search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rescue"

    • சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் வந்தனர். அவர்கள் சிறுமியை மீட்க முயன்றனர்.
    • போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், தாடி பத்ரி அருகே உள்ள அவுலதிபய பள்ளியை சேர்ந்தவர் கங்க ராஜூ. இவரது மகள் அவந்தி (வயது 7). இவர் அதே ஊரில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    நேற்று மாலை பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்த அவந்தி வீட்டின் அருகே ஓடி விளையாடிக் கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக 2 சுவர்களுக்கு இடையில் சென்ற அவர் சிக்கிக் கொண்டார். முன்னோக்கியும் பின்னோக்கியும் செல்ல முடியாமல் அவதி அடைந்து கத்தி கூச்சலிட்டார்.

    சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் வந்தனர். அவர்கள் சிறுமியை மீட்க முயன்றனர்.

    ஆனால் முடியவில்லை. பதறிப்போன பெற்றோர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். அவர்களது முயற்சி தோல்வி அடைந்தது.

    இதையடுத்து கியாஸ் கட்டர் மூலம் சுவற்றை இடித்து சிறுமியை மீட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுமி காயம் இல்லாமல் மீட்கப்பட்டதால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர். தீயணைப்புத் துறையினருக்கு நன்றி தெரிவித்தனர். 

    • பிற்பகல் 1.30 மணிக்கு, குழந்தை கடத்தப்பட்ட நிலையில், 4 மணி நேரத்தில் மீட்பு.
    • வடகிழக்கு மாநில தம்பதியின் குழந்தை கடத்தப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு.

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை 4 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளது.

    எண்ணூர் பகுதியில் குழந்தையை விற்பதற்கு விலை பேசியபோது போலீசார் சுற்றி வளைத்துள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக, கார்த்திக், செல்வம் என்ற இருவரை எண்ணூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இன்று பிற்பகல் 1.30 மணிக்கு, குழந்தை கடத்தப்பட்ட நிலையில், 4 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளது.

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வடகிழக்கு மாநில தம்பதியின் குழந்தை கடத்தப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 17 இந்தியர்கள் உட்பட 25 மாலுமிகள் உள்ளனர்.
    • சரக்கு கப்பலை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தல்.

    இஸ்ரேல்- ஈரான் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை நடத்தியது. இதற்கிடையே நேற்று அரபிக்கடலில் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்தது.

    இந்த கப்பல் இஸ்ரேலை சேர்ந்த தொழிலதிபருக்கு தொடர்புடையது. ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து இந்தியா நோக்கி சென்று கொண்டிருந்த கப்பலுக்குள் ஹெலிகாப்டர் மூலம் ஆயுதங்களுடன் இறங்கிய ஈரான் கடற்படை கமாண்டோக்கள் கப்பலை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் 17 இந்தியர்கள் உட்பட 25 மாலுமிகள் உள்ளனர். அவர்களை ஈரான் கடற்படை சிறை பிடித்துள்ளது.

    கப்பலில் உள்ள இந்தியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதற்காக பேச்சுவார்த்தை நடத்த ஈரானுடன் இந்தியா தொடர்பில் உள்ளது. இந்தியர்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் முன்கூட்டியே விடுதலை ஆகியவற்றை உறுதி செய்வதற்காக, ஈரான் மற்றும் புதுடெல்லியில் உள்ள தூதரகங்கள் மூலம் ஈரான் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

    இந்தியாவின் கோரிக்கையை ஏற்று இந்திய மாலுமிகள் 17 பேரை ஈரான் விடுவிக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே சரக்கு கப்பலை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் கூறும்போது, "சர்வதேச கடற்பகுதியில் கப்பலை ஈரான் கைப்பற்றியதை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். கப்பலின் குழுவில் இந்தியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், ரஷ்யா, எஸ்டோனிய நாட்டவர்கள் உள்ளனர். கப்பலையும் அதன் சர்வதேச பணியாளர்களையும் உடனடியாக விடுவிக்க ஈரானுக்கு அழைப்பு விடுக்கிறோம் என்றார்.

