என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருப்பரங்குன்றம் தீர்ப்பு: தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
- வழக்கை மீண்டும் கையிலெடுத்த நீதிபதி, 144 தடை உத்தரவை ரத்து செய்து மீண்டும் தீபத்தூணில் தீபமேற்ற உத்தரவிட்டார்.
- நயினார் நாகேந்திரனும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
திருவண்ணாமலை தொடங்கி தமிழ்நாடு முழுவதும் உள்ள சிவன், முருகன் மற்றும் விஷ்ணு கோயில்களில் கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகை கார்த்திகை தீபம். நேற்று கார்த்திகை தீபத்தையொட்டி திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டது. அதுபோல மதுரை திருப்பரங்குன்றத்திலும் ஏற்றப்பட்டது.
ஆனால் சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் 15 மீ தொலைவில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுக்கு மாறாக வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது. இதனால் உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள சிஐஎஸ்எஃப் வீரர்களை கூட்டிக்கொண்டு மனுதாரர் தர்காவுக்கு அருகில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
இதனிடையே மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றாததைக் கண்டித்து பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழல் நிலவியது. அசம்பாவிதங்களை தவிர்க்க அப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. போலீசார், போராட்டக்காரர்கள் தள்ளுமுள்ளு என தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவ சிஐஎஸ்எஃப் வீரர்கள் மலைமீது ஏற அனுமதி மறுக்கப்பட்டது.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்திருந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இன்று தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு விசாரிக்கப்பட்டது. இதில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தமிழ்நாடு அரசின் மனுவை தள்ளுபடி செய்து, தனி நீதிபதியே வழக்கை விசாரிப்பார் என உத்தரவிட்டனர்.
அதனைத்தொடர்ந்து வழக்கை மீண்டும் கையிலெடுத்த நீதிபதி, 144 தடை உத்தரவை ரத்து செய்து மீண்டும் தீபத்தூணில் தீபமேற்ற உத்தரவிட்டார். காவல்துறை முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
உத்தரவை நிறைவேற்றியதற்கான அறிக்கையை நாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் எனவும் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து மீண்டும் பாஜவினர் மற்றும் இந்து அமைப்பினர் சிலர் தீபமேற்ற மலைமீது ஏற முயன்றனர். ஆனால் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக அவர்களிடம் போலீசார் தெரிவித்து மலையேற அனுமதி மறுத்தனர். இதனால் மீண்டும் போலீசாருக்கும் - திருப்பரங்குன்றம் மலைப்பாதை முன்பு கூடியவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
போராட்டக்காரர்கள் கலையவில்லை என்றால் கைது நடவடிக்கை தொடரும் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விரைந்தனர். நயினார் நாகேந்திரனும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கலைந்து செல்லுமாறு விடுத்த கோரிக்கையை ஏற்காமல் போராட்டத்தை தொடர்ந்த நிலையில் நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் ரகுபதி, 2014-ம் ஆண்டின் தீர்ப்பின்படி திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டது. 2014-ல் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி அரசு செயல்பட்டு வருகிறது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஏற்கனவே இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பு உள்ளது; இது தனி நீதிபதியின் தீர்ப்பு.
2014ல் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து அறியாமல் புதிதாக ஒரு வழக்கை தொடுத்து தற்போது தீர்ப்பை பெற்றுள்ளனர்.
திருப்பரங்குன்றத்தில் திடீர் பிரச்சனையை உருவாக்குகிறார்கள். மத ஒற்றுமை, மத நல்லிணத்துக்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாடு திகழ்கிறது.
ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போது பெற்ற தீர்ப்பையே மறந்து எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். பா.ஜ.க.வுக்கு முழு அடிமை என்பதை உறுதிசெய்திருக்கிறார் பழனிசாமி.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது என தெரிவித்தார்.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
தமிழக அரசு வழங்கிய மேல்முறையீட்டு மனுவில், கார்த்திகை தீபம் ஏற்ற அரசு எந்த தடையும் விதிக்கவில்லை.
100 ஆண்டுகளாக தீபம் ஏற்றப்படும் இடத்தை மாற்றி, வேறு இடத்தில் ஏற்ற வேண்டும் எனக் கேட்பதுதான் பிரச்னையாக உள்ளது.
2014ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் எங்கு தீபம் ஏற்ற வேண்டும் என்பது கூறப்பட்டுள்ளது. அதன்படியே அரசு செயல்படுகிறது.
புதிதாக தீபம் ஏற்றக் கோரும் இடம் தர்காவுக்கு 15 மீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் தேவையில்லாத சச்சரவுகளை தவிர்க்கவே, அங்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.






