கடவுள் வழிபாட்டை விட கதாநாயகன் வழிபாடு மேன்மையாக உள்ளது- சீமான்

ஜனநாயகம் கொலை செய்யப்பட்டு கேடு கெட்ட பணநாயகம் வலுவாக வேரூன்றி விடுகிறது. பள்ளி, கல்லூரிகளில் அரசியல் பேசக்கூடாது என தடைபோடப்பட்டுள்ளது. ஆனால் சினிமா பற்றி பேசலாம்.
கடவுள் வழிபாட்டை விட கதாநாயகன்  வழிபாடு மேன்மையாக உள்ளது- சீமான்
Published on

ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் உருவாக இருக்கும் 'டெக்ஸ்லா' படத்தின் பூஜை சென்னையில் இன்று நடந்தது. விழாவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காசு கொடுத்து வாக்குகளை பெறுவதை நாங்கள் இழிவான அரசியல் என்கிறோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்று கேட்கும் நிலையில் இருக்கிறது. நல்ல ஆட்சி கொடுத்துவிட்டால் வாக்குக்கு காசு ஏன் கொடுக்க வேண்டிய நிலை உருவாகுது?

வாக்குக்காக வேட்பாளர் ரூ.15 கோடி முதலீடு செய்கிறார் என்றால் அது மக்கள் சேவைக்காகவா? அவரது லாப தேவைக்கா? முதலீடு செய்யும் போது அவர் முதலாளி ஆகி விடுகிறார். அந்த இடத்தில் மக்கள் சேவை செத்து போய் விடுகிறது.

ஜனநாயகம் கொலை செய்யப்பட்டு கேடு கெட்ட பணநாயகம் வலுவாக வேரூன்றி விடுகிறது. பணம் இருக்கிறவன் தான் அதிகாரத்துக்கு வர முடியும் என்றால் முதலாளிகளுக்கான அதிகாரம் உருவாக்கப்படுமே தவிர உழைக்கும் மக்களுக்கான அரசியலோ, அதிகாரமோ இந்த நிலத்தில் இருக்காது.

நல்ல ஆட்சி என்பது வெறும் சொல்லில் தான் உள்ளது. செயலில் இல்லை. எனக்கு ஓட்டு போட்டார்கள். உங்களுக்கு ஓட்டு போட்டார்களா? வாங்கினீர்களா?

பள்ளி, கல்லூரிகளில் அரசியல் பேசக்கூடாது என தடைபோடப்பட்டுள்ளது. ஆனால் சினிமா பற்றி பேசலாம். இறைவழிபாட்டை தூற்றி திரைவழிபாட்டை போற்றுகிறீர்கள். கடவுள் வழிபாட்டை விட கதாநாயகன் வழிபாடு மேன்மை என்கிறார்கள். அரசு விழாக்களுக்கு அறிஞர்களோ, சான்றோர்களோ, கல்வியாளர்களோ கலந்து கொள்வதில்லை. திரைப்பட இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள் செல்கிறார்கள்.

கல்லூரி விழாக்களில் திரைப்பட நடிகர்களை அழைத்து வருகிறார்கள். சினிமா பாடல்களை ஒலிக்க விட்டு ஆடுகிறார்கள். சினிமா ஒரு பெரிய மதமாக மாறிவிட்டது. கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சினிமா இல்லையா? அங்கு சினிமா துறையினர் ஆளமுடியவில்லையே? என்.டி.ராமாராவ் வந்தது விபத்து. தமிழ்நாட்டை போல் திரைக்கவர்ச்சியில் மூழ்கிய மாநிலமாக எந்த மாநிலமும் கிடையாது என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com