search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "North Indian workers"

    • வடமாநில இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கிருஷ்ணகிரி காவல்துறையினர் 25-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • மொழி புரிதல் இல்லாததாலும், தவறான புரிதல் உள்ளிட்டவையால் தாக்குதல் சம்பவம் நடந்துவிட்டது

    கிருஷ்ணகிரி அருகே செம்படமுத்தூர் மற்றும் மாதப்பட்டி பகுதியில் குழந்தை கடத்த வந்ததாக நினைத்து, வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களை பொதுமக்கள் தாக்கியுள்ளனர்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட வடமாநிலத்தவர்களை சந்தித்த ஊர் மக்கள், தவறான புரிதலால் தாக்கிவிட்டதாகவும், எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் சிகிச்சைக்குத் தேவையான பணம் மற்றும் பழங்களையும் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

    "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செம்படமுத்தூர், துறிஞ்சிப்பட்டி மற்றும் தாளாப்பள்ளி கிராமத்தில் கடந்த 6-ம் தேதியன்று குழந்தைகள் கடத்த போவதாக வதந்தி பரவியது. இதனை அடுத்து, வடமாநிலத்தவர்கள் 5 பேரை பொதுமக்கள் தாக்கியுள்ளனர்.

    இதையடுத்து காவல்துறையினர் 5 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில் அவர்கள், அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்த கமல் ஹூசைன்(30), நிசாம் அலி(26), முகம்மது மெசுதீன்(30), ஆஷ் முகமது(27) சோகித் அலி என தெரிந்தது. இவர்கள் 5 பேரும் கடந்த 3 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி அடுத்த தேவசமுத்திரத்தில் தங்கி, ஆட்டோவில் சென்று குப்பை, மது பாட்டில்களை சேகரித்து, அதில் கிடைக்கும் வருமானம் மூலம் வாழ்ந்து வந்தது தெரிந்தது.

    வடமாநில இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கிருஷ்ணகிரி காவல்துறையினர் 25-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து தொடர்புடைய 10 பேரை கைது செய்துள்ளனர்.

    இந்நிலையில் பெரியதாளப்பள்ளி ஊராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர் ஆகியோர் நேற்று இரவு (மார்ச் 8) கிருஷ்ணகிரி டிஎஸ்பி தமிழரசி, காவல் ஆய்வாளர் குலசேகரன் மற்றும் காவல்துறையினருடன் , கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் வடமாநில இளைஞர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

    அப்போது, "மொழி புரிதல் இல்லாததாலும், தவறான புரிதல் உள்ளிட்டவையால் தாக்குதல் சம்பவம் நடந்துவிட்டது. உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம். நீங்கள் அச்சம் அடைய வேண்டாம். இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காது உங்களுக்கு தேவையான உதவிகளை செய்கிறோம்" என ஆறுதல் கூறினர். மேலும், சிகிச்சை பெற்று வரும் இளைஞர்களுக்கு நிதி உதவியும், பழங்கள் போன்றவற்றை அவர்கள் வழங்கினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக பேசிய கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு, " இது போன்ற போலியான செய்திகளை கேட்டறிந்து வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தும் நபர்கள் மீதும், போலியான செய்திகளை வாட்ஸ்அப், பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பரப்புபவர்கள் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    அவ்வாறு சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் பொதுமக்களுக்கு தெரியவந்தால், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும், அருகில் உள்ள காவல் நிலையத்தை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். எனவே, பொதுமக்கள் யாரும் வதந்திகளை நம்பி தாக்குதல் நடத்தக் கூடாது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • வெளி மாநில தொழிலாளர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
    • வடமாநில தொழிலாளர்களைஎப்படி வரைமுறைப்படுத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    தொழிலாளர் நலத்துறை, திறன் மேம்பாட்டு துறை சார்பில் கோவை மண்டல அளவிலான வெளி மாநில தொழிலாளர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

    இதில் தொழிலாளர் நலத்துறை, போலீசார், தொழில் அமைப்புகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வடமாநில தொழிலாளர்களைஎப்படி வரைமுறைப்படுத்துவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. தொழில்துறையினர் பலர் கருத்துக்களை தெரிவித்தனர்.

