என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
    • சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக உருவெடுத்தது.

    இந்தப் புயலுக்கு டிட்வா என பெயரிடப்பட்டது. இந்த டிட்வா புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னை கடற்கரையை நெருங்கியிருக்கும் நிலையில், இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    மேலும் இந்த டிட்வா புயல் அடுத்து இரண்டு நாட்களுக்கு சென்னை கடற்கரை அருகே நிலை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், வட தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மணிக்கு 3 கிமீ வேகத்தில் நகர்ந்த நிலையில் கடந்த 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் நீடிக்கிறது.

    • சிறப்பு சலுகைகள் விதிகளை மீறவோ, செல்லப்பிராணிகளை சபைக்குள் கொண்டு வரவோ அனுமதிக்கவில்லை
    • கடிப்பவர்கள் உள்ளேதான் இருக்கிறார்கள்"

    நாடாளுமன்றத்திற்கு காங்கிரஸ் எம்.பி ரேணுகா சவுத்ரி தனது நாய்க்குட்டியுடன் வந்த சம்பவம் விவாதத்தை தூண்டியது.

    குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் ரேணுகா சவுத்ரி, காரில் தனது நாய்க்குட்டியுடன் நாடாளுமன்ற வளாகத்திற்குள் வருகை புரிந்தார். இதுபெரும் விவாதமாக உருவெடுத்த நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரேணுகா சவுத்ரி, "இது ஒரு பிரச்சனையா? அது ஒரு சின்ன உயிரினம். யாரையும் கடிக்காது. கடிப்பவர்கள் உள்ளேதான் இருக்கிறார்கள்" என தெரிவித்தார். 

    இதுகுறித்து பூஜ்ஜிய நேரத்தில் பேசிய பாஜக எம்பி ஜகதாம்பிகா பால், "சிறப்பு சலுகைகள் விதிகளை மீறவோ, செல்லப்பிராணிகளை சபைக்குள் கொண்டு வரவோ அனுமதிக்கவில்லை. பொறுப்புக்கூறல் இருக்க வேண்டும்," என தெரிவித்தார்.

    பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா பேசுகையில், "ரேணுகா சௌத்ரி நாடாளுமன்றத்தையும், எம்.பி.க்களையும் அவமதித்துள்ளார். அவர் ஒரு நாயுடன் நாடாளுமன்றத்திற்கு வருகிறார், இது பற்றி கேட்டால், 'கடிப்பவர்கள் உள்ளே இருக்கிறார்கள்' என்று கூறுகிறார். அதாவது, நாடாளுமன்றம், நாடாளுமன்ற ஊழியர்கள் மற்றும் எம்.பி.க்கள் அனைவரும் நாய்கள் என்பது அவரது கருத்து" என்று கடுமையாகச் சாடினார். இந்த சம்பவம் தொடர்பாக ரேணுகா சவுத்ரி மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் தெரிவித்தனர். 

    இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) மற்றும் டெல்லி காற்று மாசுபாடு போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே மீண்டும் பலத்த மோதல் ஏற்பட்டது. 

    டிசம்பர் 19 வரை நடைபெறும் குளிர்கால கூட்டத்தொடரில் 15 அமர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. மேலும் இந்த குளிர்கால கூட்டத்தொடரில் அணுசக்தி மசோதா 2025, இந்திய உயர்கல்வி ஆணைய மசோதா, 2025 போன்ற முக்கிய சட்டமன்ற முன்மொழிவுகள், UGC, கார்ப்பரேட் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, காப்பீட்டு சட்டங்கள் (திருத்தம்) மசோதா மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் (திருத்தம்) மசோதா உட்பட 13 புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

    மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய கலால் (திருத்த) மசோதா மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் மசோதா, 2025 ஆகியவற்றை அறிமுகப்படுத்த உள்ளார். இந்த அமர்வின் போது, தற்போதைய SIR, டெல்லி குண்டுவெடிப்பு, மாசுபாடு மற்றும் வெளியுறவுக் கொள்கை தொடர்பான விஷயங்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளது. 

