என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பொங்கல் திருநாள் என்பது தமிழர்கள் அனைவருக்குமான திருவிழா.
    • தை முதல் நாளில், தமிழர்களின் இல்லங்கள்தோறும் மகிழ்ச்சி பொங்கட்டும்.

    சென்னை:

    பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பொங்கட்டும் மகிழ்ச்சி, வெல்லட்டும் தமிழ்நாடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்து மடல்.

    தை முதல்நாள் தமிழர் வாழ்வில் சிறப்புமிக்க நாள். இல்லங்களிலும் உள்ளங்களிலும் இன்பம் பொங்கிடும் பொங்கல் விழா தொடங்குகிற நன்னாள். உழைப்பைப் போற்றுகின்ற திருநாள். தமிழ்ப் பண்பாட்டை உலகம் அறிந்திடும் வகையில் மகிழ்ச்சியான கலை, பண்பாட்டு நிகழ்வுகளும் பாரம்பரியமிக்க விளையாட்டுப் போட்டிகளுமாகக் கொண்டாடப்படுகிற நாள். அந்த மகிழ்ச்சி இந்த ஆண்டில், இன்னும் கூடுதலாக இருப்பதை தமிழ்நாடு முழுவதும் காண முடிகிறது.

    கடந்த 5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் இயற்கையும் அரசு நிர்வாகமும் பருவம் தவறாமல் பணி செய்ததன் விளைவாக, விளைநிலங்கள் செழித்து, உழவர்களுடைய உழைப்பின் விளைச்சலையும், அதற்குரிய பலன்களையும் அதிகமாக்கியிருப்பதால் அவர்களின் நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட போதும், விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் துணையாகவும் அரணாகவும் நின்றது உங்களில் ஒருவனான என் தலைமையிலான திராவிட மாடல் அரசு.

    பொங்கல் திருநாள் என்பது தமிழர்கள் அனைவருக்குமான திருவிழா. அதில் சாதி பேதம் கிடையாது. மத வேறுபாடுகள் கிடையாது. ஏழை - பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வு கிடையாது. பெண் - ஆண் என்ற பாகுபாடு கிடையாது. எல்லாருக்குமான திருநாள் பொங்கல். எல்லாருக்குமான அரசு, திராவிட மாடல்.

    ஆட்சிப் பொறுப்பேற்றபோது கொரோனா இரண்டாவது பேரலையின் கடுமையான தாக்கம், அதனைத் தொடர்ந்து நிரந்தரக் கொரோனா போல தாக்கிக் கொண்டே இருக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசின் தமிழ்நாட்டின் மீதான வஞ்சகம், அவ்வப்போது எதிர்கொண்ட இயற்கைப் பேரிடர்கள் என எல்லாவற்றையும் கடந்து, தமிழ்நாடு இன்று பல்வேறு இலக்குகளில் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. அதை ஒன்றிய அரசின் துறைகள் வெளியிடும் புள்ளிவிவரங்களும் தரவரிசைகளுமே உறுதிப்படுத்துகின்றன.

    ஐந்து ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களிடமும் சென்று சேர்ந்து, அவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பதுடன், ஒட்டுமொத்த மாநிலத்தின் வளர்ச்சியையும் உறுதி செய்துள்ளது. நிரந்தரத் தடைகளை ஏற்படுத்த முயலும் சக்திகளைக் கடந்து, நிரந்தர மகிழ்ச்சியை மக்களுக்குத் தருவதுதான் திராவிட மாடல் அரசின் உன்னத நோக்கமாகும்.

    திராவிட மாடல் அரசின் திட்டங்களை நாம் பட்டியலிட்டுச் சொல்வதைவிட, அதனால் பயனடைந்து வரும் மக்களும், இத்தகைய திட்டங்களால் தமிழ்நாடு கண்டுள்ள வளர்ச்சியை உணர்ந்துள்ள பல்வேறு துறைகளின் பிரமுகர்களும் தங்களின் உள்ளத்திலிருந்து பேசுவதை, 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு', 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்', 'உலகம் உங்கள் கையில்' உள்ளிட்ட நிகழ்வுகளில் கண்டோம். இதுதான் திராவிட மாடல் அரசு கட்டி எழுப்பியுள்ள இன்றைய தமிழ்நாடு. எனினும், இது போதாது என்பதே உங்களில் ஒருவனான என்னுடைய எண்ணம். இன்னும் பல உயர்வுகளை நாம் அடைந்திட வேண்டும். அதற்கேற்ப நம் அரசு உழைத்திடும். உழைக்கின்ற மக்களின் உணர்வுகளை மதித்திடும்.