    இந்த கூட்டம் குறித்து அதில் பங்கேற்ற திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க இணை செயலாளர் குமார் துரைசாமி கூறுகையில், எளிதாக தரவுகளை கையாளும் வகையில், தமிழக அரசு வடமாநில தொழிலாளர்களுக்கு கைரேகையுடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும்.அனைத்து தன்னார்வ அமைப்புகள், தொழில்துறை உள்ளிட்டோரை அழைத்து கூட்டம் நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது என்றார்.

    • வடமாநில தொழிலாளர்கள் தற்போது திருப்பூருக்கு மீண்டும் வந்த வண்ணம் உள்ளனர்.
    • தமிழகத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றனர்.

    திருப்பூர் :

    ஹோலி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்றிருந்த வடமாநில தொழிலாளர்கள் தற்போது திருப்பூருக்கு மீண்டும் வந்த வண்ணம் உள்ளனர்.அவர்கள் கூறும் போது, தவறான வீடியோக்கள் மூலம் அனைவரும் அச்சமடைந்ததாகவும் தற்போது அவை அனைத்தும் பொய்யானவை என தெரியவந்துள்ளது. எனவே பயமின்றி மீண்டும் பணிக்கு திரும்பி உள்ளோம். தமிழகத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றனர்.

    மேலும் ெரயில்வே காவல்துறையினர், புலம்பெயர் தொழிலாளர்க ளுக்கு இந்தி மொழியில் பேசி நீங்கள் பாதுகாப்பாக உள்ளனர். எந்த அச்சமும் தேவையில்லை என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    • வடமாநில தொழிலாளர் பாதுகாப்பு தொடர்பாக, கலந்தாய்வு கூட்டம் இந்து முன்னணி சார்பில் நடந்தது.
    • திருப்பூர் எப்போதும் வந்தாரை வாழ வைக்கும் நகரம், அச்சமின்றி தங்கி பணியாற்றலாம்.

    திருப்பூர் :

    திருப்பூரில் கடந்த மாதம் வடமாநிலத்தவர் குறித்தும் அவர்களது செயல்பாடுகள் குறித்து தேவையற்ற பிரச்சினை கிளப்பும் வகையிலான வீடியோக்கள் வதந்தியாக பரவியது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்த போலீ சார், இச்செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    திருப்பூருக்கு வந்த, டி.ஜி.பி., சைலேந்திரபாபு நேரில் ஆய்வு செய்து, வடமாநிலத்தவர் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தார். இம்மாதம் 5-ந் தேதி கோவை - பீகார் இடையே கூடுதல் முன்பதிவில்லா பெட்டிகளுடன் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.இந்த சிறப்பு ரெயிலில் 1,350 வடமாநிலத்தவர் ஹோலி பண்டிகை கொண்டாட தங்கள் சொந்த மாநிலங்களுக்கு பயணமாகினர்.

    பண்டிகை கொண்டாட்டம் முடிந்ததுடன், திருப்பூரில் எவ்வித பிரச்சினைகளும் இல்லாமல், இயல்பு நிலை நிலவுதால், சொந்த மாநிலம் சென்ற பலரும் ெரயிலில் திருப்பூர் திரும்பி வருகின்றனர். திருப்பூர் வழியாக பயணிக்கும் பல்வேறு தினசரி, வாராந்திர ெரயில்களில் அதிக அளவில் வடமாநிலத்தவர் திருப்பூர் நோக்கி வந்து கொண்டுள்ளனர். தொழிலாளர்கள் மீண்டும் திரும்புவதால் திருப்பூர் தொழில் துறையினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இந்தநிலையில் திருப்பூரில் வசிக்கும் வடமாநில தொழிலாளர் பாதுகாப்பு தொடர்பாக, கலந்தாய்வு கூட்டம் இந்து முன்னணி சார்பில் நடந்தது.மாநில அமைப்பாளர் பக்தன், மாநில பொதுசெயலாளர் கிஷோர்குமார் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்துக்கு தலைமை வகித்து, மாநில தலைவர் காடஸ்வரா சுப்ரமணியம் பேசுகையில், திருப்பூர் எப்போதும் வந்தாரை வாழ வைக்கும் நகரம். அச்சமின்றி தங்கி பணியாற்றலாம். சமூக விரோதிகள் மற்றும் வெளிநாட்டு சக்திகள் இந்தியாவை சீர்குலைக்கும் முயற்சிக்கு யாரும் இடமளிக்க கூடாது. பிரிவினைவாதிகளை கண்டு பயப்பட தேவையில்லை என்றார்.

