என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு உள்ளிட்டவை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
- கால்வாய் முறையாக பராமரிக்கப்படாததால் கால்வாயின் பெரும் பகுதி காணாமல் போய்விட்டது.
சென்னை:
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து டிட்வா புயலாக மாறியது. இந்த புயல் கரையை நெருங்காமல் கடலோர பகுதிகள் வழியாக பயணித்த நிலையில் வறண்ட காற்று கலந்ததால் மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.
சென்னைக்கு அருகே 30 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியது.
'டிட்வா' புயல் வலுவிழந்த போதிலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், கடந்த 3 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையின் பல பகுதிகளில், இன்றும் வெள்ள நீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது.
சென்னை புறநகர் பகுதியான செங்குன்றம், புழல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கன மழை கொட்டியது. இதனால் தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளை மழை நீர் சூழ்ந்தது.
இரவு முழுவதும் இப்பகுதியில் இடைவிடாது மழை கொட்டி தீர்த்தது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த பகுதியில் பாலாஜி அவென்யூ என்ற இடம் அருகே உள்ள ஆர்.சி. கட்டிடத்தின் பின்புறம் கால்வாய் கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் மழை வெள்ளம் குடியிருப்புகளை சூழ்ந்தது.
புழல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாடியநல்லூர் ஊராட்சி பாலாஜிநகர், குமரன்நகர், சன்சிட்டி நகர், விளாங்காடு பாக்கம் ஊராட்சி மல்லிமா நகர், நியூ ஸ்டார்சிட்டி, மற்றும் பாலாஜி கார்டன், தணிகைநகர், வடகரை ஊராட்சிக்கு உட்பட்ட பாபா நகர் உள்ளிட்ட பகுதியில் சுமார் 2 ஆயிரம் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.
இதனால் வீடுகளுக்குள் ஏராளமானோர் தவித்து வருகிறார்கள். 2 நாட்களாகவே இங்குள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் வீடுகளுக்குள் முடங்கியிருந்தனர். வெள்ளம் வரும் என்ற அச்சத்தில் சிலர் வீடுகளை விட்டு வெளியேறி வேறு பகுதிக்கு சென்றனர். பலர் வீட்டு மாடிகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த சூழலில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். அத்தியாவசிய தேவைகளுக்காக கூட வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே கால்வாய் நீருடன் அப்பகுதி தனியார் ஆலை கழிவுகளும், சாக்கடையும் கலந்து வருகின்றன.
மழை வெள்ளத்துடன் கழிவுநீரும் கலந்து வந்தததோடு பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளும் வீடுகளுக்குள் புகுந்தன.
குமரன் நகர் பகுதியில் தாழ்வான பகுதியில் இருந்த 15 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் அப்பகுதியில் 2 முதியவர்கள், 9 பெண்கள் உள்பட 25 பேர் தண்ணீரில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது. அவர்களால் வெளியில் வர முடியவில்லை. இதுபற்றி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. செங்குன்றம் தீயணைப்பு நிலைய அதிகாரி சீனிவாசன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்றனர்.
25 பேரையும் ரப்பர் படகு மூலம் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். பின்னர் அவர்கள் தீர்த்தங்கரை சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இதை தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு உள்ளிட்டவை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. வெள்ள பாதிப்பு குறித்து அப்பகுதியை சேர்ந்த மணி கூறுகையில், புழல் ஊராட்சி ஒன்றியத்தில் கால்வாய்கள், நீர்நிலைகள் உள்ளிட்ட பல்வேறு ஆக்கிரமிப்புகள் காரணமாக மழைநீர் கால்வாய் வழியாக செல்லாமல் ஊருக்குள் புகுந்து விடுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பலமுறை போராடியும் நடவடிக்கை இல்லை.
