என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cyber Crime"

    • கேரளாவில் உள்ள சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்தேன்.
    • சம்பந்தப்பட்ட நபர் தனது செயல்களின் விளைவுகளை எதிர்கொள்வார்.

    நடிகை அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், "சில நாட்களுக்கு முன்பு, ஒரு இன்ஸ்டாகிராம் ஐடியில் இருந்து என்னைப் பற்றியும், என் குடும்பத்தினரைப் பற்றியும், என் நண்பர்கள் மற்றும் சக நடிகர்களைப் பற்றியும் மிகவும் தவறான தகவல்களை பரப்பி, அதில் என் நண்பர்கள் மற்றும் சக நடிகர்களை டேக் செய்வதும் எனக்குத் தெரிய வந்தது.

    அந்தப் பதிவுகளில் எனது மார்பிங் செய்யப்பட்ட படங்கள் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் இருந்தன. இதுபோன்று ஆன்லைனில் என்னை டார்கெட் செய்வதை பார்ப்பது மிகவும் வருத்தமாக இருந்தது.

    மேலும் இதுகுறித்து விசாரிக்கையில், அந்த நபர், என்னைப் பற்றி தொடர்ந்து வெறுப்பைப் பரப்பும் ஒரே நோக்கத்துடன் பல போலி கணக்குகளை உருவாக்கியிருப்பது தெரியவந்தது.

    இது குறித்து அறிந்ததும், நான் உடனடியாக கேரளாவில் உள்ள சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்தேன். அவர்களின் உதவியுடன், இந்த செயல்களுக்கு பின்னால் உள்ள நபர் அடையாளம் காணப்பட்டார்.

    தமிழ்நாட்டை சேர்ந்த 20 வயது பெண் இந்த செயலின் பின்னல் உள்ளார் என்பது எனக்கு தெரிந்ததும் நான் அதிர்ச்சியடைந்தேன். அவளுடைய இளம் வயதையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு அவளுடைய அடையாளத்தை வெளியிட நான் விரும்பவில்லை.

    இருப்பினும், ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துவதற்காக இந்த சம்பவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். இணையத்தில் பிறரை துன்புறுத்தவோ, அவதூறு செய்யவோ அல்லது வெறுப்பைப் பரப்பவோ யாருக்கும் உரிமை கிடையாது.

    ஆன்லைனில் ஒவ்வொரு செயலும் ஒரு தடயத்தை விட்டுச்செல்கிறது. இது தொடர்பாக நான் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளேன். மேலும் சம்பந்தப்பட்ட நபர் தனது செயல்களின் விளைவுகளை எதிர்கொள்வார். சைபர் தொல்லை என்பது தண்டனைக்குரிய குற்றம்" என்று தெரிவித்துள்ளார்.

    • மோசடி நடைபெறுகிறது என அறிந்தும் ஆன்லைனில் பணத்தை பலர் செலுத்தி ஏமாறுகின்றனர்.
    • உண்மையான பட்டாசு விற்பனையாளர்கள் பெயரில் போலியான வலைத்தளங்களை உருவாக்கி இணைய வழி குற்றவாளிகள் மோசடியில் ஈடுபடுகின்றனர்.

    புதுச்சேரி:

    ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் பழக்கம் நாளுக்கு நாள் பொதுமக்களிடையே பெருகிவருகிறது.

    குறிப்பாக பண்டிகை காலங்களில் வீட்டில் இருந்தே பொருட்களை வாங்க பொதுமக்கள் விருப்பம் காட்டுகின்றனர். ஆனால் இதில் மோசடி நடைபெறுகிறது என அறிந்தும் ஆன்லைனில் பணத்தை பலர் செலுத்தி ஏமாறுகின்றனர்.

    இதில் பட்டாசு பொருட்களும் விதி விலக்கல்ல. இதனை தடுக்க சைபர் கிரைம் போலீசார் தொடர்ச்சியான எச்சரிக்கை மற்றும் அறிவுரை விடுத்தும் மீண்டும் மீண்டும் போலியான ஆன்லைன் பட்டாசு விளம்பரங்களை நம்பி பணம் செலுத்தி பணத்தை இழந்து வருகின்றனர்.

