என் மலர்
நீங்கள் தேடியது "Mamta Banerjee"
- தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் நடந்து வருகின்றன.
- போதுமான திட்டமிடல், தகவல் தொடர்பு இல்லாதது எஸ்ஐஆர் செயல்முறையை சீர்குலைத்துவிட்டது.
கொல்கத்தா:
தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகளை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்நிலையில் எஸ்ஐஆர் குளறுபடி குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாருக்கு, மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள எஸ்ஐஆர் குழப்பமானது, வற்புறுத்தும் வகையில் உள்ளது.
இது மிகவும் ஆபத்தானது. இதை உடனே நிறுத்த வேண்டும். போதுமான திட்டமிடல் , தகவல் தொடர்பு இல்லாதது எஸ்ஐஆர் செயல்முறையை சீர்குலைத்துவிட்டது.
பெரும்பாலான பிஎல்ஓக்கள் உரிய பயிற்சி இல்லாமை, சர்வர் செயலிழப்புகள், மீண்டும் மீண்டும் தரவு பொருந்தாத தன்மை காரணமாக ஆன்லைன் படிவங்களுடன் போராடுகிறார்கள்.
இந்த வேகத்தில் டிசம்பர் 4-ம் தேதிக்குள் பல தொகுதிகளில் உள்ள வாக்காளர் தரவை தேவையான துல்லியத்துடன் பதிவேற்ற முடியாது என்பது கிட்டத்தட்ட உறுதி.
ஆனால் தேர்தல் ஆணையத்தின் தீவிர அழுத்தம் மற்றும் தண்டனை நடவடிக்கை குறித்த பயத்தின் காரணமாக பலர் தவறான அல்லது முழுமையற்ற உள்ளீடுகளைச் செய்யத் தள்ளப்பட்டனர்.
இது உண்மையான வாக்காளர்களின் வாக்குரிமையை பறிக்கும். வாக்காளர் பட்டியலின் நேர்மையை பாதிக்கும்.
இந்த செயல்முறை தொடங்கியதிலிருந்து பல அதிகாரிகள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். டிசம்பர் 4-ம் தேதிக்குள் இந்தப் பணிகளை முடிக்க முடியாது. எனவே அதை நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- SIR தொடங்கியதிலிருந்து ஏற்கனவே 28 பேர் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.
- பணிச்சுமையால் இத்தகைய விலைமதிப்பற்ற உயிர்கள் இழக்கப்படுகின்றன.
இந்திய வாக்காளர் பட்டியலில் இருந்து சட்டவிரோத குடியேறிகள், போலி வாக்காளர்கள் மற்றும் இறந்தவர்களை நீக்கும் வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பீகாரைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு (2026) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த தீவிர திருத்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. மேற்கு வங்காளத்திலும் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், மேற்குவங்கத்தில் SIR பணிகளில் ஈடுபட்டு வந்த சாந்தி முனி எக்கா என்ற பூத் லெவல் அதிகாரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்துகொண்ட சாந்தி முனி எக்காவுக்கு இரங்கல் தெரிவித்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "இன்று மீண்டும், ஜல்பைகுரியின் மாலில் ஒரு பூத் லெவல் அதிகாரியை இழந்தோம். சாந்தி முனி எக்கா, ஒரு பழங்குடியின பெண், ஒரு அங்கன்வாடி ஊழியர், நடந்து வரும் SIR பணியின் தாங்க முடியாத அழுத்தத்தில் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
SIR தொடங்கியதிலிருந்து ஏற்கனவே 28 பேர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். சிலர் பயம் மற்றும் நிச்சயமற்ற தன்மை காரணமாகவும், மற்றவர்கள் மன அழுத்தம் மற்றும் அதிக வேலைச்சுமை காரணமாகவும் உயிரை இழந்துள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் திட்டமிடப்படாத, இடைவிடாத பணிச்சுமையால் இத்தகைய விலைமதிப்பற்ற உயிர்கள் இழக்கப்படுகின்றன. முன்பு 3 ஆண்டுகள் எடுத்த ஒரு செயல்முறை, தங்களது அரசியல் எஜமானர்களை மகிழ்விக்க, தேர்தல்களுக்கு முன்னதாக 2 மாதங்களுக்குள் கட்டாயப்படுத்தப்பட்டு, BLO-க்கள் மீது மனிதாபிமானமற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
மனசாட்சியுடன் செயல்பட்டு, மேலும் உயிர்கள் இழக்கப்படுவதற்கு முன்பு இந்த திட்டமிடப்படாத SIR பணிகளை உடனடியாக நிறுத்துமாறு தேர்தல் ஆணையத்தை நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- தேர்தல் கமிஷனின் தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
- மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
கொல்கத்தா:
இந்திய வாக்காளர் பட்டியலில் இருந்து சட்டவிரோத குடியேறிகள், போலி வாக்காளர்கள் மற்றும் இறந்தவர்களை நீக்கும் வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பீகாரைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு (2026) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் இந்த தீவிர திருத்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. மேற்கு வங்காளத்திலும் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. மேற்கு வங்காள மந்திரிகள், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இப்பேரணியில் பங்கேற்றனர்.
