என் மலர்
உள்ளூர் செய்திகள்
- தமிழகம் முழுவதும் 4954 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள்.
- அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தலைமையில் தேர்வு மையங்கள் கண்காணிக்கப்படுகிறது.
சென்னை:
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் இறுதி அல்லது மே மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. இதனால் அரசு பொது தேர்வுகளை விரைவாக முடிக்கும் வகையில் பிளஸ் 2 தேர்வு கடந்த 2-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை மறுநாள் 11-ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 6-ந்தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வினை 12,467 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 மாணவ-மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் 26 ஆயிரம் பேர் என மொத்தம் 9 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.
தமிழகம் முழுவதும் 4219 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. தேர்வு மையங்களில் காப்பி அடித்தல், விடைத்தாள்களை மாற்றுதல் போன்ற ஒழுங்கின செயல்களை ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.
மேலும் தமிழகம் முழுவதும் 4954 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள். அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தலைமையில் தேர்வு மையங்கள் கண்காணிக்கப்படுகிறது.
வினா தாள்கள் தேர்வுக்கு முன்னதாக வெளியாகாமல் இருக்கவும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள மையங்களுக்கு விடைத்தாள்கள் அன்று காலையில் செல்வதற்கான ஏற்பாடுகள் கல்வி அதிகாரிகள் மூலம் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தேர்விற்கும் போதுமான இடைவெளி விடப்பட்டுள்ளது மாணவர்கள் அனைத்து தேர்வையும் படித்து எழுதுவதற்கு வசதியாக அதிக விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது.
- ஒரு மாலை போட்டு பெரிய கோவிலை கட்ட ஆசைப்படுகிறேன்.
- எனக்கு இதற்கு மேல சொல்ல தெரியல.
சென்னை:
த.வெ.க. தலைவர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உருவாக்கியது.
விஜய் அரசியல் பயணத்தில் சந்திக்கும் முதல் தேர்தல் 2026 தேர்தல். இந்த நேரத்தில் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனு செய்திருப்பது விவாதப் பொருளாகி உள்ளது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் இது போன்று மனுதாக்கல் செய்வது ஏன்? என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கை எம்.பி. அர்ச்சுனா முதன் முதலாக சங்கீதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டு உள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது:-
27 வருடம் காத்திருந்து ஒருவர் தனது வாழ்க்கையின் உச்சகட்டத்தில் நிற்கும் போது காலை வாரி விட்டீர்கள். நீங்கள் யாழ்ப்பாணத்தில் எந்த இடம் என்று சொல்லுங்கோ... அங்கு போய் ஒரு மாலை போட்டு பெரிய கோவிலை கட்ட ஆசைப்படுகிறேன். எப்படிப்பட்ட இனப்பிறப்பு என்று யோசித்து பாருங்கள். எனக்கு இதற்கு மேல சொல்ல தெரியல. ஒரு யாழ்ப்பாணத்து பாராளுமன்ற உறுப்பினராக யாழ்ப்பாணத்து தமிழனாக இதை நினைத்து வருத்தப்படுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அர்ச்சுனா எம்.பி.யின் வீடியோ பதிவு சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
- விஜய் 2 முறை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார்.
- புஸ்சி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகிகளும் சி.பி.ஐ. முன்பு ஆஜராகி உள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் 2 முறை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார்.
மேலும் இவ்வழக்கு தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகளான புஸ்சி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகிகளும் சி.பி.ஐ. முன்பு ஆஜராகி உள்ளனர்.
இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக நாளை ஆஜராக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்க்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே, விஜய் நடித்த 'ஜன நாயகன்' படத்தை இன்று மறுதணிக்கை செய்யப்படும் என அறிவித்த நிலையில், கமிட்டி உறுப்பினர்களில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாததால் படம் பார்ப்பது ஒத்திவைக்கப்பட்டது. மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் விஜய் இணைய வேண்டும் என அழுத்தம் தரப்படுவதாக அரசியல் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே கரூர் வழக்கிற்காக நாளை சி.பி.ஐ. முன் விஜய் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளதும் அரசியல் அழுத்தமே என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
- மாநாட்டிற்காக 3 லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது.
- வெளியூர்களில் இருந்து வருகை தரும் 4 லட்சம் பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி:
திருச்சியில் இன்று நடைபெறும் தி.மு.க. மாநாடு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பெருமிதம் தெரிவித்தார்.
மாநாட்டு திடலில் இன்று காலை அவர் நிருபர்களிடம் கூறும் போது, மாநாட்டிற்காக 3 லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து வருகை தரும் 4 லட்சம் பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகள் உள்பட மத்திய மண்டத்தில் உள்ள 41 தொகுதிகளிலும் இந்தத் தேர்தலில் தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும்.