    1 கோடியே 30 இலட்சம் குடும்பத் தலைவியருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் வாயிலாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வரும் திராவிட மாடல் அரசு, தமிழ்நாட்டில் உள்ள ஏறத்தாழ 2 கோடியே 23 இலட்சம் அரிசி அட்டைதாரர்களுக்கு மூவாயிரம் ரூபாய் ரொக்கத்துடனான பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கியுள்ளது. தமிழர் திருநாளில், தமிழர்களின் வீடுகள்தோறும் மகிழ்ச்சி பொங்குகிற வகையில் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள இந்தப் பொங்கல் தொகுப்பைப் பெற்றுச் செல்லும் தாய்மார்களின் மலர்ந்த முகமும் அவர்களின் உள்ளத்திலிருந்து வெளிப்படும் நல்வாழ்த்துகளும்தான் திராவிட மாடல் ஆட்சிக்கான நற்சான்று.

    தமிழ்நாட்டின் பத்தாண்டுகால இருளை விரட்டி, விடியலைக் கொண்டு வந்த திராவிட மாடல் ஆட்சி அமைவதற்கு ஓயாது பாடுபட்டவர்கள் நம் உடன்பிறப்புகள். அந்த உடன்பிறப்புகளின் மனதிலும் மகிழ்ச்சி பொங்க வேண்டும் என்பதால்தான் கழகத்தின் மாவட்ட – ஒன்றிய – நகர – பகுதி -பேரூர் கிளைகள் சார்பில் மாநிலம் முழுவதும் பொங்கல் விழாக்கள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கழகத்தினர் நடத்துகின்ற பொங்கல் விழாக்கள் பற்றிய செய்தி ஒவ்வொன்றையும் நான் ஆர்வத்துடன் கவனித்து வருகிறேன்.

    கழகத்தினருடன் பொதுமக்களும் இந்தப் பொங்கல் விழாக்களில் பங்கேற்று, திராவிடப் பொங்கலைக் கொண்டாடி வருவதைக் கண்டு உள்ளத்தில் மகிழ்ச்சி ததும்புகிறது. பொங்கல் விழாவையொட்டித் தலைமைக் கழகம் அறிவித்தவாறு, கழகத்தினர் சார்பில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை, தொடர்ந்து நடத்தி வருவதுடன், கோலப் போட்டிகளும் மிகப் பிரம்மாண்டமான முறையிலே நடத்தப்பட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    கோலப்போட்டிகளில் பங்கேற்கும் மகளிர் வண்ணக் வண்ணக் கோலங்களை வரைந்து, சமத்துவம் பொங்கட்டும், தமிழ்நாடு வெல்லட்டும், திராவிட மாடல் அரசு தொடரட்டும் என்ற வாசகங்களை எழுதுவதும், கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், அதிலும் மகளிர் நலன் காக்கும் திட்டங்களையே வண்ணக் கோலங்களாக வரைந்து, பார்வையாளர்களின் கண்களை ஈர்த்து, நெஞ்சில் பதிய வைப்பதும் அருமையான நிகழ்வுகளாகத் தொடர்கின்றன.

    உங்களில் ஒருவனான என்னுடைய கொளத்தூர் தொகுதியிலும் சமத்துவப் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. சென்னை தெற்கு மாவட்டத்தில் துணை முதலமைச்சர் தம்பி உதயநிதி பங்கேற்ற பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றுள்ளது. மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்புடன் கழக நிர்வாகிகள் நடத்துகிற ஒவ்வொரு பொங்கல் விழாவும் தமிழ் மணத்துடனும் தமிழர் பண்பாட்டுத் திறத்துடனும் கொண்டாடப்படுகின்றன.

    கழகம் நடத்துகின்ற பொங்கல் விழாக்களில் வழங்கப்படும் அன்பான பரிசுகள், அனைத்து நிர்வாகிகளுக்கும், செயல் வீரர்களுக்கும், அல்லும் பகலும் அயராது பணியாற்றும் உடன்பிறப்புகளின் கைகளுக்கும் சென்று சேர வேண்டும் என்பதை உங்களில் ஒருவனாக உரிமையுடன் தெரிவித்திடக் கடமைப்பட்டுள்ளேன்.

    தமிழரின் தனிப்பெரும் திருவிழாவாக பொங்கலைக் கொண்டாடும் பண்பாட்டு மரபை மீட்டெடுத்ததில் திராவிட இயக்கத் தலைவர்களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோருக்கு முதன்மையான பங்கு உண்டு. மாநகரம் தொடங்கி சிறு கிராமம் வரை தமிழர்களின் மரபை உணர்த்திடும் வகையிலான கலை - இலக்கிய நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் ஆகியவற்றை நடத்துவதை திராவிட அரசியல் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகம் முக்கால் நூற்றாண்டு காலமாகக் கடைப்பிடித்து வருகிறது.

    தமிழ் இனத்தின் பண்பாட்டுப் பெருமைகளில் ஒன்றான, ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவுதல் நிகழ்வைப் பார்ப்பதற்கு உங்களில் ஒருவனான நான், உங்களால் தமிழ்நாட்டு முதலமைச்சரான நான் ஜனவரி 17-ஆம் நாள் அதாவது, தை மாதம் 3-ஆம் நாள் மதுரை அலங்காநல்லூருக்கு நேரில் செல்கிறேன். அந்த அலங்காநல்லூரில் உலகத்தரத்திலான ஏறுதழுவுதல் அரங்கத்தை நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் அவரது நூற்றாண்டு நினைவாக அமைத்துத் திறந்ததும் நமது திராவிட மாடல் அரசுதான்.