    இந்த வருட தீபாவளி பண்டிகை வருவதற்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் நிறைய புகார்கள் வந்து கொண்டு இருக்கிறது.

    உண்மையான பட்டாசு விற்பனையாளர்கள் பெயரில் போலியான வலைத்தளங்களை உருவாக்கி இணைய வழி குற்றவாளிகள் மோசடியில் ஈடுபடுகின்றனர்.

    எனவே பொதுமக்கள் இணையத்தில் எந்த பொருளை வாங்கும் முன்பும் அதனுடைய உண்மை, தன்மையையும் அதை விற்பவருடைய முழு விவரங்களையும் நன்கு சோதித்து பார்த்தபின் வாங்க வேண்டும் என்றும் இணைய வழி அறிவிப்புகளை நம்பி பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம் என புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • ஆன்லைன் ஆர்டர் தொடர்பாக முகவரி கேட் Code-ஐ பெற்றுள்ளனர்.
    • அதன்பின் போனை ஹேக் செய்து, வாட்ஸ்ஆப் மெசேஜ் அனுப்பி பணம் பறித்துள்ளனர்.

    கன்னட நடிகர் உபேந்திர ராவ் மற்றும் அவரது மனைவியின் போன் நம்பர் ஹேக் செய்யப்பட்டுள்ளது. சைபர் மோசடியின் முயற்சியாக மர்ப நபர்கள் போனை ஹேக் செய்துள்ளனர் என புகார் தெரிவித்துள்ளார்.

    இன்று காலை எனது மனைவி போனுக்கு, ஆன்லைன் ஆர்டர் தொடர்பாக தெரியாத நம்பரில் இருந்து போன் வந்துள்ளது. போனை எடுத்த பின்னர்தான், சைபர் மோசடி எனத் தெரிவந்துள்ளது. உடனே போன் ஹேக் செய்யப்பட்டது. அதேபோல் என்னுடைய போனும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. எங்களுடைய போனில் இருந்து, பணம் தொடர்பாக போன் செய்தால், பதில் அளித்து பணம் செலுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

    என்னுடைய நண்பர்கள் சிலர் என்னுடைய போனில் இருந்து சென்ற மெசேஜ் காரணமாக, 2 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் கவனமாக இருக்கும்படி கேட்டுள்ளார்.

    இது தொடர்பாக உபேந்திர ராவ் கூறுகையில் "காலையில் யாரோ ஓருவர் எனக்கு போன் செய்து, டெலிவரி நபருக்கு அட்ரஸ் கிடைக்கவில்லை. இதனால் தங்களுக்கு வந்த Code-ஐ அனுப்புங்கள், அந்த நபர் (டெலிவரி நபர்) உடனடியாக உங்களை அழைப்பார் என பேசினார்.

    எனக்கு கொஞ்சம் சந்தேகம் வந்தது. ஆனால், அவசரமாக அவ்வாறு செய்தேன். அவர்கள் என்னுடைய போனை ஹேக் செய்தனர். அதன்பின் என்னுடைய வாட்ஸ்அப்வில் உள்ளவர்களக்கு அவசரம் எனக் கூறி பணம் அனுப்புமாறு மெசேஜ் அனுப்பினார்கள். 2 மணி நேரத்தில் திருப்பி அனுப்புவதாக கூறி 55 ஆயிரம் கேட்டு தகவல் அனுப்பினர்.

    இது தொடர்பான நாங்கள் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். சைபர்கிரைன் துறையின் உயர்அதிகாரியிடம் பேசினோம். அவர்கள் மெசேஜ்-யை ஓபன் செய்ய வேண்டாம். பணம் அனுப்ப வேண்டாம் எனக் கூறினர்" என்றார்.

    • பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
    • ஒருவர் மற்றொருவரை போனில் அழைத்தால் வாய்ஸ் மெசேஜ் மூலம் வழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

    நாடு முழுவதும் இணையத்தள குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. முதியவர்கள் மற்றும் பெண்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து அவர்களிடமிருந்து பணத்தைப் பறிக்கும் செயல்களும் அதிக அளவில் நடைபெற்று வருகின்றது. மேலும், பங்குச்சந்தையில் அதிக லாபம், பரிசு விழுந்துள்ளது, வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஆன்லைனில் மோசடி செய்வதும் அதிகரித்து வருகிறது.