    உத்திரபிரதேச இந்துமத் பொறுப்பாளர் சிவமூர்த்தி பேசுகையில், தமிழகத்தில் மொழி ஒரு பிரச்சினை இல்லை. தமிழர்கள் காசிக்கு வருகின்றனர். காசியில் இருந்து ராமேஸ்வரம் வந்து வணங்குகிறோம். எப்போதும் வடக்கு, தெற்கு என்ற பாகுபாடு வந்துவிடக்கூடாது என்றார்.

    • நம்மவர்கள் வதந்தி வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் செய்திகளை யாருக்கும் பகிர வேண்டாம்.
    • குறைகள் ஏதேனும் இருந்தால் பகிரங்கமாக தெரியப்படுத்துங்கள் என போலீஸார் தெரியப்படுத்தி வருகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரில் வடமாநிலத்தவர்களை தாக்குவதாக வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், பிஹார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அரசு குழுவினர் இரண்டு நாட்கள் ஆய்வு செய்து, களத்தின் உண்மை நிலையை அங்குள்ளவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் வீடியோ பதிவெடுத்து சென்றனர். அதன் ஒருபகுதியாக தொழிலாளார்கள் பலரும், 'நாங்கள் தமிழகத்தில் அமைதியாக வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு யாராலும் பிரச்சினை இல்லை. குடும்பத்தினர், சமூகவலைதளங்களில் பரப்படுப்படும் வதந்திகளை நம்பவேண்டாம். எங்களுக்கு மிகவும் அமைதியான வாழ்க்கையை தமிழ்நாடு தந்துள்ளது. இங்கு யாராலும் எந்த பிரச்சினையும் இல்லை. நம்மவர்கள் வதந்தி வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் செய்திகளை யாருக்கும் பகிர வேண்டாம் என பதிவிட்டு வருகின்றனர்.

    அதன் ஒருபகுதியாக திருப்பூர் மாநகரில் உள்ள ஏராளமான பனியன் நிறுவனங்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றி வருவதால் அவர்களுக்கு தொடர் விழிப்புணர்வை மாநகர் மற்றும் மாவட்ட போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.

    அதன் ஒருபகுதியாக 2 மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் குழுவுக்கு பின்னர், தற்போது மாநகர் எல்லைக்கு உட்பட்ட நிறுவனங்களில் வடமாநிலத் தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அப்போது அவர்களிடம் குறைகள் ஏதேனும் இருந்தால் பகிரங்கமாக தெரியப்படுத்துங்கள் என போலீஸார் தெரியப்படுத்தி வருகின்றனர்.

    அதேபோல் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணி ப்பாளர் கோ.சசாங் சாய் பல்லடம் காவல் எல்லைக்கு உட்பட்ட அருள்புரம் பகுதியில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் அங்கு பணிபுரியும் 2000 வடமாநிலத் தொழிலாளர்களுக்கு சமூக வலைதளங்களில் சமீப நாட்களாக பரவிய வதந்தி தொடர்பாக நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதேபோல் 24 மணிநேரமும் அமைக்கப்பட்டுள்ள காவல்துறையின் உதவியை பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தனி கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு எண்களை தொழிலாள ர்களுக்கு வழங்கினார். இதனால் தொழிலா ளர்கள் நிம்மதி அடைந்திரு ப்பதாக தெரிவித்தனர். வடமாநிலத் தொழிலா ளர்களின் பாதுகாப்பு க்காக ஏற்படுத்தப்ப ட்டுள்ள தனிப்பிரிவு கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண்களான 94981-01320, 0421-2970017 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்ப ட்டுள்ளது.

    • பல்வேறு துறைகளில் தொழிலாளர்களாக பாணிபுரிந்து வருகின்றனர்.
    • இது போன்ற சம்வங்கள் நிகழாமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும்.

    திருப்பூர் :

    முன்னாள் அமைச்சரும் பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான எம்.எஸ். எம்.ஆனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: தமிழ்நாட்டில் புலம் பெயர் தொழிலாளர்கள் தாக்கபடுவதாக ஏற்பட்ட வதந்தியை தொடர்ந்து அம்மாநில தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக பல தொழிலாளர்கள் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் குறிப்பாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பிஹார், உத்திர பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பல்வேறு துறைகளில் தொழிலாளர்களாக பாணிபுரிந்து வருகின்றனர். பல்லாண்டுகளாக இவர்கள் இங்கே பணியாற்றியும் ஒரு சிலர் வளர்ந்து இங்கே தொழில் நிறுவனங்களை துவங்கியும் அமைதியான முறையில் வாழ்ந்து வரும் போது இப்போது ஏற்பட்டுள்ள இந்த அசாத்திய சூழ்நிலை துரதிர்ஷ்டவிதமானது.