    தலைவர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட தமிழர் பண்பாட்டு நிகழ்வான சென்னை சங்கமம் நிகழ்வை, இந்த ஆண்டும் பொங்கல் விழாவின்போது கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர், நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் தங்கை கனிமொழி கருணாநிதி எம்.பி. முன்னின்று நடத்துகிறார். தமிழர்களின் கலைத்திறனைக் காட்டும் பாரம்பரியக் கலைகள் அரங்கேறும் சென்னை சங்கமம் நிகழ்வையும் உங்களில் ஒருவனான நான் ஜனவரி 14 அன்று தொடங்கி வைக்க இருக்கிறேன். சென்னை மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் சென்னை சங்கமம் 2026 கலைவிழாக்களில் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு, நம் மண்ணின் மரபார்ந்த நாட்டுப்புறக் கலைவடிவங்களையும் கலைஞர்களையும் ஆதரித்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

    தை முதல் நாளில், தமிழர்களின் இல்லங்கள்தோறும் மகிழ்ச்சி பொங்கட்டும். அந்த மகிழ்ச்சி நம் அனைவருக்கும் ஊக்கத்தையும் உத்வேகத்தையும் வழங்கட்டும். சூரியனைப் போற்றும் பொங்கல் நன்னாள், உடன்பிறப்புகளின் உழைப்பினால் கழகத்திற்கு வெற்றிப் பொங்கலாக அமையட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! என கூறியுள்ளார். 

    • தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழைக்கு வாய்ப்பு.
    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி, அரியலூர், கரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் மழைக்கு வாய்ப்புள்ளது.

    • மீனவர்களின் ஒரு விசைபடகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
    • மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.

    ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் மீனவர்களின் ஒரு விசைபடகையும் பறிமுதல் செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே, மீனவர்கள் கைதான சம்பவம் மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்காக பயணிகளின் வசதிக்காக வழக்கமான அரசு பஸ்களோடு, சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.
    • இதுவரை 2 லட்சத்து 56 ஆயிரத்து 977 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    சென்னை:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வெளியூர்களில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊர் சென்று பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

    சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்காக பயணிகளின் வசதிக்காக வழக்கமான அரசு பஸ்களோடு, சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.

    அந்த வகையில் கடந்த 9-ந் தேதி முதல் நேற்று வரை அதாவது 4 நாட்களில் மொத்தம் 11 ஆயிரத்து 372 பஸ்கள் இயக்கப்பட்டதில் 4 லட்சத்து 88 ஆயிரத்து 780 பயணிகள் பயணம் செய்துள்ளனர். அத்துடன் இதுவரை 2 லட்சத்து 56 ஆயிரத்து 977 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    • இந்த கட்டண சலுகை கியூ.ஆர். கோடு மூலம் கட்டணம் செலுத்துபவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது.
    • ஆர்-வாலட் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் 3 சதவீதம் திரும்ப பெறும் நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை.

    ரெயில்வேயில் முன்பு தனித்தனியாக இருந்த ஐ.ஆர்.சி.டி.சி , யூ.டி.எஸ், என்.டி.இ.எஸ் போன்ற பல செயலிகளின் சேவைகளை ஒருங்கிணைத்து ரெயில்வே அமைச்சகம் 'ரெயில் ஒன்' என்ற செயலியை அறிமுகம் செய்தது.

    இந்த செயலியின் மூலம் முன்பதிவு டிக்கெட், முன்பதிவில்லாத டிக்கெட், பிளாட்பார டிக்கெட், ரெயில் வரும் நேரம், புறப்படும் நேரம் ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடியும். ரெயில்வே துறை மற்றும் ரெயில் நிலையங்கள், ரெயில் பெட்டிகளில் உள்ள குறைகள் குறித்து புகார் தெரிவிக்க முடியும். சீசன் டிக்கெட்டும் இந்த செயலி மூலம் பெற முடியும்.