இதனால் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் நடைபெற்று உள்ளன. கடந்த ஆண்டுகளில் பெரிய மழை பெய்ததால் குடியிருப்புகளில் புகுந்த மழைநீர். இந்த ஆண்டு தொடர் மழையால் மழைநீர் புகுந்துள்ளது. புழல் ஊராட்சி ஒன்றியத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதால், சமூக ஆர்வலர்களும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நிரூபணம் ஆகியுள்ளது. ஆனால், ஆக்கிரமிப்பாளர்கள் மீது, அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அரசுக்கு வருவாய் இழப்பும், இடர்பாடுகளும் தொடர்கின்றன.
மேலும் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான். இதுபோன்ற மழைக்காலங்களில் அதிகாரிகள் வெளியில் இருந்து பார்வையிட்டு செல்வது வழக்கமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பாதிப்புக்குள்ளான இப்பகுதி மக்களுக்கு தீர்வும் கிடைக்கவில்லை.
மேலும் தற்போது பாதிக்கப்பட்டவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
புழல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் விளாங்காடுபாக்கம், தீர்த்த பிரியப்பட்டு, அழிஞ்சிவாக்கம், பிராண்ட்லைன் உள்ளிட்ட 7 ஊராட்சிகள் உள்ளன. இது சென்னையை ஒட்டிய புறநகர் கிராமப்பகுதிகள் ஆகும்.
சென்னை நகருக்குள் ஆண்டுதோறும் ஏற்பட்டு வரும் மழை வெள்ள பிரச்சனைகளால் சென்னை நகர்ப்பகுதிகளில் வாடகை வீடுகளில் வசிக்கும் பலர் புறநகர் பகுதிக்கு குடி பெயர்ந்தனர். புழல் ஊராட்சி ஒன்றிய பகுதியில் மட்டும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சார்பில் பிளாட்டுகள் அமைக்கப்பட்டு ஏராளமான புதுப்புது குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன.
இந்த நகரங்களில் பிளாட்டுகள் வாங்கி பலரும் வீடு கட்டி உள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இந்த பகுதியில் 15-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உருவாகி உள்ளன. பல்வேறு தொழில் நிறுவனங்களும் தொடங்கப்பட்டு உள்ளன. வயல்வெளி பகுதிகள் குடியிருப்புகளாக மாறியது.
இப்பகுதியில் சுமார் 5 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் ஒரு பாசன் கால்வாய் செல்கிறது. புதிய குடியிருப்புகள், நிறுவனங்கள் அமைந்ததன் காரணமாக இந்த பாசன கால்வாய் ஆக்கிரமிப்பால் தூர்ந்து போனது.
கால்வாய் முறையாக பராமரிக்கப்படாததால் கால்வாயின் பெரும் பகுதி காணாமல் போய்விட்டது. சோழவரம் பகுதியில் இருந்து வரும் தண்ணீர் இந்த கால்வாய் மூலம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வட பெரும்பாக்கம் வழியாக கடலுக்கு செல்கிறது. ஒவ்வொரு வருடமும் மழை காலங்களில் இந்த பகுதியில் வீடுகளை தண்ணீர் சூழ்வது வாடிக்கையாகிவிட்டது.
எனவே கால்வாயை முறையாக பராமரிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கடந்த அக்டோபர் மாதம் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இதனால் தற்காலிகமாக கால்வாய் சீரமைக்கப்பட்டது. இந்த சூழலில் தான் கடந்த 3 நாட்களாக பெய்துவரும் மழையினால் இந்த பகுதியை மீண்டும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
தாம்பரம் அருகில் உள்ள ஊரப்பாக்கத்தில் ஜெகதீசன்நகர், செல்வராஜ்நகர் உள்ளிட்ட இடங்களில் சுமார் 20 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
பலத்த மழை காரணமாக திருமழிசை அருகே உள்ள மேப்பூர் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் சுமார் 600 வீடுகளை மழை நீர் சூழ்ந்து உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள்.
அத்தியாவசியப் பொருட்கள் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு ஊராட்சியில் உள்ள விஷ்ணு பிரியா நகரில் 10 தெருக்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தவித்து வருகிறார்கள். பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொருட்கள் சேதம் அடைந்து உள்ளன.
மொத்தத்தில் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ள நீரை வடியவைக்கவும், மீட்பு நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.