அப்போது, பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியான அபிஷேக் பானர்ஜி, இரண்டு நாட்களில் இவ்வளவு பெரிய கூட்டத்தை திரட்ட முடியும் என்றால், டெல்லியில் எங்கள் போராட்டத்திற்கு எவ்வளவு பேர் திரள்வார்கள் என்பதை பா.ஜ.க. கண்டிப்பாக யோசித்துப் பார்க்க வேண்டும். டெல்லி ஜமீன்தாரர்களுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம் என தெரிவித்தார்.
- தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்கள் மாணவர்களைக் கவனித்துக் கொள்ளவேண்டும்.
- மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பா.ஜ.க. விமர்சித்துள்ளது.
கொல்கத்தா:
கடந்த வெள்ளிக்கிழமை இரவு துர்காபூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குப் பின்புறம் உள்ள பகுதியில் 23 வயது எம்பிபிஎஸ் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் ஒடிசாவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, செய்தியாளர்களிடம் பேசிய மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மாணவி எப்படி இரவு 12.30 மணிக்கு வெளியே வந்தாள்? தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்கள் மாணவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டும். பெண்கள் இரவில் கல்லூரிக்கு வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது என தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசை பா.ஜ.க. விமர்சித்து வருகிறது
இந்நிலையில், மம்தா பானர்ஜியின் கருத்துக்கு பா.ஜ.க. முன்னாள் எம்.பி. லாக்கெட் சாட்டர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
இங்கு மம்தா பானர்ஜியின் ஆட்சி நடைபெறுகிறதா அல்லது தலிபான், பாகிஸ்தான் ஆட்சி நடைபெறுகிறதா?
இரவு நேரங்களில் பெண்கள் வெளியே வர வேண்டாம் என கூறியுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூரின் போது சோபியா குரேசி மற்றும் வியோமிகா சிங் ஆகியோர் இரவில் சென்றுதான் தாக்குதல் நடத்தினர்.
மேற்கு வங்க பெண் முதல்வரே, பெண்களை இரவில் வெளியில் வரவேண்டாம் என்பதுதான் இன்றைய மேற்கு வங்கத்தின் நிலை.
இதற்கு மேற்கு வங்க பெண்கள் தக்க பதிலளிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
- மேற்கு வங்கம் தற்போது இயற்கை பேரழிவுகள், கனமழை போன்றவற்றால் தத்தளித்து வருகிறது.
- 15 நாளுக்குள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்தி முடிக்க முடியுமா என்றார்.
கொல்கத்தா:
மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
பா.ஜ.க. தலைவர் ஒருவர் (அமித் ஷா), வாக்காளர் பட்டியலில் இருந்து பல லட்சம் பெயர்களை நீக்குவோம் என்பதைச் சொல்வதற்காக மேற்கு வங்கம் வந்தார்.
மேற்கு வங்கம் தற்போது இயற்கை பேரழிவுகள், கனமழை போன்றவற்றால் தத்தளித்து வருகிறது. 15 நாளுக்குள் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்தி முடிக்க முடியுமா?