    இந்நிலையில் ரெயில் ஒன் செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3 சதவீத கட்டண சலுகையை ரெயில்வே அறிவித்துள்ளது. அதாவது, ரெயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர் கூட்டத்தில் முண்டியடித்து செல்வதற்கு பதிலாக செல்போன் செயலி மூலம் டிக்கெட் எடுப்பதை ஊக்குவிக்க இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த கட்டண சலுகை கியூ.ஆர். கோடு மூலம் கட்டணம் செலுத்துபவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது முன்பதிவில்லாத சாதாரண டிக்கெட்டுகளை ரெயில் ஒன் செயலி மூலம் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துபவர்கள் அனைவருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    ஆர்-வாலட் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் 3 சதவீதம் திரும்ப பெறும் நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை. எனவே, ரெயில் ஒன் செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுக்கும் அனைத்து பயணிகளுக்கும் நாளை முதல் வருகிற ஜூலை மாதம் 14-ந் தேதி வரை 3 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

    தென்னக ரெயில்வே மண்டலம் தற்போது 29.5 சதவீதம் செல்போன் செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் வழங்கி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே சாதாரண டிக்கெட்டுகளுக்கு யூ.டி.எஸ். செயலி பயன்படுத்துபவர்கள் ரெயில் ஒன் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் டிக்கெட் எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதனால், செல்போனில் டிக்கெட் பதிவு செய்தும், முழுமையடையாமலும், அது குறித்த தகவல் கிடைக்கப்பெறாததாலும், அபராதம் செலுத்துவதில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

    காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தம்.

    தமிழ்நாட்டில் முக்கியமான பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்வெட்டு ஏற்படும் என TANGEDCO அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    ஈரோடு

    பேரோடு, குமிளம்பரப்பூர், கொங்கம்பாளையம், மேட்டையன்காடு, கொளத்துப்பாளையம், சடையம்பாளையம், தாயர்பாளையம், ஆட்டையாம்பாளையம், பள்ளிபாளையம், புதுவலசு கங்காபுரம், டெக்ஸ்வேலி, மொக்கையம்பாளையம், சூரிப்பாறை, காரட்

    கோவை

    பெத்தாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைப்பிரிவு, ஒன்னிபாளையம்ரோடு, அறிவொளி நகர், சின்னமடம்பாளையம், மடம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சமநாயக்கன்பாளையம் சாலை, கண்ணர்பாளையம் சாலை

    கிருஷ்ணகிரி

    பாகலூர், ஜீமங்கலம், உலியாளம், நல்லூர், பெலத்தூர், தின்னப்பள்ளி, சூடபுரம், அலசப்பள்ளி, பி.முத்துகானப்பள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியமங்கலம், தும்மனப்பள்ளி, படுதேப்பள்ளி, பலவனப்பள்ளி, முதலி, முதுகுருக்கி, நரிகானாபுரம், பேரிகை, அதிமுக, செட்டிப்பள்ளி, நரசப்பள்ளி, பன்னப்பள்ளி, சிகனப்பள்ளி, நெரிகம், கெஜாலங்கோட்டை, தண்ணீர்குண்டலப்பள்ளி, எழுவப்பள்ளி, கே.என்.தொட்டி, பி.எஸ்.திம்மசந்திரம்

    கரூர்

    புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குபாளையம், சாணப்பிராட்டி, எஸ்.வெள்ளாளபட்டி, நற்கட்டியூர், தோளிர் பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு

    தேனி

    கம்பம், கூடலூர், பெரியார், உத்தமபுரம், துர்க்கையம்மன்கோவில், ஊத்துகாடு

    தருமபுரி

    பொம்மிடி, அஜம்பட்டி, வேப்பிலைப்பட்டி, வாசிகவுண்டனூர், தாளநத்தம், திப்பிரெடிஹள்ளி, வத்தல்மலை, பண்டாரசெட்டிப்பட்டி, சொரக்கப்பட்டி

    அதன்படி, காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    • திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் நாளை முதல் நடைபெறுகிறது.
    • திருச்சியை அடுத்து அரியலூர், பெரம்பலூர், முசுறி, குளித்தலை மணப்பாறை வழியாக தொடர்கிறது.

    ஈஷா மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு, தென்கைலாய பக்திப் பேரவை சார்பில் 'ஆதியோகி ரத யாத்திரை' தமிழ்நாடு முழுவதும் உற்சாகத்துடன் நடைபெற்று வருகிறது. அதன்படி ஆதியோகி ரத யாத்திரை திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வரும் 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை மொத்தம் 3 நாட்கள் நடைபெற உள்ளது.

    இதுதொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு திருச்சி ஃபிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது. இதில் தென்கைலாய பக்தி பேரவையின் அடியார்கள் மருத்துவர் ராஜ்பிரகாஷ், பாலசுப்ரமணியன் மற்றும் ராகுல் ஆகியோர் பங்கேற்று பேசினர்.  

    ஆதியோகி ரத யாத்திரை

    ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாத பக்தர்கள் தங்களது ஊர்களிலேயே தரிசனம் செய்வதற்காகவும் இந்த ரத யாத்திரை நடத்தப்படுகிறது. 

    ஆதீனங்களின் அருளாசியோடு…

    தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் பயணிக்கும் 4 ஆதியோகி ரதங்களை தமிழ்நாட்டின் பாரம்பரிய ஆதீனங்களின் குருமகாசந்நிதானங்கள் தொடங்கி வைத்து அவர்களின் அருளாசியினை வழங்கியுள்ளனர். அந்த வகையில் தமிழகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு மண்டலத்திற்கான ஆதியோகி ரத யாத்திரையை, கோவையில் உள்ள ஆதியோகி வளாகத்தில் கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி, தவத்திரு பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரும், தவத்திரு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளும் தொடங்கி வைத்தனர். 

