என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • தவெக உடன் கூட்டணி இல்லை என்பது தெளிவானது.

    2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது.  பல கட்டங்களாக நடைபெற்ற தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இன்று இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டப்பேரவை இடங்களும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

    தொகுதிப் பங்கீட்டில் நிலவி வந்த இழுபறியைத் தீர்க்க, காங்கிரஸ் மேலிடம் சார்பில் மூத்த தலைவர் ப. சிதம்பரம் முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பை தொடர்ந்து கூட்டணியில் இணக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், இன்று திமுக - காங்கிரஸ் கூட்டணி கையெழுத்தாகிறது என காலையிலிருந்தே தகவல்கள் வெளியாகி வந்தது.

    இந்நிலையில் சற்றுநேரத்திற்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டி.ஆர். பாலு, கனிமொழி, செல்வப்பெருந்தகை மற்றும் காங்கிரஸ் குழுவினர் அண்ணா அறிவாலயத்தில் கூடினர். இந்நிலையில் திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. நாளை முதலமைச்சர் முன்னிலையில் காங்கிரஸ் தரப்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • திவ்யா தொடர்ந்து தவெக தலைவர் விஜய் குறித்து கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

    திமுகவில் இணைந்துள்ள நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா தொடர்ந்து தவெக தலைவர் விஜய் குறித்து கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

    அவ்வகையில் திவ்யா சத்யராஜ் அண்மையில் அவரிடம் 2 கேள்விகளை கேட்டிருந்தார். ஒன்று, அரசியலுக்கு வருவதற்கு முன்பு நீங்கள் மக்களுக்கு என்ன செய்திருக்கிறீர்கள்? அடுத்த கேள்வி நீங்கள் கொள்கை தலைவராக பெரியாரை வைத்திருக்கிறீர்கள். ஆனால் உங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் பெண்களை இப்படி தப்பா பேசுறாங்க, இதை சகித்துக்கொள்ள முடியாது என்று பேசியிருந்தார். திவ்யாவின் கேள்விகளுக்கு த.வெ.க தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் பதிலடி கொடுத்தனர்.

    இந்நிலையில், விஜயின் தீவிர ரசிகரான சிபி சத்யராஜ் தனது அப்பா நடித்த அரசியல் படமான அமைதிப்படை படத்தின் காட்சியை பகிர்ந்து தனது சகோதரிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

    சிபிராஜ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், அமைதிப்படை படத்தில் மணிவண்ணனிடம் பேசும் சத்யராஜ், 'மணியா வரலாறை தெரிஞ்சுக்க' என வசனத்தை வைத்து விட்டு விஜய் இதுவரை செய்த உதவிகள் தொடர்பான வீடியோவை பகிர்ந்து பதிலடி கொடுத்துள்ளார்.

    • ஈரான் மீது கடந்த சனிக்கிழமை காலை அமெரிக்கா- இஸ்ரேல் கூட்டு தாக்குதலை தொடங்கியது.
    • இன்று 5-வது நாளாகவும் தாக்குதல் தொடர்கிறது.

    ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த சனிக்கிழமை கூட்டு தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல் இன்று 5-வது நாளாக நீடித்து வருகிறது.

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அத்துடன் சவுதி அரேபியா, யுஏஇ, பஹ்ரைன், குவைத் போன்ற வளைகுடா நாடுகள் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இருதரப்பிலும் இருந்து தாக்குதல் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த போர் வாரங்களை கடக்கும் என அஞ்சப்படுகிறது.

    இன்று துருக்கி மீதும் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. துருக்கி நேட்டோ படையில் இருப்பதால் நேட்டோ வான்பாதுகாப்பு மூலம் ஏவுகணை வெற்றிகரமாக இடைமறித்து அளித்துள்ளது.

    இன்று 5-வது நாளாக ஈரான் மீது தாக்குதல் தொடரும் நிலையில், அந்நாட்டில் உயிரிழப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. தற்போது வரை 1045 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரானின் பாதுகாப்பு, கடற்படை, ஆயுதங்களை அழித்து விட்டதாக டிரம்ப் தெரிவித்து வருகிறார். ஆனால் ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் ஈரான் விளைகுடா நாடுகள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது.

    • பீகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் பதவி வகித்து வருகிறார்.
    • நிதிஷ் குமாருக்கு மாநிலங்களவை எம்.பி. சீட் கொடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    நிதிஷ் குமாருக்கு மாநிலங்களவை எம்.பி. சீட் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் இதனால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய அவர் முடிவும் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் விலகினால் பாஜகவைச் சேர்ந்தவர் முதலமைச்சராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.

    அதே சமயம் நிதிஷ் குமாரின் மகனான நிஷாந்த் குமார் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.

