search icon
என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது.
    • ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.

    தமிழகம் முழுவதும் இன்று 12 இடங்களில் வெயில் சதம் அடித்தது.

    இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.

    வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    தமிழ்நாட்டில் இன்று 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவான இடங்கள் பின்வருமாறு:-

    திருச்சி 107.78, மதுரை விமான நிலையம் 107.06, கரூர் பரமத்தி 106.7, பாளையங்கோட்டை - 106.7 மதுரை நகரம் 106.16, ஈரோடு 105.44, வேலூர் - 104.9, திருத்தணி 104.18, தஞ்சாவூர் - 104, மீனம்பாக்கம் -101.48, சேலம் - 100.94, கோவை - 100.4 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.

    • அவரின் 50 வது படமான 'ராயன்' திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து இருக்கிறார்.
    • சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

    திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் என்று தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்தார் தனுஷ். தற்பொழுது அவரின் 50 வது படமான 'ராயன்' திரைப்படத்தை அவரே இயக்கி நடித்து இருக்கிறார்.

    சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

    ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி உள்ளிட்டோர் நடிப்பதாக படக்குழு போஸ்டருடன் அறிவித்து வெளியிட்டது. படத்தின் போஸ்டரை ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிட்டனர்.

    படத்தின் முதல் பாடல் வரும் மே 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 2 அப்பாடலிற்கு 'அடங்காத அசுரன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளதாக அப்டேட்டை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படம் எம்மாதிரியான கதைக்களத்துடன் இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்தியாவில் ஐஐடிகள் இருப்பது போல் அமெரிக்காவில் SAT என்ற உயர்கல்வி தேர்வுகள் இருக்கின்றன.
    • இங்கு கேள்வி யாருக்கு தகுதி இருக்கிறது' என்பது அல்ல, 'யார் அதிகாரத்தில் இருக்கிறார்' என்பதே கேள்வி.

    அண்மையில் தகுதித்தேர்வு குறித்து ராகுல்காந்தி பேசிய வீடியோ வைரலானது.

    அந்த வீடியோவில், "இந்தியாவில் ஐஐடிகள் இருப்பது போல் அமெரிக்காவில் SAT என்ற உயர்கல்வி தேர்வுகள் இருக்கின்றன. அந்தத் தேர்வுகள் அமல்படுத்தப்பட்ட போது வெள்ளையர்கள் தான் அதிக மதிப்பெண்கள் பெற்றனர். கறுப்பினத்தவரும் லத்தீன் அமெரிக்கர்களும் தேர்ச்சி பெற முடியவில்லை. அவர்களுக்கு தகுதியும் அறிவும் இல்லை எனப் பேசினார்கள்.

    பிறகொரு நாள் ஒரு பேராசிரியர் வந்தார். அதே தேர்வுத்தாள்களை கறுப்பினத்தவர்களைக் கொண்டு தயார் செய்து, கறுப்பினத்தவர்களை எழுத வைத்தார். வெள்ளை மாணவர்கள் எவரும் தேர்ச்சி பெற முடியவில்லை.

    எனவே இங்கு கேள்வி யாருக்கு தகுதி இருக்கிறது' என்பது அல்ல, 'யார் அதிகாரத்தில் இருக்கிறார்' என்பதே கேள்வி."

    உயர் சாதியினர் நடத்தும் தேர்வுகளில் தலித்துகள் தோல்வி அடைகிறார்கள் என்று சொன்னால், ஒன்று செய்வோம், தலித்துகளை தேர்வுத் தாளை தயாரிக்க வைத்து, உயர் சாதியினரை தேர்வு எழுதச் சொல்லுங்கள்" என்று ராகுல்காந்தி பேசுகிறார்.

    தகுதியின் சிக்கலான விஷயங்களை ராகுல்காந்தி மிக எளிமையாக விளக்கியுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவை பகிர்ந்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடமும் எஸ்.பி. தலைமையிலான போலீசார் இன்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • எரிந்த நிலையில் கிடந்த ஜெயக்குமாரின் வாயில் பாத்திரங்களை துலக்கும் இரும்பு பிரஸ் ஒன்று இருந்தது.

