என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aloor Shanavas"

    • ஆதிக்கவாதிகளின் கூடாரமே காங்கிரஸ்' என்று அறச்சீற்றத்துடன் பெரியார் வெளியேறி, சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிறது.
    • 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் பெற்ற கடனை விட, 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் பெற்ற கடன் அதிகம் என்று தான் காங்கிரஸ்காரர்கள் ஒப்பிட வேண்டும்.

    கடந்த சிலநாட்களாகவே காங்கிரஸின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் சிலர் பாஜகவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இது உள்கட்சி மோதலுக்கு வழிவகுத்து வருகிறது. சசி தரூர், திக்விஜய சிங் ஆகியோரை தொடர்ந்து தற்போது காங்கிரஸின் முக்கிய நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தியும் அந்த வரிசையில் இணைந்துள்ளார். கனிமொழி பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக, உத்தரப்பிரதேசத்தை விட தமிழ்நாட்டின் கடன்நிலுவை தொகை அதிகமாக இருக்கிறது என அவர் கூறிய கருத்து தற்போது இந்தியா கூட்டணிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இவரது கருத்து தொடர்பாக ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் பிரவீன் சக்ரவர்த்தி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸும் தனது பதிவை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், 

    'காங்கிரஸ் இல்லாத இந்தியா' என்று சொல்லி அதை செயல்படுத்தத் துடிக்கும் பாஜக தான், ஒவ்வொரு காங்கிரஸ்காரருக்கும் எதிரியாக இருக்க முடியும். ஆனால், ஒரு காங்கிரஸ்காரரோ, 'காங்கிரசுடன் துணை நிற்கும் தமிழ்நாட்டின் திராவிட மாடலை, காங்கிரசை அழிக்க முயலும் உ.பி.யின் புல்டோசர் மாடலோடு' ஒப்பிடுகிறார்.

    60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் பெற்ற கடனை விட, 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் பெற்ற கடன் அதிகம் என்று தான் காங்கிரஸ்காரர்கள் ஒப்பிட வேண்டும். ஆனால், ஒரு காங்கிரஸ்காரரோ, தமிழ்நாட்டின் கடனை உ.பி.யுடன் ஒப்பிடுகிறார். தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறித்து, அதிகாரங்களை குறைத்து, சட்டமன்றத்தை அவமதிக்கும் மத்திய அரசை நோக்கித்தான், காங்கிரஸ்காரர்கள் கேள்வி எழுப்ப வேண்டும். ஆனால், ஒரு காங்கிரஸ்காரரோ, நெருப்பாற்றில் நீந்தி நலத்திட்டங்களை செயல்படுத்தும் மாநில அரசை நோக்கி கேள்வி கேட்கிறார்.

    'காங்கிரசுடன் எந்தக் கட்சியும் அணி சேர்ந்து விடக்கூடாது' என்பதுவே பாஜகவின் எண்ணம். அதை முறியடிப்பது தான் ஒவ்வொரு காங்கிரஸ்காரரின் கடமையாக இருக்க முடியும். ஆனால், சில காங்கிரஸ்காரர்களோ, இங்குள்ள வலிமையான கூட்டணியை சிதைக்கத் துடிக்கின்றனர்.

    'ஆதிக்கவாதிகளின் கூடாரமே காங்கிரஸ்' என்று அறச்சீற்றத்துடன் பெரியார் வெளியேறி, சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிறது. ஒரு நூற்றாண்டே ஆனாலும், காங்கிரசுக்குள் அந்தச் சிந்தனை கொண்டோர் இன்னும் இருக்கிறார்கள் என்பது அவ்வப்போது வெளிப்படுகிறது. ராகுல் காந்தி பெரியார் வழியில் செல்கிறார். ஆனால், காங்கிரசுக்கு உள்ளிருந்தே சிலர் RSS வழியில் பயணிப்பது தான், காங்கிரஸ் சந்திக்கும் மிகப்பெரும் சிக்கல்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    ×