    • இடுப்பில் இருந்த துண்டைத் தலைக்குக் கிரீடமாக மாற்றிய அய்யா வைகுண்டரை நாம் பெற்ற நாள்!
    • நலிந்தோரின் நலம் நாடும் அரசாக நமது திராவிட மாடல் அரசும் செயல்படுகிறது.

    சென்னை :

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இடுப்பில் இருந்த துண்டைத் தலைக்குக் கிரீடமாக மாற்றிய அய்யா வைகுண்டரை நாம் பெற்ற நாள்!

    "கீழ் நோக்கிப் பிடித்தாலும், மேல் நோக்கியே எரியும் தீபத்தைப்போல, விளக்கின் ஒளியாய், வீரத் தனமாக இருங்கள்" எனச் சமத்துவக் கனலைச் சமூகத்தில் விதைத்து நிறைந்தவர் அய்யா வைகுண்டர்.

    'தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்' எனும் அவரது கூற்றையே ஆட்சிக்கான அடிப்படையாய்க் கொண்டு நலிந்தோரின் நலம் நாடும் அரசாக நமது திராவிட மாடல் அரசும் செயல்படுகிறது.

    அய்யா வைகுண்டரின் பொன்மொழிகளைப் பின்பற்றி நடப்போம்! சமத்துவம் பேணுவோம்! எனக் கூறியுள்ளார். 

    • என்னை என்னாலேயே கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறேன்.
    • அந்த நிலையை மாற்றிக்கொள்ள விரும்புகிறேன்.

    தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்து வருகிறார், நிதி அகர்வால். தற்போது தன்னை பற்றி நிதி அகர்வால் கூறிய விஷயங்கள் கவனம் ஈர்த்துள்ளது.

    அதில், 'திடீரென உடல் எடை அதிகரித்து காணப்படுகிறீர்கள். திடீரென வெகுவாக எடை குறைகிறீர்கள்' என்று பலரும் என்னை கேட்பதுண்டு. என் உடல் அடிக்கடி மாறிக்கொண்டேயிருக்கிறது. அது என்னவென்று என்னாலேயே உணர முடியவில்லை.

    என்னை என்னாலேயே கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறேன். அந்த நிலையை மாற்றிக்கொள்ள விரும்புகிறேன். எனவே சரியான உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளேன்" என்று குறிப்பிட்டார்.

    தமிழில் 'ஈஸ்வரன்', 'பூமி' என இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ள நிதி அகர்வாலுக்கு, சென்னையில் ரசிகர்கள் கோவில் கட்டி வழிபட்டது குறிப்பிடத்தக்கது.

    • பிரதமர் மோடி, கடந்த 2007-ம் ஆண்டு தன் யூடியூப் கணக்கை தொடங்கினார்.
    • பிரதமர் மோடியை பின்தொடர்பவர்களில் இந்தியர்களே அதிகம்.

    தற்போதைய தொழில்நுட்ப உலகில், மக்களின் அன்றாட வாழ்வில் சமூக வலைதளங்கள் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இன்ஸ்டாகிராம். பேஸ்புக், எக்ஸ் சமூக வலைதளங்களை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில், சமூக வலைதளமான யூடியூப் தற்போது மிகவும் பிரபலமாக உள்ளது. யூடியூப் பயனர்கள் வீடியோக்கள் மூலம் கருத்துகளை தெரிவிக்க அனுமதிக்கும் உலகின் முன்னணி வீடியோ சமூக வலைதளமாகும்.

    பிரதமர் மோடி, யூடியூபில் 3 கோடி பின்தொடர்பவர்களை பெற்றிருக்கிறார். இதன் மூலம் யூடியூபில் உலகளவில் அதிக பின்தொடர்பவர்களை கொண்டுள்ள அரசியல் தலைவர் என்ற பெருமையை பெற்று உள்ளார்.

    இந்த வரிசையில் 2-வது இடத்தில் பிரேசில் முன்னாள் அதிபர் ஜெயிர் போல்சனாரோ 66 லட்சம் பின்தொடர்பவர்களையும், 3-வது இடத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 40 லட்சம் பின்தொடர்பவர்களையும் கொண்டு உள்ளனர்.

    பிரதமர் மோடி, கடந்த 2007-ம் ஆண்டு தன் யூடியூப் கணக்கை தொடங்கினார். இதுவரை 33 ஆயிரத்து 823 வீடியோக்கள் பதிவிட்டுள்ள அவர் 800 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளார். பிரதமர் மோடியை பின்தொடர்பவர்களில் இந்தியர்களே அதிகம்.

