என் மலர்
2025 - ஒரு பார்வை

2025 REWIND: பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் மா.சுப்பிரமணியன் - முடிவுக்கு வந்த செவிலியர்கள் போராட்டம்
- காவல்துறை முற்றுகைக்கு நடுவில் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி செவிலியர்கள் முழக்கமிட்டனர்.
- முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் கடந்த 24-ந்தேதி மீண்டும் செவிலியர்களுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் பணியில் சேர்ந்த ஒப்பந்த செவிலியர்கள், நீண்ட காலமாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தமிழகத்தில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் எம்.ஆர்.பி., செவிலியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கடந்த 18-ந்தேதி சென்னையில் போராட்டம் நடத்தினர்.
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் தமிழக சுகாதாரத் துறையில் பணியாற்றி வரும் செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது போராட்டம் ஆறு நாட்களை கடந்த நிலையிலும் தங்களது கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவிமெடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.
இதையடுத்து, நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு கோரிக்கைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களின் எண்ணிக்கையைவிட, அங்கிருக்கும் காவலர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
இந்த காவல்துறை முற்றுகைக்கு நடுவில் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பி செவிலியர்கள் முழக்கமிட்டனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் துணைத் தலைவர் எஸ்.கே. சுஜாதா கூறுகையில், மாநிலம் முழுவதும் தொகுப்பூதியத்தை பெற்றுக்கொண்டு தற்காலிகப் பணியில் இருக்கும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதுதான் பிரதான கோரிக்கை என்று கூறினார்.
இந்தப் பிரச்சனையின் பின்னணி சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. தமிழ்நாட்டில் 2014-15 காலகட்டத்தில் மருத்துவப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் தற்காலிக செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சுமார் இரண்டாண்டு காலம் பணியாற்றிய பிறகு அவர்கள் படிப்படியாகப் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனச் சொல்லப்பட்டது.
இதற்குப் பிறகு தொடர்ச்சியாக, தற்காலிக செவிலியர்கள் மருத்துவப் பணியார்கள் தேர்வாணையத்தின் மூலமாகத் தேர்வு செய்யப்பட்டனர். ஒட்டுமொத்தமாக, சுமார் 15,300 பேர் இப்படி செவிலியர்களாகச் சேர்க்கப்பட்டனர். இவர்களில் சுமார் 7,000 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்ட நிலையில், சுமார் 8,300 பேர் தற்காலிக செவிலியர்களாகவே பணியாற்றி வருகின்றனர். இவர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதுதான் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இவர்களது பிரதான கோரிக்கை.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க., நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தற்காலிக செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிட்டது.
தி.மு.க.வின் 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி எண் 356-இல் அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படுவதோடு ஒப்பந்த நியமன முறையில் தற்போது பணியாற்றும் மருத்துவர்களும் செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், "இப்போது ஆட்சியே முடிவடையும் தருவாய் நெருங்கிவிட்டது. இந்தச் சூழ்நிலையிலேனும், 2021-ல் அவர்கள் எங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித் தர வேண்டும் என்று கூறினார்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் அருகில் கடந்த 18-ந்தேதி பட்டினிப் போராட்டத்தை நடத்த செவிலியர் சங்கம் முடிவு செய்தது. அந்தப் போராட்டத்தில் மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 3,000 பேர் பங்கேற்றனர்.
அன்று பிற்பகலில் மருத்துவத் துறை செயலருடன் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில், போராட்டத்தைத் தொடர்வதாக செவிலியர் சங்கம் அறிவித்தது.
அன்று இரவில் சேப்பாக்கம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்கள் அனைவரும் காவல் துறையால் பேருந்துகளில் ஏற்றப்பட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிடப்பட்டனர்.
அடுத்த நாள் அமைச்சர் தரப்பிடமிருந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வந்தது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், போராட்டம் தொடர்ந்தது.
முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் கடந்த 24-ந்தேதி மீண்டும் செவிலியர்களுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், தற்போது ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் செவிலியர்களை நிரந்தரப் பணியிடங்களில் நியமிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நிலுவையில் உள்ள பதவி உயர்வுகள் வழங்கப்பட்டு, புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, சுமார் 1000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் விரைவில் நிரந்தரப் பணியிடங்களில் பணியமர்த்தப்படுவார்கள் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அரசின் இந்த முடிவை ஏற்று, ஒப்பந்த செவிலியர்கள் தங்கள் போராட்டத்தை முடித்துக் கொள்வதாகவும் அமைச்சர் அறிக்கையின் மூலம் அறிவித்தார்.