    இது குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்த வகையில், ஒருவர் மற்றொருவரை போனில் அழைத்தால் வாய்ஸ் மெசேஜ் மூலம் வழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

    அந்த வாய்ஸ் மெசேஜில், இணையதள குற்றவாளிகளிடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள்... என்று கூறும். அவசர தேவைக்காக ஒருவரை போனில் அழைக்கும்போது முதலில் வாய்ஸ் மெசேஜ் வரும். அதன்பின் தான் கால் ரிங் போகும். ஒரு நாளைக்கு பல தடவைக்கு மேல் இந்த வாய்ஸ் மெசேஜ் வந்ததால் மக்கள் இணையதளத்தில் புகார் தெரிவித்தனர்.

    பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து தினமும் இரு முறை மட்டுமே சைபர் கிரைம் விழிப்புணர்வு தொடர்பான வாய்ஸ் மெசேஜ் ஒலிக்கும் என்றும் விரைவில் இது அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த வாய்ஸ் மெசேஜ் முழுமையாக நீக்குவது குறித்தும் மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • நாளுக்கு நாள் அவதூறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்புகிறார்.
    • வருகிற ஜூன் 26-ந்தேதி ஸ்ரீவித்யா நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை சைதாப்பேட்டை 11-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அதிமுகவைச் சேர்ந்த வக்கீல் தமிழ்ச்செல்வன் தாக்கல் செய்துள்ள மனுவில், திராவிட நட்புக் கழகம் என்ற அமைப்பின் துணைத் தலைவராக இருக்கும் ஸ்ரீவித்யா என்ற தோழர் ஸ்ரீவித்யா, தனியார் யூடியூப் சேனலுக்கு அண்மையில் பேட்டி அளித்துள்ளார்.

    அப்போது முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியுள்ளார். இந்த யூடியூப் சேனலின் முக்கிய நோக்கமே ஆளும் திமுக கட்சித் தலைவர்களை ஆதரிப்பது தான். அதேபோல, எதிர்க்கட்சியான அதிமுக தலைவர்களையும், பிராமணர்களையும், பாரதிய ஜனதா தலைவர்களையும் அவதூறாக பேசுவதை ஸ்ரீவித்யா வழக்கமாகக் கொண்டுள்ளார்.

    நாளுக்கு நாள் இது போன்ற அவதூறு கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்புகிறார். அதை லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பார்க்கின்றனர். இதன் மூலம் அரசியல் தலைவர்களின் மரியாதையை கௌரவத்தை சீர்குலைக்கிறார். எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதால் அதிமுகவில் உள்ள லட்சக்கணக்கான தொண்டர்களின் மனம் புண்பட்டுள்ளது. அதனால் கடந்த பிப்ரவரி 23-ந்தேதி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தேன். ஸ்ரீவித்யாவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது அவதூறு வீடியோவை சமூக வலைதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கூறியிருந்தேன். ஆனால் இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நான் கொடுத்த புகார் மீது அடிப்படை நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஸ்ரீவித்யா மீது மனுதாரர் கொடுத்த புகார் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் வருகிற ஜூன் 26-ந்தேதி ஸ்ரீவித்யா நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

    • கீழ்த்தரமான வகையில் நடந்துகொண்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் மனுவில் கூறி உள்ளார்.
    • தன் மனைவி அந்த இணைப்பை துண்டித்து நம்பரை பிளாக் செய்ததாக பாஜக தலைவர் பேட்டி

    சித்ரதுர்கா:

    கர்நாடக மாநிலத்தின் மூத்த பாஜக எம்.எல்.ஏ.  திப்பாரெட்டி (வயது 75). இவருக்கு அறிமுகம் இல்லாத பெண் ஒருவர் கடந்த மாதம் 31ம் தேதி வாட்ஸ்அப் வீடியோ காலில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அந்த பெண் தனது ஆடைகளை அவிழ்க்கத் தொடங்கி உள்ளார். இதனால் பதறிப்போன திப்பாரெட்டி, இணைப்பை துண்டித்துள்ளார். அதன்பின்னர் அந்த பெண், திப்பாரெட்டிக்கு ஆபாசமான வீடியோவை அனுப்பி உள்ளார்.

