என் மலர்
நீங்கள் தேடியது "Middle East Crisis"
- ஈரான் தோற்கடிக்கப்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார்.
- பலியானவர்களின் எண்ணிக்கை 1300-ஐ கடந்துள்ளது.
இஸ்ரேல் - அமெரிக்கா ஈரான் மீது கடந்த ஒரு வார காலமாக தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் பதிலடியாக இஸ்ரேல் மீதும் அமெரிக்க ஆதரவு மத்திய கிழக்கு நாடுகள் மீதும் அங்குள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையே நேற்று ஈரான் அதிபர் மசூத் பெசாஸ்கியன் வளைகுடா நாடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்டார். ஈரான் மீது அங்கிருந்து தாக்குதல் நடத்தப்படாத வரை நாங்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் என்று தெரிவித்தார்.
ஈரான் அதிபர் மன்னிப்பு கேட்டது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசுகையில், தாக்குதலுக்கு உள்ளாகி தோற்கடிக்கப்பட்ட ஈரான், மன்னிப்பு கேட்டு அதன் மத்திய கிழக்கு அண்டை நாடுகளிடம் சரணடைந்துள்ளது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் அண்டை நாடுகளுடனான ஈரானின் உறவில் விரிசலை ஏற்படுத்த எதிரிகள் தனது வார்த்தைகளைத் தவறாகச் சித்தரிப்பதாக ஈரான் அதிபர் மசூத் பெசாஸ்கியன் தெரிவித்துள்ளார்.
அண்டை நாடுகளிலிருந்து ஈரான் மீது நேரடித் தாக்குதல் நடத்தப்படாதவரை, அந்த நாடுகளை இலக்காகக் கொண்டு ஈரான் ராணுவ நடவடிக்கை எடுக்காது என்றே தான் கூறியதாக அவர் தெரிவித்தார்.
மேலும், "அண்டை நாடுகளை நாங்கள் சகோதரர்களாகவே பார்க்கிறோம். பிராந்திய நாடுகளிடையே பிளவை ஏற்படுத்த அமெரிக்காவையும் இஸ்ரேலையும் அனுமதிக்கக் கூடாது" என்று வலியுறுத்தினார்.
இதற்கிடையே ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்குப் பழிவாங்குவோம் என ஈரானின் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் அலி லாரிஜானி எச்சரித்துள்ளார்.
"எங்கள் தலைவரின் இரத்தத்திற்கு நாங்கள் இரக்கமின்றிப் பழிவாங்குவோம். இதற்கு டிரம்ப் விலை கொடுக்க வேண்டியிருக்கும் " என்று லாரிஜானி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்போது, ஈரானின் ராணுவ மற்றும் பொருளாதார மையங்களை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக ஈரானின் எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டுத் தாக்குதலில் ஈரானில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1300-ஐ கடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- வரும் நாட்களில் மேலும் பல இந்தியர்கள் விமானங்கள் மூலம் நாடு திரும்புவார்கள்.
- சிறப்பு விமானங்களும் இயக்கப்படுகின்றன.
ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல், அதைத்தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் காரணமாக மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுகிறது.
கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி தொடங்கிய மோதல் ஒரு வாரத்தை கடந்து நீடித்து வருகிறது. பல்வேறு நாடுகளின் வான்வழி மூடப்பட்டதால் பலர் அங்கு சிக்கித் தவித்தனர்.
இதனிடையே கடந்த சில நாட்களில் வான்வழிகள் பகுதியளவு திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இந்திய மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் மீண்டும் சேவையைத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் மார்ச் 1 முதல் மார்ச் 7 வரையிலான காலகட்டத்தில், பல்வேறு விமானங்கள் மூலம் மொத்தம் 52,000 இந்தியர்கள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்பியுள்ளனர் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வரும் நாட்களில் மேலும் பல இந்தியர்கள் விமானங்கள் மூலம் நாடு திரும்புவார்கள் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வழக்கமான விமானச் சேவைகள் மட்டுமின்றி, சிறப்பு விமானங்களும் இயக்கப்படுகின்றன.