    • ராஜஸ்தானை தொடர்ந்து குஜராத் உயர் நீதிமன்றமும் ஆறுமாதம் இடைக்கால ஜாமின் வழங்கியது
    • ஆசாராம் நிலையாக இருப்பதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பு வழக்கறிஞர் வாதம்

    பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆசாராம் பாபுவிற்கு வழங்கப்பட்டுள்ள ஜாமினை ரத்து செய்யக்கோரி, பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    குஜராத் மாநிலத்தை சேர்ந்த மதபோதகர் ஆசாராம் பாபு (86). இவருக்கு ராஜஸ்தானின் ஜோத்பூர் உள்ளிட்ட பல இடங்களில் ஆசிரமங்கள் உள்ளன. கடந்த ஆகஸ்ட் 2013 -ல் ஜோத்பூருக்கு அருகிலுள்ள மனாய் கிராமத்தில் உள்ள ஆசிரமத்தில், 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, குஜராத்தின் சூரத்தில் உள்ள மற்றொரு ஆசிரமத்தில் இரண்டு சகோதரிகளை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆசாராம் மற்றும் அவரது மகன் நாராயண் சாய் மீது குற்றம் சாட்டப்பட்டது. 

    இந்த வழக்கிலும் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு, மருத்துவ காரணங்களுக்காக ஜனவரி 7, 2025 அன்று இடைக்கால ஜாமின் பெற்றார். பின்னர் இந்த ஜாமின் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து ஜாமினை நீட்டிக்கக் கோரிய அவரது மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்டில் சரண்டைந்தார்.

    இச்சூழலில் அக்டோபர் 29 அன்று, சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் இருந்த ஆசாராமுக்கு மருத்துவ காரணங்களுக்காக ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ஆறு மாதம் ஜாமின் வழங்கியது. ஒரு வாரம் கழித்து, நவம்பர் 6 ஆம் தேதி, குஜராத் உயர் நீதிமன்றமும் ஆசாராமுக்கு ஆறு மாதம் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. 

    இந்நிலையில் ஆசாராமிற்கு வழங்கப்பட்டுள்ள ஜாமினை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பின் வழக்கறிஞர் அல்ஜோ ஜோசப், ஆசாராம் உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், ஆசாராம் நாடு முழுவதும் பயணம் செய்து வருவதாகவும், அவரது ஜாமினை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். 

    ஆகஸ்ட் மாதம், உயர்நீதிமன்றம் ஒரு மருத்துவக் குழுவை அமைத்ததாகவும், அதன் அறிக்கையில் ஆசாராம் நிலையாக இருப்பதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறியதாகவும் வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். மருத்துவ காரணங்களுக்காக ஜாமின் பெற்ற ஆசாராம், அகமதாபாத், ஜோத்பூர் மற்றும் இந்தூர் உள்ளிட்ட பிற இடங்களுக்கு பயணம் செய்து வருவதாகவும் ஜோசப் வாதிட்டார். 

    • டெஸ்ட் தொடரில் இந்திய அணியை 2-0 என அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி வரலாறு படைத்தது.
    • ரோகித் மற்றும் கோலி இருவரையும் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வதந்தி பரவியது.

    தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியை 2-0 என அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி வரலாறு படைத்தது.

    டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து இந்திய மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்றுவிட்டதால், இந்திய அணி மிகவும் மோசமான தோல்வியை சந்தித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு, பிசிசிஐ தரப்பிலிருந்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரையும் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வதந்தி பரவியது.

    இந்நிலையில் நேற்றைய போட்டியின் போதே அந்த வதந்தி முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இனி ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடுவேன் என விராட் கோலி கூறியுள்ளார்.

    சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி, இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

    • தனுஷ் - ஆனந்த் எல் ராய் கூட்டணியில் புதிதாக உருவாகி உள்ள படம் "தேரே இஸ்க் மேன்"
    • இதுவும் ராஞ்சனா போலவே காதல் படமாக அமைந்துள்ளது.

    பாலிவுட்டில் 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' போன்ற படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய்யின் படத்தில் தனுஷ் நடித்துள்ளார்.

    பாலிவுட்டில் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர் நடிப்பில் கடந்த 2013 இல் வெளியாகி வரவேற்பை பெட்ரா படம் 'ராஞ்சனா'. தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியானது. படத்தில் ஏஆர் ரகுமான் இசையில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் ஒரு கிளாசிக்.

    இந்நிலையில் தனுஷ் - ஆனந்த் எல் ராய் - ஏஆர் ரகுமான் கூட்டணியில் புதிதாக உருவாகி உள்ள படம் "தேரே இஸ்க் மேன்" (Tere Ishk Mein).