    இதையடுத்து திப்பாரெட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தன்னிடம் கீழ்த்தரமான வகையில் நடந்துகொண்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் மனுவில் கூறி உள்ளார்.

    பின்னர் இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'எனக்கு முதல் அழைப்பு வந்தபோது, நான் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை. சில நிமிடங்களுக்குப் பிறகு, மீண்டும் அழைப்பு வந்தது. அப்போதுதான் அந்த பெண் தன் ஆடைகளை அவிழ்க்க ஆரம்பித்தார். உடனே போனை எனது மனைவியிடம் கொடுத்தேன். அவர் இணைப்பை துண்டித்து அந்த நம்பரை பிளாக் செய்தார். காவல்துறை ஆய்வாளரின் ஆலோசனையின் பேரில், காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் புகார் செய்தேன்" என்றார்.

    • கைதான வாலிபர் அரவிந்துக்கு 17 நாட்கள் சிறை தண்டனை விதித்து எழும்பூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
    • ரூ.6500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை கே.கே.நகரை சேர்ந்த அரவிந்த் என்ற வாலிபர் தனது வலைதள பக்கத்தில் முதல்-அமைச்சர் பற்றியும், காவல்துறை பற்றியும் அவதூறான வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் முடிந்தால் தன்னை பிடியுங்கள் என்று போலீசுக்கு சவாலும் விட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து கடந்த மாதம் 12-ந்தேதி அரவிந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதுதொடர்பான வழக்கு விசாரணை எழும்பூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. சென்னை சைபர் கிரைம் போலீஸ் தனிப்படையினர் இன்ஸ்பெக்டர் வினோத் தலைமையில் விசாரணை நடத்தி 48 நாட்களில் விசாரணையை விரைந்து முடித்தனர்.

    இதையடுத்து கைதான வாலிபர் அரவிந்துக்கு 17 நாட்கள் சிறை தண்டனை விதித்து எழும்பூர் கோர்ட்டு உத்தரவிட்டது. ரூ.6500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 15 நாட்களில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தும் சாட்சிகளை முறையாக ஆஜர்படுத்தியும் விசாரணையை போலீசார் துரிதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • பெண்ணின் செல்போன் எண்ணுக்கு ஒரு வாட்ஸ் அப் குறுந்தகவல் வந்தது.
    • உங்களது படத்தை மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்தவர் 28 வயது பட்டதாரி பெண். இவர் கடந்த ஏப்ரல் மாதம் ஆன்லைன் செயலி மூலம் ரூ.20 ஆயிரம் லோன் வாங்கி இருந்தார்.

    பின்னர் அந்த லோனை அதே மாதத்தில் திருப்பி செலுத்தி விட்டார்.

    இந்த நிலையில் இந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு ஒரு வாட்ஸ் அப் குறுந்தகவல் வந்தது.

    அதில் என் வங்கி கணக்குக்கு பணம் செலுத்த வேண்டும்.

    இல்லையென்றால் உங்களது படத்தை மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தினார்.

    இருந்தாலும் மீண்டும் அதே எண்ணில் இருந்து அந்த பெண்ணின் படத்தை மார்பிங் செய்து அனுப்பப்பட்டது.

    இதனை அந்தப் பெண் பார்த்ததும் அந்த குறுந்தகவல் அழிக்கப்பட்டது. மீண்டும் தொடர்பு கொண்டு பணம் செலுத்த வேண்டும் என்று மர்ம நபர் மிரட்டல் விடுத்தார்.

    இவ்வாறாக மர்ம நபர் தொடர்ந்து மிரட்டல் விடுப்பதும், அந்தப் பெண் பணம் அனுப்புவதாக இருந்தார்.

    பல தவணைகளாக ரூ.16 லட்சத்து 31 ஆயிரத்து 340 பணத்தை அந்தப் பெண் செலுத்தியுள்ளார்.