பதற்றம் நீடிப்பதை தொடர்ந்து மேற்கு ஆசிய நாடுகளில் வசிக்கும் சுமார் ஒரு கோடி இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியா தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
அத்தியாவசியப் பொருட்களின் வர்த்தகம் மற்றும் எண்ணெய் உள்ளிட்ட எரிசக்தி விநியோகம் தடையின்றி தொடர்வதையும் உறுதி செய்ய இந்தியா முன்னுரிமை அளித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் தொடராது என ஈரான் அதிபர் தெரிவித்துள்ளார்.
- இருந்தபோதிலும் ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல் இருந்து கொண்டுதான் உள்ளது.
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு தாக்குதல் இன்றுடன் 8-வது நாளாக நீடிக்கிறது. இதற்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
மேலும், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், சவுதி அரேபியா, கத்தார் போன்ற வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் வளங்கள், ஹோட்டல்கள், விமான நிலையங்கள் போன்றவற்றை ஈரான் கடுமையாக தாக்கி வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவின் தாக்குதலுக்கு உதவாத வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தமாட்டோம். தாக்குதல் நடத்தியதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக ஈரான் அதிபர் மசூத் பெசாஸ்கியன் தெரிவித்திருந்தார்.
அவர் மன்னிப்பு கேட்ட நிலையில், டிரோன் தாக்குதல் வளைகுடா நாடுகள் மீது நீடித்தன. இந்த நிலையில் கத்தார் அரசு பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கான உயர் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கத்தார் உள்துறை அமைச்சர் அந்நாட்டு மக்களுக்கு செல்போன் மூலம் புதிய எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் பாதுகாப்பு அச்சுறுத்துதலுக்கான உயர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்கள் தொடர்ந்து பூட்டிய வீட்டிற்குள் இருக்க வலியுறுத்தியுள்ளார். இன்று 2-வது நாளாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் "ஈரானின் ஏவுகணை அச்சுறுத்தலுக்கு வான் பாதுகாப்பு பதில் கொடுத்து வருகிறது. மக்கள் தொடர்ந்து பாதுகாப்பான இடத்தில் இருக்கவும். மக்கள் எச்சரிக்கை மற்றும் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் உள்ள அப்டேட்ஸ்களை பின்பற்ற வேண்டும்" என கேட்டுக்கொண்டுள்ளது.
- பயணிகள் பாதுகாப்பு கருதி ரெயில் சுரங்கப்பாதைகளுக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
- மத்திய கிழக்கு நாடுகள் மீதான தாக்குதல்களுக்கு மன்னிப்பு கேட்டார்.
மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் எட்டாவது நாளை எட்டியுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல் தொடர்ந்து வரும் சூழலில் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மற்றும் தூரகங்கள் மீது ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று துபாயில் பல இடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. குறிப்பாக உலகின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான துபாய் சர்வதேச விமான நிலையமும் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது.
துபாய் விமான நிலையத்தின் மேல் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து கரும்புகை சூழ்ந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
விமான நிலையத்தில் எச்சரிக்கை ஒலி கேட்டவுடன், அங்கிருந்த பயணிகள் பாதுகாப்பு கருதி ரெயில் சுரங்கப்பாதைகளுக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
துபாய் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில் சில மணி நேரங்களுக்கு பின் பகுதி அளவு செயல்பட தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எமிரேட்ஸ் நிறுவனம் தனது அனைத்து விமானங்களையும் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்துள்ளது.
இதற்கிடையே துபாய் அரசு தனது வான் பாதுகாப்பு அமைப்பை முடுக்கிவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
நகரில் விழுந்த ஏவுகணைச் சிதறல்களால் சிறிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டதாகவும், ஆனால் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
முன்னதாக சில தினங்கள் முன் ஈரான் நடத்திய தாக்குதலில் பாம் ஜுமேராவில் உள்ள சொகுசு குடியிருப்புப் பகுதி புர்ஜ் அல் அரப் ஹோட்டல் அமெரிக்கத் தூதரகம் ஆகியவை பாதிப்புக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
மத்திய கிழக்கு நாடுகள் மீதான தாக்குதல்களுக்கு மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான், அந்த நாடுகள் ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தாதவரை அந்த நாடுகள் மீது இனி நேரடி தாக்குதல் நடத்த மாட்டோம் என இன்று உறுதி அளித்துள்ளார்.