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் எரிந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் 8 தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுதொடர்பாக அவர் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடமும், ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடமும் எஸ்.பி. தலைமையிலான போலீசார் இன்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் ஒன்று கிடைத்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எரிந்த நிலையில் கிடந்த ஜெயக்குமாரின் வாயில் பாத்திரங்களை துலக்கும் இரும்பு பிரஸ் ஒன்று இருந்தது. தற்போது போலீசார் ஜெயக்குமார் வீடு மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில் இரும்பு பிரசின் பிளாஸ்டிக் கவர் அவரது வீட்டின் உள்ளே உள்ள மாட்டுக்கொட்டகையில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதனை கைரேகை நிபுணர்கள் உதவியுடன் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்நிலையில் தற்போது ஜெயம் ரவி நடிக்க இருந்த வேடத்தில் அசோக் செல்வன் கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • இதனால் 'தக்லைப்' படத்தில் இருந்து விலகிய ஜெயம் ரவி மீண்டும் அப்படத்தில் இணைய வில்லை என்பது தெரியவந்து உள்ளது.


     நடிகர் கமல்ஹாசன் 34 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து நடிக்கும் புதிய படம் 'தக் லைப்'. இந்த படம் 'ஆக்ஷன்' படம் ஆகும்.

    இப்படத்தில் கமல்ஹாசன் , நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்து உள்ளனர். இப்படத்திற்கு  ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார் .




    இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. இப்படத்தில் கமல் 3 வேடங்களில் நடிக்க உள்ளார்.

    இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் கமல் கலந்து கொண்டார். அதன்பின் கமல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.




    இப்படத்தில் கமிட்டாகி இருந்த ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் கால்சீட் பிரச்சினையால் வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை தக்லைப் படத்தில் இணைத்து விட்டதாக கூறப்பட்டது.

    இந்நிலையில் தற்போது ஜெயம் ரவி நடிக்க இருந்த வேடத்தில் அசோக் செல்வன் கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் 'தக்லைப்' படத்தில் இருந்து விலகிய ஜெயம் ரவி மீண்டும் அப்படத்தில் இணைய வில்லை என்பது தெரியவந்து உள்ளது.

    தற்போது 'தக்லைப்' படத்தில் கமலுடன் சிம்பு, அசோக் செல்வன் நடித்து வருகிறார்கள்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • உங்களின் ஒரு வாக்கு 500 வருட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து பிரமாண்டமான ராமர் கோவிலை உருவாக்கியது.
    • காங்கிரசின் நோக்கம் எவ்வளவு ஆபத்தானது என்பதைப் புரிந்து கொள்ள, 20 முதல் 25 ஆண்டுகளாக அக்கட்சியில் இருந்து வெளியேறியவர்களைக் கேட்டு பாருங்கள்.

    போபால்:

    பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேச மாநிலம் கர்கோனில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

    உங்கள் ஒரு வாக்கு இந்தியாவை 5வது பெரிய பொருளாதாரமாக மாற்றியது. இந்தியாவின் உலகளாவிய செல்வாக்கை அதிகரித்தது. 70 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது.

    ஆதிவாசி மகளை ஜனாதிபதியாக்கியது. பெண்களுக்கு இடஒதுக்கீடு அளித்தது. ஊழல்வாதிகளை சிறைக்கு அனுப்பியது. இலவச உணவு மற்றும் சிகிச்சைக்கு உத்தரவாதம் அளித்தது.

    இளைஞர்களின் எதிர்காலத்தை உயர்த்தியது. வரம்பற்ற வாய்ப்புகளை உருவாக்கியது. 25 கோடி மக்களை வறுமையில் இருந்து விடுவித்தது. உங்களின் ஒரு வாக்கு 500 வருட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து பிரமாண்டமான ராமர் கோவிலை உருவாக்கியது.

