என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • 'டிராகன்', 'டியூட்' என அடுத்தடுத்து ஹிட் கொடுத்து வரும் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், அடுத்து 'எல்.ஐ.கே.' படம் வெளியாக இருக்கிறது.
    • புதிய படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

    'கோமாளி' படத்தின் மூலமாக இயக்குனராக அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக 'லவ் டுடே' என்ற படத்தை இயக்கி, நடித்தார்.

    அதன்பிறகு 'டிராகன்', 'டியூட்' என அடுத்தடுத்து ஹிட் கொடுத்து வரும் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், அடுத்து 'எல்.ஐ.கே.' படம் வெளியாக இருக்கிறது. புதிய படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதற்கிடையில் பிரதீப் ரங்கநாதனிடம், 'இயக்குனர், நடிகர். எது பிடித்திருக்கிறது? எதில் உங்கள் கவனம் இருக்கிறது?' என்று கேட்கப்பட்டது. அதற்கு, ''இப்போதைக்கு நடிப்பதில் மட்டுமே என் கவனம் இருக்கிறது'', என்றார்.

    மேலும் அவர் கூறும்போது, ''இயக்குனர் ஆகமாட்டேன் என்று சொல்லமுடியாது. நல்ல கதை ரெடியாகி விட்டது என்றால் இயக்குனராக என்னை எதிர்பார்க்கலாம். எல்லாவற்றையுமே சூழ்நிலை தான் உருவாக்கும். ஒரு கதை என் மனதில் இருக்கிறது. அதில் பாதி எழுதி முடித்திருக்கிறேன். அது முடிந்ததும் முடிவை சொல்கிறேன்'', என்றார்.

    • இலங்கை பொத்துவில்லுக்கு 200 கி.மீ. தொலைவில் நிலவும் காற்றழுத்தம் 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
    • தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை இலங்கையின் திரிகோணமலை அருகே கரையைக் கடக்கும்.

    இலங்கை பொத்துவில்லுக்கு 200 கி.மீ. தொலைவில் நிலவும் காற்றழுத்தம் 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.

    தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை.

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெறக் கூடும் என முன்பு கூறியிருந்த நிலையில், தற்போது அந்த அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் திரும்பப் பெற்றுள்ளது.

    நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

    • விபத்து ஒன்றுக்கு அதிகபட்சம் 7 நாட்களுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம்வரை கட்டணமில்லா சிகிச்சை அளிக்கப்படும்.
    • உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்புகள் ஏற்படுவதை குறைக்கும் நோக்கத்தில் இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது.

    புதுடெல்லி:

    சாலை விபத்துகளில் காயமடைபவர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் திட்டம், கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் 14-ந் தேதி, சண்டிகாரில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தால் பரிசோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது. பின்னர், அத்திட்டம் 6 மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

    இந்நிலையில், விரைவில் நாடு முழுவதும் இத்திட்டத்தை பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைப்பார் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி கூறினார்.

    அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களின் போக்குவரத்து மந்திரிகளின் வருடாந்திர கூட்டம், நிதின் கட்காரி தலைமையில் நடந்தது. அதில், சாலை பாதுகாப்பு, பயணிகளுக்கான வசதிகள் ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டது. அதன்பிறகு நிதின் கட்காரி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது இத்தகவலை தெரிவித்தார். கட்டணமில்லா சிகிச்சை அளிக்கும் திட்டத்தின்படி, நாட்டின் எந்தவகையான சாலையிலும் மோட்டார் வாகன பயன்பாட்டின் மூலம் ஏற்படும் விபத்துகளில் காயமடைபவர்களுக்கு நபர் ஒருவருக்கு விபத்து ஒன்றுக்கு அதிகபட்சம் 7 நாட்களுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம்வரை கட்டணமில்லா சிகிச்சை அளிக்கப்படும்.

    உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்புகள் ஏற்படுவதை குறைக்கும் நோக்கத்தில் இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது.

    அதே சமயத்தில், கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் பரிசோதனை அடிப்படையில் அமலுக்கு வந்ததில் இருந்து 20 சதவீத கட்டணமில்லா சிகிச்சை கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதாக பாராளுமன்றத்தில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது.