    தெற்கு மண்டலத்திற்கான ரத யாத்திரையை டிசம்பர் 23-ம் தேதி, மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார்.

    அதேபோன்று வடக்கு மண்டலத்திற்கான ரத யாத்திரையை, காஞ்சிபுரத்தில் நடைபெற்ற விழாவில், தொண்டை மண்டல ஆதீனத்தின் 234-வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல ஞானப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் கடந்த டிசம்பர் 26-ம் தேதி தொடங்கி வைத்தார்.



    பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாக!

    இந்தாண்டு ஆதியோகி ரத யாத்திரை தமிழ்நாடு முழுவதும் உள்ள 250-க்கும் மேற்பட்ட பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாக நடைபெறுகிறது. இதில் குறிப்பாக திருச்சியை உள்ளடக்கிய கிழக்கு மண்டலப் பகுதிகளில் அதிக அளவில் அமைந்துள்ள பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாக இந்த யாத்திரை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

    திருச்சியில்…

    ஆதியோகி ரத யாத்திரை திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் நாளை முதல் நடைபெற உள்ளது. நாளை ஜன.13-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் மற்றும் ஆத்மநாதசுவாமி ஆகிய பாடல் பெற்ற சிவத்தலங்கள் வழியாக ரதம் பயணிக்கிறது. அதனைத் தொடர்ந்து திருச்சிக்கு ஜன 13-ம் தேதி இரவு ஆதியோகி ரதம் வந்தடைய உள்ளது. பின்பு ஜன.17 முதல் 19 வரை திருச்சி மற்றும் புறநகர் பகுதிகளில் ரத யாத்திரை நடைபெற உள்ளது.

    திருச்சி மாநகரை பொறுத்த வரையில் உக்கிரகாளியம்மன் கோவில், சாஸ்திரி ரோடு, சத்திரம் பேருந்து நிலையம், திருவானைக்காவல், டோல்கேட், உத்தமர் கோவில் வழியாக ரதம் பயணிக்க உள்ளது. பின்பு சமயபுரம், வயலூர், திருவெறும்பூர் உள்ளிட்ட புறநகர் மற்றும் ஊரகப் பகுதிகளிலும் ரத யாத்திரை நடைபெற உள்ளது. திருச்சியை அடுத்து அரியலூர், பெரம்பலூர், முசுறி, குளித்தலை மணப்பாறை வழியாக ஆதியோகி ரத யாத்திரை தொடர உள்ளது. 

    கிழக்கு மண்டலத்தில் இதுவரை...

    கிழக்கு மண்டலத்தைப் பொறுத்த வரையில் ஆதியோகி ரதம் கடந்த 23-ஆம் தேதி மயிலாடுதுறை வந்தடைந்தது. அதன் பின்பு காரைக்கால், நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், கும்பகோணம், தஞ்சாவூர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் அறந்தாங்கி ஆகிய நகரங்களை கடந்து வந்துள்ளது.

    இதில் குறிப்பாக மயிலாடுதுறை மாயூரநாதர், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர், திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர், திருவாரூர் தியாகராஜர், கும்பகோணம் கும்பேஸ்வரர் மற்றும் தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாக இந்த ரத யாத்திரை நடைபெற்று தற்போது திருச்சிக்கு வரவுள்ளது. 

    திருச்சியில் மஹாசிவராத்திரி விழா!

    கோவையில் நடைபெறும் ஈஷா மஹாசிவராத்திரி விழா தமிழகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரலை செய்யப்பட உள்ளது. அந்த வகையில் திருச்சி உறையூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ விக்னேஷ் பப்ளிக் பள்ளி வளாகத்தில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை செய்யப்பட்டு கொண்டாடப்பட உள்ளது. 



    ஆதியோகி ரதம்

    ஆதியோகி ரதங்கள், 7 அடி உயரமுடைய ஆதியோகி திருவுருவச் சிலையுடன் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைக்கப்பட்ட மொத்தம் 4 ரதங்கள், தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் யாத்திரை மேற்கொண்டு வருகின்றன. இந்த ரதங்கள், மஹாசிவராத்திரி வரையிலான இரண்டு மாத காலத்தில், 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் 250-க்கும் மேற்பட்ட பாடல் பெற்ற சிவத்தலங்கள் வழியாக சுமார் 30,000 கிலோமீட்டர் பயணிக்க உள்ளன.