    • சட்ட விரோதமாக இயங்கி வந்த திறந்தவெளி தங்கச் சுரங்கத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.
    • விபத்து நடந்த தங்கச் சுரங்கத்துக்கு ஆற்றில் படகில் ஒரு மணி நேரம் பயணம் செய்த பிறகே செல்ல முடியும்.

    கராகஸ்:

    வெனிசுலா நாட்டில் சட்ட விரோதமாக தங்க சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஏராளமானோர் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்த நிலையில் அங்கோஸ்டுரா நகராட்சியில் புல்லா லோகா என்ற இடத்தில் சட்ட விரோதமாக இயங்கி வந்த திறந்தவெளி தங்கச் சுரங்கத்தில் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். அப்போது தங்கச் சுரங்கத்தில் ஒரு பாதி இடிந்து விழுந்தது. அதில் பல தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். விபத்து நடந்த தங்கச் சுரங்கத்துக்கு ஆற்றில் படகில் ஒரு மணி நேரம் பயணம் செய்த பிறகே செல்ல முடியும். இதனால் மீட்புக் குழுவினர் உடனடியாக செல்ல முடியவில்லை. பின்னர் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

    தங்கச் சுரங்கத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 15 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்து இருந்தனர்.அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்னும் சிலர் தங்கச் சுரங்கங்களில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அரசு அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.

    வெனிசுலாவில் கடந்த 2016-ம் ஆண்டு,புதிய வருவாய் திட்டமாக, நாட்டின் நடுப்பகுதி முழுவதும் ஒரு பெரிய சுரங்க மேம்பாட்டு மண்டலத்தை அந்நாட்டு அரசாங்கம் நிறுவியது. இதையடுத்து தங்கம், வைரங்கள், தாமிரம் மற்றும் பிற கனிமங்களுக்கான சுரங்க நடவடிக்கைகள் தொடங்கின.மேலும் அந்த மண்டலத்திற்கு வெளியே சட்டவிரோத சுரங்கங்கள் பெருகின என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • கடலோர காவல் குழுமம் மற்றும் சீர்காழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவர் தெருவை சேர்ந்தவர் ஆனந்தபாபு. இவர் சொந்தமாக பைபர் படகு வைத்துள்ளார்.

    இந்நிலையில் பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் நேற்று மாலை ஆனந்தபாபுவிற்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த அகோரமூர்த்தி (வயது 48), தர்மராஜ் (25), ஜீவானந்தம் (25), மணியரசன் (35), சித்திரைவில் (43) மற்றும் தரங்கம்பாடி தாலுகா வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த பார்த்திபன் (34) ஆகிய 6 மீனவர்கள் திருமுல்லைவாசல் மீன்பிடி தளத்திலிருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

    சுமார் 20 கடல் மைல் தூரத்தில் நள்ளிரவில் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் பைபர் படகில் இருந்த என்ஜினில் இருந்து திடீரென புகை வந்தது. பின்னர் அது தீ பிடித்து எரிந்தது. அப்போது என்ஜீனில் இருந்த பெட்ரோல் டேங்க் வெடித்து சிதறியது. மேலும் இந்த தீ பைபர் படகிலும் பிடித்து எரிந்தது.

     

    இந்த தீவிபத்தில் படகில் இருந்த மீனவர்கள் ஜீவானந்தம், மணியரசன் சித்திரைவேல் உள்ளிட்ட 6 பேரும் தீக்காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து மீனவர்கள் 6 பேரும் உயிரை காப்பாற்றி கொள்ள கடலில் குதித்து தத்தளித்தனர். அப்போது அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மணிகண்டன் மற்றும் சக மீனவர்கள் இதனை பார்த்து உடனடியாக விரைந்து வந்து கடலில் தத்தளித்த 6 மீனவர்களை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.

    பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்தில் பைபர் படகு மற்றும் ஜி.பி.எஸ். கருவி, வாக்கி டாக்கி, ஐஸ்பெட்டி உள்ளிட்ட சுமார் 10 லட்சம் மதிப்பிலான சேதம் ஏற்பட்டதாக மீனவர் தரப்பில் கூறப்படுகிறது.

    மேலும் தீ விபத்தில் சேதமான பைபர் படகையும் கரைக்கு கொண்டு வந்தனர்.

    இது குறித்து கடலோர காவல் குழுமம் மற்றும் சீர்காழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மீனவர் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்துள்ளது.