தற்போதைய சூழ்நிலையில், புதிய பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியுமா? இந்திய தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வின் உத்தரவின் அடிப்படையில் செயல்பட வேண்டுமா அல்லது பொதுமக்களின் உரிமைகளின் நலனுக்காக செயல்பட வேண்டுமா?
இவை எல்லாம் அமித் ஷாவின் விளையாட்டு. அவர் இந்த நாட்டின் செயல் பிரதமரைப் போல நடந்துகொள்கிறார். பிரதமர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். எனினும், இதைச் சொல்வதற்கு வருந்துகிறேன்.
அமித் ஷாவை எப்போதும் நம்ப வேண்டாம் என பிரதமரை நான் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ஒரு நாள் அவர், உங்களுக்கு எதிராக மீர் ஜாபரைப் போல மாறுவார். நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது. எனது வாழ்க்கையில் பல அரசாங்கங்களை பார்த்திருக்கிறேன். ஆனால், இதுபோன்ற ஒரு திமிர்பிடித்த, சர்வாதிகார ஆட்சியை ஒருபோதும் பார்த்ததில்லை என தெரிவித்தார்.
மீர் ஜாபர் 18-ம் நூற்றாண்டில் வங்கத்தின் ராணுவத் தளபதியாக இருந்தவர். பிளாசி போரில் நவாப் சிராஜ் உத் தவுலாவைக் காட்டிக் கொடுத்து பின்னர் ஆங்கிலேயர்களின் உதவியுடன் மன்னரானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நாங்கள் நேபாளத்தின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.
- விரைவில் உங்கள் அனைவரையும் அழைத்து வருவோம் என தெரிவித்தார் மம்தா.
கொல்கத்தா:
மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாங்கள் எங்கள் தாய்மொழியான வங்காள மொழியைப் பேசுவோம் என்பதில் தெளிவாக இருக்க விரும்புகிறோம். நாங்கள் மற்ற மொழிகளையும் மதிக்கிறோம்.
வங்காளத்திற்குத் திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ. 5000 வழங்கப்படும். அவர்கள் தங்கள் குழந்தைகளை அருகிலுள்ள பள்ளியில் சேர்க்க முடியும்.
நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பான பிரச்சனையை தீவிரமாக எடுத்துக்கொள்கிறேன்.
நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை சிறிது நேரம் காத்திருக்கச் சொல்ல விரும்புகிறேன். நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம், விரைவில் உங்கள் அனைவரையும் அழைத்து வருவோம் என தெரிவித்தார்.
- மம்தா பானர்ஜி பேசுகையில், பா.ஜ.க. ஊழல்வாத கட்சி, வாக்குத் திருடர்களின் கட்சி என தெரிவித்தார்.
- எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கொல்கத்தா:
மகாராஷ்டிரா, அசாம், ஒடிசா, டெல்லி, குஜராத் போன்ற பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வங்காள மொழி பேசும் மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர் எனக்கூறி, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடா்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது.
மேற்கு வங்க சட்டசபையில் இந்த விவகாரம் தொடா்பான சிறப்பு தீா்மானம் ஆளும் கட்சி சார்பில் இன்று முன்மொழியப்பட்டது.
விவாதம் தொடங்கியவுடன் மேற்கு வங்க மந்திரியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்நிலையில், சட்டசபையில் மம்தா பானர்ஜி பேசுகையில், பா.ஜ.க. ஊழல்வாத கட்சி, வாக்குத் திருடர்களின் கட்சி. மிகப்பெரிய கொள்ளையர்களின் கட்சி. மத்தியில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா தலைமையிலான அரசு விரைவில் கவிழும் என தெரிவித்தார்.
மம்தா பானர்ஜியின் பேச்சுக்கு எதிராக பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பாஜக கொறடா சங்கர் கோஷ் இன்று ஒருநாள் கூட்டத்தொடரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து சபையில் இருந்து அவர் வெளியேற மறுத்ததால், அவைக் காவலர்கள் மூலம் வெளியேற்ற உத்தரவிடப்பட்டது.