    தொடர்ந்து மிரட்டல் வரவே அந்தப் பெண் தஞ்சை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராம்தாஸ் (பொ) வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 55,982 சிம்கார்டுகளை முடக்கியுள்ளனர்.
    • சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்த பல முயற்சிகளை எடுத்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் போலி சிம்கார்டுகள் மற்றும் மோசடியை தடுக்க சைபர் கிரைம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழகத்தில் சைபர் கிரைம் போலீசார் தொலைத்தொடர்பு துறையின் முக அடையாளம் காணும் சாப்ட்வேர் மூலம் ஆய்வு செய்தனர்.

    இதில் கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 55,982 சிம்கார்டுகளை முடக்கியுள்ளனர்.

    ஒருவர் 403 சிம்கார்டுகளை வாங்கியுள்ளார். ஒரு பெண்ணுக்கு 34 கார்டுகள் உள்ளது. ஒரு சிறுவன் 5 கார்டுகள் வாங்கியது அம்பலமாகியுள்ளது. இந்த சிம் கார்டுகள் அனைத்தும் வியாபாரிகள் மூலம் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

    இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 1100 சிம்கார்டு வியாபாரிகளை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    போலி சிம்கார்டுகளை வியாபாரிகள் எதற்காக விற்பனை செய்தனர் என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதுகுறித்து சைபர் கிரைம் ஏ.டி.ஜி.பி சஞ்சய் குமார் கூறியதாவது:-

    பல சிம்கார்டுகளை வாங்கியவர்களின் அடையாளம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை அவர்களை விரைவில் கண்டுபிடித்து விடுவோம்.

    யாருடைய சிம்கார்டுகள் முடக்கப்பட்டதோ அவர்கள் அவற்றைத் திரும்பப் பெறுவதற்கு அதிகாரிகளிடம் தொடர்புடைய ஆவணங்களை சமர்ப்பித்து உண்மைத்தன்மையை நிரூபிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

    போலி சிம்கார்டுகள் வாங்கியவர்களின் விவரங்களை ஆராய்ந்து வருகிறோம். அவர்கள் கிரிமினல் அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கண்டறிந்தால், அவர்களைக் கண்காணிக்க அந்தந்த போலீஸ் பிரிவுகளை எச்சரிப்போம்."

    சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்த பல முயற்சிகளை எடுத்துள்ளது. ஹெல்ப்லைன் 1930 அல்லது நேஷனல் சைபர் கிரைம் ரிப்போர்டிங் போர்டல் (என்.சி.ஆர்.பி) மூலம் சந்தேக நபர்களின் வங்கி கணக்குகள் விரைவாக முடக்கப்பட்டு, மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழக்க விடாமல் தடுப்போம்.

    2022-ம் ஆண்டில், போலி மோசடி அழைப்பு மூலம் பொதுமக்கள் ரூ.288 கோடியை இழந்துள்ளனர், அதில் ரூ.106 கோடி முடக்கப்பட்டுள்ளது, 2023-ம் ஆண்டில் முதல் 3 மாதங்களில், ரூ.67 கோடி பொதுமக்களிடமிருந்து போலி மோசடி கும்பல் அபேஸ் செய்துள்ளனர். அதில் ரூ.49 கோடி முடக்கப்பட்டுள்ளது.

    1930 ஹெல்ப்லைன் 24 மணிநேரமும் வேலை செய்கிறது. சராசரியாக ஒரு நாளில் 600 அழைப்புகள் வருகிறது. இதில் 250 புகார் பதிவு செய்யப்படுகிறது.

    பெரும்பாலான மோசடிகள் தகவல்களை திருடும் புதிய மென்பொருள் மூலம் நடந்துள்ளது.

    இதுபோன்ற குற்றங்களில் தொடர்புடைய செல்போன் எண்கள் தொடர்ந்து செயல்படுவதால் சந்தேக நபர்கள் மக்களை எளிதில் ஏமாற்றி வருகின்றனர்.

