கோவை வெள்ளியங்கிரி மலையேறிய தங்கபட்டறை தொழிலாளி உயிரிழப்பு

முதல் மலையில் சென்று கொண்டிருந்த போது ஹரிதாசுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை வெள்ளியங்கிரி மலையேறிய தங்கபட்டறை தொழிலாளி உயிரிழப்பு
Published on

பேரூர்:

கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் ஹரிதாஸ்(வயது48). தங்கபட்டறை தொழிலாளி. சிவபக்தரான இவர் கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலையேறுவதற்கு முடிவு செய்தார்.

அதன்படி கடந்த 7-ந்தேதி ஹரிதாஸ் தனது நண்பரான மாரியப்பன் என்பவருடன் பூண்டி வெள்ளியங்கிரி மலையடிவாரத்திற்கு சென்றார். அங்கு கீழ் உள்ள பூண்டி வெள்ளியங்கிரி கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, இருவரும் மலையேறினர்.

முதல் மலையில் சென்று கொண்டிருந்த போது ஹரிதாசுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியான அவரது நண்பர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

வனத்துறையினர் விரைந்து வந்து மயங்கி விழுந்த ஹரிதாசை டோலிகட்டி மலையடிவாரத்திற்கு தூக்கி வந்தனர். அங்கு இருந்த மருத்துவகுழுவினர் மயங்கி விழுந்த ஹரிதாசை பரிசோதனை செய்தனர்.

அப்போது ஹரிதாஸ் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் ஆலாந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த ஹரிதாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com