    பாகிஸ்தானில், இந்தியாவுக்கு எதிராக ஜிகாத் செய்யப் போவதாக பயங்கரவாதிகள் மிரட்டி வருகின்றனர். மோடிக்கு எதிராக வாக்களிக்க சிலரையும் காங்கிரஸ் கேட்டுக் கொள்கிறது.

    குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களிடம் மோடிக்கு எதிராக வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கின்றனர். அவர்கள் அவநம்பிக்கையால் சூழப்பட்டிருக்கிறார்கள். வாக்கு ஜிகாத் ஏற்கத்தக்கதா? இதை ஜனநாயகத்தில் அனுமதிக்க முடியுமா? காங்கிரஸ் எனக்கு எதிராக வாக்களிக்கும் ஜிகாத்துக்கு அழைக்கிறது. அவர்களை நான் அம்பலப்படுத்தியதால், எனக்கு எதிரான துஷ்பிரயோகங்களை செய்கி றார்கள்.

    வரலாற்றின் திருப்பு முனையில் இந்தியா உள்ளது, வாக்கு ஜிகாத் பலிக்குமா அல்லது ராம ராஜ்ஜியமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.


    காங்கிரசின் நோக்கம் எவ்வளவு ஆபத்தானது என்பதைப் புரிந்து கொள்ள, 20 முதல் 25 ஆண்டுகளாக அக்கட்சியில் இருந்து வெளியேறியவர்களைக் கேட்டு பாருங்கள். ராமர் கோவிலுக்கு சென்றதற்காக தான் மிகவும் துன்புறுத்தப் பட்டதாகவும், அதனால் காங்கிரசை விட்டு வெளியேறியதாகவும் ஒரு பெண் கூறினார்.

    காங்கிரசை முஸ்லீம் லீக் மற்றும் மாவோயிஸ்டுகள் அபகரித்துள்ளனர் என்று மற்றொருவர் கூறினார். இன்னொருவர் கூறும் போது, ஷா பானோ வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அவரது தந்தை மாற்றியது போல் ராமர் கோவில் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை காங்கிரஸ் இளவரசர் (ராகுல்காந்தி) மாற்ற விரும்புவதாக தெரிவித்தார்.

    மக்களின் நம்பிக்கை அல்லது தேச நலன் பற்றி காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கவலைப்படவில்லை. இவர்களுக்குள் தேச விரோத கருத்துக்களை வெளியிடுவதில் போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு கட்டமாக காங்கிரசுக்கு பாகிஸ்தான் மீதான அன்பு அதிகரித்து வருகிறது. காங்கிரஸ் முன்னாள் முதல்வர் ஒருவர், நமது ராணுவம் தீவிரவாத தாக்குதல் நடத்துகிறது என்றும் பாகிஸ்தான் அப்பாவி என்றும் கூறினார்.

    மும்பை தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இல்லை என மற்றொரு காங்கிரஸ் தலைவர் கூறினார். பாகிஸ்தான் மீது அன்பையும், நமது ராணுவத்தின் மீது வெறுப் பையும் காங்கிரஸ் காட்டுகிறது. இது ஏன் என்று காங்கிரசை கேட்க விரும்புகிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையும்.
    • சென்னை உள்பட சில மாவட்டங்களில் வெப்ப தாக்கத்தை தாங்க முடியவில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. முன்பு எப்போதும் இல்லாத வகையில் வெப்ப அலை வீசி வருகிறது. வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட கொளுத்தி வருகிறது.

    கரூர் பரமத்தியில் அதிகபட்சமாக 43.5 டிகிரி செல்சியஸ் அதாவது 110.3 பாரன்ஷீட்டர் டிகிரி வெயில் பதிவானது. ஈரோடு, திருச்சி, வேலூர், திருத்தணி, திருப்பத்தூர், தர்மபுரி, மதுரை, சேலம், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் 104, 105 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் உள்ளது.

    வெயிலின் தாக்கம் ஒருபுறம் இருந்தாலும் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. அது அப்பகுதி மக்களுக்கு ஆறுதலை தருகிறது. ஆனால் தொடர்ந்து வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை தாக்கம் இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

    அநேக இடங்களில் இயல்பை விட அதிகமாகவும் ஓரிரு இடங்களில் மிக மிக அதிமாகவும் வெயில் பதிவாகி உள்ளது.