    ஆதியோகி ரதங்கள் பயணிக்கும் இடங்களில், அங்குள்ள ஆதீனங்கள், முக்கிய பிரமுகர்கள், சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் பலர் சிறப்பான வரவேற்பை வழங்கி வருகின்றனர். ஆதியோகிக்கு விருப்பமுள்ள மக்கள் தீபாராதனை, மலர்கள், பழங்கள் மற்றும் நைவேத்தியங்களை அர்ப்பணிக்கலாம்.

    சிவ யாத்திரை

    இதனுடன், 'சிவ யாத்திரை' எனும் பாதயாத்திரையை சிவாங்கா பக்தர்கள் ஆண்டுதோறும் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் கர்நாடகாவிலிருந்து, ஆதியோகி சிவன் திருவுருவம் தாங்கிய தேர்களை இழுத்தபடி அவர்கள் வருகின்றனர். அத்துடன், 63 நாயன்மார்களின் திருவுருவங்களைத் தாங்கிய ஒரு தேருடன் அடியார்கள் பாதயாத்திரையாக கோவை ஆதியோகி வளாகத்திற்கு வருகை தர உள்ளனர்.

    • ஏற்கனவே பொங்கல் பரிசு தொகுப்பை உங்களது மகன் சூர்யா வாங்கி சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
    • சம்பவம் தொடர்பாக ராசுக்குட்டி ஆலங்குளம் போலீசில் புகார் அளித்தார்.

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள துத்திகுளம் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் லிங்கத் துரை. இவரது மகன் ரமேஷ் (வயது 42). கட்டிட தொழிலாளி. இவரது முதல் மனைவி மூக்கம்மாள். இவர்களுக்கு சூர்யா (17) என்ற மகன் உள்ளார். மூக்கம்மாள் கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார்.

    இதனிடையே மகாலட்சுமி (35) என்பவரை ரமேஷ் 2-வதாக திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர்கள் தனியாக வசித்து வருகின்றனர். சூர்யா தனது தாத்தா லிங்கத்துரையுடன் தனிவீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று ரமேஷ் தனது 2-வது மனைவி மகாலட்சுமியுடன் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்கு சென்று டோக்கனை கொடுத்து விற்பனையாளர் ராசுக் குட்டியிடம் பரிசு தொகுப்பை கேட்டுள்ளார். அப்போது, ஏற்கனவே பொங்கல் பரிசு தொகுப்பை உங்களது மகன் சூர்யா வாங்கி சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் மற்றும் மகாலட்சுமி ஆகியோர் விற்பனையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் ஆத்திரமடைந்த அவர்கள் 2பேரும் ரேஷன் கடையிலிருந்த கைரேகை வைக்கும் எந்திரத்தை கையில் எடுத்தனர்.

    மேலும் இந்த எந்திரம் இருந்தால் தானே எல்லாருக்கும் பணம் கொடுப்பாய் என்று கூறி அவதூறாக பேசிவிட்டு எந்திரத்தை தங்களது வீட்டுக்கு தூக்கிச் சென்றுவிட்டனர். பின்னர் சிறிதுநேரம் கழித்து எந்திரத்தை கொண்டு வந்து கடையில் கொடுத்த ரமேஷ், கடை ஊழியர் ராசுகுட்டிக்கு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றார்.

    இந்த சம்பவம் தொடர்பாக ராசுக்குட்டி ஆலங்குளம் போலீசில் புகார் அளித்த நிலையில், இன்ஸ்பெக்டர் ஆடிவேல் விசாரணை நடத்தி அரசு ஊழியரை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து, எந்திரத்தை தூக்கி சென்றதாக மகாலட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ரமேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • தேர்தல் நேரத்தில் இந்த மாதிரி பல யூகங்கள், பேச்சுக்கள் வரத்தான் செய்யும்.
    • தி.மு.க.வுடன் கூட்டணி இருக்குமா என்பதை தற்போதைய நிலையில் உறுதிப்படுத்த முடியாது.

    சென்னை:

    டாக்டர் அன்புமணி தரப்பு பா.ம.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணியை உறுதிப்படுத்தி உள்ளது. எனவே டாக்டர் ராமதாஸ் தரப்பு பா.ம.க. எந்த பக்கம் செல்லும் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் உள்ளது.

    தி.மு.க.வுடனும், த.வெ.க.வுடனும் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் அ.தி.மு.க. அணியில் இணைப்பதற்கான முயற்சியும் நடைபெறுகிறது என்ற பேச்சு அடிபடுகிறது.

    இது பற்றி சென்னையில் முகாமிட்டு உள்ள டாக்டர் ராமதாசிடம் இன்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் கூறியதாவது:-

    தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? என்கிறீர்கள். தேர்தல் நேரத்தில் இந்த மாதிரி பல யூகங்கள், பேச்சுக்கள் வரத்தான் செய்யும். இதில் உண்மையும் இருக்கும். பொய்யும் இருக்கும். தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் இல்லை என்று இன்னும் நான் முடிவு எடுக்கவில்லை.