    • வாஞ்சி மணியாச்சி சந்திப்பில் இருந்து சென்னைக்கு புறப்படுகிறது.
    • பயணிகளுக்கு ரெயில்வே சார்பில் உணவு மற்றும் வாட்டர் பாட்டில் வழங்க ஏற்பாடு.

    நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது.

    இதனால், சாலை எங்கும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதில், திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்க வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் கனமழை காரணமாக ஸ்ரீவைகுண்டத்தில் இரண்டு நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டது. பிறகு, ரெயிலில் இருந்த பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

    இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையம் வந்தடைந்தனர்.

    ரெயில் நிலையத்தில் இருந்து நடந்து வந்தவர்கள் வல்லூரில் இருந்து பேருந்துகள் மூலம் வாஞ்சி மணியாச்சிக்கு அழைத்து வரப்பட்டனர்.

    வாஞ்சி மணியாச்சியில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் மூலம் பயணிகள் அழைத்து வரப்படுகின்றனர். இந்த சிறப்பு ரெயில் நாளை காலை சென்னை வந்தடையும்.

    சிறப்பு ரெயிலானது சற்று நேரத்தில் வாஞ்சி மணியாச்சி சந்திப்பில் இருந்து சென்னைக்கு புறப்படுகிறது.

    பயணிகள் அனைவருக்கும் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

    மேலும், ரெயில்வே சார்பில் உணவு மற்றும் வாட்டர் பாட்டில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • சுமார் 70 பேர் வெள்ளத்தில் சிக்கி அபய குரல் எழுப்பியதால் அங்கு பரபரப்பு நிலவியது.
    • சினிமா டைரக்டர் மாரிசெல்வராஜ் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த வரலாறு காணாத மழையால் ஏராளமான இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

    இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து சுமார் 30 பக்தர்கள் ஒரு பஸ்சில் ஆன்மீக சுற்றுலாவாக திருச்செந்தூர் வந்து விட்டு திரும்பும் வழியில் கருங்குளம் கோவிலுக்கு சென்றனர்.

    அந்த நேரத்தில் கருங்குளம் பகுதியில் கனமழை காரணமாக திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பக்தர்கள் கருங்குளம் சத்திரம் பகுதியில் சிக்கி கொண்டனர்.

    இதனால் எங்களை காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என அவர்கள் சத்தம் போட்டனர். உடனே அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் உள்பட ஏராளமானோர் பக்தர்களை மீட்பதற்காக அங்கு சென்றனர்.

    ஆனால் எதிர்பாராத விதமாக வெள்ளப்பெருக்கு அதிகரித்ததால் அனைவருமே வெள்ளத்தில் சிக்கி கொண்டனர். சுமார் 70 பேர் வெள்ளத்தில் சிக்கி அபய குரல் எழுப்பியதால் அங்கு பரபரப்பு நிலவியது.

    தகவல் அறிந்து ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் 7 பேர் கொண்ட குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக தீயணைப்பு வாகனமும் வெள்ளத்தில் சிக்கி கொண்டது.

    இதனால் அவர்களாலும் உடனடியாக வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்கள் மற்றும் பக்தர்களை மீட்க முடியவில்லை.

    நேற்று மதியம் வரை வெள்ளப்பெருக்கு நீடித்த நிலையில் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் அங்கேயே 2-வது நாளாக வெள்ளத்தில் தவித்தனர். தகவல் அறிந்து உவரி, திசையன்விளை, கன்னியாகுமரி பகுதியில் இருந்து மீனவர்கள் ஏராளமானோர் அங்கு படகுகளுடன் சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட னர்.

    இதுபற்றி சினிமா டைரக்டர் மாரிசெல்வராஜ் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அவர் அமைச்சர் உதயநிதிக்கு தகவல் தெரிவித்தார். அவர் சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவை அங்கு அனுப்பி வைத்தார்.

    பின்னர் வெள்ளத்தில் சிக்கிய பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என ஒவ்வொருவராக மீட்கும் பணி நேற்றிரவு தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வெள்ளத்தில் சிக்கிய 70 பேரும், இன்று காலை பத்திரமாக மீட்கப்பட்டனர். 