    1930 ஹெல்ப்லைனை விரிவுபடுத்த மாநில அரசு ரூ.9.28 கோடி அனுமதித்துள்ளது. பணியாளர்களின் எண்ணிக்கை 8-ல் இருந்து 30 ஆக உயர்த்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாலிபர் ஒருவர் வண்ணார்பேட்டையில் உள்ள தியேட்டருக்கு படம் பார்ப்பதற்காக வந்துள்ளார்.
    • இருட்டான பகுதிக்கு அழைத்து சென்று அந்த வாலிபரை தாக்கி அவரிடமிருந்த செல்போன் மற்றும் பணம் உள்ளிட்டவற்றை பறித்து கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.

     நெல்லை:

    நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தியேட்டருக்கு சம்பவத்தன்று வாலிபர் ஒருவர் படம் பார்ப்பதற்காக வந்துள்ளார். இதனிடையே அவரது செல்போனில் உள்ள ஒரு செயலியை பதிவிறக்கம் செய்ததில் சிலர் அவருக்கு அறிமுகம் ஆகியுள்ளனர். அவர்களில் 2 பேர் தியேட்டர் அருகே வந்துள்ளனர். அப்போது திடீரென அந்த வாலிபரை இருட்டான பகுதிக்கு அழைத்து சென்று அவரை தாக்கி அவரிடமிருந்த செல்போன் மற்றும் பணம் உள்ளிட்டவற்றை பறித்து கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து அந்த வாலிபர் பாளை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீசாரின் விசாரணையில் பணத்தை பறித்து சென்றது சீவலப்பேரி பகுதியை சேர்ந்த பிரேம்சங்கர்(வயது 25) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    • 1930 என்ற உதவி எண் மூலமாக இந்தாண்டு 21,760 புகார் அழைப்புகள்.
    • 42 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    தமிழகத்தில் கடந்த 10 மாதங்களில் நடந்த சைபர் கிரைம் மோசடி குறித்து தமிழக சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

    இதில், தமிழகம் முழுவதும் கடந்த 10 மாதங்களில் மட்டும் சைபர் கிரைம் மோசடிகளில் சிக்கி ரூ.425 கோடியை பொதுமக்கள் இழந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

    இதில், தமிழகம் முழுவதும் 65,426 சைபர் கிரைம் புகார்கள் பெறப்பட்டுள்ளது.

    1930 என்ற உதவி எண் மூலமாக இந்தாண்டு 21,760 புகார் அழைப்புகள் வந்துள்ளதாக சைபர் கிரைம் தெரிவித்துள்ளது.

    திருடுபோன ரூ.338 கோடியை தமிழக சைபர் கிரைபர் போலீசார் வங்கி மூலமாக முடக்கி உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

    மேலும், 42 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 29,530 சிம்கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

    • சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரப்பட்டிருக்கிறது.
    • குழந்தை கடத்தல் குறித்த தகவல்கள் வெளியாவது உண்மை இல்லை. தேவையற்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

    குழந்தை கடத்தல் தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் குழந்தை கடத்தல் குறித்து தேவையற்ற வதந்திகளை யாரும் பகிர வேண்டாம் என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், பர்தா அணிந்து பெண் வேடமிட்ட ஆண்கள் சுற்றி வருவதாகவும், இக்கடத்தலுக்காக வடமாநிலங்களில் இருந்து 400 பேர் தமிழகத்தில் குவிந்துள்ளதாகவும், கடத்தப்படும் சிறுவர், சிறுமிகளின் உடல் உறுப்புகளை ஒரு கும்பல் எடுப்பதாக கூறப்படும் தகவல்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அதிவேகமாக பரவி வருகின்றன

    இதற்கு காவல்துறை சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், குழந்தைகள் கடத்தல் என்ற வதந்திகளை பரப்புபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சைபர் கிரைம் குறித்த ஹேக்கத்தான் போட்டி நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் சான்றுகளையும் வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இதுபோன்ற ஹேக்கத்தான் போட்டிகளில் பல்வேறு தொழில்நுட்பங்களையும் யுக்திகளையும் கண்டுபிடித்து வருகின்றனர். அவை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். குழந்தை கடத்தல் தொடர்பான தகவல்கள் வெளியாவது உண்மை இல்லை. இது குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட்டுவிட்டது. தேவையற்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். அதே போல் உண்மையில்லாத தகவல்களை யாரும் பகிர வேண்டாம்." என்று அவர் தெரிவித்தார்.

    ×