என் மலர்
2025 - ஒரு பார்வை

2025 REWIND: விதவிதமாய் வித்தியாசமாய்... சீமான் அறிவித்த சர்ச்சை மாநாடுகள் ஓர் பார்வை
- சீமான் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்து வருகிறார்.
- மாற்றத்தை விரும்புபவர்களுக்கான ஒரு மாநாட்டையும் திருச்சியில் நடத்த திட்டமிட்டுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்.
சினிமாத்துறையில் இருந்து ஈழத் தமிழ், தமிழ் தேசியம் போன்ற முழக்கங்களோடு அரசியலில் நுழைந்தவர் சீமான். நாம் தமிழர் இயக்கமாக செயல்பட்டு வந்ததை, கடந்த 2010-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியாக மாற்றி, தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் சீமான் செயல்பட்டு வருகிறார். நாம் தமிழர் கட்சி தொடங்கியதில் இருந்து நடைபெற்ற தேர்தல்களில் தனித்தே போட்டியிட்டு வருகிறது. இதனிடையே அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருந்து வந்தது.
இதனை தொடர்ந்து கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 6.58 சதவீத வாக்குகளை பெற்றும் அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால், அக்கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் பறிபோனது. அதனை தொடர்ந்து கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 8.22 சதவீத வாக்குகளை பெற்றதால், மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்தது.
இதையடுத்து அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலை நோக்கி சீமான் பணியாற்றி வருகிறார். மற்ற அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வரும் நிலையில், சீமான் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்து வருகிறார். இந்த தேர்தலிலும் தனித்தே போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
சீமான் மீது பல்வேறு வழக்குகள், அவதூறு வழக்குகள் மற்றும் விமர்சனங்கள் உள்ள நிலையில், தனது அரசியலை நோக்கி பயணித்து வருகிறார். அவர் அறிவிக்கும் போராட்டங்கள் விமர்சனங்களை பெற்றாலும் பல்வேறு கருப்பொருள் சார்ந்த மாநாடுகளை நடத்தினார்.
அந்தவகையில், ஆகஸ்ட் மாதம் திருத்தணியில் மரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக 'மரங்களின் மாநாடு' மற்றும் மீனவர் நலன் மற்றும் கடல் சார்ந்த பிரச்சனைகளுக்காக கடந்த மாதம் "கடலம்மா மாநாடு", ஆடு-மாடு, மற்றும் மலைகளின் மாநாடு போன்றவற்றை நடத்தினார். இந்த மாநாடுகள் இயற்கை சார்ந்த பாதுகாப்பை கோரிக்கையாக முன்வைத்து நடத்தப்பட்டது. மேலும் மாற்றத்தை விரும்புபவர்களுக்கான ஒரு மாநாட்டையும் திருச்சியில் நடத்த திட்டமிட்டுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார்.
ஆடு-மாடு, மற்றும் மலைகளின் மாநாடு:
ஜூலை மாதம் மதுரையில் 'மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை!' என்ற முழக்கத்துடன் நூற்றுக்கணக்கான ஆடு, மாடுகளை திரட்டி மாநாட்டினை சீமான் நடத்தினார். இந்த மாநாட்டில் நூற்றுக்கணக்கான ஆடு,மாடுகள் முன்பு சீமான் உரையாற்றியது இணையத்தில் பேசுபொருளானது. மேலும் ஆகஸ்ட் மாதம் மாடு மேய்ப்பதற்கான தடையை நீக்கக் கோரி மலை ஏறி மாடு மேய்க்கும் போராட்டமாக மலைகளின் மாநாடு நடத்தப்பட்டது.
மரங்களின் மாநாடு:
மனிதர்கள் இல்லாது மரங்கள் வாழும், ஆனால் மரங்கள் இல்லாது மனிதர்கள் உட்பட எந்த உயிரினமும் வாழ முடியாது என்ற கருத்தை வலியுறுத்தி, மரங்களை வளர்ப்பதன் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்துப் பேசுவதாகும். இம்மாநாட்டில் சீமான் கலந்துகொண்டு, அப்துல்கலாம், நம்மாழ்வார், நடிகர் விவேக் போன்றோரின் பெயரில் மரக்கன்றுகள் நட்டு, மரங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசினார்.
கடலம்மா மாநாடு:
"ஆதி நீயே, ஆழித்தாயே" (கடலே நீயே, கடலன்னையே நீயே) என்ற முழக்கத்துடன் கடலையும் கடல்வாழ் உயிரினங்களையும் பாதுகாத்தல், கடல்சார்ந்த வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தலை வலியுறுத்தி கடலுக்குள் சென்று மாநாடு நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஆறுகளுக்கும் மாநாடுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாடுகள், விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போன்ற பல்வேறு தரப்பினரின் பிரச்சனைகளை வெளிக்கொண்டு வரவும், மாற்றத்தை விரும்பும் மக்களை ஒன்றிணைக்கவும் உதவுகின்றன.
சீமான் அறிவித்த மாநாடுகள் விமர்சனங்களை ஏற்படுத்தினாலும் அனைவராலும் சிந்திக்கப்பட வேண்டிய விஷயமாகும். மாறிவரும் காலநிலைக்கு ஏற்ப மரம், செடிகளை அழித்து சாலைகள் விரிவாக்கம் மற்றும் வீடு கட்டுவது என பெரும்பாலும் நடைபெற்று வருகிறது. இதனால் பாதிக்கப்படப்போவது என்னமோ நாம் தான் என்பதை உணர வேண்டும்.
கடல், மலைகள் என பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு விட்டு செல்ல வேண்டியது நம் கடமை. ஆனால் நாம் எல்லாவற்றையும் சுயநலத்திற்காக அழித்து வருகிறோம் என்பதை அனைவரும் உணர வேண்டும். மேலும், இந்த விஷயத்தில் அனைவரும் ஒற்றுமையோடு சிந்தித்து செயல்பட்டால் நாடு நலம் பெறும்.