    கடந்த எடப்பாடியார் தலைமையிலான அதிமுக ஆட்சியில் கொரோனா கால ஊரடங்கின் போது புலம் பெயர் தொழிலாளர்களின் சிரமத்தினை கருத்தில் கொண்டு அவர்கள் இருக்கும் இடம் தேடி அத்தியாவசிய பொருட்கள் வழங்கபட்டது. மேலும் தங்களின் சொந்த ஊர் திரும்ப முடியாமல் அவதி உற்றாருக்கு வாகன வசதிகள் ஏற்படுத்தி தந்து அவர்களின் சொந்த மாநிலத்திற்கே சிரமமின்றி அழைத்து செல்லபட்டதை நினைவு கூற விரும்புகிறேன். திருப்பூர் மாவட்டத்தில் பெருகி கிடக்கும் வேலை வாய்ப்பின் மூலம் திருப்பூர் மாநகரிலும் பல்லடத்திலும் பல்லாயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் ஆயத்த ஆடை தயாரிப்பு, சாய ஆலை, நூற்பாலை, விசைத்தறி, ப்ரிண்டிங் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பணியாற்றி வருகிறார்கள், ஏற்கனவே திமுக ஆட்சி அமைந்தது முதல் நூல் விலை உயர்வு, கடுமையான மின்

    கட்டண உயர்வு,சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்கி தவிக்கும் ஜவுளி தொழில் புலம் பெயர் தொழிலாளர்கள் பணியை விட்டு செல்லும் நிலையில் மிகப்பெரிய சவாலையும், உற்பத்தி தடையையும் சந்திக்க வேண்டிய அபாயம் உள்ளது.

    திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் இப்பிரச்சனையை சீர் செய்ய அனைத்து முயற்ச்சிகளும் எடுத்து வருவது ஆறுதல் அளிக்கும் நிலையில் தமிழக அரசு உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு வட மாநில தொழிலாளர்கள் மத்தியில் நிலவும் குழப்பங்களை தீர்வு கண்டு தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் என்றும் தங்களை நம்பி வருவோருக்கு துணை இருப்பார்கள் என்ற வரலாற்று உண்மையை உறுதிபடுத்துகின்ற வகையில் சிறிதும் சமூக பொறுப்பின்றி தமிழ்நாடு புலம்பெறும் தொழிலாளர்களுக்கு ஆபத்தான மாநிலம் என்பது போன்ற வதந்திகளை பரப்பும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுத்து மேலும் இது போன்ற சம்வங்கள் நிகழாமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும் என்று இந்த அறிக்கையின் வாயிலாக தமிழக அரசை கேட்டுக்கொள்கின்றேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் எச்சரிக்கை விடுத்தார்.
    • பீகாரில் 10 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருவதாக ஏடிஜிபி கூறினார்.

    பாட்னா:

    தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோ சில நாட்களுக்கு முன்பு சமூக வலை தளங்களில் பரவியது. இது தமிழகத்தில் பதற்றமான சூழலை ஏற்படுத்தி உள்ளது. பீகார் சட்டசபையிலும் இது எதிரொலித்தது.

    புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக உண்மைக்கு புறம்பான, பொய்யான தகவல் சமூக ஊடகங்களில் சிலரால் பரப்பப்பட்டுள்ளதாகவும், இந்த பொய் செய்தி பரப்பியவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்கள் என்றும் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார்.

    இந்நிலையில், தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய ஒரு நபரை பீகார் காவல்துறை கைது செய்திருப்பதாக ஏடிஜிபி ஜிதேந்திர சிங் கங்காவர் தெரிவித்தார். போலியான பதிவை வெளியிட்டவர்கள் மற்றும் பகிர்ந்தவர்கள் கைது செய்யப்படுவார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக 10 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது எனவும், ஏடிஜிபி கூறினார்.