    முன்னதாக கடந்த மாதம் 26-ந்தேதி தான் இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்வோரை பெற்றிருந்தார் பிரதமர் மோடி. இன்ஸ்டாகிராமில் சர்வதேச அரசியல் தலைவர்களில் அதிகம் பேர் பின்தொடரும் தலைவர் என்ற பெருமையை இதன் மூலம் பிரதமர் மோடி பெற்றிருந்தார். இதைத் தொடர்ந்து நேற்று யூடியூபில் எந்தவொரு அரசியல் தலைவரும் தொடாத ஒரு உச்சத்தை அவர் தொட்டுள்ளார்.

    பிரதமர் மோடியின் உரைகள், வெளிநாட்டு பயணங்கள் மற்றும் மனதின் குரல் போன்ற நிகழ்ச்சிகள் அவரது யூடியூப் சேனல் மூலம் உலகம் முழு வதும் உள்ள மக்களிடம் நேரடியாக சென்றடைவது இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

    • குவைத்தில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் நேற்று முன்தினம் டிரோன் தாக்குதல் நடத்தியது.
    • தேவைப்பட்டால் ஈரானில் தரைவழியாக தாக்குதல் நடத்தவும் தயாராக இருக்கிறோம் என்றார் டிரம்ப்.

    துபாய்:

    ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேலின் கூட்டு தாக்குதலைத் தொடர்ந்து அந்நாடு அண்டை நாடுகளான வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

    நான்காவது நாளாக நேற்றும் இந்தப் போர் உக்கிரமாக நடந்தது. இரவு முழுவதும் ஈரான்மீது இஸ்ரேல்-அமெரிக்க படைகள் ஏவுகணைகள் ஏவி தாக்குதல் நடத்தின. குவைத்தில் அமெரிக்க தூதரம் மீது ஈரான் நேற்று முன்தினம் டிரோன் தாக்குதல் நடத்தியது.

    இந்நிலையில், நேற்று சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரானின் 2 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதில் தூதரக வளாகத்தில் சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த அமெரிக்க தூதரக அதிகாரிகள், ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர் என சவுதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சக அறிக்கை கூறி உள்ளது.

    அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதலை கண்டித்து அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், ஈரானின் ஏவுகணை பலத்தை முற்றிலும் அழிப்பது, இனி எப்போதும் அவர்களால் அணு ஆயுதம் தயாரிக்க முடியாமல் செய்வது, அதற்கான உள்கட்டமைப்புகளை முழுவதுமாக அழிப்பதற்காக இந்த போர் நடக்கிறது. எங்கள் இலக்குகள் எட்டப்படும் வரை இப்போர் ஓயாது. இந்தப் போர் 4 அல்லது 5 வாரங்கள் வரை நீடிக்கலாம். அதற்கான ஆயுதங்களுடன் தயார் நிலையில் இருக்கிறோம் என தெரிவித்தார்.

    • முதல் அரையிறுதியில் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
    • 2வது அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.

    கொல்கத்தா:

    டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது. இதில் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    மார்க்ரம், சான்ட்னர் ஆகியோரின் பங்களிப்பால் அவர்களது அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன.

    எனவே, இன்றைய போட்டி இரு அணிகளின் கேப்டன்கள் இடையில் நடக்கும் உக்கிரப் போராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 2015ல் உலகக் கோப்பை ஒருநாள் போட்டிகளின்போது நடந்த அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்ரிக்காவும், நியூசிலாந்தும் மோதின. அந்தப் போட்டியில் தென் ஆப்ரிக்காவை நியூசிலாந்து அணி வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது.

    சிறந்த பேட்ஸ்மேனாகத் திகழும் மார்க்ரம் நடப்பு தொடரில் 268 ரன்கள் குவித்துள்ளார். தென் ஆப்ரிக்கா அணியில், குவின்டன் டி காக், டெவால்ட் புரூவிஸ், ரியான் ரிக்கல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், மார்கோ யான்சன் ஆகியோர் அதிரடி ஆட்டக்காரர்களாக உள்ளனர்.

    சிறந்த ஆல் ரவுண்டரான சான்ட்னரின் பந்துவீச்சு எகானமி ரேட் 6.35 ஆக உள்ளது. தனது அற்புத பந்துவீச்சால், எதிரணி பேட்டர்களை திணற அடிப்பவராக சான்ட்னர் திகழ்வது அந்த அணிக்கு கூடுதல் பலம்.

    தென் ஆப்ரிக்கா அணியில் குவின்டன் டி காக், டெவால்ட் புரூவிஸ், ரியான் ரிக்கல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், மார்கோ யான்சன் ஆகியோர் அதிரடி ஆட்டக்காரர்களாக உள்ளனர்.

    நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ், கோல் மெக்கொன்சி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். சிறந்த சுழல் பந்து வீச்சாளர்களை கொண்ட நியூசிலாந்து அணி, தென் ஆப்ரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் என எதிர்பார்க்கலாம்.