    இதுவும் ராஞ்சனா போலவே காதல் படமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் நடித்துள்ளார். கடந்த வாரம் வெளியான இப்படம் பாலிவுட்டில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்நிலையில், தேரே இஸ்க் மேன் இந்தி திரைப்படம் வெளியான முதல் 3 நாட்களில் ரூ. 50.95 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்தி மொழியில் மட்டும் தான் இந்த வசூல் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.
    • இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்த மாதவன் தற்போது இந்தியாவின் எடிசன் என அழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகும் புதிய படத்தில் ஜி.டி.நாயுடு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    'ஓஹோ எந்தன் பேபி' பட இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜெயராம், சத்யராஜ், பிரியாமணி, யோகி பாபு மற்றும் துஷாரா விஜயன் ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படம் தொடர்பான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. போஸ்டரில் அடையாளம் தெரியாத அளவுக்கு வயதான தோற்றத்துடன் ஜி.டி.நாயுடுவின் உருவத்தை பிரதிபலிக்கும் வகையில் மாதவன் காணப்பட்டார். இப்படத்தை வர்கீஸ் மூலன், விஜய் மூலன், சரிதா மாதவன் மற்றும் மாதவன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.



    இந்த நிலையில், 'ஜி.டி.என்' படத்தின் வெளிநாட்டு படப்பிடிப்பை தடையின்றி முடித்ததாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
    • கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின.

    இதனைத்தொடர்ந்து அங்கு பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. இந்த நிலச்சரிவால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும் பலர் உயிருடன் மண்ணில் புதையுண்டனர். மீட்பு படையினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    எனினும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 370 பேர் மாயமாகியுள்ளதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    வெள்ளம் மற்றும் மண்சரிவு பாதிப்பால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்பால் இலங்கை அரசு தற்போது அவசரநிலையை அறிவித்துள்ளது.

    • பஹல்காம் தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்களுக்கான விவாதம் குறித்த எதிர்க்கட்சிகளின் அமளியால் பாதிக்கப்பட்டது.
    • அரசு விவாதிக்க மறுக்கும் என்பதால் இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்படும்.

    பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் இன்று (டிசம்பர் 1) தொடங்குகிறது. வருகிற 19-ந் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறுகிறது. விடுமுறை நாட்கள் நீங்கலாக 15 அமா்வுகள் இந்த கூட்டத்தொடரில் இடம்பெற உள்ளன.

    12 மாநிலங்களில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.), டெல்லி குண்டு வெடிப்பு, வாக்கு திருட்டு, டெல்லி காற்று மாசு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல் வேறு பிரச்சனைகள் குறித்து அவையில் விவாதிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு விவாதிக்க மறுக்கும் என்பதால் இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் வாக்காளர் தீவிர திருத்தம் தொடர்பான பிரச்சனையை கிளப்புவார்கள்.

    கடந்த ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21 வரை நடை பெற்ற மழைக்கால கூட்டத் தொட ரில் பீகாா் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்களுக்கான விவாதம் குறித்த எதிர்க்கட்சிகளின் அமளியால் பாதிக்கப்பட்டது. மழைக்கால கூட்டத்தொட ரில் மக்களவையின் செயல்பாடு 31 சதவீதமாகவும், மேல்-சபையின் செயல்பாடு 39 சதவீதமாகவும் இருந்தது. குளிா்கால கூட்டத்தொடரில் சிவில் அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி வழங்குவது, இந்திய உயா் கல்வி ஆணையம் அமைப் பது, பெருநிறுவன சட்டம் மற்றும் பங்குச்சந்தை உள்ளிட்ட 10 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    10 மசோதாக்களில் 4 நிதித்துறை தொடர்புடையவை, 2 சட்டம் மற்றும் நீதித்துறை தொடர்புடையவை. கல்வி, எரிசக்தி, போக்குவரத்து துறை, உள்துறை ஆகியவை தொடர்பான தலா ஒரு மசோதாவும் அடங்கும்.

    வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு கொண்டாடப்படுவதால் அதன் வரலாறு குறித்த விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பாடலில் இருந்து முக்கிய வரிகள் கடந்த 1937-ம் ஆண்டு நீக்கப்பட்டதே இந்தியாவின் பிரிவினைக்கு காரணம் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டி இருந்தார். வந்தே மாதரம் பாடலின் வரலாறு, சுதந்திர இயக்கத்தில் அதன் பங்கு குறித்து இளைஞர்களுக்கு நினைவூட்டுவதற்காக விவாதம் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • டெல்லி, கொல்கத்தா, மும்பையிலும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.
    • வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

    சென்னை:

    சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கின்றன.

    அந்த வகையில், டிசம்பர் மாதத்திற்கான வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

    சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை 10 ரூபாய் 50 காசுகள் குறைந்து ரூ.1,739.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் ரூ.1,750-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

    இதே போன்று, மற்ற மெட்ரோ நகரங்களான டெல்லி, கொல்கத்தா, மும்பையிலும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.

