என் மலர்
நீங்கள் தேடியது "TNPWAA"
- வலதுசாரிகளின் வெறுப்பு அரசியலால் இருள் சூழ்ந்துள்ள கொடுங்காலத்தில், முற்போக்காளர்கள் முகாமிலிருந்தும் புரிதலின்றி இது போன்ற வெறுப்புப் பேச்சுக்கள் வருவது மிகவும் ஆபத்தானது
- பாரதி குறித்தான பாதி உண்மைகளை வைத்துக்கொண்டு, பாரதி எனும் பேருருவத்தை மதிப்பிடுவது பகுத்தறிவு செயல் அல்ல.
சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ்-சின் 'விஜில்' அமைப்பு சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா மற்றும் வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பாரதியார் குறித்தும், பெரியார் குறித்தும் பேசியிருந்தார். "பார்ப்பனர் என்ற கடப்பாரையை கொண்டு திராவிடத்தை இடித்து தள்ளுவேன்" என்று கூறி, பாரதியார் போன்றவர்களின் சிந்தனைகளை முன்னிறுத்தினார். சீமானின் இந்தப் பேச்சை துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி எல்லாம் பாராட்டி இருந்தார்.
இந்நிலையில் சீமானின் இந்தப் பேச்சு தொடர்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில் அரைகுறை உண்மைகள் ஆபத்தானவை எனக்குறிப்பிட்டு, சீமான் போன்றவர்களை வலதுசாரிகள் திட்டமிட்டு தங்களுக்காக பயன்படுத்தும் போது, அதை புரிந்துகொள்ளாமல் உணர்ச்சிவயப்பட்டு வார்த்தைகளைக் கொட்டி வலதுசாரிகளுக்கு இரையாகக்கூடாது எனத் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக த.மு.எ.க.ச வெளியிட்டுள்ள பதிவில்,
"பாரதியார், காந்தியடிகள், நேரு உள்ளிட்ட இந்நாட்டின் பல ஆளுமைகளை அவர்கள் பிறந்த நாள், நினைவு நாள் வரும் போது போற்றுகின்ற செயல்கள் எவ்வளவு நடைபெறுகிறதோ, அதே அளவு அவர்களை தூற்றுவதற்கும் ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது. பொது வாழ்வில் இருந்தவர்கள் எந்த விமர்சனத்திற்கும் அப்பாற்பட்டவர்கள் அல்ல. கடந்த காலம் போல் வலதுசாரிகள் இந்த ஆளுமைகளை விமர்சித்தால் நமக்கு சிக்கலேதும் இல்லை. அது நாம் சரியாக செயல்படுகிறோம் என்பதன் பொருள் ஆகும். ஆனால் முற்போக்காளர்களாக அறியப்பட்ட சில பெரியாரியவாதிகளின் இப்படிப்பட்ட விமர்சனங்கள் சரியான செயல் ஆகாது.
எந்த ஆளுமைகளையும் அவர்கள் வாழ்ந்த காலத்தோடு பொருத்திப்பார்ப்பதும், காலவரிசையோடு அவர்கள் செயலை மதிப்பிடுவதுமே சரியான செயலாகும். தியாகராஜர் இன்றைக்கு உயர்சாதி சார்ந்த இசையின் குறியீடாக இருக்கிறார். ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் மன்னரின் அதிகாரத்திற்கு எதிராகவே தனது பக்தி சார்ந்த இசையை பயன்படுத்தினார். கம்பர் இராமாயணத்தை எழுதினார். ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த சோழப் பேரசும், அதன் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கும் எதிரான மனோநிலையோடே தான் விரும்பும் தேசத்தை கற்பனையில் 'அயோத்தி' என்று எழுதிப்பார்த்தார். அப்படி நம் சமூகத்தில் பாரதி அவர் காலத்தில் எழுதிய எழுத்துக்களில் சில பொருத்தமாக இல்லாமல் இருந்திருக்கலாம். அதையும் அவர் தன் வாழ்நாளிலேயே சரிசெய்து ஒரு உன்னத இடத்திற்கு வந்து மகாகவியாக பரிணாமம் பெற்றிருக்கிறார்.