இது போன்ற மாநாடுகளைத் தொடர்ச்சியாக நடத்துவதன் மூலம் தலைவருக்கு கட்சி நிர்வாகிகளை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதோடு, அவர்களுக்கு கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து புதிய உத்வேகமும் கிடைக்கும் என்றார்.
- வெளியூர்களில் இருந்து வருகை தரும் தொண்டர்களின் பசி போக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
- உணவுப் பொட்டலங்களுடன் குடிநீர் பாட்டில்களும் வழங்கப்பட்டன.
திருச்சி சமயபுரம் அருகே சிறுகனூரில் நடைபெறும் தி.மு.க.வின் 12-வது மாநில மாநாட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 10 லட்சம் பேர் கலந்து கொள்கிறார்கள். மாநாடு சரியாக பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.
வெளி மாவட்டங்களை சேர்ந்த தொண்டர்கள் நேற்று இரவு முதல் பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ், வேன், கார்களில் மாநாட்டுத் திடலில் குவிந்தனர். இதனால் முன்னேற்பாடாக வெளியூர்களில் இருந்து வருகை தரும் தொண்டர்களின் பசி போக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

தி.மு.க. முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு ஆலோசனையின் படி 4 இடங்களில் 2 லட்சம் பேருக்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி மற்றும் சிக்கன் கிரேவி ஆகியவை காலையிலிருந்து மாநாட்டு திடல் உணவுக்கூடத்தில் தயார் செய்யப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
பின்னர் அந்த உணவுகளை முறையாக பொட்டலமாக மடித்து மாநாட்டு திடலுக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த சிறப்பு உணவு கூடங்களில் தொண்டர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. மேலும் உணவுப் பொட்டலங்களுடன் குடிநீர் பாட்டில்களும் வழங்கப்பட்டன. இதனால் வெளியூர் தொண்டர்கள் பசியாறி மகிழ்ந்தனர்.
- வாக்கு வங்கி அடிப்படையில் பார்த்தால் இரு அணிகளுமே சம பலத்துடன் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
- கட்சி தொடங்கியதும் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கொடுக்கப்படும் என்று விஜய் அறிவித்த பிறகும் எந்த கட்சியும் அவருடன் கைகோர்க்கவில்லை.
சென்னை:
தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில் இதுவரை இல்லாத வகையில் வரப்போகும் 2026 தேர்தல் களம் வித்தியாசமாக அமைந்து உள்ளது.
வழக்கமாக தேர்தல் காலங்களில் 3 முதல் 4 முனை போட்டிகள் கூட ஏற்படும். ஆனால் கடைசியில் இருமுனை போட்டியே பலமாக இருக்கும். அந்த வகையில் இறுதியில் தி.மு.க. தலைமையிலான அணியும், அ.தி.மு.க. தலைமையிலான அணியும் மல்லுகட்டும். கடைசியில் இரண்டில் ஏதாவது ஒரு அணி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.
ஆனால் இந்த முறை நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் அந்த சூழ்நிலைக்கு சவால் விடும் சூழலை உருவாக்கி விட்டு உள்ளது. அதற்கு காரணம் அவருக்கு திரளும் ரசிகர்கள் கூட்டம்தான்.
அது வெறும் ரசிகர்கள் கூட்டம் தான், தேர்தலில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை என்று முன்னணி கட்சிகளை உதட்டளவில் பேச வைத்தாலும் விஜய்க்கு திரளும் ரசிகர்கள் எண்ணிக்கை எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தி விடுமோ என்று மற்ற கட்சிகளை உள்ளூர யோசிக்க வைத்துள்ளது.
ஆரம்ப கட்டத்தில் த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தரப்பில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அப்படி ஒரு கூட்டணி அமைந்திருந்தால் அதுவும் வலிமையான கூட்டணியாகவே இருந்து இருக்கும்.
இதை உணர்ந்த தி.மு.க.வும் காங்கிரசை வெளியேற விடாமல் 3 தொகுதிகளை கூடுதலாக கொடுத்து தக்க வைத்துக் கொண்டது. இப்போதைய நிலையில் தி.மு.க. அணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., தே.மு.தி.க. உள்பட 26 கட்சிகள் இடம்பெற்று மெகா கூட்டணி தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
அ.தி.மு.க. அணியில் பா.ஜ.க., அ.ம.மு.க., பா.ம.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்று உள்ளன. வாக்கு வங்கி அடிப்படையில் பார்த்தால் இரு அணிகளுமே சம பலத்துடன் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
கட்சி தொடங்கியதும் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கொடுக்கப்படும் என்று விஜய் அறிவித்த பிறகும் எந்த கட்சியும் அவருடன் கைகோர்க்கவில்லை.