- கடந்த பல ஆண்டுகளாக பல்கலைக் கழகங்களுக்கு நிதி ஒதுக்கப்படாதது தான்.
- பிற பல்கலைக்கழகங்களின் நிதி நிலையை சீரமைக்க சிறப்புத் திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நவீன இந்தியாவின் முதல் பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகத்தில் 65 சதவீதம் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. 5 ஜனாதிபதிகளை இந்தியாவுக்கு வழங்கிய சென்னைப் பல்கலைக்கழகத்தில் இப்போது பாடம் நடத்துவதற்குக் கூட ஆளில்லாத நிலையை தி.மு.க. அரசு ஏற்படுத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் மொத்தமுள்ள 515 ஆசிரியர் பணியிடங்களில் 180, அதாவது 35 சதவீதம் இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன; மீதமுள்ள 335, அதாவது 65 சதவீதம் பணியிடங்கள் காலியாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 94 பேராசிரியர்கள் பணி செய்ய வேண்டிய இடத்தில் வெறும் 63 பேர் மட்டுமே உள்ளனர்.
அவர்களிலும் கணிசமானவர்கள் அடுத்த சில ஆண்டுகளில் ஓய்வு பெறவுள்ளனர். 127 இணைப் பேராசிரியர்களில் வெறும் 20 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். மீதமுள்ள 85 சதவீதம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதே போல், 294 உதவி பேராசிரியர் பணியிடங்களில் 197 இடங்கள், அதாவது 67 சதவீதம் பணியிடங்கள் இன்றைய நிலையில் காலியாக கிடக்கின்றன.
ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் அமர்த்தப்பட்டிருக்கும் கவுரவ விரிவுரையாளர்களால் தான் தினமும் ஓரிரு வகுப்புகளாவது நடைபெறுகின்றன.
சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தவும், மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கவும் மாணவர்களிடமிருந்து ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அந்த நிதி பல்கலைக்கழகத்தின் பிற செலவுகளுக்கு திருப்பி விடப்படுவதால், மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களையும், தற்காலிகப் பட்டச் சான்றுகளையும் அச்சடிப்பதற்கு கூட நிதி இல்லை. அதனால் நடப்பாண்டில் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் இதுவரை வழங்கப்படவில்லை.
கடந்த பல ஆண்டுகளாக பல்கலைக் கழகங்களுக்கு நிதி ஒதுக்கப்படாதது தான். பல்கலைக்கழகங்களை மீட்டெடுக்கப்போவதாகக் கூறி அதிகாரத்துக்கு வந்த திமுகவின் ஆட்சியில் தான் பல்கலைக்கழகங்களின் நிதி நெருக்கடியும், சீரழிவுகளும் அதிகரித்தன. அந்த வகையில் தமிழக பல்கலைக்கழகங்களின் இன்றைய நிலைக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
பல்கலைக்கழகங்களை சீரழித்த பாவத்திற்கு பரிகாரம் தேடும் வகையில், சென்னை பல்கலைக்கழகத்திற்கு உடனடியாக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பிற பல்கலைக்கழகங்களின் நிதி நிலையை சீரமைக்க சிறப்புத் திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும். அதை செய்யத் தவறினால் வரும் தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் மறக்க முடியாத பாடம் புகட்டுவர் என்றார்.
- கடந்த நவம்பர் 4-ந்தேதி முதல் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் வீடு வீடாக வழங்கப்பட்டது.
- கடந்த மாதம் இறுதியில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மாநிலம் முழுவதும் 24 லட்சம் இறந்தவர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்காக கடந்த நவம்பர் 4-ந்தேதி முதல் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் வீடு வீடாக வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள 6.41 கோடி வாக்காளர்களில் இதுவரை 6.37 கோடி படிவங்கள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த படிவங்களை பூர்த்தி செய்து வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி ஒவ்வொரு வீட்டிலும் கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்கின்றனர்.