    அதே சமயம் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.868.50-க்கு விற்பனையாகிறது. 

    • சிறப்பாக விளையாடிய விராட் கோலி 135 ரன்கள் விளாசி அவுட்டானார்.
    • இது ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி அடிக்கும் 52-வது சதமாகும்.

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 349 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பாக விளையாடிய விராட் கோலி 135 ரன்கள் விளாசி அவுட்டானார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது 52-வது சதமாகும்.

    இதனையடுத்து 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இருப்பினும் தென் ஆப்பிரிக்க அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். மெத்தியூ ப்ரீட்ஸ்கி 72 ரன்னும் மார்கோ யான்சன் 70 ரன்னும் அடித்து ஆட்டமிழந்தனர். இறுதியில் அதிரடி காட்டிய கார்பின் போஸ் 67 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    இதனால் 49.2 ஓவர்களில் தென் ஆபிரிக்க அணி 332 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் சதமடித்து அசத்திய விராட் கோலி ஆட்ட நாயகன் விருதை வென்றார். இது சர்வதேச போட்டிகளில் அவர் பெறும் 70வது ஆட்ட நாயகன் விருதாகும்.

    அதிக ஆட்டநாயகன் விருது பெற்றவர்களின் பட்டியலில் சச்சின் (76) முதலிடத்தில் நீடிக்கிறார். விராட் கோலி 2 ஆம் இடத்தில உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ்நாடு- புதுச்சேரி கடற்கரையில் நிலவி வந்த டிட்வா புயல்.
    • டாப்ளர் வானிலை ரேடர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    தமிழ்நாடு- புதுச்சேரி கடற்கரைகளுக்கு இணையாக கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகரும் டிட்வா புயல், அடுத்த மூன்று மணி நேரத்தில் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    வங்கக்கடலில் நிலவும் டிட்வா புயல் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகர்ந்தது.

    டிட்வா புயலின் நகர்வை காரைக்கால் மற்றும் சென்னையில் உள்ள டாப்ளர் வானிலை ரேடர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தமிழ்நாடு- புதுச்சேரி கடற்கரையில் நிலவி வந்த டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நாளை காலை மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • கப்பல் போஸ்பரஸ் ஜலசந்திக்குள் நுழையும் தருவாயில் டிரானால் தாக்கப்பட்டு தீப்பிடித்தது.
    • தீப்பிடித்து எரிந்த அந்த கப்பலில் இருந்தும் 20 மாலுமிகள் மீட்கப்பட்டனர்.

    துருக்கி அருகே கருங்கடலில் ரஷிய எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீது, நீரில் செல்லக் கூடிய டிரோன் மூலம் உக்ரைன் தாக்ககுதல் நடத்தியுள்ளது.

    துருக்கியின் கோசேலி மாகாணத்தில் உள்ள கருங்கடல் பகுதியில் ரஷியாவை சேர்ந்த 'கைரோஸ்' என்ற எண்ணெய் கப்பல் சென்று கொண்டிருந்தது. காலி டேங்கர்களுடன் ரஷியாவை நோக்கி சென்றுகொண்டிருந்த கப்பல் போஸ்பரஸ் ஜலசந்திக்குள் நுழையும் தருவாயில் டிரானால் தாக்கப்பட்டு தீப்பிடித்தது.

    தகவல் அறிந்து விரைந்த மீட்புப்படையினர் கப்பலில் இருந்த 25 மாலுமிகளை மீட்டனர்.

    இந்த சம்பவம் நடந்த அடுத்த ஒரு மணி நேரத்தில், அவ்வழியாக சென்ற மற்றொரு ரஷிய எண்ணெய் டேங்கர் கப்பலான 'விராட்' மீதும் டிரோன் தாக்குதல் நடந்தது. தீப்பிடித்து எரிந்த அந்த கப்பலில் இருந்தும் 20 மாலுமிகள் மீட்கப்பட்டனர்.

    இந்த தாக்குதல்களுக்கு உக்ரைன் பொறுப்பேற்றுள்ளது. மேற்கு நாடுகளால் பொருளாதார தடை விதிக்கப்பட்டபோதும் ரஷிய இந்த கப்பல்கள் மூலம் எண்ணெய் விற்று, உக்ரைன் மீதான போருக்கு நிதி திரட்டி வருவதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

    எனவே நீரில் செல்லக் கூடிய டிரோன்கள் மூலம் அவற்றை தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. 

    ×