search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Medical student"

    • வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்த பெண்ணின் கணவர் பேனா கேமராவை ஆய்வு செய்தார்.
    • வாடகைக்கு குடியிருந்த பெண்ணின் வீட்டில் படுக்கை அறைக்குள் யாருக்கும் தெரியாமல் புகுந்து பேனா கேமராவை பொருத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.

    ராயபுரம்:

    சென்னை ராயபுரம் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வாடகை வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார். 2-வது தளத்தில் 9 வயது மகனுடன் குடியிருந்த இவரது கணவர் கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார்.

    நேற்று காலையில் இவர்கள் வசித்து வந்த வீட்டின் படுக்கை அறையில் புதிதாக பேனா ஒன்று இருந்ததை பெண் பார்த்துள்ளார். அதில் கேமரா இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி தனது கணவரிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.

    இதையடுத்து வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்த பெண்ணின் கணவர் பேனா கேமராவை ஆய்வு செய்தார்.

    அப்போது அதில் தனது மனைவியின் ஆபாச வீடியோக்கள் இருந்தன. உடை மாற்றும் காட்சிகளும், மேலும் பல வீடியோக்களும் பதிவாகி இருந்தன.

    இதையடுத்து ராயபுரம் போலீஸ் நிலையத்துக்கு சென்று கணவர் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ரஜினிஸ் இதுதொடர்பாக விசாரணை நடத்தினார்.

    அப்போது வீட்டின் உரிமையாளரின் மகனான இப்ராகிம் படுக்கை அறையில் பேனா கேமராவை பொருத்தி இளம்பெண்ணை ஆபாசமாக வீடியோ பதிவு செய்திருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    இப்ராகிம் மருத்துவ மாணவர் என்பது தெரிய வந்தது. சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் எம்.டி.எஸ். இறுதியாண்டு படித்து வரும் இவர், வாடகைக்கு குடியிருந்த பெண்ணின் வீட்டில் படுக்கை அறைக்குள் யாருக்கும் தெரியாமல் புகுந்து பேனா கேமராவை பொருத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. அவர் மீது 3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    • மாணவர், பெற்றோர் சங்கம் வலியுறுத்தல்
    • புதுவை மாணவர்களுக்கான இடங்கள் பறிபோகிவிடுமோ என்ற அச்சத்திலும், குழப்பத்திலும் உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்க தலைவர் நாராயணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய, மாநில அரசு கட்டுபாட்டில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை மருத்துவ கல்லூரிகளின் 100-சதவீத இடங்களையும் இந்த ஆண்டு தேசிய மருத்துவ ஆணையம் மூலம் தான் கலந்தாய்வு நடத்தப்படும். அனைத்து மாநில அரசுகளுக்கும் அரசு ஒதுக்கீடு மற்றும் இடஒது க்கீடு குறித்த விபர ங்களை அனுப்பி வைக்க வேண்டும். இதற்கான மாநில அரசின் பெறுப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் பரவியுள்ளது.

    அதற்கான கலந்தாய்வு கூட்டம் நடத்தி இந்த மாதத்திலேயே முடிவு செய்து மருத்துவ கலந்தாய்வு நடத்த உள்ளதாக தெரிய வருகின்றது.

    இதனால் புதுவை மாநில மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்களின் மாநில அரசின் சாதி அடிப்ப டையிலான இடஒதுக்கீடும், பிற இடஒதுக்கீடுகளும் ஜிப்மர் மருத்துவ கல்லூரியின் புதுவை மாணவர்களுக்கான இடங்கள் பறிபோகிவிடுமோ என்ற அச்சத்திலும், குழப்பத்திலும் உள்ளனர்.

    ஆகவே புதுவை அரசு 2023-24-ம் ஆண்டுக்கான மருத்துவ மாணவர்கள் கலந்தாய்வை சென்டாக் மூலம் நடத்துமா? தேசிய மருத்துவ ஆணையம் நடத்துமா? என்ற விவரங்களை உடனடியாக வெளியிட வேண்டும் .

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2021-22-ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
    • மாணவ-மாணவிகளுக்கு இதயதுடிப்பு மாணி மற்றும் மருத்துவர் வெள்ளை அங்கியை கலெக்டர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் 2021-22-ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்று 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார்.

    விழாவில் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 7 மாணவிகள், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 மாணவ-மாணவிகள், உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 3 மாணவிகள், கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 மாணவ-மாணவிகள், அய்யங்காளிபாளையம் வி.கே.அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 மாணவ-மாணவிகள், கே.எஸ்.சி. மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 2 பேர்.

    பெருமாநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 மாணவ-மாணவிகள், பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 மாணவிகள், உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு மாணவர், அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒரு மாணவி, பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு மாணவரும், மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு மாணவரும், தாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு மாணவரும், எலையமுத்தூர் எஸ்.என்.வி.அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு மாணவரும் என மொத்தம் 14 அரசு பள்ளிகளில் படித்த 29 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    விழாவில் மாணவ-மாணவிகளுக்கு இதயதுடிப்பு மாணி மற்றும் மருத்துவர் வெள்ளை அங்கியை கலெக்டர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருவளர்ச்செல்வி, மாவட்ட கல்வி அதிகாரி பழனிச்சாமி (உடுமலை), முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர், நீட் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், கூடுதல் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • உலக பொதுமறையான திருக்குறள் மற்றும் கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற காப்பிய நூல்களை கற்க இன்றைய தலைமுறை இளைஞர்களிடம் ஆர்வம் குறைந்துள்ளது.
    • நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு மாணவியை சால்வை அணிவித்து வாழ்த்தி பாராட்டினார்.

    புதுச்சேரி:

    உலக பொதுமறையான திருக்குறள் மற்றும் கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற காப்பிய நூல்களை கற்க இன்றைய தலைமுறை இளைஞர்களிடம் ஆர்வம் குறைந்துள்ளது.

    அனைவரும் தமிழ் காப்பியங்களையும், அற நூல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மருத்துவ கல்லூரி மாணவி ஸ்ரீ கஜலட்சுமி சிறிய துண்டு பேப்பரில் 1330 திருக்குறளை எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

    புதுவையில் உள்ள ரெசிடென்சி பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 15 X 42 செ.மீ. அளவில் உள்ள சிறிய காகிதத்தில் 12 மணி நேரத்தில் 1330 திருக்குறளையும் எழுதி உலக சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை கலாம் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து உலக சாதனை சான்றிதழை வழங்கினார்கள்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு மாணவியை சால்வை அணிவித்து வாழ்த்தி பாராட்டினார். மேலும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார், எம்.எல்.ஏ.க்கள் சிவசங்கர், லட்சுமிகாந்தன், பள்ளி தாளாளர் கிரிஸ்டிராஜ் ஆகியோர் உலக சாதனை படைத்த மாணவியை பாராட்டினார்கள்.

    நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை விழிகள் அறக்கட்டளையின் நிர்வாகி பிரேம்குமார், செயலாளர் கீர்த்தனா தலைமையில் தன்னார்வலர்கள் செய்திருத்தனர்.

    • விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் இடையே நிறுத்தங்கள் எதுவும் இல்லாததால் கர்ப்பிணியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
    • மருத்துவ மாணவி கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க முடிவு செய்தார். மற்ற பயணிகளும் அவருக்கு உதவ முன்வந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் செல்லும் தூரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று அதிகாலை புறப்பட்டு வந்தது.

    அதில் உள்ள ஏசி பெட்டியில் ஐதராபாத்தை சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர் அவரது கர்ப்பிணி மனைவியுடன் பயணம் செய்தார். விஜயவாடா-விசாகப்பட்டினம் இடையே அதிகாலை 5.35 மணிக்கு ரெயில் வந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவர் துடித்தார்.

    ரெயில் பெட்டியில் இருந்த பயணிகள் என்ன செய்வது என்று திகைத்து உதவி செய்ய முடியாமல் தவித்தனர்.

    அதிர்ஷ்டவசமாக அதே பெட்டியில் குண்டூர் மாவட்டம் நரசராவ் பேட்டையை சேர்ந்த 4-ம் ஆண்டு மருத்துவம் படிக்கும் மாணவி சுவாதி ரெட்டி என்பவர் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் கர்ப்பிணி பெண்ணுக்கு முதலுதவி அளிக்க தொடங்கினார்.

    விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் இடையே நிறுத்தங்கள் எதுவும் இல்லாததால் கர்ப்பிணியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மருத்துவ மாணவி கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க முடிவு செய்தார். மற்ற பயணிகளும் அவருக்கு உதவ முன்வந்தனர்.

    ரெயிலில் ஒரு பகுதியை பிரசவ அறை போல மாற்றுவதற்காக அவர்கள் போர்வை மற்றும் துணியால் கொண்டு மூடி மறைத்தனர்.

    மருத்துவ மாணவி சுவாதிரெட்டிக்கு தேவையான உதவிகளை செய்ய அங்குள்ள சில பெண்களும் முன் வந்தனர்.

    இதனால் மருத்துவ மாணவி துணிச்சலுடன் கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவம் பார்க்க தொடங்கினார். சுமார் 1.30 மணி நேரத்திற்கு பிறகு கர்ப்பிணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

    இதனால் ரெயில் பயணிகள் நிம்மதி அடைந்தனர். மேலும் மருத்துவ மாணவிக்கு கை கொடுத்து பாராட்டு தெரிவித்தனர். இந்த சம்பவம் ரெயிலில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    மாணவி தன்னிடம் இருந்த மருத்துவ உபகரணங்களை கொண்டு கர்ப்பிணிக்கு மேலும் முதல் உதவிகளை அளித்தார்.

