என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கனிமொழி குறித்து அவதூறு பேசிய பா.ஜ.க. நிர்வாகி கைது
- திருப்பரங்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
- பா.ஜ.க. நிர்வாகி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதனை தமிழக அரசும் கோவில் நிர்வாகமும் நடைமுறைப்படுத்தாமல் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து வழக்கு தொடுத்துள்ளனர். இதனால் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், பல்வேறு அமைப்பினரும் தீபம் ஏற்ற வேண்டும் என போராடி வருகின்றனர்.
இந்தநிலையில் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த முன்னாள் பா.ஜ.க. நிர்வாகி கார்மேகம் என்பவர் ஒரு யூடியூப் சேனலுக்கு திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரம் தொடர்பாக பேட்டி அளித்தார்.
அப்போது அவர் தூத்துக்குடி எம்.பி கனிமொழியை தவறாக பேசியும், சமூக வலைதளங்களில் தவறான செய்தியை பரப்பியதாக புகார் எழுந்தது. இதற்கு தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் கனிமொழி குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்த கார்மேகம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தி.மு.க. பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டியன் என்பவர் திருப்பரங்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி பா.ஜ.க. நிர்வாகி கார்மேகம் மீது அசிங்கமாக திட்டுதல் (பிரிவு 79), அவதூறு பரப்புதல் 196(1), பொய்யான கருத்தை சொல்லி இரு தரப்புக்கு மோதலைத் தூண்டுதல் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் கார்மேகத்தை கைது செய்தனர்.