- தங்க ஏற்றுமதிகளுக்கான போக்குவரத்து மையமாக துபாய் செயல்பட்டு வருகிறது.
- புதிய வர்த்தகங்களை மேற்கொள்ள தயங்குகின்றனர்.
ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்ட நிலையில் ஈரான் புரட்சிகர ராணுவம் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க ராணுவ தளங்கள், தூதரகங்கள் மற்றும் விமான நிலையங்களை தாக்கி வருகிறது.
உலகின் 20 சதவீத எண்ணெய் தேவைக்கான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
இதற்கிடையே மத்திய கிழக்கு நாடான துபாயில் ஏற்றுமதி செய்யமுடியாமல் தேக்கமடைந்த தங்கம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
ஆசிய நாடுகளுக்கு தங்கத்தை சுத்திகரித்து ஏற்றுமதி செய்யும் மையமாகவும், பிரிட்டன், சுவிட்சர்லாந்து ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் தங்க ஏற்றுமதிகளுக்கான போக்குவரத்து மையமாகவும் துபாய் செயல்பட்டு வருகிறது.
இந்த சூழலில் மத்திய கிழக்கு மீது ஈரான் தாக்குதல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பாலான வான்வழிப் பாதைகள் மூடப்பட்டுள்ளன.
இதனால் அங்கிருந்து தங்கத்தின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாலும் நிச்சயமற்ற சூழல் காரணமாகவும் வாடிக்கையாளர்களும் வணிக நிறுவனங்களும் புதிய வர்த்தகங்களை மேற்கொள்ள தயங்குகின்றனர்.
இயல்பு நிலை எப்போது திரும்பும் என தெரியாததால் காலவரையற்ற சேமிப்பு மற்றும் நிதி செலவுகளைக் குறைப்பதற்காக துபாய் வர்த்தகர்கள் தங்கத்தின் விலையில் தள்ளுபடிகளை அறிவித்துள்ளனர்.
அங்கு உலகளாவிய அளவுகோல் விலையில் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 30 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.2700) வரை தள்ளுபடி வழங்குவதாகக் கூறப்படுகிறது.
- ஈரான் மக்கள் சரணடைய வேண்டும் என்ற எதிரிகளின் ஆசை அவர்களின் கல்லறைகளுக்கே செல்லும்.
- தெஹ்ரானில் உள்ள சர்வதேச விமான நிலையம் தீப்பிடித்து கடும் சேதத்தை சந்தித்துள்ளது.
ஈரான் மீதான இஸ்ரேல் - அமெரிக்க தாக்குதல் ஒரு வாரத்தை எட்டியுள்ளது.
ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்ட நிலையில் ஈரான் புரட்சிகர ராணுவம் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க ராணுவ தளங்கள், தூதரகங்கள் மற்றும் விமான நிலையங்களை தாக்கி வருகிறது.
இந்நிலையில் அண்டை நாடுகள் மீதான தாக்குதல்களுக்கு ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் மன்னிப்பு கோரியுள்ளார்.
அண்டை நாடுகளிலிருந்து ஈரான் மீது நேரடித் தாக்குதல் நடத்தப்படாத வரை, அந்த நாடுகளை இலக்காகக் கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தாது என்ற முடிவுக்கு வந்துள்ளதாக அவர் உறுதி அளித்துள்ளார்.
ஈரானின் இடைக்காலத் தலைமை கவுன்சில் நேற்று இந்த முடிவிற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயம், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிடம் ஈரான் ஒருபோதும் சரணடையாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
"ஈரான் மக்கள் சரணடைய வேண்டும் என்ற எதிரிகளின் ஆசை அவர்களின் கல்லறைகளுக்கே செல்லும்," என்று அவர் அரசு தொலைக்காட்சியில் ஆவேசமாகப் பேசினார்.