இந்த படிவங்களை நிரப்பி கொடுக்க டிசம்பர் 4-ந்தேதி கடைசி நாள் என்று முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இப்பணிக்காக கால அவகாசம் வரும் 11-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
கடந்த மாதம் இறுதியில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மாநிலம் முழுவதும் 24 லட்சம் இறந்தவர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதே போல் 27 லட்சத்து 1050 பேர் நிரந்தரமாக முகவரி மாறி சென்று உள்ளனர். கண்டுபிடிக்க முடியாதவர்கள் எண்ணிக்கை 5.19 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் உள்ளது.
ஆக மொத்தம் 59 லட்சம் பெயர்கள் பல்வேறு காரணங்களுக்காக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையத்தின் இடைக்கால புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளனர்.
மேலும் நவம்பர் 29-ந்தேதி நிலவரப்படி தமிழ்நாட்டில் 50.91 லட்சம் வாக்காளர்கள் தங்கள் கணக்கெடுப்பு படிவங்களை இன்னும் சமர்ப்பிக்காமல் உள்ளனர்.
கணக்கெடுப்பு பணி முழுமையாக முடியும்போது 69 லட்சத்துக்கும் அதிகமானோர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.
அதே சமயம் உண்மையான வாக்காளர்கள் பலரின் பெயர் இடம் பெறாமல் உள்ளது. இப்பிரச்சனைக்கு தீர்வு காண, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் உள்ள வாக்காளர்களை கண்டறிந்து அவர்கள் விரும்பும் இடம் தவிர, மற்ற இடங்களில் உள்ள அவர்களின் பெயரை நீக்கும் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு உள்ளது.
- என் மீது 17 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக பொய்யாக கூறினார்.
- குற்றவாளிகள் தற்போதைய எம்.பி.யை குறிவைக்கும் அளவுக்கு துணிச்சலானவர்களாக மாறி இருக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்தவர் சி.வி.சண்முகம். இவர் விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும், மேல்சபை எம்.பி.யாகவும் உளளார். இவர் தன்னை பயங்கரவாதி என கூறி கைது செய்ய முயற்சிப்பதாக டெல்லி பாராளுமன்ற தெரு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
காலையில் பாராளுமன்றத்துக்கு செல்லும் போது ஒரு போன் அழைப்பு வந்தது. அழைப்பாளர் ஆங்கிலத்தில் பேசி, தன்னை மும்பையை சேர்ந்த காவல்துறை அதிகாரி என்று அறிமுகப்படுத்தி கொண்டார்.
அவர் என்னை ஒரு பயங்கரவாதி என்றார். பின்னர் உடனடியாக என்னை கைது செய்யப்போவதாக மிரட்டினார். பின்னர் அந்த அழைப்பு மூத்த போலீஸ் அதிகாரி என்று கூறிக்கொள்ளும் மற்றொரு நபருக்கு மாற்றப்பட்டது. இந்த 2-வது அழைப்பாளர் மிரட்டல்களைத் தொடர்ந்தார். என் மீது 17 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக பொய்யாக கூறினார்.
இந்த குற்றவாளிகள் தற்போதைய எம்.பி.யை குறிவைக்கும் அளவுக்கு துணிச்சலானவர்களாக மாறி இருக்கின்றனர். இதுபோன்ற அச்சுறுத்தல்கள் விடுப்பது அதிகரித்து இருப்பதற்கு இது ஒரு சான்றாகும். இது தொடர்பான விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்றார்.
- ஜெயக்குமார் புதிய ராகத்தை பாடினால் நன்றாக இருக்கும்.
- பழைய பல்லவியை பாட வேண்டிய அவசியம் இல்லை.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜ.க. மற்றும் மோடியின் செல்வாக்கு தமிழ்நாட்டில் எப்போதும் உயராது. திராவிட மாடலால் ஆட்சி மிக சிறப்போடு செயல்பட்டு கொண்டிருப்பதால் அவர்களின் மாயாஜால வித்தைகள் எதுவும் தமிழ்நாட்டில் எடுபடாது.
முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் இருக்கிற இடம் தெரியாமல் இருந்தார். ஆளுநர் பதவியை எல்லாம் எதிர்பார்த்து அவருக்கு கிடைக்காமல் இருந்ததால் நானும் கட்சியில் இருக்கிறேன் என்பதை காட்டிக்கொள்ள என்னை 'பி' டீம் என்று கூறியுள்ளார்.
