எந்த தடையும் இல்லை. ஆனால் அதை செய்யவில்லை.

    இந்த காரணத்திற்காகவே, தமிழக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்ட உறுப்பினர் நியமிக்கப்படும் வரை, மேற்கூறிய கட்டண உயர்வு அனுமதி கோரும் மனுக்கள் மீதான இறுதி உத்தரவை பிறப்பிக்க தடை விதிக்கிறேன். மின் கட்டண உயர்வு தொடர்பான தற்போதைய நடவடிக்கைகளை தொடரலாம்.

    ஆனால் சட்ட உறுப்பினரை நியமித்த உடனேயே, இந்த தடை உத்தரவு காலாவதியாகி விடும். மனுதாரர்கள் தங்களது கோரிக்கையை உரிய ஆணையத்தில் தெரிவிக்க ஒருவாரம் அவகாசம் அளிக்கப்படுகிறது. இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.

    இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

    Next Story
    ×