    பிறந்த குழந்தையை வெதுவெதுப்பான சூழ்நிலையில் வைக்க வேண்டும். ஆனால் அவர்கள் பயணம் செய்தது ஏசி பெட்டி என்பதால் குழந்தை குளிரில் நடுங்க தொடங்கியது.

    இதனைத் தொடர்ந்து மற்ற பயணிகள் தங்களது போர்வைகளை கொடுத்து குழந்தையை வெதுவெதுப்பான சூழ்நிலையில் வைக்க உதவி செய்தனர்.

    ரெயில் அனக்கா பள்ளி நிலையத்திற்கு வந்ததும் 108 ஆம்புலன்ஸ் முன்கூட்டியே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. அதில் தாய் மற்றும் குழந்தையை எடுத்துச் சென்று மருத்துவ மாணவி அங்குள்ள என்டிஆர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    ஓடும் ரெயிலில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த மருத்துவ மாணவியை டாக்டர்கள் மற்றும் கல்லூரி தோழர்கள் பாராட்டினர். இது குறித்து மருத்துவ மாணவி கூறுகையில்:-

    கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதும் ஆஸ்பத்திரியை தொடர்பு கொள்ள முடிவு செய்தோம். ஆனால் இடையில் எந்தவித நிறுத்தங்களும் இல்லாததால் அது முடியவில்லை. எனவே நானே பிரசவம் பார்க்க முடிவு செய்தேன்.

    இது நான் சொந்தமாக செய்த முதல் பிரசவம் என்பதால் மிகவும் கவலைப்பட்டேன். மேலும் எனக்கு பயமும் ஏற்பட்டது.

    நான் முன்பு ஆஸ்பத்திரியில் உதவி பேராசிரியர்களிடம் பயிற்சி பெற்றுள்ளேன். அதன்படி செயல்பட ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் நஞ்சுக்கொடி 45 நிமிடங்களுக்கு வெளியே வரவில்லை. அதனால் எனக்கு கவலை ஏற்பட்டது. குழந்தை வெளியே வந்ததும் எனக்கு நிம்மதியாக இருந்தது.

    இந்த பிரசவத்திற்கு அந்த பெட்டியில் இருந்த சக பயணிகள் உதவி செய்தனர். இதன் மூலம் தாய் மற்றும் குழந்தையை காப்பாற்ற முடிந்தது என்றார்.

    செங்கல்பட்டு கல்லூரியில் படித்து வந்த புதுவையை சேர்ந்த மருத்துவ மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #PuducherryMedicalStudent
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டில் உள்ள பல் மருத்துவ கல்லூரியில் புதுவையை சேர்ந்த தேஸ்வர் அரவிந்தன் என்ற மாணவர் விடுதியில் தங்கி படித்து வந்தார். 3-ம் ஆண்டு மாணவர்.

    கல்லூரியில் கடந்த 3 நாட்களாக விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களை வரவேற்கும் குழுவில் தேஸ்வர் அரவிந்தன் இடம் பெற்றிருந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு தனது அறையில் மாணவர் அரவிந்தன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் படாளம் போலீசார் விரைந்து சென்று மாணவர் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர், தேஸ்வர் அரவிந்தன் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார்.

    அதில் வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். மாணவர் மரணம் குறித்து புதுவையில் உள்ள பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் செங்கல்பட்டுக்கு விரைந்துள்ளனர். பிரேத பரிசோதனை முடிந்ததும் தேஸ்வர் அரவிந்தனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. #PuducherryMedicalStudent
    சென்னை மாதவரம் பஸ் நிலையத்தில் மருத்துவ மாணவி கையை பிளேடால் அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மாதவரம்:

    ஆந்திரா மாநிலம் நெல்லூர் வெங்கடகிரி நகரைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவரது மகள் கீதா மாதுரி (வயது20).

    சென்னையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் மாணவி கீதாமாதுரி மாதவரம் நவீன பஸ் நிலையத்தில் உள்ள கழிவறையில் கையை அறுத்த நிலையில் மயங்கி விழுந்து கிடந்தார்.

    ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவியை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விசாரணையில் கீதா மாதுரி பிளேடால் கையை அறுத்து கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதுபற்றி அவரது பெற்றோருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் போலீசாரிடம் கூறும்போது, “கீதாமாதுரிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மனநலம் பாதித்தது. இதனால் அவரை கல்லூரியில் இருந்து சொந்த ஊருக்கு அழைத்து வந்தோம். இந்த நிலையில் அவர் வீட்டில் இருந்து திடீரென மாயமாகி விட்டார்” என்று தெரிவித்தனர்.

    இதனால் மாணவி நெல்லூரில் பஸ்சில் சென்னை மாதவரம் பஸ் நிலையத்துக்கு வந்ததும் கையை பிளேடால் அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் எதற்காக இந்த முடிவை எடுத்தார் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். #tamilnews
    ×