ஈரான் அதிபர் அறிவிப்பால் மத்திய கிழக்கு நாடுகள் மீதான ஈரானின் தாக்குதல் படிப்படியாக வரும் நாட்களில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இதற்கிடையே ஈரான் மீதான தாக்குதலை இஸ்ரேலும் அமெரிக்காவும் தொடர்ந்து வருகிறது. இன்று இஸ்ரேல் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் தெஹ்ரானில் உள்ள சர்வதேச விமான நிலையம் தீப்பிடித்து கடும் சேதத்தை சந்தித்துள்ளது. இஸ்ரேல் - அமெரிக்கா கூட்டு தாக்குதலால் ஈரானில் இதுவரை 1000-திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் ஈரான் தொடக்க பள்ளி மீதான அமெரிக்காவின் தாக்குதலில் உயிரிழந்த 160 சிறுமிகளும் அடங்குவர்.
- ஒரு லிட்டர் பெட்ரோல் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 321 க்கு விற்பனை ஆகிறது.
- சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100.80 க்கு விற்பனை.
ஈரான் மீதான இஸ்ரேல் - அமெரிக்க தாக்குதலும், பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் தாக்குதலும் ஒரு வாரத்தை எட்டியுள்ளது.
மேலும் உலகின் ஐந்தில் ஒரு பங்கு அதாவது 20 சதவீத எண்ணெய் தேவைக்கான ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது.
இதனால் மத்திய கிழக்கில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யமுடியாமல் கப்பல்கள் தவித்து வருகின்றன.
இதனால் உலக நாடுகளில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு பெட்ரோல், டீசல், எரிவாயு விலைகள் உயர்ந்து வருகின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சில நாட்களிலேயே ஒரு பேரல் 78 டாலரிலிருந்து 107 டாலராக உயர்ந்துள்ளது.
இதனிடையே பாகிஸ்தானில் பெட்ரோல் விலையை ரூ.55 உயர்த்தி அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
இதன் மூலம் பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 321 க்கு விற்பனை ஆகிறது. டீசல் ஒரு லிட்டர், பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 335.86 க்கு விற்பனை ஆகிறது
பாகிஸ்தான் தனது 90% எண்ணெய் மற்றும் 99% எல்என்ஜி எரிவாயு இறக்குமதிக்கு ஹார்முஸ் ஜலசந்தி பாதையையே நம்பியுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியானவுடன் லாகூர், கராச்சி, இஸ்லாமாபாத் போன்ற முக்கிய நகரங்களில் உள்ள பெட்ரோல் பங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கிலோமீட்டர் கணக்கில் வாகனங்கள் வரிசையில் நின்றன.
பல இடங்களில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல்கள் வெடித்தன. சில பங்குகளில் பெட்ரோல் இல்லை என்று மூடப்பட்டதால் பதற்றம் நிலவியது.
மேலும், எரிபொருள் தட்டுப்பாட்டைக் குறைக்க ஊழியர்களுக்கு Work From Home முறையை அமல்படுத்துவது குறித்தும் பாகிஸ்தான் அரசு ஆலோசித்து வருகிறது.
மறுபுறம், ஆப்கானிஸ்தான் உடனான மோதல் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே பிற ஆசிய நாடுகளிலும் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் பெட்ரோல் டீசல் பங்குகளில் இருப்பு உள்ளபோதே வாங்கி வைக்க மக்களை படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தற்சமயம் உயரவில்லை என்றாலும் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100.80 க்கும் ஒரு லிட்டர் டீசல் ரூ.92.61 க்கும் விற்பனையாகி வருகிறது.
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, "இந்தியாவில் எரிசக்தி தட்டுப்பாடு எதுவும் இல்லை, எரிபொருள் விநியோகம் தடையின்றித் தொடரும்" என்று உறுதியளித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக வரும் செய்திகள் வதந்தி என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மறுத்துள்ளது.