- நாடு முழுவதும் உள்ள 2 லட்சத்துக்கும் அதிகமானோரிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
- மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி 2வது இடம் பிடித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவில் சிறப்பாகச் செயலாற்றும் முதல் மந்திரி யார் என்று இந்தியா டுடே நாளிதழ் இந்த மாதம் [ஆகஸ்ட்] நடத்திய Mood of the Nation கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள 2,06,826 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பானது நடத்தப்பட்டுள்ளது.
இதன்படி, 36 சதவீதம் பேர் உத்தர பிரதேச மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தை சிறப்பாகச் செயல்படும் முதல் மந்திரியாக கருதுகின்றனர். உ.பி. முதல்வர் கடந்த பிப்ரவரியில் 35 சதவீத ஆதரவு பெற்று இருந்தார். தற்போது ஒரு சதவீதம் அதிகரித்து 36 சதவீதம் பெற்றுள்ளார்.
2வது இடம் பிடித்துள்ள மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் செயல்பாடுகளை 13 சதவீதம் பேர் விரும்புகின்றனர்.
அவரைத் தொடர்ந்து 7 சதவீதம் பேர் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு சிறந்த முறையில் செயல்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.
- புலம்பெயர்ந்தோரைக் குறிவைத்து பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தாக்குதல் நடத்தப்படுவதாக செய்தி வெளியானது.
- இதைக் கண்டித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
கொல்கத்தா:
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் புலம்பெயர்ந்தோரைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதைக் கண்டித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படு வருகிறது.
இந்நிலையில், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நடைபெற்ற கண்டன பேரணியில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
நாங்கள் எல்லா மொழிகளையும் மதிக்கிறோம். இந்தியக் குடிமகனாக இருக்கும் அனைவரையும் மதிக்கிறோம். ஆனால் வங்காளிகள் அட்டூழியங்களை எதிர்கொள்ள வேண்டும் என்று அர்த்தமல்ல. அதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.
வங்காளிகளை யாரும் துன்புறுத்த அனுமதிக்க மாட்டோம். யாராவது வங்காள மொழி பேசினால், அவர்களை வங்காளதேச-ரோஹிங்கியாக்கள் என அழைக்கலாம் என்று நினைக்கிறீர்களா?
வங்காளதேசிகள் வங்காளதேசத்தில் இருக்கிறார்கள். ரோஹிங்கியாக்கள் மியான்மரில் வாழ்கிறார்கள். நம்மிடம் என்ன இருக்கிறது?
மேற்கு வங்காள குடிமக்கள் மட்டுமே. அவர்களிடம் அடையாள அட்டைகள், ஆதார் அட்டைகள் மற்றும் பான் கார்டுகள் உள்ளன. அவர்கள் மேற்கு வங்காளத்திற்கு வெளியே வேலை செய்கிறார்கள், ஏனென்றால் அவர்களிடம் திறமைகள் உள்ளன.
மேற்கு வங்காளம் இந்தியாவில் இல்லையா? அது நாட்டின் ஒரு பகுதி இல்லையா? ஒரே ஒரு மொழி மட்டுமே பேசப்படும் பல மாநிலங்கள் உள்ளன. அந்த மக்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை.
இந்தி பேசுபவர்கள் மகாராஷ்டிராவில் இருந்து வெளியேற்றப்பட்டபோது, முதலில் குரல் எழுப்பியவர்கள் நாங்கள்தான். இங்கு வாழும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அனைவரையும் நாங்கள் மதிக்கிறோம். அவர்கள் தொழிலாளர்கள், தொழிலதிபர்கள், கடைக்காரர்கள், வியாபாரிகள் அல்லது ஊழியர்கள் என யாராக இருந்தாலும் சரி. அவர்கள் எங்களுடையவும் எங்கள் நாட்டின் ஒரு பகுதியினரும் என்பதால் நாங்கள் அவர்களை ஒருபோதும் தாக்கமாட்டோம். நாங்கள் அவர்களை நேசிக்கிறோம்.
பீகாரில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களை நீக்கியுள்ளனர். இந்த முறையைப் பயன்படுத்தியே மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் ஆட்சி அமைத்துள்ளனர்.