    விரைவில் முடிவு எடுப்போம். நாட்களும் போய்க்கொண்டுதான் இருக்கிறது. புதிய கூட்டணிக்கு செல்வோமா என்பதை பொறுத்தவரை தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம். நடக்காமலும் போகலாம். புதிய கூட்டணி ஏற்படுமா என்பதற்கு பொறுத்து இருந்து பதில் சொல்கிறேன்.

    தி.மு.க.வுடன் கூட்டணி இருக்குமா என்பதை தற்போதைய நிலையில் உறுதிப்படுத்த முடியாது என்றார்.

    டாக்டர் ராமதாஸ் சென்னையில் முகாமிட்டு உள்ளார். அவரை கூட்டணியில் இழுப்பதற்கு பல கட்சிகளை சேர்ந்தவர்களும் ரகசியமாக பேசி வருவதாக கூறப்படுகிறது.

    • திமுக ஆட்சியில் காவல்துறை முழுமையாக செயலிழந்துவிட்டதை நிரூபிக்கிறது.
    • அரசு மருத்துவமனையில் கொலை நடக்கிறது என்பது, காவல்துறையின் தோல்வி மட்டும் அல்ல. திமுக அரசின் நிர்வாகத் தோல்வி.

    முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னையின் முக்கிய அரசு மருத்துவமனையான, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை வளாகத்திலேயே, பல்வேறு குற்ற வழக்குகள் கொண்ட ஆதி என்ற நபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தலைநகரில்,அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்துள்ள இந்தப் படுகொலை, திமுக ஆட்சியில் காவல்துறை முழுமையாக செயலிழந்துவிட்டதை நிரூபிக்கிறது.

    தலைநகரின் மையப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கொலை நடக்கிறது என்பது, காவல்துறையின் தோல்வி மட்டும் அல்ல. திமுக அரசின் நிர்வாகத் தோல்வி. கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தில் கொலை நடைபெறாத நாட்களை, விரல் விட்டு எண்ணி விடலாம். எதிர்க்கட்சியினரைப் பழி வாங்க மட்டுமே காவல்துறையைப் பயன்படுத்தி, தமிழகக் காவல்துறையை முற்றிலுமாக முடக்கி வைத்திருப்பதுதான் திமுக அரசின் ஒரே சாதனை.

    வயது முதிர்ந்தவர்கள், பெண்கள், குழந்தைகள், மாணவ மாணவியர், இளைஞர்கள் என, யாருமே திமுக ஆட்சியில் பாதுகாப்பாக உணரவில்லை. அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு வழங்க முடியாத இந்த திமுக ஆட்சியில், பொதுமக்கள் எங்கே பாதுகாப்பாக இருப்பது?

    துண்டுச்சீட்டில் யாரோ எழுதிக் கொடுப்பதை, திமுக அரசின் சாதனை என்று மேடையில் வாசிப்பது மட்டும்தான் முதலமைச்சரின் பணி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் முக ஸ்டாலின். மாநில அரசின் முதல் பணியான சட்டம், ஒழுங்கைக் காப்பாற்றத் தெரியாமல், மேடைகளில் ஏறிப் பொய் சொல்ல அசிங்கமாக இல்லையா? என கூறினார்.

    • இன்றைக்கு எத்தனையோ வறுமை ஒழிப்பு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
    • கேரளாவில் மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டத்தை நடத்த அங்குள்ள அரசு தயாராகிக் கொண்டிருக்கிறது.

    நாகர்கோவில்:

    அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அண்ணாவின் பெயரை சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அதை மறந்துவிட்டு, மதுரையில் அண்ணா பெயரில் உள்ள பூங்கா பெயரை மாற்றவுள்ளது என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். தி.மு.க.வுக்கு 5 முழக்கம் இருக்கிறது. அதில் 'அண்ணா வழியில் அயராது உழைப்போம்' என்ற முழக்கமும் ஒன்று.

    அண்ணா எதை கற்றுத்தந்தாரோ, எதை முன் வைத்தாரோ, அதை இத்தனை ஆண்டுகளாக தி.மு.க. முன்வைத்து வருகிறது. 'ஆதிக்கமற்ற சமுதாயம் படைத்தே தீருவோம்' என்பது அண்ணாவின் 2-வது முழக்கம். அதனால் தான் ஒரு ஆதிக்க சமூகத்தை கட்டமைக்க நினைக்கின்ற பாசிச சிந்தனை கொண்ட பா.ஜ.க. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து வருகிறார்.

    அதே போன்று 'இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்' என்று சொன்னோம். இன்றைக்கும் நம்முடைய கொள்கையில் கடுகளவு கூட விட்டுக்கொடுக்காமல் இந்தி திணிப்பை எதிர்க்கிறோம். அதேபோன்று 'வன்முறை தவிர்த்து வறுமை ஒழிப்போம்' என்று சொன்னோம். இன்றைக்கு எத்தனையோ வறுமை ஒழிப்பு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டை பார்த்து மற்ற மாநிலங்கள் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் கொண்டு வருகிற அளவுக்கு அந்த முழக்கத்தை நிறைவேற்றி உள்ளோம்.