இதற்கிடையே நேற்று நள்ளிரவு நாடு முழுவதும் 14.2 கிலோ வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் 14.2 கிலோ வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ. 928.50 க்கு விற்கப்படுகிறது. அதேபோல வணிக பயன்பாட்டுக்கான சமையல் சிலிண்டர் விலை ரூ.115 உயர்ந்துள்ளது.
- கப்பல் போக்குவரத்துக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதால் ஏற்றுமதி செய்ய முடியாமல் தவிப்பு.
- உள்ளூர் மார்க்கெட்டிலும் விலை குறைப்பு ஏற்பட்டுள்ளதால் கூடுதல் சிரமம்.
அமெரிக்கா- ஈரான் இடையிலான போரால் இந்தியாவின் அரசி ஏற்றுமதி வர்த்தகம் கடும் பாதிப்பை அடைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் சவுதி அரேபியா, ஈராக், ஐக்கிய அரபு அமீரம் உள்ளிட்ட நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நாடுகளின் பாஸ்மதி அரசி தேவையை இந்தியாதான் 50 சதவீதம் பூர்த்தி செய்து வருகிறது. தற்போது போர் நடைபெற்று வருவதால் பாஸ்மதி அரசியை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 4 லட்சம் டன் அரிசி இந்தியாவில் தேங்கியுள்ளது.
உள்ளூர் மார்க்கெட்டில் ஏற்கனவே பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், திடீரென வெளிநாடுகளின் ஏற்றுமதி நிறுத்தம் காரணமாக அதிக பாதிப்பை சந்தித்துள்ளதாக அரசி மண்டி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். குவிண்டாலுக்கு 1000 ரூபாய் வரை விலை குறைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
கப்பல் செல்வதற்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதால், அதன் உரிமையாளர்கள் வாடகையை உயர்த்தியுள்ளனர். இதுவும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
- பஹ்ரைன் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
- ஈரானின் தாக்குதலை துரோகத் தாக்குதல் என பஹ்ரைன் கூறுகிறது.
அமெரிக்கா இஸ்ரேல் உடன் இணைந்து ஈரான் மீது கூட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் சரமாரி ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரான் தாக்குதல் நடத்தும் வளைகுடா நாடுகளில் பஹ்ரைனும் ஒன்று. தங்கள் நாட்டின் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதை துரோகம் என்று பஹ்ரைன் தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் தங்கள் நாட்டின் மீது ஈரான் செலுத்திய 78 ஏவுகணைகள், 143 டிரோன்களை அழித்ததாக பஹ்ரைன் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.
- ஈரான் துபாய் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது.
- இதனால் பொதுமக்களுக்கு செல்போன் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா இஸ்ரேல் உடன் இணைந்து ஈரான் மீது கூட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் சரமாரி ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் ஈரன் தாக்குதல் நடத்தி வருகிறது. துபாய் விமான நிலையம், பிரபல ஹோட்டல்கள் உள்ளிட்டவைகளை தாக்கி வருகிறது.
இந்த நிலையில் ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்படலாம் என துபாயில் வசித்து வரும் மக்களுக்கு செல்போன் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
- நாம் என்ன வாழைப்பழக் குடியரசா?
- அமெரிக்கா 30 நாள் அவகாசம் வழங்குகிறது என்ற வாசகமே ஆணவம் நிறைந்தது.
மத்திய கிழக்கு போர் சூழலால் இந்தியா உட்பட பல உலக நாடுகளில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உலகின் 20 சதவீத எண்ணெய் தேவைக்கு ஏற்றுமதி பாதையாக உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் மத்திய கிழக்கில் இருந்து எண்ணெய் கப்பல்கள் வர முடியாத சூழல் நிலவுகிறது.
இதற்கிடையே இந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் வழங்க ரஷியா முன்வந்தது. ஆனால் அண்மையில் அமெரிக்காவுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில் ரஷிய எண்ணெய் வாங்க மாட்டோம் என இந்தியா வாக்குறுதி அளித்திருந்தது.