பீகாரிலும் இதே நடைமுறையை கடைப்பிடிக்க உள்ளனர். மேற்கு வங்காளத்திலும் இதே முறையைப் பின்பற்ற பா.ஜ.க. முயற்சித்து வருகிறது. ஆனால் அவர்களது முயற்சியை இன்ச் பை இன்சாக தடுத்து வருகிறோம் என தெரிவித்தார்.
- கொல்கத்தா ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை உறுதிசெய்து 25,753 ஆசிரியர்கள் நியமனத்தை ரத்துசெய்தது.
- நியமனத்தில் குறைபாடு மற்றும் களங்கம் இருப்பதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தில் கடந்த 2016-ம் ஆண்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கான ஆசிரியா்கள், அலுவலா் பணி நியமனங்களில் முறைகேடு நடைபெற்றதாக வழக்குகள் தொடரப்பட்டன. இதை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட் முறைகேட்டை உறுதி செய்து 25,753 ஆசிரியா், அலுவலா் பணி நியமனங்களை ரத்துசெய்து கடந்த ஆண்டு ஏப்ரலில் தீர்ப்பளித்தது. அதில் சட்டவிரோத பணி நியமனத்திற்கு உதவிய மேற்கு வங்காள அரசு அதிகாரிகள் யாா் என்பது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க இருப்பதாக ஐகோர்ட் தெரிவித்து இருந்தது.
இந்த தீா்ப்புக்கு எதிராக மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. கொல்கத்தா ஐகோர்ட் நியாயமின்றி ஆசிரியா் மற்றும் அலுவலா் பணி நியமனங்களை ரத்துசெய்ததாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு அப்பீல் வழக்கில் நேற்று தீர்ப்பளித்தது.
கொல்கத்தா ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை உறுதிசெய்து 25,753 ஆசிரியர்கள் நியமனத்தை ரத்துசெய்து உத்தரவிட்டது. நியமனங்கள் ரத்து செய்யப்பட்டவர்கள் தங்கள் சம்பளம் மற்றும் பிற ஊதியங்களை திருப்பி தரவேண்டிய அவசியம் இல்லை. மனிதாபிமான அடிப்படையில் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு தளர்வு அளித்து அவர்கள் பணியில் நீடிப்பார்கள் என தெரிவித்தனர்.
மேலும், புதிய தேர்வு செயல்முறையை தொடர்ந்து 3 மாதங்களுக்குள் முடிக்கவும் மேற்கு வங்காள அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு மம்தா பானர்ஜிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், இந்த தீர்ப்பு தொடர்பாக மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அதேநேரத்தில் மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும். மீண்டும் பணியாளர்களை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் பா.ஜ.க.வும் கம்யூனிஸ்ட்டும் சதி செய்துள்ளன என தெரிவித்தார்.
- மசோதாவிற்கு 2 எம்.பி.க்களை தவிர அனைவரும் ஆதரவு தெரிவித்தனர்
- தே.ஜ.க. கூட்டணி ஆளும் 16 மாநிலங்களில் ஒரு பெண் முதல்வர் கூட இல்லை
மேற்கு வங்காளத்திலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் (62). பல சந்தர்ப்பங்களில் பா.ஜ.க.விற்கு எதிராக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வருபவர்.
இந்தியாவின் பாராளுமன்ற தொகுதிகளிலும், மாநிலங்களின் சட்டசபை தொகுதிகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வருவதற்கான மசோதாவை நேற்று மக்களவையில் பா.ஜ.க. தாக்கல் செய்தது. இந்திய பாராளுமன்றத்திற்கான புதிய கட்டிடத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் மசோதா இது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் தொகை கணக்கெடுப்பும், பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை மறுசீரமைப்பும் முடிந்ததும்தான் இந்த ஒதுக்கீடு நடைமுறைக்கு வரும். 2024 பொதுத்தேர்தலுக்கு பிறகு இதற்கான பணிகள் தொடங்கும் என அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் 2 உறுப்பினர்கள் நீங்கலாக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த மசோதாவிற்கு ஆதரவு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவிற்கு ஒப்புதல் அளித்த எதிர்கட்சிகள் அதன் சில அம்சங்களை குறித்து விமர்சித்தனர்.