    • ரஷியாவிடம் சில நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தும்படி வலியுறுத்த வேண்டும்.
    • புதினின் போர் எந்திரத்துக்கு தீனி போடும் நாடுகளை தண்டிக்க இம்மசோதாவை கொண்டுவருவது காலத்தின் அவசியம்.

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது.

    இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதாக உறுதியளித்து இருந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பதவிக்கு வந்தவுடனே அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    இதற்காக ஒரு அமைதி திட்டத்தை உருவாக்கி உள்ள டிரம்ப், அதுகுறித்து ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளுடன் பேச ஸ்டீவ் விட்காப், தனது மருமகன் ஜேர்டு குஸ்னர் ஆகியோரை சிறப்பு தூதர்களாக நியமித்து உள்ளார்.

    ஒருபுறம் அமைதி திட்டத்தை முன்வைத்து வரும் டிரம்ப், மறுபுறம் போரை நிறுத்த மறுக்கும் ரஷியாவை வழிக்கு கொண்டு வர மறைமுக அழுத்தமும் கொடுத்து வருகிறார்.

    இதில் முக்கியமாக, உக்ரைனுடன் போரிட ரஷியாவிடம் பணம் இல்லாவிட்டால் போர் நின்றுவிடும் என்று அவர் கருதுகிறார். எனவே ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளை தண்டிக்க அவர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    அதன்படி ரஷியாவிடம் இருந்து இந்தியா மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதை தடுப்பதற்காக இந்திய பொருட்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரி விதித்தார்.

    இதன் தொடர்ச்சியாக, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் கைவிடுவதற்காக, அந்நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

    இது தொடர்பாக புதிய மசோதா ஒன்றை அமெரிக்க செனட் உறுப்பினர் லிண்ட்சே கிரஹாம் மற்றொரு உறுப்பினர் புளுமெந்தாருடன் இணைந்து உருவாக்கி இருக்கிறார்.

    ரஷியா பொருளாதார தடை மசோதா எனப்படும் இந்த மசோதாவுக்கு டிரம்ப் தற்போது ஒப்புதல் அளித்து உள்ளார். இது விரைவில் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இது குறித்து லிண்ட்சே கிரஹாம் தனது 'எக்ஸ்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    7-ந் தேதி, ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசினேன். பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசித்தோம். அதைத்தொடர்ந்து, ரஷிய பொருளாதார தடை மசோதாவுக்கு டிரம்ப் பச்சைக்கொடி காட்டினார்.

    அந்த மசோதா மீது மற்றொரு செனட் உறுப்பினர் புளுமெந்தார் உள்ளிட்டோருடன் நான் பல மாதங்களாக பணியாற்றினேன்.

    ரஷியாவிடம் சில நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தும்படி வலியுறுத்த வேண்டும். அதற்கு ஜனாதிபதி டிரம்ப் சம்மட்டி அடியாக அந்த நாடுகள் மீது அதிக வரி விதிக்க திட்டமிட்டுள்ளார்.

    இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்க டிரம்புக்கு இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.

    இந்த நாடுகள் ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால்தான் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷியாவுக்கு பணம் கிடைக்கிறது. எனவே, போரை நிறுத்துவதற்காக இம்மசோதா கொண்டுவரப்படுகிறது.

    அடுத்த வார தொடக்கத்தில் மசோதா மீது வாக்கெடுப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

    அமைதியை ஏற்படுத்த உக்ரைன் சலுகை அளிக்கிறது. ஆனால், ரஷிய அதிபர் புதின் நிறைய பேசுகிறார். அப்பாவிகளை கொன்று வருகிறார். எனவே, புதினின் போர் எந்திரத்துக்கு தீனி போடும் நாடுகளை தண்டிக்க இம்மசோதாவை கொண்டுவருவது காலத்தின் அவசியம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    முன்னதாக ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்து விட்டதாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் குவாத்ரா தன்னிடம் தெரிவித்ததாக கடந்த வாரம் லிண்ட்சே கிரஹாம் கூறியிருந்தார். அதனால், வரியை குறைக்கும்படி டிரம்பிடம் கூறுமாறு கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அபராதமாக இந்திய பொருட்கள் மீது ஏற்கனவே டிரம்ப் விதித்த 25 சதவீத வரியால் இந்திய ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

    தற்போது 500 சதவீத வரி விதிப்புக்கு டிரம்ப் ஒப்புதல் அளித்திருப்பதன் மூலம் இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.

    • சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் இடம்பெற்றுள்ளார்.
    • சிறந்த வீராங்கனைக்கான பட்டியலில் இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா இடம்பிடித்துள்ளார்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி ஐசிசி கவுரவித்து வருகிறது.

    இந்நிலையில், டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்வதற்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

    அதன்படி, டிசம்பர் மாத சிறந்த வீரர் விருதுக்கான பெயர் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் ஜஸ்டின் கிரீவ்ஸ், ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், நியூசிலாந்தின் ஜேக்கப் டஃபி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    அதேபோல் டிசம்பர் மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான பெயர் பட்டியலில் இந்தியாவின் ஷபாலி வர்மா, தென் ஆப்பிரிக்காவின் லாரா வால்வோர்ட் மற்றும் சுனே லூஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இவர்களில், டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் சிறந்த வீராங்கனையை தேர்வு செய்து அறிவிக்கப்படும்.

    • ஒருநாள் போட்டி தொடர் வரும் 11-ம் தேதி தொடங்குகிறது.
    • டி20 தொடர் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது.

    புதுடெல்லி:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளது.

    ஒருநாள் போட்டி தொடர் வரும் 11-ம் தேதி தொடங்குகிறது. டி20 தொடர் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது. நாக்பூர், ராய்ப்பூர், கவுகாத்தி, விசாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் 5 டி20 போட்டிகள் நடைபெற உள்ளன.

    இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான முதல் 3 டி20 போட்டிகளில் இருந்து இந்தியாவின் அதிரடி வீரரான திலக் வர்மா விலகி உள்ளார்.

    திலக் வர்மாவுக்கு ராஜ்கோட்டில் வயிற்றுப் பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இன்று காலை மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது சீராகவும், நல்ல முன்னேற்றத்துடனும் உள்ளார்.

    மீதமுள்ள 2 டி20 போட்டிகளில் திலக் வர்மா பங்கேற்பது பயிற்சி மற்றும் திறன் நிலைகளுக்குத் திரும்பும் போது அவரது முன்னேற்றத்தின் அடிப்படையில் மதிப்பிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நாங்கள் எப்போதும் ஒருவரின் பலவீனத்தை கையில் எடுத்து நெருக்கடி கொடுக்கமாட்டோம்.
    • சம்பவம் நடந்தன்று நிகழ்விடத்தில் இருந்தவர் விஜய்.

    ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள, அவரது கடைசிப்படம் எனக்கூறப்படும் ஜனநாயகன் பொங்கலை முன்னிட்டு நாளை(ஜன.9) வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தணிக்கை சான்று விவகாரத்தால் நாளை வெளியாக முடியாத சூழல் உருவாகியுள்ளது. மேலும் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

    டிச.19 அன்றே படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போதுவரை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக அரசியல் தலைவர்கள் உட்பட பிரபலங்கள் பலரும் கருத்து தெவித்து வருகின்றனர். ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக விஜய் இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

    இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் ஹெச்.ராஜாவிடம், கரூர் விவகாரம் தொடர்பான சிபிஐ சம்மன், தற்போது தணிக்கை சான்றிதழ் இழுபறி இவையெல்லாம் விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவருவதற்காக கொடுக்கப்படும் நெருக்கடிகளா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர்,

    "தணிக்கைத் துறை ஒரு சுயதீன அமைப்பு. அவர்கள் படத்தை பார்த்து சான்றிதழ் வழங்குவார்கள். பாஜக நெருக்கடி கொடுக்க நினைத்திருந்தால் செப்.27-லேயே கொடுத்திருக்கும். மனிதாபிமானத்தோடு மத்திய அரசு செயல்பட்டது. பாஜக நெருக்கடி கொடுத்திருந்தால் இன்று விஜய் வெளியே வந்திருக்கமாட்டார். நாங்கள் எப்போதும் ஒருவரின் பலவீனத்தை கையில் எடுத்து நெருக்கடி கொடுக்கமாட்டோம். கரூர் விவகாரத்தை சிபிஐ விசாரிக்கவேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சம்பவம் நடந்தன்று நிகழ்விடத்தில் இருந்தவர் விஜய். அதனால் விசாரணைக்கு அவரை அழைத்திருப்பர். வேறு எந்த உள்நோக்கமும் இதில் இல்லை.