    • தென் சென்னையிலும், வட சென்னையிலும் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளத்தை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • இன்னமும் பல்லாயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்து அபாயகரமான அளவில் நிற்கிறது.

    சென்னை:

    மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட சென்னையில் மீட்பு பணிகளும், நிவாரண பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

    வடசென்னை மற்றும் தென்சென்னை பகுதியில் மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய சென்னை பகுதியில் இயல்பு நிலை திரும்பி விட்ட நிலையில் தென் சென்னையிலும், வட சென்னையிலும் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளத்தை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மாதவரம், மணலி, எண்ணூர், கொரட்டூர், தாம்பரம், வேளச்சேரி, பீர்க்கங்கரணை, பெரும்பாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் இன்னமும் பல்லாயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்து அபாயகரமான அளவில் நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் இருப்பவர்களை படகுகளின் மூலம் மீட்கும் பணி இன்று 3-வது நாளாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மழை வெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தினரை போலீஸ் ஒருவர் பத்தித்திரமாக மீட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இதில் காவலர் ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு கொஞ்சியபடி புன்னகையுடன் நடந்துவரும் காட்சி பதிவாகி இருக்கிறது. இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    இதுபற்றி தலைமை காவலர் தயாளன் கூறும்போது,

    வெள்ளத்தில் சிக்கிய குழந்தையை மீட்டபோது, தூங்காமல் வேலைபார்த்த களைப்பு பறந்து போனது என்று கூறினார்.

    • நடிகர்கள் அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோரை படகு மூலம் தீயணைப்புதுறையினர் மீட்டுள்ளனர்.
    • தங்களை உடனடியாக மீட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து நடிகர் விஷ்ணு விஷால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    மிச்சாங் புயல் எதிரொலியால், சென்னை மாநகரமே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. சென்னை மடிப்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளின் தான் அதிக கனமழை பெய்துள்ளது. இதனால், வேளச்சேரி, காரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மார்பளவு வரை தண்ணீர் தேங்கியுள்ளது. வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழக அரசின் உத்தரவின்பேரில் பொது மக்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், காரப்பாக்கத்தில் வசித்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

    இதேபோல், பாலிவுட் நடிகர் அமீர் கானும் வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ளதாக செய்தி வெளியானதை அடுத்து மீட்பு படையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதைதொடர்ந்து, நடிகர்கள் அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோரை படகு மூலம் தீயணைப்புதுறையினர் மீட்டுள்ளனர்.

    இந்நிலையில், தங்களை உடனடியாக மீட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து நடிகர் விஷ்ணு விஷால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "சிக்கித் தவிக்கும் எங்களைப் போன்ற மக்களுக்கு உதவிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு நன்றி. காரப்பாக்கத்தில் மீட்பு பணிகள் தொடங்கியுள்ளன.

    ஏற்கனவே 3 படகுகள் இயங்குவதை பார்த்தேன். இதுபோன்ற சோதனையான காலங்களில் தமிழக அரசின் சிறப்பான பணி அயராது உழைக்கும் அனைத்து நிர்வாக மக்களுக்கும் நன்றி" என்று குறிப்பிட்டிருந்தார்.

    • சந்தேகத்துக்கிடமான வகையில் பை ஒன்று கிடப்பதாக தகவல் தெரிவித்தார்.
    • குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    புதுடெல்லி:

    கிழக்கு டெல்லி சதாரா மாவட்டத்தில் உள்ள பார்ஷ் பஜார் போலீஸ் நிலையத்துக்கு நேற்று மாலை ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், விஸ்வாஸ் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகில் சந்தேகத்துக்கிடமான வகையில் பை ஒன்று கிடப்பதாக தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து அந்த முகவரிக்கு போலீசார் சென்று விசாரித்தனர். அப்போது அங்கு கிடந்த பையை போலீசார் திறந்து பார்த்தனர். அந்த பையில் ஒரு பெண்ணின் பிணம் திணிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது பிணமாக கிடந்த பெண்ணின் பெண்ணின் பெயர் ஷாமா (23) என்பது தெரிய வந்தது. அவர் நியூ சஞ்சய் அமர் காலனியை சேர்ந்தவர் ஆவார்.

    தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்த போது அந்த பெண்ணின் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. அந்த பெண்ணை யாரோ கழுத்தை நெரித்து கொன்று பையில் அடைத்து வீட்டு அருகே போட்டு சென்றது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுபற்றி போலீசார் கூறிய போது, 'பெண்ணின் கொலை தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளோம். இதுவரை நடந்த விசாரணையில் சந்தேகமான நபரை பற்றி வலுவான தடயங்கள் கிடைத்துள்ளன. குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றனர்.

    • யானை குட்டிக்கு வனத்துறை கால்நடை மருத்துவரால் பரிசோதனை செய்து, புட்டிப்பால் வழங்கப்பட்டது.
    • பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே, இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.ளவய

    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை அருகே, ஜவளகிரி வனப்பகுதியில் பிரசவத்தின் போது பெண் யானை உயிரிழந்தது. இதையடுத்து, குட்டியானையை மீட்டு வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி வனச்சரகம், உளி பண்டா காப்புகாடு உறுகுட்டை சரக பகுதியில், நேற்று காலை பெண் யானை ஒன்று குட்டி ஈன்ற பிறகு உயிரிழந்துள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஜவளகிரி வனச்சரக அலுவலர் (பொ) விஜயன் தலைமையிலான வனத்துறையினர், சம்பவ இடம் சென்று பார்வையிட்டனர்.

    பின்னர், இறந்த தாய் யானையின் அருகே, உயிருடன் இருந்த குட்டியை மீட்டனர். அந்த யானை குட்டிக்கு வனத்துறை கால்நடை மருத்துவரால் பரிசோதனை செய்து, புட்டிப்பால் வழங்கப்பட்டது. மேலும், உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பிரசவத்தின்போது, உயிரிழந்த பெண் யானையின் உடலை, வனக்கால்நடை மருத்துவரால் இன்று பிரேத பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாவும், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே, இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மின்வயர் கடித்து பெண் யானை இறந்த நிலையில், ஜவளகிரி வனப்பகுதியில் குட்டி ஈன்ற பெண் யானை இறந்தது வனவிலங்கு ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கம்பியில் சிக்கி மீட்கப்பட்டிருக்கும் சிறுத்தை ஆண் சிறுத்தை என்பதும் வயது சுமார் 5 இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவி்க்கின்றனர்.
    • இரும்பு வலை வைத்தவர்கள் யார் என்பது குறித்து பாலக்கோடு வனத்துறைனர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாலக்கோடு:

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கணவனஅள்ளி கிராமத்தை யொட்டியுள்ள கரடு பகுதியில் வித்தியாசமான உறுமல் சத்தம் வந்து கொண்டிருக்கவே சத்தம் வந்த இடத்திற்கு கிராம மக்கள் சென்று பார்த்துள்ளனர்.

    அங்கு சிறுத்தை ஒன்றின் கழுத்தில் இரும்பு கம்பி இறுக்கிய நிலையில் உயிருக்கு போரடியபடி உறுமிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்,

    இதனை அடுத்து பாலக்கோடு வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வன விலங்குகளுக்கு மயக்க ஊசி செலுத்தும் மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்துபட்டது,

    சிறுத்தை மயங்கியதும் கழுத்தை இறுக்கியிருந்த இரும்பு கம்பி அகற்றபட்டு காயங்களுக்கு மருந்துகள் தடவி விட்ட பின்னர் கூண்டு ஒன்றில் சிறுத்தையை அடைத்து இரவோடு இரவாக ஒகேனக்கல் சின்னாறு வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.

    இறைச்சிக்காக மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடும் நபர்கள் வைத்த இரும்பு கம்பி வலையில் எதிர்பாராத விதமாக சிறுத்தை சிக்கியிருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது.

    கம்பியில் சிக்கி மீட்கப்பட்டிருக்கும் சிறுத்தை ஆண் சிறுத்தை என்பதும் வயது சுமார் 5 இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவி்க்கின்றனர்.

    வன விலங்குகளை வேட்டையாட இரும்பு வலை வைத்தவர்கள் யார் என்பது குறித்து பாலக்கோடு வனத்துறைனர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×