    இன்றைய போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற மல்லுகட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    • ஈரானில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தவித்து வருகிறார்கள்.
    • தெஹ்ரானில் உள்ள பெரும்பாலான மாணவர்கள் வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

    அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது கூட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. 4-வது நாளாக இன்றும் தாக்குதல் நடைபெற்று வருகிறது. வளைகுடா நாடுகள் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்துவதால் ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. ஈரான் தலைநகர தெஹ்ரானில் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.

    தெஹ்ரானில் இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வந்தனர். அவர்களை இந்திய தூதரகம் தெஹ்ரானில் இருந்து வேறு இடத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளது என இந்தியா தெரிவித்துள்ளது.

    அவர்களுக்கு போக்குவரத்து, உணவு தங்கும் வசதி உருவாக்கி கொடுக்கப்பட்டள்ளது. மிகவும் குறைந்த அளவிலான மாணவர்களே மட்டுமே தூதரக வாய்ப்பை பயன்பெற முடியாமல் உள்ளனர் என்று தெரிவித்தள்ளது.

    ஈரானில் உள்ள மற்ற மாணவர்கள் மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்கனவே அறிவித்த பயண ஆலோசனையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முடிந்த அளவிற்கு வீட்டிற்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்னர். ஜன்னல் அருகே இருப்பதை தவிர்க்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இந்தியர்கள் எல்லா நேரங்களிலும் எச்சரிக்கையாக இருக்கவும், போராட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்கவும், தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும் புதிதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஈரானில் சுமார் 9 ஆயிரம் இந்திய மாணவர்கள் படித்து வருகிறார்கள். தற்போது எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற சரியான எண்ணிக்கை தெரியவில்லை.

    • காங்கிரஸிற்கு இரண்டு, தேமுதிகவிற்கு ஒன்று.
    • முதல்முறையாக மாநிலங்களவை செல்கிறது தேமுதிக.

    2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக தேசிய முற்போக்கு திராவிட கழகம், திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது. இந்நிலையில் தேமுதிகவிற்கு ஒரு மாநிலங்களவை சீட் தந்துள்ளது திமுக. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எ.சுதீஷ் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் முதல்முறையாக மாநிலங்களவை செல்கிறது தேமுதிக. 

    2005-ல் கட்சி தொடங்கப்பட்ட பிறகு, தேமுதிக முதல்முறையாக இந்தமுறை திமுகவுடன் கூட்டணி அமைத்தது. கடந்தமுறை அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. இம்முறையும் அதிமுக, பாஜகவிடம் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் தேமுதிகவின் மாநிலங்களவை சீட்டிற்கு அதிமுக மறுப்பு தெரிவிக்க, திமுகவுடனும் பேச்சை தொடர்ந்தது தேமுதிக.

    இதனைத்தொடர்ந்து பிப்ரவரி 19 அன்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து இந்தக் கூட்டணியை உறுதி செய்தார். தொண்டர்களின் விருப்பப்படியும், மறைந்த தலைவர் விஜயகாந்தின் விருப்பத்தை நிறைவேற்றவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகப் பிரேமலதா தெரிவித்திருந்தார்.

    இதனைத்தொடர்ந்து தேமுதிக தரப்பில் ஒரு மாநிலங்களவை இடமும், இரட்டை இலக்க எண்ணிக்கையிலான சட்டமன்றத் தொகுதிகளும் கோரப்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒரு மாநிலங்களவை இடத்தை தேமுதிகவிற்கு ஒதுக்கியுள்ளது திமுக. தேமுதிக தரப்பில் யார் போட்டியிடுவார் என்பதை கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவிப்பார் என பொருளாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தொகுதிகள் குறித்து விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • ஈரான் பாதுகாப்பு, விமானப்படை, கடற்படை, தலைமை அனைத்தையும் இழந்துவிட்டது.
    • இப்போது பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த சனிக்கிழமை கூட்டு தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது பதிலடி தாக்குதல் நடத்தியது. அத்துடன் சவுதி அரேபியா, யுஏஇ, பஹ்ரைன், குவைத் போன்ற வளைகுடா நாடுகள் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இன்று 4-வது நாளாக ஈரான் மீது அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் டிரம்ப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், ஈரான் அதை ஏற்கவில்லை. நான்கு நாள் தாக்குதலில் ஈரானின் ராணுவத் தளங்கள், கடற்படை ஆகியவற்றை அழித்துள்ளதாக அமெரிக்கா தெரிவிக்கிறது.

    இதற்கிடையே ஈரான் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறுகையில் "ஈரான் பாதுகாப்பு, விமானப்படை, கடற்படை, தலைமை அனைத்தையும் இழந்துவிட்டது. இப்போது பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்றனர். பேச்சுவார்த்தைக்கு காலம் கடந்துவிட்டது என்றேன்" என்றார்.

    ×