    நான் ஆவேசமாக பேசும்போது முதலமைச்சருக்கு affect ஆகிடுச்சு.

    தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவரும், நடிகருமான பாக்யராஜ், சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு மற்றும் அவரது பிறந்தநாளையொட்டி நேற்று விழா ஒன்று நடைபெற்றது.

    அதில் திரைப்பிரபலங்கள் பலரும் பங்கேற்று இருந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விழாவில் பங்கேற்று பாக்யராஜ்-க்கு வாழ்த்து தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-

    இன்னொரு ஒரு நிகழ்வு. என் வாழ்க்கையிலே பாக்யராஜை மறக்க முடியாது. இங்க வந்ததுக்கு முக்கிய காரணம் கூட இதை சொல்லணும். 1995-ல் சிவாஜி சாருக்கு மலேசியாவில் விருது கொடுத்தார்கள்.

    அதற்காக அவரை தமிழ் திரைப்படத்துறை பாராட்டணும், அது அரசும் சேர்ந்து பாராட்டணும் என்று சொல்லி சேப்பாக்கத்தில் மிகப்பெரிய விழா வைத்திருந்தார்கள். அதற்கு சிறப்பு விருந்தினர் முதலமைச்சர் தான் அவர் தலைமையில் தான் விழா.

    விழாவில் நன்றி தெரிவித்து நான் பேசுகையில், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்த்து கொஞ்சம் ஆவேசமாக பேசினேன். எப்பவுமே இந்த கோபத்துக்கு ஆயுள் கம்மி. ஆனால் கோபத்தில் உதிர்ந்த வார்த்தைக்கு ஆயுள் ரொம்ப அதிகம். இதனால் தான் கோபத்தில் இருக்கும்போது வார்த்தைகளை அளந்து, அளந்து பேசணும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

    நான் ஆவேசமாக பேசும்போது முதலமைச்சருக்கு affect ஆகிடுச்சு. விழாவில் சிவாஜி சார் இருந்தாலும் கூட நான் ஏதோ பேசிட்டேன். அதன்பிறகு என்பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஸ்ரீதேவி ஏன் இப்படியெல்லாம் என்று கேட்டார்கள்.

    ஆனால் எனக்கு ஒன்னும் புரியவில்லை. அதன் பிறகு கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் என்னை நிறைய பேர் சூழ்ந்து தலையில் அடிக்கிறாங்க, திட்டுறாங்க... எனக்கு ஒன்னும் புரியவில்லை.

    அந்த இடத்தில் எஸ்.ஐ. எல்லாம் இருக்காங்க. ஆனா அவங்க எதுவும் செய்யவில்லை. அப்போ பாக்யராஜ் ஓடி வந்து அவர்களை பார்த்து கத்தி என்னை வாகனத்தில் ஏற்றி பாதுகாப்பாக அனுப்பி வைத்தார். அதை என்னால் மறக்கவே முடியாது. அதற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் கூட ஒன்றும் கிடையாது. அருமையான மனிதர், நீங்க நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிரதமர் மோடி அவர்களே உங்கள் உள்துறை அமைச்சரை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும்
    • புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தித் தரவுகளைத் திருடுவது "அரசியல் பழிவாங்கல்"

    மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் உத்தி வகுப்பாளரான ஐ-பேக் (I-PAC) நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை இன்று தீவிர சோதனைகளை மேற்கொண்டது. கொல்கத்தாவின் சால்ட் லேக் செக்டர் V-ல் உள்ள ஐ-பேக் (I-PAC) அலுவலகம் மற்றும் லௌடன் வீதியில் உள்ள அதன் இயக்குநர் பிரதீக் ஜெயின் இல்லம் உட்பட சுமார் 10 இடங்களில் சோதனைகள் நடைபெற்றது. மம்தா பானர்ஜியின் தேர்தல் உத்தி குழுவின் முக்கிய உறுப்பினராக ஜெயின் பரவலாக விவரிக்கப்படுகிறார் .

    சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரி கடத்தல் ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் இந்தச் சோதனைகள் நடத்தப்படுவதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சோதனை தொடர்பான செய்திகள் வெளிவந்ததும் பானர்ஜியின் ஆதரவாளர்கள் சால்ட் லேக் அலுவலகத்திற்கு வெளியே கூடத் தொடங்கியுள்ளனர். 

    மேலும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே, பிரதீக் ஜெயினின் இல்லத்திற்கு சென்றுள்ளார். மேலும் அங்கு அவர் சில ஆவணங்கள் மற்றும் ஹார்ட் டிஸ்க்குகளை கையில் எடுத்துக்கொண்டு வெளியே வந்ததாகவும் கூறப்படுகிறது. 

    இதனைத்தொடர்ந்து விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாகவும், முக்கிய ஆதாரங்களை மம்தா பானர்ஜி எடுத்துச் சென்றுவிட்டதாகவும் கூறி அமலாக்கத்துறை கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல்கள் மற்றும் தேர்தல் ரகசியங்களை அபகரிக்கவே மத்திய அரசு இந்தச் சோதனையை நடத்துவதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்தச் சோதனையைக் கண்டித்து நாளை மாநிலம் தழுவிய போராட்டங்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

    தன்மீதான அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டு குறித்து பேசிய மம்தா பானர்ஜி, தேர்தல் வியூகங்கள், வேட்பாளர் பட்டியல்கள் மற்றும் கட்சியின் ரகசியத் தரவுகளைச் சேகரிக்கவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமலாக்கத்துறையை  பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.

    அமலாக்கத்துறையின் இந்த சோதனை பின்னணியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாதான் உள்ளார். அங்கிருந்து அமலாக்கத்துறை எனது கட்சியின் ஆவணங்களை எடுத்துக் கொள்கிறார்கள். சோதனையின்போது அங்கு காவலர்கள் யாரும் இல்லை. ஒரு பக்கம் SIR என்ற பெயரில் பெயர்கள் நீக்கப்படுகின்றன, மறுபுறம் அவர்கள் ஆவணங்களைச் சேகரிக்கிறார்கள். வேட்பாளர் பட்டியல், கட்சியின் வியூகம் மற்றும் கட்சியின் திட்டங்களைச் சேகரிப்பது அமலாக்கத்துறை மற்றும் உள்துறை அமைச்சரின் கடமையா? நானும் அதேபோல பா.ஜ.க அலுவலகங்களில் சோதனை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றினால் என்ன நடக்கும்? என கேள்வி எழுப்பினார். 

    மேலும் பா.ஜ.க-விற்குத் துணிவிருந்தால் தன்னை அரசியல் ரீதியாகவும், ஜனநாயக முறையிலும் எதிர்கொள்ள வேண்டும் என்றும், புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தித் தரவுகளைத் திருடுவது "அரசியல் பழிவாங்கல்" என்றும் அவர் சாடினார்.  மேலும் "பிரதமர் மோடி அவர்களே உங்கள் உள்துறை அமைச்சரை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். ஜனநாயக முறையில் எங்களுடன் மோதி தோற்கடிக்கப் பாருங்கள். விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி எங்களது ஆவணங்கள், தரவுகளை திருடுகிறீர்கள். இதையெல்லாம் செய்வதால், உங்களிடம் இருக்கும் இடங்களையும் இழப்பீர்கள்." என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

    • கிரீன்லாந்து அதன் மக்களுக்கே சொந்தமானது.
    • ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு ஆதரவும் ஒற்றுமையும் உண்டு.

    டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமான கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு சொந்தமானது என்று அதிபர் டிரம்ப் கூறி வருகிறார்.