இது குறித்த விவாதத்தின் போது மாநிலங்களவையில் பேசிய டெரிக் ஓ பிரியன் தெரிவித்ததாவது:
பெண்களுக்கு அதிகாரம் அளிக்க பா.ஜ.க. உண்மையில் விரும்பவில்லை. தேர்தலில் போட்டியிட தொகுதி ஒதுக்குவது வேறு; வெல்லும் வாய்ப்புள்ள தொகுதிகளை ஒதுக்குவது என்பது வேறு. மேற்கு வங்காளத்தில் சுகாதாரம், நிதி, நில சீர்திருத்தம், தொழில் துறை மற்றும் வர்த்தகம் ஆகியவற்றிற்கு பெண்கள்தான் அமைச்சர்களாக உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் 16 மாநிலங்களில் ஒரு பெண் முதல்வர் கூட இல்லை. நீங்கள் பழைய பாராளுமன்ற கட்டிடத்திலிருந்து புது பாராளுமன்றத்திற்கு மாறலாம். ஆனால் முதலில் உங்கள் கண்ணோட்டத்தை நீங்கள் மாற்றி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
டெரிக் ஓ பிரையன் அரசியலில் நிழைவதற்கு முன் தொலைக்காட்சிகளில் புகழ் பெற்ற போர்ன்விட்டா கேள்வி-பதில் நிகழ்ச்சியில் கேள்வியாளராக பிரபலம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தொழில் துறையை மேம்படுத்த மேற்கு வங்க உலக வர்த்தக சந்திப்பு நடைபெற்றது
- தான் பட்ட துன்பங்களை குறித்து மம்தா உரை ஆற்ற வேண்டும் என்றார் மிச்சி
இந்தியா மற்றும் அயல்நாடுகளில் உள்ள தொழிலதிபர்கள், மேற்கு வங்கத்தில் முதலீடு செய்து தொழில்துறையை ஊக்குவிக்கவும், அதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் அங்கு உலக வர்த்தக சந்திப்பு நடைபெறுகிறது.
நேற்று, மேற்கு வங்க உலக வர்த்தக சந்திப்பில் (Bengal Global Business Summit) மேற்கு வங்க முதல்வரின் தலைமை ஆலோசகர் அமித் மித்ரா, ஆக்ஸ்போர்டு துணைவேந்தரும் (pro-vice-chancellor) அறிவுசார் பரிமாற்ற துறையின் பேராசிரியருமான ஜொனாதன் மிச்சியை (Jonathan Michie) உரையாற்ற அழைத்தார்.
அப்போது ஜொனாதன் மிச்சி தெரிவித்ததாவது:
இனவெறிக்கு எதிராகவும் சமூக அமைதியை நிலைநாட்டவும் மம்தா பானர்ஜி மேற்கொள்ளும் முயற்சிகள் எங்களை நெகிழ செய்துள்ளது. அடுத்த வருடம் ஜூன் மாதம், எங்கள் பல்கலைக்கழகத்திற்கு அவர் வருகை தந்து தனது வாழ்நாளில் பட்ட துன்பங்களையும், போராட்டங்களையும், அதை தாண்டிய அவரது சாதனைகளையும் குறித்து உரையாற்ற அழைத்தோம். ஆக்ஸ்போர்டில் இந்தியர்கள் பலர் கல்வி பயில்வதால், மம்தாவின் உரை எங்கள் மாணவ மாணவியர்களாலும், பேராசிரியர்களாலும் மிகவும் விரும்பப்படும். எங்கள் அழைப்பை அவர் ஏற்று கொண்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு மிச்சி கூறினார்.
தென்மேற்கு இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டுஷையர் (Oxfordshire) பிராந்தியத்தில் உள்ளது ஆக்ஸ்போர்டு (Oxford) நகரம். உலக புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் (Oxford University) இந்நகரத்தில் உள்ளது. தொன்மை வாய்ந்த இப்பல்கலைக்கழகம், 900 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 38 கல்லூரிகள் இணைந்துள்ளன. அவற்றில் உலகின் பல பகுதிகளில் இருந்து 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பல்வேறு ஆய்வுகளுக்காக 70 துறைகள் அங்கு இயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.