    கைது செய்யப்பட்ட நபர் பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தைச் சேர்ந்த அமன் குமார் என்பது தெரியவந்துள்ளது. தவறான தகவலை சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பியதாக பலர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. அவரது செல்போனில், அதுபோன்ற பல வீடியோக்கள் இருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

    • பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், நவீன தானியங்கி விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.
    • தமிழர்கள் தாக்குவது போல் பொய்யான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

    பல்லடம் :

    தென்னிந்திய நாடா இல்லா விசைத்தறியாளர்கள் சங்க நிர்வாகிகள் பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்ட் அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்ட் சவுமியாவை சந்தித்து கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், நவீன தானியங்கி விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதில் வட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் சமீப காலமாக தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்களை தமிழர்கள் தாக்குவது போல் பொய்யான, போட்டோ மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதன் காரணமாக வட மாநில தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

    ஆகையால் தாங்கள் இந்த தவறான வதந்திகளை பரப்புபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பல்லடத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலைதான் உள்ளது என்பதை தாங்கள் தெரியப்படுத்தியும், வட இந்திய தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பீதியை கட்டுப்படுத்த வீண் வதந்திகளை பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும், மக்கள் அதிகம் கூடும் கடைவீதி போன்ற இடங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்தி அவர்களின் அச்சத்தை போக்கவும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் வடமாநிலத்தில் இருந்து வந்து தங்கி வேலை செய்கின்றனர்.
    • தொழிலாளர் வருகை 5 லட்சமாக இருக்கலாம்.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்கள், விசைத்தறி, ஆட்டோ மொபைல், ஜவுளி நிறுவனங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் பெரும்பாலானோர் தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்வார்கள்.

    தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல தயாராகி வருவதால், அவர்கள் திரும்ப ஒரு வாரமாகலாம். இதனால் தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை தீவிரப்படுத்தியுள்ளது.

    ஒரு மாதம் இருப்பு வைக்கும் அளவிற்கு பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது. கோவையில் சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

    கோவையில் பீகார், ஒடிசா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் பலர் தீபாவளி கொண்டாட சொந்த ஊர் செல்ல தயாராகி உள்ளனர். இவர்கள் சொந்த ஊர் செல்வதற்காக ெரயில்களில் டிக்கெட் முன் பதிவு செய்து வருகின்றனர்.

    சில தொழில் நிறுவனங்கள் வடமாநில தொழிலாளர்களுக்காக பஸ்களை ஏற்பாடு செய்து தர திட்டமிட்டுள்ளது. தொழிலாளர்கள் அதிகளவு விடுமுறை எடுக்க இருப்பதால் சில தொழில் நிறுவனங்கள் தீபாவளிக்கு பின்னர் தொழிலாளர்கள் வரும் வரை நிறுவனங்களை நிறுத்தி வைக்க திட்டமிட்டுள்ளது.

    இதுகுறித்து கோவை தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் பெரும்பாலான தொழில் நிறுவனங்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் வடமாநிலத்தில் இருந்து வந்து தங்கி வேலை செய்கின்றனர்.

    அவர்கள் தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றால் ஒரு வாரம் அல்லது 2 வாரம் கடந்த பின்னர் தான் திரும்புவார்கள்.

    சிலர் பண்டிகை பின்னர் திரும்ப வருவதில்லை. வேறு நிறுவனங்களுக்கு வேலைக்கு சேர்ந்து விடுவார்கள். இதுபோன்ற நிலையில் நாங்கள் வேறு தொழிலாளர்களை தேட வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    தீபாவளி பண்டிகைக்கு பின்னர், தொழிலாளர்களின் வருகையை பொறுத்து நிலைமை மாறும்.

    கோவை மாவட்டத்தில், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு தொழிலாளர்கள் தேவை அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக, கோவைக்கு தொழிலாளர்கள் பலர் விருப்பத்துடன் வந்து வேலை செய்கிறார்கள்.

    தீபாவளிக்கு பின்னர் கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு தொழிலாளர்கள் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். தற்போது சொந்த ஊர் செல்ல 3 லட்சம் பேர் தயாராகி வருகின்றனர்.

    இவர்கள் திரும்பும் போது அவரது நண்பர்கள், உறவினர்களையும் வேலைக்கு அழைத்து வருவார்கள். தொழிலாளர் வருகை 5 லட்சமாக இருக்கலாம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×