    கிரீன்லாந்தை கைப்பற்ற ராணுவ நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் பரிசீலனையில் உள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்தது. இதற்கு டென்மார்க் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இந்தநிலையில் கிரீன்லாந்து விவகாரத்தில் டிரம்ப்புக்கு ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    கிரீன்லாந்து அதன் மக்களுக்கே சொந்தமானது. டென்மார்க் அல்லது கிரீன்லாந்தின் ஒப்புதல் இல்லாமல் எந்த முடிவும் எடுக்க முடியாது. அவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு ஆதரவும் ஒற்றுமையும் உண்டு.

    சைப்ரஸ், லத்தீன் அமெரிக்கா, கிரீன்லாந்து, உக்ரைன் அல்லது காசா என எங்கு நடந்தாலும், சர்வதேச சட்ட மீறல்களை ஐரோப்பிய ஒன்றியத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சினிமா மற்றும் கருத்துக்களை கட்டுப்படுத்தும் ஆயுதமாக சென்சார் வாரியம் பயன்படுத்தப்படுகிறது.
    • ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய நிறுவனங்கள் மிரட்டல் கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன.

    ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் பொங்கலையொட்டி நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்த நிலையில், தணிக்கை சான்றிதழ் இதுவரை வழங்கப்படாததால் படம் நாளை வெளியாகாது என்றும் விரைவில் புதிய வெளியீட்டு தேதி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து இருந்தது.

    இதனிடையே, 'ஜன நாயகன்' படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள 'பராசக்தி' படத்திற்கும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காததற்கு அரசியல் காரணமே என்று கூறி பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், சினிமா மற்றும் கருத்துக்களை கட்டுப்படுத்தும் ஆயுதமாக சென்சார் வாரியம் பயன்படுத்தப்படுவதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ஆர்எஸ்எஸ் அமைப்பின் கருத்துக்களைச் பரப்பும் படங்கள் மக்களிடம் எடுபடவில்லை, யாரும் அதை நம்பவும் இல்லை, பார்க்கவும் ஆர்வம் காட்டவில்லை.

    இந்தத் தோல்வியைத் துணிச்சலாக எதிர்கொள்ள முடியாத மோடி-ஷா அரசு, இப்போது அதிகாரத்தைப் பயன்படுத்தி சினிமாத் துறையைக் கட்டுப்படுத்தப் பார்க்கிறது. இப்போது அவர்களின் இலக்கில் சினிமாத் துறை சிக்கியுள்ளது

    அதிகாரத்தின் முன்பு கலை மண்டியிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது ஜனநாயகம் நிலைத்திருக்க முடியாது. சினிமா மற்றும் கருத்துக்களை கட்டுப்படுத்தும் ஆயுதமாக சென்சார் வாரியம் பயன்படுத்தப்படுகிறது.

    அதே நேரத்தில் பாஜக ஆர்எஸ்எஸ்ன் பிரச்சாரங்கள் 'கலாச்சாரம்' என்ற பெயரில் திணிக்கப்படுகின்றன.

    ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய நிறுவனங்கள் மிரட்டல் கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன. ED, CBI, IT-ஐ தொடர்ந்து தற்போது சென்சார் வாரியம் கூட எதிர்ப்புகளை மௌனமாக பயன்படுத்தப்படுகிறது.

    சினிமாவுக்கு அரசியல் அனுமதி தேவையில்லை, சினிமாவுக்கு அரசியல் அமைப்பு பாதுகாப்பு தேவை என்று கூறியுள்ளார்.

    ஏற்கனவே தமிழக அரசியலில் த.வெ.க.வுடன் காங்கிரஸ் இணைய உள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், தற்போது விஜயின் 'ஜன நாயகன்' படத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குரல் எழுப்பியுள்ளது புதிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இந்தி திணிப்புக்கு எதிரான மொழிப்போரை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் பராசக்தி.

    சிவகார்த்திகேயனின் 25வது படமான இதில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இந்தி திணிப்புக்கு எதிரான மொழிப்போரை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் டிரெய்லர் ஜனவரி 5 வெளியானது. இதுவரை இந்த டிரெய்லர் 53 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

    இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா குரலில் பராசக்தியின் இடம்பெற்ற சேனைக் கூட்டம் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

    ×