என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நடக்கும் என்று நம்புவோமாக! - ஜனவரியில் வேளச்சேரி- பரங்கிமலை பறக்கும் ரெயில் சேவை
    X

    நடக்கும் என்று நம்புவோமாக! - ஜனவரியில் வேளச்சேரி- பரங்கிமலை பறக்கும் ரெயில் சேவை

    • 11 ஆண்டுகள் பணிகள் எதுவும் நடைபெறாமல் முடங்கிக் கிடந்தன.
    • இத்திட்டத்தின் செலவு தற்போது ரூ.730 கோடியாக உயர்ந்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் கடற்கரை-வேளச்சேரி இடையே பறக்கும் ரெயில் சேவை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சேவையை பரங்கிமலை வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது.

    வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை நீட்டித்தால் புழுதிவாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம் ஆகிய பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கருதி இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

    5 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்தத் திட்டம் 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரூ.495 கோடி ஒதுக்கப்பட்டு திட்டப்பணிகள் நடைபெற்று வந்தன. தூண்கள் அமைக்கப்பட்டு இந்த பணிகள் நடைபெற்று வந்த நிலையில் ஆதம்பாக்கம் - பரங்கிமலை இடையே 500 மீட்டர் பாதையை அமைக்கும் பணியில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம், நீதிமன்ற வழக்கு போன்றவற்றால் இந்த பணியில் தடை ஏற்பட்டது. இதனால் 11 ஆண்டுகள் பணிகள் எதுவும் நடைபெறாமல் முடங்கிக் கிடந்தன.

    பின்னர் 2020-ம் ஆண்டு மீண்டும் பணிகள் தொடங்கின. இத்திட்டத்தின் செலவு தற்போது ரூ.730 கோடியாக உயர்ந்துள்ளது. 17 ஆண்டுகள் கிடப்பில் கிடந்த இந்த பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ஜனவரி மாதத்தில் இந்த பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது குறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரெயில் திட்டப் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. ஜனவரி மாதம் இறுதியில் இந்தப் பாதையில் சேவை தொடங்கும். அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்த பின்னர் தேதி உறுதி செய்யப்படும் என்றனர்.

    வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் சேவை விரைவில் தொடங்க இருப்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீண்ட கால தடைக்கு பிறகு இந்தத் திட்டம் பயன்பாட்டிற்கு வருகிறது. இது லட்சக்கணக்கான மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஜனவரி மாதத்தில் ரெயில் சேவை தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ரெயில்வேதுறை தற்போது செய்து வருகிறது.

    Next Story
    ×