இந்நிலையில் அவசர கால சூழலை கருத்தில் கொண்டு 30 நாட்களுக்கு மட்டும் தற்காலிகமாக ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அனுமதி வழங்குவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
"இந்த 30 நாள் சலுகை ஏற்கனவே நடுக்கடலில் உள்ள கப்பல்களுக்கு மட்டுமே பொருந்தும். இதனால் ரஷ்யாவிற்குப் பெரிய நிதி ஆதாயம் கிடைக்காது" என்று அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் எரிசக்தி கொள்கையை அமெரிக்கா தீர்மானிப்பது நவ காலனித்துவ ஆதிக்கம் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மற்றும் பாஜக அரசை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நீங்கள் புதினிடம் இருந்து எண்ணெய் வாங்கலாம் என டிரம்ப் அனுமதி அளித்துள்ளார். டிரம்ப் புதிய விளையாட்டைத் தொடங்கியுள்ளார். இது அமெரிக்காவின் அப்பட்டமான மிரட்டல்" என்று பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் மக்களவை எம்.பி மணிஷ் திவாரி, "அமெரிக்கா 30 நாள் அவகாசம் வழங்குகிறது என்ற வாசகமே ஆணவம் நிறைந்தது. நாம் என்ன வாழைப்பழக் குடியரசா? நமது எரிசக்தி பாதுகாப்பைத் தீர்மானிக்க அமெரிக்காவின் அனுமதி தேவையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி ரண்தீப் சிங் சுர்ஜேவாலா, "ஆபரேஷன் சிந்தூர் முதல் ரஷ்ய எண்ணெய் விவகாரம் வரை, பாஜக அரசு இந்தியாவின் சுதந்திரத்தை அடமானம் வைத்துவிட்டது. மத்தியில் ஒரு அரசாங்கம் இருக்கிறதா?" என்று தெரிவித்துள்ளார்.
- இந்தியா தனது தேவையில் 40% எண்ணெயை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கிறது.
- எதிர்காலத்தில் இந்தியா அமெரிக்காவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை வாங்கும்.
மத்திய கிழக்கில் போர் நடப்பதால் உலகம் முழுவதிலும் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா தனது தேவையில் 40% எண்ணெயை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கிறது.
இந்தியாவின் கச்சா எண்ணெய் இருப்பு 25 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது.
தற்போது ஹார்முஸ் ஜலசந்தி முடங்கியுள்ளதால், இந்தியாவிற்கு மாற்று வழி அவசியமாகிறது.
இந்தியாவுக்கு கூடுதல் எண்ணெய் வழங்குவதாக ரஷியா முன்வந்தது. ஏற்கனவே கப்பலில் ஏற்றப்பட்டு கடலில் தயார் நிலையில் உள்ள ரஷிய எண்ணெய்யை இந்தியாவுக்கு விற்பதில் ரஷியா முனைப்பு காட்டும் சூழலில் இந்தியா தயக்கம் காட்டியது.
ரஷிய எண்ணெய்யை வாங்க மாட்டோம் என்று அண்மையில் அமெரிக்காவுடன் செய்துகொண்ட வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா வாக்குறுதி அளித்தது. இதனால் ரஷிய எண்ணெய் இறக்குமதியை இந்தியா கணிசமாக குறைந்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் அவசர கால அடிப்படையில் அடுத்த 30 நாட்களுக்கு மட்டும் ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்க அனுமதிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
"இந்த 30 நாள் சலுகை ஏற்கனவே நடுக்கடலில் உள்ள கப்பல்களுக்கு மட்டுமே பொருந்தும். இதனால் ரஷ்யாவிற்குப் பெரிய நிதி ஆதாயம் கிடைக்காது" என்று அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இந்தியா அமெரிக்காவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெயை வாங்கும் என்று வாஷிங்டன் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் ரஷிய எண்ணெயை உடனடியாக வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
ஏற்கனவே சுமார் 2 கோடி பீப்பாய்கள் ரஷிய எண்ணெயை இந்திய நிறுவனங்கள் வர்த்தகர்களிடமிருந்து வாங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸும் ரஷிய எண்ணெயை வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.