    இந்த நிலையில் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும்.

    நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

    நாளை ஒரு சில இடங்களில் லேசான மழையும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    கோடை மழை ஒரு சில பகுதிகளில் பெய்ய தொடங்கியதால் நாளை முதல் 10-ந் தேதி வரை வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையும்.

    அதேநேரத்தில் உள் மாவட்டங்களில் 4 நாட்கள் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக வெப்பநிலை இருக்கும். இன்று இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெப்பம் சுட்டெரித்தது.

    பொதுவாக கத்திரி வெயில் காலத்தில் கோடை மழை பெய்யும். ஆனால் இந்த வருடம் எதிர்பார்த்த அளவு மழை பெய்ய வில்லை. அதிலும் கடலோர மாவட்டங்களில் அறவே மழை இல்லாததால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் வெப்ப தாக்கத்தை தாங்க முடியவில்லை.

    • அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜ.க ராமர் பெயரை பயன்படுத்துகிறது.
    • கிழக்கிந்திய கம்பெனி போல பா.ஜ.க. செயல்படுகிறது.

    தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.

    செவெல்லா தொகுதியில் பிரசாரத்தில் அவர் பேசியதாவது:-

    பா.ஜ.க.வினரின் பார்வையில் கடவுள் ஓட்டுக்காகவும் ராமர் இருக்கைக்காகவும் நிற்கிறார். அரசியல் ஆதாயத்திற்காக பா.ஜ.க ராமர் பெயரை பயன்படுத்துகிறது.

    பா.ஜ.க. தலைவர்கள் போலியான இந்துக்கள். ஆனால் எங்களுக்கு ராமர் எப்போதும் ராமர் தான். அயோத்தி கோவிலில் சிலை பிரதிஷ்டை முன்பு ராமரை அவமதித்து புனித அரிசி விநியோகம் செய்து பா.ஜ.க. தலைவர்கள் ஏமாற்றினர். ரேசன் கடைகளில் சேகரிக்கப்படும் அரிசியில் மஞ்சள் தூள் கலந்து அதனை புனித அரிசி என ஏமாற்றி வினியோகம் செய்தனர். அரசியல் சட்டத்தை மாற்றவும் இட ஒதுக்கீடுகளை ரத்து செய்யவும் பா.ஜ.க. சதி செய்கிறது.

    கிழக்கிந்திய கம்பெனி போல பா.ஜ.க. செயல்படுகிறது. அதன் தலைவர்கள் நாட்டையும் மக்களையும் அம்பானி அதானிகளிடம் அடகு வைக்க விரும்புகிறார்கள்.

    பா.ஜ.க. என்பது பிரிட்டிஷ் ஜனதா கட்சி.யாரை கேள்வி கேட்டாலும் கைது செய்து விடுவோம் என மிரட்டுகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • எந்த நேரத்திலும் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
    • பஞ்சாப், உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 54 தொகுதிகளுக்கு ஜூன் 1-ந்தேதி 7-ம் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி (தி.மு.க.) மரணம் அடைந்ததை தொடர்ந்து இந்த தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் 7-வது கட்டமாக ஜூன் 1-ந்தேதி நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுடன் விக்கிரவாண்டி தொகுதிக்கும் தேர்தல் நடத்தினால் அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளது.

    அதன் அடிப்படையில் எந்த நேரத்திலும் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலுடன் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

    பஞ்சாப், உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 54 தொகுதிகளுக்கு ஜூன் 1-ந்தேதி 7-ம் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 7ம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்குவது தொடர்பாக தேர்தல் அறிவிப்பாணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லை.

    • இன்றைய தேர்தலில் வாக்களிக்கும் அனைவரும் தங்களது வாக்குரிமையை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    • வாக்களிக்க வந்த பிரதமர் மோடியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவேற்றார்.

