என் மலர்tooltip icon

    இந்தியா

    மேற்கு வங்க மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை.. 3 பேர் கைது - பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் வார்த்தைப் போர்
    X

    மேற்கு வங்க மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை.. 3 பேர் கைது - பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் வார்த்தைப் போர்

    • மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் மற்றும் மாணவியுடன் சென்ற ஆண் நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • 2026 இல் மம்தா பானர்ஜி வெளியேற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த ஆண்டு ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மாணவி கற்பழித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் போலவே தற்போது மீண்டும் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேற்குவங்க மாநிலத்தின் துர்காபூரில் உள்ள ஷோபாபூர் அருகே தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. தலைநகர் கொல்கத்தாவில் இருந்து 170 கிலோ மீட்டர் தொலைவில் இந்த மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளது.

    ஒடிசா மாநிலம் ஜலேஸ் வரை சேர்ந்த மாணவி அங்கு 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவில் 8.30 மாணவி கல்லூரி வளாகத்தை விட்டு ஆண் நண்பருடன் இரவு உணவருந்த வெளியே சென்றுள்ளார். அப்போது ஒரு கும்பல் மாணவியின் நண்பரை தாக்கியுள்ளது.

    அந்த இளைஞனை அங்கிருந்து துரத்திவிட்டு, மாணவியை தரதரவென இழுத்துச் சென்று மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒதுக்குபுறமாக பகுதியில் வைத்து அந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. அந்த சமயத்தில் வளாகத்தில் காவலர்கள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது.

    அந்த மாணவி தற்போது படுகாயங்களுடன் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் இதுவரை 3 பேரை கைது செய்துள்ளதாகவும், மேலும் இருவரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் மற்றும் மாணவியுடன் சென்ற ஆண் நபரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஞ்சி வெளியிட்ட எக்ஸ் பதிவில், "மேற்கு வங்க அரசாங்கத்தைத் தொடர்புகொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மூத்த அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். ஒடிசா அரசாங்கத்தின் சார்பாக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து விமர்சித்துள்ள பாஜக ஐடி விங் தலைவர் அமித் மாளவியா, "மேற்கு வங்கம் பெண்களுக்கு பாதுகாப்பானது அல்ல. திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கம் இருக்கும்வரை, மாநிலம் முழுவதும் பெண்கள் அச்சத்தில் வாழ்வார்கள். 2026 இல் மம்தா பானர்ஜி வெளியேற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    இதற்கு பதிலடி கொடுத்துள்ள மம்தாவின் திரிணாமுல் கட்சி முக்கிய தலைவரும் மேற்கு வங்க அமைச்சருமான சசி பஞ்சா, "இங்கே அரசியலுக்கு இடமுண்டா? ஒடிசாவில் தீக்குளித்த பெண்களுக்கு கிடைத்த நியாயம் என்ன? மணிப்பூர் எரிந்தபோது அல்லது டெல்லி ஜந்தர் மந்தரில் பாஜக தலைவரின் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக தங்கப் பதக்கம் வென்ற பெண் மல்யுத்த போராட்டம் நடத்தியபோது இந்தக் குரல்கள் எங்கே இருந்தன? வங்காளத்தில் பாஜகவின் கடையை மூடச் சொல்லுங்கள். காவல்துறை ஏற்கனவே விசாரணையைத் தொடங்கிவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.

    அடுத்த வருடம் மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆர்ஜி கர் மருத்துவ மாணவி கொலை மற்றும் தற்போதைய விவகாரத்தை பாஜக கையில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×