என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manusmriti"

    • நீதியை நிலைநாட்ட வேண்டிய நீதிமன்ற உயரியப் பொறுப்பில் இருப்பவர்களே, பிற்போக்குத்தனமான கருத்துக்களைக் கொண்ட மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டிப் பேசுவது, கடும் கண்டனத்திற்குரியது
    • நீதித்துறையின் மாண்பு என்பது அரசியலமைப்பைப் பாதுகாப்பதில் இருக்கிறதே தவிர, பழங்காலத்து ஒடுக்குமுறை விதிகளை நியாயப்படுத்துவதில் இல்லை.

    "நீதித்துறையின் மாண்பு என்பது அரசியலமைப்பைப் பாதுகாப்பதில் இருக்கிறதே தவிர, பழங்காலத்து ஒடுக்குமுறை விதிகளை நியாயப்படுத்துவதில் இல்லை எனவும், மனுஸ்மிருதியை முன்னுதாரணம் காட்டுவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் எதிரானது" எனவும் மனுஸ்மிருதியை மேற்கேள்காட்டி வழக்கு ஒன்றில் நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 

    "இந்தியத் திருநாட்டின் இறையாண்மையும், ஜனநாயகமும் அண்ணல் அம்பேத்கர் வழங்கிய உன்னதமான அரசியலமைப்புச்  சட்டத்தின் அடிப்படையிலேயே இயங்கி வருகின்றன. சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை ஆகியவற்றை உயிர்நாடியாகக் கொண்ட இந்த நாட்டில், நீதியை நிலைநாட்ட வேண்டிய நீதிமன்ற உயரியப் பொறுப்பில் இருப்பவர்களே, பிற்போக்குத்தனமான கருத்துக்களைக் கொண்ட மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டிப் பேசுவது, கடும் கண்டனத்திற்குரியது.

    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், குடிமக்களைப் பாதுகாப்பது ஒரு அரசனின் உயரிய கடமை என மனுஸ்மிருதி வரையறுத்துள்ளதாகத் தனது பேச்சில் குறிப்பிட்டிருப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாகும். மனுஸ்மிருதி என்பது ஒரு குறிப்பிட்ட வர்ணாசிரமக் கோட்பாடுகளையும், ஜாதியப் படிநிலைகளையும், பெண் அடிமைத்தனத்தையும் போதிக்கும் ஒரு பழமைவாத நூல் என்பதை உலகம் அறியும். அத்தகைய ஒரு நூலை, ஜனநாயக நாட்டின் ஆட்சிமுறைக்கு அடிப்படையாகச் சித்தரிப்பது என்பது, இந்த நாட்டின் பன்முகத்தன்மையையும் மதச்சார்பற்ற கொள்கையையும் அடியோடு சிதைக்கும் செயலாகும்.

    இது, இந்தியாவில் வாழும் கோடிக்கணக்கான சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கு எதிரானது மட்டுமல்லாமல், இந்திய மற்றும் தமிழ்நாட்டின் சமூக நீதிக் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானது. நீதித்துறையின் மாண்பு என்பது அரசியலமைப்பைப் பாதுகாப்பதில் இருக்கிறதே தவிர, பழங்காலத்து ஒடுக்குமுறை விதிகளை நியாயப்படுத்துவதில் இல்லை. நீதிபதியின் இத்தகைய கருத்துக்கள் நாட்டு மக்களிடையே தேவையற்றக் குழப்பத்தையும், நீதித்துறையின் மீதான நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தும் என்பதால், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உடனடியாகத் தனது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    ×