பாரதியின் எழுத்துக்களில் ரஷ்ய புரட்சி ஏற்பட்ட சூழலில் முதலில் லெனின்-ஐ விமர்சித்தார். காரணம் 100ஆண்டுகளுக்கு முன்பு பல்லாயிரம் மையில் தாண்டியுள்ள ரஷ்யாவில் என்ன நடக்கிறது என்ற செய்தி அறிந்து ஒரு எழுத்தாளர் தனக்குத் தோன்றியதை எழுதினார். ஆனால் அதன் பின் ரஷ்ய சூழலை தீர விசாரித்து அதே லெனின்-ஐ தன் இறுதிக் காலம் வரை போற்றிப் புகழ்ந்தார் பாரதி. சோவியத், போல்ஷெவிக் போன்ற சொற்களுக்கு தமிழ்ச் சொற்களை தன் வாழ்நாளிலேயே உருவாக்கிப் பார்த்தார்.
பாவேந்தரை பாரதி முதன் முதலில் பார்த்தது ஒரு ஆன்மீக கதாகாலஷேப நிகழ்ச்சியில் தான். தொடக்கத்தில் பாவேந்தர் முழு ஆன்மீக வாதியாகத்தான் தன் படைப்புகளை முன் வைத்தார். ஆனால் அதை வைத்து பாவேந்தரை இன்றைக்கு மதிப்பிட முடியுமா? தன்னை பாரதிதாசன் என்று அறிவித்துக் கொண்ட பாவேந்தரை எந்த விமர்சனமும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளும் இவர்கள், பாரதியை மட்டும் விமர்சிப்பது என்பது பாரதியை காலவரிசையோடு பொருத்திப் பார்க்காததன் வெளிப்பாடு ஆகும். பாரதி வாழ்ந்த காலத்தில் சொந்த சாதியால் ஒதுக்கப்பட்டவர். ஆனால் இன்று அவர் பிறந்த சாதியை மட்டும் வைத்துக்கொண்டு அவர் மீது வன்மம் காட்டுவதும் பிறப்பின் அடிப்படையிலான பேதமே ஆகும்.
பொய்யயை விட மிகவும் ஆபத்தானது பாதி உண்மை. பாரதி குறித்தான பாதி உண்மைகளை வைத்துக்கொண்டு, பாரதி எனும் பேருருவத்தை மதிப்பிடுவது பகுத்தறிவு செயல் அல்ல. வலதுசாரிகள் எல்லா ஆளுமைகளையும் தங்களுக்குள் ஆலிங்கனம் செய்து தனதாக்கிக் கொள்ளும் காலம் இது. இந்தச் சூழலில் இது போன்ற உரையாடல்கள் நம்முடைய கருத்தியலுக்கு வலு சேர்க்கும் பாரதியைப் போன்ற ஆளுமைகளை வலிந்து வலதுசாரிகள் கையில் கொடுக்கும் செயலாகும்.
சமகாலச் சிக்கல்கள் குறித்துப் பேசாமல், அதை மைய அரசியலாக கொண்டுவராமல் வலதுசாரிகள் எப்படி திசைதிருப்பும் வேலையை செய்கிறார்களோ, அதே விளையாட்டை பெரியாரியவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் சிலரும் செய்வது விபரீதமானது என்று சுட்டிக் காட்ட விரும்புகிறோம். எந்த வித செயல்தந்திரமும் இல்லாமல் தமிழ்ச்சமூகத்தின் ஆளுமைகளின் ஒட்டுமொத்த பங்களிப்பை மதிப்பீடு செய்யாமல் அவர்களிடம் உள்ள சில குறைகளை மட்டும் பெரிதுபடுத்துவது பாசிச எதிர்ப்பை பலவீனப்படுத்தவே செய்யும். சீமான் போன்றவர்களை வலதுசாரிகள் திட்டமிட்டு தங்களுக்காக பயன்படுத்தும் போது, அதை புரிந்துகொள்ளாமல் உணர்ச்சிவயப்பட்டு வார்த்தைகளைக் கொட்டி வலதுசாரிகளுக்கு இரையாகக்கூடாது.
வலதுசாரிகளின் வெறுப்பு அரசியலால் இருள் சூழ்ந்துள்ள கொடுங்காலத்தில், முற்போக்காளர்கள் முகாமிலிருந்தும் புரிதலின்றி இது போன்ற வெறுப்புப் பேச்சுக்கள் வருவது மிகவும் ஆபத்தானது, கண்டிக்கத்தக்கது. இவைகளை உடனே தடுப்பது, தவிர்ப்பது காலத்தின் தேவை ஆகும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.