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் கடந்த மாதம் 19-ந்தேதி மற்றும் 26-ந்தேதிகளில் இரண்டு கட்ட வாக்குப்பதிவு நிறைவுபெற்றது.

    இதையடுத்து, உத்தரபிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனிய பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில், அகமதாபாத்தில் காந்திநகர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குசாவடியில் பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார். வாக்களிக்க வந்த பிரதமர் மோடியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவேற்றார்.

    முன்னதாக, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு, இன்றைய தேர்தலில் வாக்களிக்கும் அனைவரும் தங்களது வாக்குரிமையை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். வாக்காளர்களின் தீவிர பங்கேற்பு நிச்சயமாக தேர்தலை விறுவிறுப்பாக மாற்றும் என எக்ஸ் தள பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டு இருந்தார்.


    • இந்த 3 ஆண்டு காலத்தில் ஸ்டாலின் என்றால் செயல்... செயல்... செயல்..ன்னு நிரூபித்து காட்டியுள்ளேன்.
    • நாடும், மாநிலமும் பயன்பெற எந்நாளும் உழைப்பேன் என்று உறுதியேற்று ஆட்சிப்பயணத்தை உங்கள் வாழ்த்துக்களுடன் தொடர்வேன்...

    சென்னை :

    தி.மு.க. ஆட்சி அமைத்து 3-ம் ஆண்டு நிறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    "இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி!"

    மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும்தான் இன்னும் இன்னும் உழைக்கத் தூண்டுகிறது!

    நம்பிக்கையோடு முன்செல்கிறேன்...

    பெருமையோடு சொல்கிறேன்...

    "தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு!"

    நான் உங்கள் நல்ஆதரவையும், நம்பிக்கையும் பெற்று நம் மாநிலத்திற்கு முதலமைச்சராக பொறுப்பேற்று மூன்று ஆண்டு நிறைவுபெற்று 4-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிற நாள் மே 7.

    இந்த 3 ஆண்டு காலத்தில் நான் செய்து கொடுத்த சாதனைகள், திட்டங்கள், நன்மைகள் என்னென்னு தினந்தோறும் பயன் அடைந்த மக்களின் முகங்களில் இருக்கும் மகிழ்ச்சியே சாட்சி. திராவிட மாடல் அரசு செய்து கொடுத்த திட்டங்களை நான் சொல்றத விட பயன் அடைந்த மக்கள் சொல்வது தான் உண்மையான பாராட்டு. உளப்பூர்வமான வாழ்த்து.

    ஸ்டாலின் என்றால் உழைப்பு... உழைப்பு... உழைப்பு...ன்னு சொன்னாரு எங்களையெல்லாம் ஆளாக்கிய அன்பு தலைவர் கலைஞர். இந்த 3 ஆண்டு காலத்தில் ஸ்டாலின் என்றால் செயல்... செயல்... செயல்..ன்னு நிரூபித்து காட்டியுள்ளேன்.

    எப்போதும் நான் சொல்றது இது என்னோட அரசு அல்ல நமது அரசு. அந்த வகையில் நமது அரசு 4-ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. நாடும், மாநிலமும் பயன்பெற எந்நாளும் உழைப்பேன் என்று உறுதியேற்று ஆட்சிப்பயணத்தை உங்கள் வாழ்த்துக்களுடன் தொடர்வேன்... என்று பேசியுள்ளார்.


    • 88 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ந் தேதி தேர்தல் நடந்தது.
    • வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    இந்தியாவில் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல்கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடந்தது. மிகப்பெரிய கட்டமான இந்த தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியின் 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு முடிந்து விட்டது.

    அடுத்ததாக 88 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் கேரளாவின் மொத்தமுள்ள 20 தொகுதிகளும், கர்நாடகாவின் 14 தொகுதிகளும் முக்கியமானவை.

    இதைத் தொடர்ந்து, உத்தரபிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனிய பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

    வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    இதனிடையே பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குஜராத்தில் தங்களது வாக்குகளை செலுத்துகிறார்கள்.

    ×