தி.மு.க. ஆட்சியை அகற்றுவதே லட்சியம் என்று விஜய் கூறிவந்தாலும் அதற்கான வியூகத்தை அவர் பலமாக வகுக்கவில்லை என்றே அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். காங்கிரசை இழுக்க த.வெ.க. முயற்சித்ததைபோல் அ.தி.மு.க.-பா.ஜ.க. அணியில் த.வெ.க.வை இணைக்க நடத்தப்பட்ட முயற்சிகளும் வெற்றி பெறவில்லை. அதற்கு காரணம் முதல்வர் பதவியை விஜய் தரப்பில் விட்டுக்கொடுக்க முன்வராதது தான்.
ஆனால் இப்போது கள நிலவரம் மாறிவிட்டது. தி.மு.க. காங்கிரசை தக்க வைத்ததோடு தே.மு.தி.க.வையும் தங்கள் பக்கம் இழுத்து கூட்டணியை வலுப்படுத்தி வைத்துள்ளது.
இப்போதைய சூழ்நிலையில் தி.மு.க. அணியை எதிர்த்து தேர்தல் போட்டியில் வெற்றி பெற எதிரணியும் பலமாக இருக்க வேண்டும்.
எனவே, அ.தி.மு.க. அணியில் த.வெ.க.வும் இணைய வேண்டும் என்ற கருத்து அந்த கட்சி தொண்டர்களிடமும் எழுந்துள்ளது. ஏற்கனவே த.வெ.க.வுக்கு 24 முதல் 25 சதவீத வாக்குவங்கி இருப்பதாக அந்த கட்சி மதிப்பிட்டுள்ளது. அதே அளவுக்கு அ.தி.மு.க.வுக்கும் வாக்கு வங்கி உள்ளது. எனவே தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்ற நமது நோக்கம் நிறைவேற அ.தி.மு.க.வுடன் கை கோர்க்க வேண்டும் என்று த.வெ.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் இதை விஜய் கவனத்துக்கு எடுத்து சென்றுள்ளதாகவும் பெயர் வெளியிட விரும்பாத நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே த.வெ.க.வை அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் சேர்க்க பல தரப்பிலும் ரகசிய முயற்சிகள் நடந்து வருவதாக கடந்த சில நாட்களாகவே தக வல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், த.வெ.க.கட்சிக்குள்ளும் அந்த உணர்வை ஏற்படுத்தி இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ.க. வெளிப்படையாகவே விஜய்க்கு அழைப்பு விடுத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
- முதல் மலையில் சென்று கொண்டிருந்த போது ஹரிதாசுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
- சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரூர்:
கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் ஹரிதாஸ்(வயது48). தங்கபட்டறை தொழிலாளி. சிவபக்தரான இவர் கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலையேறுவதற்கு முடிவு செய்தார்.
அதன்படி கடந்த 7-ந்தேதி ஹரிதாஸ் தனது நண்பரான மாரியப்பன் என்பவருடன் பூண்டி வெள்ளியங்கிரி மலையடிவாரத்திற்கு சென்றார். அங்கு கீழ் உள்ள பூண்டி வெள்ளியங்கிரி கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, இருவரும் மலையேறினர்.
முதல் மலையில் சென்று கொண்டிருந்த போது ஹரிதாசுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியான அவரது நண்பர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
வனத்துறையினர் விரைந்து வந்து மயங்கி விழுந்த ஹரிதாசை டோலிகட்டி மலையடிவாரத்திற்கு தூக்கி வந்தனர். அங்கு இருந்த மருத்துவகுழுவினர் மயங்கி விழுந்த ஹரிதாசை பரிசோதனை செய்தனர்.
அப்போது ஹரிதாஸ் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் ஆலாந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த ஹரிதாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இன்று அதிகாலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலைக்காக தேயிலை தோட்டத்திற்கு வந்தனர்.
- யானை தாக்கி 2 பேர் இறந்ததால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம் தேவர்சோலை அருகே காரக்குன்னுவை சேர்ந்தவர்கள் ரவி(60), லிங்கன். இவர்கள் 2 பேரும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக நேற்று தேவர்சோலை டவுனுக்கு சென்றனர்.
அங்கு சென்று வீட்டிற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் வாங்கி கொண்டு மீண்டும் காரக்குன்னு நோக்கி வந்தனர்.
நேற்றிரவு 8.30 மணிக்கு காரக்குன்னு அருகே உள்ள தேயிலை எஸ்டேட் அருகே 2 பேரும் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து நடமாடி கொண்டிருந்தது.
யானை நிற்பது அறியாமல் 2 பேரும் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் குடியிருப்பின் அருகே உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் இவர்கள் சென்ற போது இவர்களை யானை வழிமறித்து நின்றது.
யானை நிற்பதை பார்த்ததும் 2 பேரும் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். ஆனால் அதற்குள்ளாகவே யானை 2 பேரையும் தூக்கி வீசி தாக்கியது.
இதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர்.
குடியிருப்பில் இருந்து கொஞ்சம் தூரம் தள்ளி இவர்கள் இறந்து கிடந்த பகுதி இருந்ததாலும், இரவு நேரம் என்பதாலும் இவர்கள் இறந்த விவரம் யாருக்கும் தெரியவில்லை.
இன்று அதிகாலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேலைக்காக தேயிலை தோட்டத்திற்கு வந்தனர்.
அப்போது அங்கு 2 பேரும் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு விட்டனர்.
மேலும் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் வனத்துறையினர், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஏராளமான மக்கள் திரண்டு உடலை எடுக்கவிடவில்லை. அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
யானை தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அத்துடன் யானை தாக்கி 2 பேர் இறந்ததால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். குடியிருப்பு அருகே நடமாடும் யானையை அடர் வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- ஒரு கிராம் வெள்ளி 290 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக கடந்த 1-ந்தேதி அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை கடந்த 2-ந்தேதியில் இருந்து தொடர்ந்து சரிந்து கொண்டே வந்தது. கடந்த வெள்ளிக்கிழமை வரையிலான 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.815-ம் சவரனுக்கு ரூ.6 ஆயிரத்து 520-ம் குறைந்து இருந்தது. தொடர்ந்து விலை சரிந்து கொண்டே வந்த நிலையில், கடந்த சனிக்கிழமை விலை அதிகரித்து சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.1,20,400-க்கும் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.15,050-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, தங்கம் கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,950-க்கும் சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,600-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 290 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
08-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,400
07-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,400
06-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,680
05-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,960
04-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,21,600
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
08-03-2026- ஒரு கிராம் ரூ.290
07-03-2026- ஒரு கிராம் ரூ.290
06-03-2026- ஒரு கிராம் ரூ.290
05-03-2026- ஒரு கிராம் ரூ.295
04-03-2026- ஒரு கிராம் ரூ.295
- மூதாட்டிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே முதியவரை கொன்று அவரது மனைவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தோட்டத்து வீட்டில் முதிய தம்பதி வசித்து வந்த நிலையில் 70 வயது கணவனை கொன்று 60 வயது மனைவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிந்த நிலையில் மூதாட்டிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிகிறது.
- டி20 உலகக் கோப்பையை மீண்டும் வென்ற டீம் இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி 3-வது முறையாக இந்திய அணி 'சாம்பியன்' பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது. இந்தியாவின் வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ஆட்டம் பாட்டத்துடன் குதூகலமாக கொண்டாடினர்.
இதனிடையே சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு பாராட்டுகள் குவிகிறது. அந்த வகையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜயும் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
மீண்டும் சாம்பியன்கள்!
டி20 உலகக் கோப்பையை மீண்டும் வென்ற இந்திய அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! மைதானத்தில் உள்ள மன உறுதி முதல் மைதானத்தில் துடிக்கும் மில்லியன் கணக்கான இதயங்கள் வரை, இந்த வெற்றி ஒவ்வொரு இந்தியருக்கும் உரியது.
உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகள்! என தெரிவித்துள்ளார்.
- வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் சேவையை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
- ரெயிலை இயக்கியும், டிராலிகளில் பயணித்தும் தண்டவாளப் பாதுகாப்பு நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை:
சென்னை எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக கடந்த மாதம் 20-ந்தேதி முதல் மின்சார ரெயில் சேவைகள் குறைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதற்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதில் மிக முக்கியமாக வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் சேவையை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி நாளை (10-ந் தேதி) முதல் அந்த வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்க இருப்பதாகவும் இதற்கு இடையே ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் பாதுகாப்பு சோதனை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், வேளச்சேரி-பரங்கிமலை வழித்தடத்தில் கடந்த 5-ந்தேதி டெல்லியில் இருந்து ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஜனக்குமார் கர்க் தலைமையில் வந்த குழுவினர் ரெயிலை இயக்கியும், டிராலிகளில் பயணித்தும் தண்டவாளப் பாதுகாப்பு நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, பாதுகாப்பு சான்றிதழ் வழங்கப்பட்டதும் இந்த வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், தற்போது இந்த வழித்தடத்தில் தண்டவாளப் பாதுகாப்பு பரிசோதனை முடிந்த நிலையில், ரெயில் இயக்க அனுமதிச்சான்று கிடைக்கவில்லை எனவும் தண்டவாளத்தில் சில பணிகள் மேற்கொள்ளவேண்டும் என பரிசோதனைக்கு வந்த குழுவினர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிகிறது. அந்த பணிகள் முடிவடைந்த பின் பரங்கிமலை-வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவை தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.