நாங்கள் எது பி டீம், எது 'சி' டீம், எது சிலீப்பர் செல் என்றெல்லாம் தெரிவித்து விட்டோம். நாங்கள் உண்மையான திராவிட மாடல் ஆட்சிக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் துணை நிற்பவர்கள். அதில் என்றும் மாற்றமும் கிடையாது.
ஆதவ் அர்ஜூனாவின் ஜோசியத்திற்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது. எங்கள் அமைச்சர்களிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. அவர் பார்க்கிற கிளி ஜோசியதற்கெல்லாம் பதில் இல்லை.
நான் தி.மு.க.விற்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இன்னும் பழைய பல்லவியையே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு புதிய ராகம் கிடைக்கவில்லை. ஜெயக்குமார் புதிய ராகத்தை பாடினால் நன்றாக இருக்கும். பழைய பல்லவியை பாட வேண்டிய அவசியம் இல்லை.
எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை அன்றைக்கு சாதாரண உறுப்பினர், மாவட்டச் செயலாளர்தான். ஆனால் நாங்கள் நல்ல பொறுப்பில் இருந்தவர்கள். அதனால் எடப்பாடி பழனிசாமியை ஒரு பொருட்டாகவே நாங்கள் கருதியது கிடையாது என்றார்.
- காங்கிரசில் குழு அமைக்கப்பட்ட பிறகு முதல் முறையாக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
- மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது.
சென்னை:
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதான கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன.
அந்த வகையில் ஆளும் கட்சியான தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடுக்கான முதல் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்குகிறது.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் இடம்பெற்று உள்ளன.
இந்த நிலையில் தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழுவை அகில இந்திய காங்கிரஸ் தலைமை அமைத்திருந்தது.
இந்த குழுவில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் எம்.என்.ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த ஐவர் குழுவினர் இன்று காலை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் முன்னாள் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.
அதன் பிறகு அண்ணா அறிவாலயம் சென்று தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இக்குழுவினர் சந்தித்து பேசினார்கள். காங்கிரசில் குழு அமைக்கப்பட்ட பிறகு முதல் முறையாக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது.
காங்கிரசில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டது போன்று தி.மு.க.விலும் விரைவில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட உள்ளது.
இன்றைய சந்திப்பின் போது கூட்டணி கட்சிகள் இணக்கமாக செயல்படுவது குறித்தும் பேசப்பட்டது. இதைத் தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பான முதல் கட்ட பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
அதன் பிறகு கூட்டணியில் உள்ள மற்ற கட்சியினரிடம் பேசுவதற்கு தி.மு.க. நேரம் ஒதுக்க உள்ளது.
- மாற்றுத்திறனாளிகளுக்கு தேவை உரிமை தானே தவிர கருணை அல்ல.
- மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை 2 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை புகைப்படக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி சக்கர நாற்காலி, மூன்று சக்கர வாகனங்களை முதலமைச்சர் வழங்கினார். இதையடுத்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* உலக மாற்றுத்திறனாளிகள் நாளையொட்டி இதயப்பூர்வமான வாழ்த்துகள்.
* உணர்ச்சிகரமான நெகிழ்ச்சிகரமான நிகழ்ச்சி, உங்களை இப்படி பார்த்துக்கொண்டிருந்தால் போதும் என தோன்றுகிறது.
* மாற்றுத்திறனாளி தோழர்களுக்கு சம வாய்ப்பு என்பதை நினைவுபடுத்தும் நாள் இது.
* தி.மு.க. ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்பு, சம உரிமை என்பது உறுதி செய்யப்பட்டது.
* உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
* ஐ.நா. அமைப்பு கூட இந்த நிகழ்ச்சியைப் பார்த்து பெருமைப்படும்.
* பெரும்பாலான மக்கள் தீண்டாமையை கைவிட்டு முற்போக்கு பாதையில் செல்லத் தொடங்கி விட்டனர்.