    அதேபோன்று 'மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி' என்ற தத்துவத்திலும் உறுதியாக இந்த இயக்கம் நின்று கொண்டிருக்கிறது. ஆனால் தற்போது அந்த தத்துவத்திற்கு முற்றிலும் எதிராக செயல்படும், மாநில சுயாட்சிகளை, மாநில உரிமைகளை, மாநிலத்திற்கான நிதி ஆதாரங்களை தராமல் வஞ்சகம் செய்யும் பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்து அவர்களின் இசைக்கெல்லாம் ஆடுகின்ற ஒரு கட்சியாக அ.தி.மு.க. உள்ளது. சொந்தக் கட்சியில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை, பஞ்சாயத்தை தீர்ப்பதற்கு டெல்லியில் போய் அமித்ஷாவிடம் முழங்காலிடுகிறார்கள். இந்த கூத்தையெல்லாம் செய்பவர்கள் இந்தியை பற்றி பேசுவதற்கு தகுதியில்லை.

    தி.மு.க. என்றைக்கும் தன்னுடைய முதல் முழக்கமான 'அண்ணா வழியில் அயராது உழைப்போம்' என்ற தத்துவத்திலிருந்து கடுகளவும் வழிதவறாது. 23-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வர உள்ளார். அவரது வருகையால் தமிழக அரசியலில் கண்டிப்பாக மாற்றம் இருக்காது. அவர் இந்த முறையும் 100 சதவீதம் வெறுங்கையோடு தான் வரப்போகிறார்.

    தமிழ்நாட்டு மக்களுக்குத் தர வேண்டிய நிதியை அவர் தரப்போவதில்லை. அதை அவர் முடிவோடு வைத்திருக்கிறார். கேரளாவில் மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டத்தை நடத்த அங்குள்ள அரசு தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த முறையும் கண்டிப்பாக தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கக்கூடிய திட்டங்களையோ, நமக்கு சேர வேண்டிய நிதியையோ அவர் கொண்டு வரப்போவதில்லை.

    வெறும் வார்த்தை ஜாலங்களோடு வரப்போகிறார். எப்படியாவது குட்டையை குழப்பி மீன் பிடிக்க முடியுமா என்று சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த குட்டை குழம்பாது, மீன் பிடிக்கவும் அவர்களால் முடியாது. பா.ஜ.க.வின் முகத்திரை வெகு விரைவில் கிளிய இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். அப்போது பராசக்தி படத்தின் விமர்சனம் எப்படி இருக்கிறது? என்று கேட்டபோது, நான் சினிமா பார்க்கவில்லை என கூறினார்.

    • தொடர் விடுமுறை நாட்களில் கன்னியாகுமரிக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
    • கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டு மாலை 5 மணி வரை இயக்கப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவில் ஒரு பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. அவற்றை இணைக்கும் வகையில் கண்ணாடி பாலமும் அமைக்கப்பட்டிருக்கிறது.

    கண்ணாடி பாலம் அமைப்பதற்கு முன்பே, கடல் நடுவில் இருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று சுற்றுலா பயணிகள் பார்த்து வருவார்கள். இந்த நிலையில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டபிறகு, படகில் பயணம் செய்ய அதிகளவிலான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

    சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் சென்று, பின்பு அங்கிருந்து கண்ணாடி பாலம் வழியாக நடந்து திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் வகையிலேயே தற்போது இருக்கிறது. இதனால் தற்போது திருவள்ளுவர் சிலைக்கு நேராக படகுகள் இயக்கப்படவில்லை.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகள் சென்றுவர தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்ச்சியாக படகுகளை இயக்கப்படுகிறது.

    இந்தநிலையில் போகிப் பண்டிகை, பொங்கல் திருநாள், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல், திருவள்ளுவர் தினம் என பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை வருகிறது. இந்த தொடர் விடுமுறை நாட்களில் கன்னியாகுமரிக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    அவர்கள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி பாலத்தை படகில் சென்று பார்க்க ஆர்வம் காட்டுவார்கள். அதனை கருத்தில் கொண்டு வருகிற 15-ந் தேதி முதல் 17-ந்தேதி வரையிலான 3 நாட்களும் படகு போக்குவரத்து 3 மணி நேரம் அதிகரிக்கப்படுகிறது.

    அதன்படி வழக்கமாக காலை 8 மணிக்கு தொடங்கக்கூடிய படகு போக்குவரத்து, இந்த 3 நாட்களும் 2 மணி நேரத்துக்கு முன்னதாக காலை 6 மணிக்கே தொடங்கப்படுகிறது. அதேபோல் மாலையில் வழக்கமாக 4 மணியுடன் நிறுத்தப்படும் படகு போக்குவரத்து, கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டு மாலை 5 மணி வரை இயக்கப்படும் என்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

    ×