* கடந்த கால ஆட்சியில் மாற்றுத்திறனாளிகள் புறக்கணிக்கப்பட்டனர். தகாத வார்த்தையில் அவமரியாதை செய்யப்பட்டனர்.
* மாற்றுத்திறனாளிகளுக்கு தேவை உரிமை தானே தவிர கருணை அல்ல.
* மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக 60-க்கும் மேற்பட்ட அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
* உள்ளாட்சி அமைப்புகளில் மேலும் 9,000 மாற்றுத்திறனாளிகள் பணி அமர்த்தப்படுவர்.
* விளையாட்டுத்துறையில் மாற்றுத்திறனாளிகள் சாதிப்பதற்கு ஏற்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
* மாற்றுத்திறன் மாணவர்களுக்கான கல்வி நிதியாக 22,300 பேருக்கு ரூ.7 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை 2 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
* அரசு பணிகளில் உகந்த பணியிடங்கள் கண்டறியப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் பணிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* கலைஞர் ஆட்சியில் தான் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துறை உருவாக்கப்பட்டது.
* மாற்றுத்திறனாளிகள் மக்கள் பிரதிநிதிகளாக மாறி என்ன செய்யப் போகிறார்கள் என சிலர் நினைக்கலாம்.
* மாற்றுத்திறனாளிகளை மக்கள் பிரதிநிதிகளாக மாற்றி இருக்கிறோம்.
* சக்கர நாற்காலியில் பம்பரம் போல் சுழன்று உழைத்தவர் கலைஞர் கருணாநிதி.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோவை கூடுதல் மகளிர் கோர்ட்டில் பீளமேடு போலீசார் இ-பைலிங் வாயிலாக 50 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
- தடயங்கள் மற்றும் ரத்த பரிசோதனை, டி.என்.ஏ. பரிசோதனை முடிவுகள் கோர்ட்டுக்கு வந்த பிறகு இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.
கோவை:
கோவை விமான நிலையம் பின்புறம் கடந்த மாதம் 2-ந் தேதி காரில் காதலனுடன் அமர்ந்திருந்த கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக சதீஷ் (வயது 30), கார்த்திக் (21), குணா (20) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசாரை தாக்கி தப்ப முயன்றபோது அவர்களது காலில் துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர். கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் 3 பேரையும் ஒருநாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த நிலையில் முதல்கட்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். கோவை கூடுதல் மகளிர் கோர்ட்டில் பீளமேடு போலீசார் இ-பைலிங் வாயிலாக 50 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
பி.எஸ்.என். சட்டத்தின் கீழ் கடத்தல், கொலை மிரட்டல், கூட்டுச்சதி, கூட்டு பாலியல் பலாத்காரம், தடயங்களை மறைத்தல், கொலை முயற்சி, கொடுங்காயம் ஏற்படுத்துதல், வழிப்பறி உள்ளிட்ட 13 சட்டப்பிரிவுகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தடயங்கள் மற்றும் ரத்த பரிசோதனை, டி.என்.ஏ. பரிசோதனை முடிவுகள் கோர்ட்டுக்கு வந்த பிறகு இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. சம்பவம் நடந்து 29-வது நாளான நேற்று முன்தினம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த வழக்கு விசாரணையானது அடுத்தக் கட்டத்துக்கு சென்றுள்ளது. வழக்கு விசாரணை விரைவில் முடிந்து குற்றவாளிகளுக்கான தீர்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.
- பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
- மக்கள் மீது சிறிதேனும் அக்கறையிருந்திருந்தால் கொஞ்சமாகப் பெய்த மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்காது.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வடிகால் வசதிகள் முறையாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கப்படாததே மக்களின் இந்தத் துயரத்திற்குக் காரணம். பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
மழையால் பாதிப்பிற்கு உள்ளாகும் மக்களுக்குத் தேவையான உதவிகளைப் பாதுகாப்போடு செய்திட வேண்டும் என்று கழகத் தோழர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்தும், நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில் பணிகள் முடிக்கப்படவில்லை. மக்கள் மீது சிறிதேனும் அக்கறையிருந்திருந்தால் கொஞ்சமாகப் பெய்த மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்காது. மீதமுள்ள பருவமழைக் காலத்திலாவது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையிலும், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையிலும் மழைநீர் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வட தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்கக்கூடும்.
- 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப்பகுதிகளில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5.30 மணிக்கு மேலும் வலுவிழந்தது. வட தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (டிட்வா புயல்) மேலும் வலுவிழந்த நிலையில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்க வேண்டும்.
சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்டிருந்த புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிட அறிவுறுத்தி உள்ளது.
- சுற்றுலா வருவோர் கோவிலை ஒட்டி மலைப்பகுதியில் உள்ள பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.
- இந்து அறநிலையத்துறை மற்றும் வனத்துறை சார்பில் அருவியிலும், வழித்தடத்திலும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது திருமூர்த்தி மலை. சிறந்த சுற்றுலா தலமான இப்பகுதியில் திருமூர்த்தி அணை, மீன் காட்சியகம், பஞ்சலிங்கம் அருவி, பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய 3 கடவுள்களும் ஒரே சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்டவை அமைந்துள்ளன.
பண்டிகை நாட்கள், விடுமுறை தினங்களில் உடுமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இங்கு வந்து செல்கின்றனர். சுற்றுலா வருவோர் கோவிலை ஒட்டி மலைப்பகுதியில் உள்ள பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.
இந்தநிலையில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று இரவு முதல் லேசான தொடர் மழை பெய்து வருவதால், அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்திருப்பதால் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்து அறநிலையத்துறை மற்றும் வனத்துறை சார்பில் அருவியிலும், வழித்தடத்திலும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் இன்று காலை அருவியில் குளிக்க சென்ற ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
- தற்போது புயலின் சீற்றம், காற்றின் வேகம் குறைந்ததையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
- கடந்த 2 வாரங்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் ரூ.10 கோடி அளவுக்கு மீன்பிடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
அறந்தாங்கி:
தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு அருகே உருவான் டிட்வா புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டது.
அதேபோல் புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகை, கடலூர், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடி தொழில் முற்றிலும் முடங்கியது. கடலில் எழுந்த ராட்சத அலைகள் மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடை விதித்திருந்தது. இதன் காரணமாக கடந்த 2 வாரங்களாக விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் குறைந்த தூரத்தில் சென்று மீன்பிடித்து திரும்பினர்.
இந்தநிலையில் தற்போது புயலின் சீற்றம், காற்றின் வேகம் குறைந்ததையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இன்று முதல் அவர்கள் மீன்பிடிக்க செல்வதற்கான அனுமதி டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதை யடுத்து 14 நாட்களுக்கு பிறகு இன்று காலை புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்கு சென்றனர்.
முன்னதாக நேற்று முதலே கடலுக்கு செல்வ தற்கான முன்னேற்பாடு பணிகளை மீனவர்கள் மேற்கொண்டனர். குறிப்பாக விசைப்படகு மீனவர்கள் வலைகளை தயார் செய்தல், ஐஸ் கட்டிகளை ஏற்றுதல், டீசல் கேன்களை படகுகளில் சேமித்தல் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்திருந்தனர். இன்று காலை அவர்கள் கடலுக்கு புறப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், கட்டு மாவடி முதல் அரசங்கரை வரையிலான 32 மீனவ கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்களும் இன்று காலை கடலுக்கு சென்றனர்.
கடந்த 2 வாரங்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் ரூ.10 கோடி அளவுக்கு மீன்பிடி வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று முதல் மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளதால் மீனவர்கள், அதனை சார்ந்த தொழிலாளர்கள் என 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
இயற்கை சீற்றங்கள், இலங்கை கடற்படையினரின் சிறைபிடிப்பு சம்பவங்களால் தொடர்ந்து நெருக்கடிகளை சந்தித்து வரும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 2 வாரங்களுக்கு பிறகு அதிக மீன்பாடு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இன்று கடலுக்கு சென்றுள்ளனர்.






